தீபாவளி நெருங்கி வருகின்ற இந்த நேரத்தில், ராமர் தன்னுடைய ராஜ்யத்திற்கு வெற்றிகரமாகத் திரும்புவதைக் கொண்டாடுவதற்கு ஹிந்துக்கள் தயாராகி வருகின்ற நிலையில் (மற்றும் அயோத்தியில் அவருக்காக கட்டப்பட்டு வரும் புதிய கோவிலையும்), மீதமுள்ளவர்களும் இந்திய ஜனநாயகத்தின் இத்தகைய தொடர் வெற்றிகளுக்கான இந்தக் காலத்தைக் கொண்டாடுவதிலே திருப்தி கொள்ள வேண்டும். அதிர்ச்சியூட்டிய அந்த தகனம் குறித்த பிரேக்கிங் செய்திகள் மற்றும் பெரிய சதித்திட்டம் ஒன்றின் முடிவிலே மற்றொரு சதித் திட்டத்தை தொடக்கி வைப்பது போன்ற நிகழ்வுகளுக்கு இடையிலே, நம்முடைய பண்டைய மற்றும் நவீன கால கலாச்சார, நாகரிக விழுமியங்கள் குறித்து நாம் எவ்வாறு பெருமை கொள்ளாது இருப்பது?
செப்டம்பர் மாதத்தின் நடுப்பகுதியில், உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் உள்ள தனது கிராமத்தில் ஆதிக்க சாதி ஆண்களால் கும்பல் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, சிதைக்கப்பட்டு இறந்து போன 19 வயது தலித் சிறுமி பற்றிய தகவல்கள் வெளியாகின. யோகி ஆதித்யநாத் (அனைத்துக் கணக்குகளின்படி, எதிர்காலத்தில் நரேந்திர மோடிக்கு அடுத்து பிரதமராக நியமிக்கப்படும் வகையில் வளர்த்தெடுக்கப்பட்டு வருபவர்) என்று தன்னை அழைத்துக் கொள்கின்ற, காவியுடை அணிந்த உத்தரப்பிரதேச முதல்வரான அஜய் சிங் பிஷ்ட் சாதியைச் சார்ந்த பிராமணர்கள் மற்றும் தாகூர்கள் பெரும்பான்மையாக இருக்கின்ற அந்தக் கிராமத்தில் உள்ள 600 குடும்பங்களுக்குள் உள்ள 15 தலித் குடும்பங்களில் அந்தச் சிறுமியின் குடும்பமும் அடங்கும்.
அந்தச் சிறுமியைத் தாக்கியவர்களால், சிறிது நேரம் அவள் அச்சுறுத்தப்பட்டாள். அங்கே அவளுடைய உதவிக்கு வருவதற்கு யாரும் இல்லை. அவளைப் பாதுகாக்கவும் யாரும் இல்லை. பெரும்பாலும் வீட்டிற்குள்ளேயே இருப்பவளான அவள், மிகவும் அரிதாகவே வெளியே சென்று வந்தாள். அவளும், அவளுடைய குடும்பத்தினரும் தங்களால் என்ன செய்ய முடியும் என்பதை நன்கு அறிந்திருந்தனர். ஆனாலும் அந்த விழிப்புணர்வு அவர்களுக்கு உதவவில்லை. பசுக்களை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்ற தனது மகள் ரத்தப்போக்குடன் வயலில் விழுந்து கிடந்ததை அவளின் தாயார் கண்டார். அவளுடைய நாக்கு கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டிருந்தது. முதுகெலும்பு உடைக்கப்பட்டதால், அவள் செயலிழந்து போயிருந்தாள்.
இரண்டு வாரங்களுக்கு அந்தச் சிறுமி உயிர் பிழைத்திருந்தாள். முதலில் அலிகாரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவள், பின்னர் உடல்நிலை மோசமடைந்த பிறகு, டெல்லியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாள். செப்டம்பர் 29 இரவில் இறந்து போனாள். கடந்த ஆண்டு காவல்துறையினரின் காவலில் இருந்தவர்களில் 400 பேர் – அதாவது அகில இந்திய அளவில் அவ்வாறு நடைபெற்ற மொத்த கொலையான கிட்டத்தட்ட 1,700 பேரில் ஏறக்குறைய நான்கில் ஒரு பகுதியினர் – கொலை செய்யப்பட்டதால் மிகவும் பிரபலமான உத்தரபிரதேச மாநிலக் காவல்துறை, அந்தச் சிறுமியின் உடலைப் பறித்துக் கொண்டு நள்ளிரவில் அவளிருந்த கிராமத்தின் வெளிப்பகுதிக்கு எடுத்துச் சென்றது. அதிர்ச்சியடைந்திருந்த அந்தக் குடும்பத்தினரை காவல்துறையினர் வீட்டிற்குள் வைத்துப் பூட்டினர். அந்தச் சிறுமிக்கு இறுதியாகப் பிரியாவிடை தருவதற்கு அவளுடைய தாய்க்கு அனுமதியை மறுத்தது மட்டுமல்லாது, மகளின் முகத்தை இறுதியாகப் பார்க்கின்ற வாய்ப்பையும் அவருக்குத் தர மறுத்தனர். இறந்து போன, தாங்கள் மிகவும் நேசித்து வந்த ஒருவருக்கு இறுதிச் சடங்குகளைச் செய்வதற்கான கௌரவத்தையும் அந்தச் சமூகத்திற்குத் தர அவர்கள் மறுத்தார்கள். உண்மையிலேயே தங்களுடைய மகளின் உடல்தான் அங்கே தகனம் செய்யப்பட்டது என்று திடமாக நம்புவதற்கான வாய்ப்பைக்கூட அவர்கள் அந்தப் பெற்றோர்களுக்குத் தரவில்லை.
கொலை செய்யப்பட்ட அந்தச் சிறுமியின் சிதைந்து போன உடல் அவசரம் அவசரமாக அங்கே உருவாக்கப்பட்டிருந்த சிதையில் போடப்பட்டது. காக்கிச் சீருடை காவல்துறையினர் அணிவகுத்திருக்க, அவர்களின் பின்னால் இருந்து, சிதையிலிருந்து எழும்பிய புகை இரவு வானத்தில் மேலே உயர்ந்தது. அதீத ஊடக கவனத்தால் பயந்து போயிருந்த அந்தச் சிறுமியின் குடும்பம் ஒன்றாகச் சேர்ந்து ஒடுங்கிப் போயிருந்தது. ஊடக வெளிச்சம் மங்கும்போது, அவை ஏற்படுத்தித் தந்த கவனத்திற்கும் சேர்த்து தாங்கள் தண்டிக்கப்படுவோம் என்பதை நன்கு அறிந்திருந்ததாலே அவர்கள் அவ்வாறு பயந்து போயிருந்தார்கள்.
அவர்களால் உயிர்பிழைத்து வாழ முடியும் என்றால், இடைக்காலத்துக் கொடூரங்கள் மற்றும் அவமதிப்புகளால் பாதிக்கப்பட்டவர்களாக, சாதியம் நிறைந்த கிராமத்தில் தீண்டத்தகாதவர்களாகவும், மனிதர்களுக்கு கீழானவர்களாகவும் கருதப்படுகின்ற, தங்களுக்குப் பழகிப் போயிருக்கும் வாழ்க்கைக்கே அவர்கள் திரும்பிச் செல்வார்கள்.
உடல் தகனம் செய்யப்பட்ட ஒரு நாள் கழித்து, அந்தச் சிறுமியின் உடல் எந்தப் பிரச்சனையும் இல்லாமல் பாதுகாப்பாக அனுப்பி வைக்கப்பட்டு விட்டது என்ற நம்பிக்கையுடன் இருந்த காவல்துறையினர், அந்தச் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்படவில்லை, அவள் கொலை மட்டுமே செய்யப்பட்டிருக்கிறாள் என்று அறிவித்தனர். ‘மட்டுமே’ என்பதை இங்கே கவனிக்க வேண்டும். அந்த வார்த்தை, சாதியரீதியான அராஜகங்களிலிருந்து உடனடியாக சாதிய கோணம் விலக்கப்படும் வகையிலான நடைமுறையின் தொடக்கத்தையே குறிக்கிறது. வெறுப்புணர்வைத் தூண்டுகின்ற சாதிய அராஜகங்களை, மற்றுமொரு துரதிர்ஷ்டவசமான, ஆனாலும் மிகச்சாதாரணமான குற்றமாக படிப்படியாக மாற்றியமைக்கின்ற இந்த செயல்முறையில் நீதிமன்றங்கள், மருத்துவமனைப் பதிவுகள், பிரதான ஊடகங்கள் என்று அனைத்தும் சேர்ந்து ஒத்துழைக்கும் என்றே நாம் எதிர்பார்க்கலாம்.
வேறு வார்த்தைகளில் கூறுவதானால், அது நமது சமுதாயத்திலிருந்து, நம்முடைய கலாச்சாரம் மற்றும் சமூக நடைமுறைகளை விலக்கி வைப்பதாகவே இருக்கிறது. இதுபோன்ற சம்பவங்களை, நாம் மீண்டும் மீண்டும் 2006ஆம் ஆண்டு கைர்லாஞ்சியில் சுரேகா போட்மங்கே மற்றும் அவரது இரண்டு குழந்தைகளின் படுகொலை மற்றும் மிருகத்தனமான சம்பவங்களில் இருந்து பார்த்து வருகிறோம்.
பாரதிய ஜனதா கட்சி உறுதியளிப்பதைப் போன்று, நமது நாட்டின் புகழ்பெற்ற கடந்த காலத்தை மீட்டெடுப்பதற்கான முயற்சியின் ஒரு பகுதியாக, அடுத்த தேர்தலில், உங்களால் முடியுமென்றால், தயவுசெய்து அஜய் சிங் பிஷ்டுக்கு வாக்களிப்பதற்கு மட்டும் மறந்து விடாதீர்கள். ஒருவேளை அவர் இல்லையென்றால், அவரைப் போன்று முஸ்லீம்களை வேட்டையாடுகின்ற, தலித்துகளை வெறுக்கின்ற வேறொரு அரசியல்வாதிக்கு வாக்களிப்பதற்கு மறந்து விடாதீர்கள். பதிவேற்றப்படுகின்ற அடுத்த படுகொலை வீடியோவிற்கு ‘லைக்’ போடுவதை மறந்து விடாமல் உங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். மேலும் உங்களுடைய கவனத்தை உங்களுக்கு மிகவும் பிடித்த, விஷத்தைக் கக்குகின்ற தொலைக்காட்சி தொகுப்பாளர் மீதும் வைத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் அவர்தான் நம்முடைய கூட்டு மனசாட்சியின் பாதுகாவலராக இருக்கிறார்.
நம்மால் இனிமேலும் வாக்களிக்க முடியும்; ‘தோல்வியுற்ற அரசுகள்’ என்று நாம் அழைக்க விரும்புகின்ற நமது அண்டைய நாடுகளைப் போல் அல்லாமல், உலகின் மிகப் பெரிய ஜனநாயகத்திலே நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்பதையும், இந்தியாவில் நமக்கென்று நடுநிலையான நீதிமன்றங்கள் உள்ளன, சட்டத்தின் ஆட்சி நடைபெறுகிறது என்பதையும் தயவுசெய்து மறந்து விடாதீர்கள்.
செப்டம்பர் 30 அன்று காலையில், ஹத்ராஸ் கிராமத்திற்கு வெளியே நடைபெற்ற அந்த வெட்கக்கேடான, அச்சுறுத்துகின்ற தகனம் நடந்த சில மணிநேரங்களுக்குப் பிறகு, மத்திய புலனாய்வு சிறப்பு நீதிமன்றம் நடுநிலை மற்றும் நேர்மைக்கான வலுவான ஆதாரத்தை நமக்கு வழங்கியுள்ளது.
28 வருடங்களாக மிகக்கவனமாக விசாரணை நடத்திய பிறகு, 1992ஆம் ஆண்டு பாபர் மசூதியை இடிக்கச் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த 32 பேரையும் அந்த சிறப்பு நீதிமன்றம் வழக்கிலிருந்து விடுவித்தது, நவீன இந்திய வரலாற்றின் போக்கையே அது மாற்றியமைத்துள்ளது. அவ்வாறு விடுவிக்கப்பட்டவர்களில் முன்னாள் உள்துறை அமைச்சர், முன்னாள் மத்திய அமைச்சர் மற்றும் முன்னாள் மாநில முதல்வர் ஆகியோர் அடங்குவர். யாருமே பாபர் மசூதியை இடிக்கவில்லை என்பது அந்தத் தீர்ப்பின் மூலம் தெரிய வந்திருக்கிறது. குறைந்தபட்சம் சட்டப்படியாக யாரும் இடிக்கவில்லை என்று தெரிய வந்திருக்கிறது. ஒருவேளை மசூதி தன்னைத்தானே இடித்துக் கொண்டிருக்கலாம். அந்த மசூதி அத்தனை வருடங்களுக்கு முன்பாகவே, டிசம்பர் 6, பாபாசாகேப் அம்பேத்கரின் நினைவு தினத்தை, தூசி பறக்க தன்னை இடித்துக் கொள்வதற்குத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தது. அன்றைய தினம் அங்கே கூடியிருந்த பக்தர்கள் என்று தங்களை அழைத்துக் கொண்ட காவிக் குண்டர்களின் கூட்டு விருப்பத்திற்கு இணங்கி கீழே வீழ்ந்து நொறுங்குவதற்கும் அதற்கு நன்கு தெரிந்திருந்தது.
பழைய மசூதியின் குவிமாடங்களின் மீது ஆண்கள் பலர் ஏறி நின்று, அதை சுத்தியலால் அடித்து நொறுக்கியதை நாம் அனைவரும் பார்த்த வீடியோக்கள், புகைப்படங்கள், பல்வேறு சாட்சிகள் அளித்து நாம் படித்த மற்றும் கேட்ட சாட்சியங்கள், அடுத்த சிலமாதங்களுக்கு ஊடகங்களை முழுமையாக நிரப்பிய செய்தி அறிக்கைகள் என்று அனைத்தும் நம் கற்பனையில் உதித்த உருவங்களாக இருந்திருக்கின்றன. உண்மையான ஹிந்துக்கள் அனைவரும் அயோத்தியில் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவிலைக் கட்டுவதற்காக ஒன்றிணைந்து, அதில் பங்கேற்க வேண்டும் என்று எல்.கே.அத்வானி திறந்த டிரக் ஒன்றில் இந்தியாவின் மூலை முடுக்குகளில் எல்லாம் பயணித்து, பெரும் கூட்டங்களில் உரையாற்றி, நகரச் சாலைகளை அடைத்து நடத்திய ரத யாத்திரை போன்ற எதுவும் உண்மையில் நடந்திருக்கவில்லை.
அவரது யாத்திரையின் எழுச்சி விட்டுச் சென்ற மரணம், அழிவு என்று எதுவுமே நடந்திருக்கவில்லை. ‘ஒரு முறை அல்லது இரண்டு முறை உந்தித் தள்ளு, மசூதியை உடைத்தெறிவோம்’ (ஏக் தக்கா அவுர் தோ, பாப்ரி மஸ்ஜித் டோட் டோ) என்று யாருமே அப்போது முழக்கமிடவில்லை. நாடு தழுவிய கூட்டு பிரமைகளையே நாம் அப்போது அனுபவித்துக் கொண்டிருந்தோம். நாம் அனைவரும் எதைக் கொண்டு புகைத்துக் கொண்டிருந்தோம்? நம்மையெல்லாம் போதைப்பொருள் கட்டுப்பாட்டு அலுவலகம் ஏன் வரவழைக்கவில்லை? அவர்கள் பாலிவுட்காரர்களை மட்டும் ஏன் வரவழைக்கிறார்கள்? சட்டத்தின் பார்வையில் நாம் அனைவரும் சமமானவர்கள் இல்லையா?
அந்த சிறப்பு நீதிமன்ற நீதிபதி மசூதியை அழிப்பதற்கான எந்தவொரு திட்டமும் இல்லை என்பது குறித்து 2,300 பக்கங்கள் கொண்ட விரிவான தீர்ப்பை எழுதியுள்ளார். இடிப்பதற்கான திட்டம் இருக்கவில்லை என்பது குறித்து 2,300 பக்கங்கள் தீர்ப்பு என்ற சாதனையை நீங்கள் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். மசூதி இடிப்பைத் திட்டமிடுவதற்காக குற்றம் சாட்டப்பட்டவர் ‘ஓர் அறைக்குள்’ யாரையாவது சந்தித்தார் என்பதற்கு எந்தவிதமான ஆதாரமும் இல்லை என்று தன்னுடைய தீர்ப்பில் அந்த நீதிபதி விவரித்திருக்கிறார். அறைக்கு வெளியே, தெருக்களில், பொதுக்கூட்டங்களில், நமது தொலைக்காட்சித் திரைகளில் நாம் அனைவரும் பார்க்கும் வகையில், பங்கேற்கின்ற வகையில் அந்தச் சந்திப்பு ஒருவேளை நடந்திருக்கலாம். ஆச்சரியம்… நமக்கு இவ்வாறான யோசனைகளை தருவது, ஒருவேளை அந்த ‘மால்’ தானா?
எப்படியோ, பாபர் மசூதி சதி வழக்கு இப்போது ஒருவழியாக முடிந்திருக்கிறது. ஆனாலும் இப்போது மற்றொரு சதி வழக்கும் அதைப்போன்று பிரபலமாக இருக்கின்றது. வடகிழக்கு தில்லியில் தொழிலாள வர்க்கத்தினர் நிரம்பிய பகுதிகளில் 53 பேர் (அவர்களில் 40 பேர் முஸ்லீம்கள்) கொல்லப்பட்டு, 581 பேர் காயமடைந்த 2020 தில்லி படுகொலை குறித்த சதித்திட்டம்தான் அது. தில்லி கலவரத்தில் குறிப்பாக மசூதிகள், கல்லறைகள் மற்றும் மதரஸாக்கள் குறிவைத்து தாக்கப்பட்டன. பெரும்பாலும் முஸ்லீம்களுக்குச் சொந்தமான வீடுகள், கடைகள், வணிக நிறுவனங்கள் எரிக்கப்பட்டன அல்லது இடித்து தரைமட்டமாக்கப்பட்டன.
அந்த சதித்திட்டம் குறித்து ஆயிரக்கணக்கான பக்கங்களுக்கு மேல் இருக்கின்ற தில்லி காவல்துறையின் குற்றப்பத்திரிகையில், ஒரு மேசையைச் சுற்றி அமர்ந்திருக்கும் சிலரின் புகைப்படம் இருக்கின்றது – ஆம்! ஓர் அறைக்குள் – அது ஒரு வகையில் அலுவலகத்தின் அடித்தளம் – சதி நடக்கிறது. அவர்களுடைய உடல்மொழிகளைக் கொண்டு அவர்கள் சதி செய்கிறார்கள் என்பதை உங்களால் தெளிவாகக் கூற முடியும். மேலும் அந்தப் படத்தில் இருக்கின்ற அம்புகள் அவர்களை அடையாளம் காணும் வகையில், அவர்களின் பெயர்களைக் குறிப்பிட்டு நமக்குச் சுட்டிக் காட்டிக் கொண்டிருக்கின்றன. உண்மையில் அது அதிர்ச்சியளிப்பதாகத்தான் இருக்கிறது.
பாபர் மசூதியின் குவிமாடத்தின் மீது சுத்தியலுடன் ஏறி நின்று கொண்டிருந்த ஆண்களை விட இவர்கள் அனைவரும் மிகவும் ஆபத்தானவர்கள். அந்த மேசையைச் சுற்றி அமர்ந்திருந்த சிலர் ஏற்கனவே சிறையில் உள்ளனர். மீதமுள்ளவர்கள் விரைவில் சிறைக்குச் செல்லலாம். அவர்களைக் கைது செய்வதற்கு சில மாதங்களே ஆயிற்று என்றாலும் அவர்கள் விடுவிக்கப்படுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம் – பாபர் மசூதி தீர்ப்பைக் கணக்கில் கொண்டால், 28 ஆண்டுகள் ஆகலாம், யாருக்குத் தெரியும்?
அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ள (யுஏபிஏ) சட்டவிரோத செயல்பாடுகள் [தடுப்பு] சட்டத்தின்கீழ், தேச விரோத எண்ணங்களைச் சிந்திப்பது உட்பட கிட்டத்தட்ட அனைத்துமே குற்றமாகும். நீங்கள் குற்றமற்றவர்தான் என்பதை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு உங்களுக்கே இருக்கிறது. அந்த சட்டம் குறித்து நான் அதிகம் படித்திருக்கிறேன். அந்தச் சட்டத்தில் காவல்துறையினர் கடைப்பிடிக்கும் முறையானது, பைத்தியக்காரர்கள் அடங்கிய குழுவிடம், புத்திசாலித்தனமான நபர் ஒருவர் தனது புத்திசாலித்தனத்தை நிலைநிறுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்வதைப் போல இருக்கிறது.
தங்களுடைய ‘வம்சாவளி குறித்த ஆவணங்கள்’ இல்லாத முஸ்லீம் சமூகம் மற்றும் இந்திய ஏழைகளின் காலடியில் இருக்கின்ற நிலத்திலிருந்து அவர்களை அகற்றுவதாக இருக்கின்றன என்று தாங்கள் நம்பிய தேசிய மக்கள்தொகை பதிவேடு, குடியுரிமைக்கான தேசிய பதிவேடு மற்றும் குடியுரிமை சட்டத் திருத்தம் ஆகியவற்றை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட முஸ்லீம் மாணவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்கள், காந்தியர்கள், ‘நகர்ப்புற நக்சல்கள்’, ‘இடதுசாரிகள்’ ஆகியோர் இந்த தில்லி சதியில் ஒன்றிணைந்து ஈடுபட்டதாக நாம் நம்ப வேண்டும் என்று நம்மிடம் அவர்கள் கேட்டுக் கொள்கிறார்கள். நான் அதையும் நம்புகிறேன். அரசாங்கம் அந்த திட்டத்தை முன்னெடுத்துச் செல்ல முடிவு செய்திருந்தால், நிச்சயம் மீண்டும் போராட்டங்கள் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். அவை அவ்வாறே நடக்கும்.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் பிப்ரவரி மாத இந்தியப் பயணத்தின் போது வன்முறையைத் தூண்டி, ரத்தக்களரி நிறைந்த வகுப்புவாத மோதலை உருவாக்குவதன் மூலமாக இந்திய அரசாங்கத்தைச் சங்கடப்படுத்துவதே அந்த தில்லி சதித்திட்டத்தின் பின்னணியில் இருந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது. போராட்டங்கள் ’மதச்சார்பற்றவை’ என்ற தோற்றத்தைக் கொடுப்பதற்காக அந்தக் குற்றப்பத்திரிகையில் பெயரிடப்பட்டுள்ள முஸ்லீம்கள் அல்லாதவர்கள் சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. உள்ளிருப்புப் போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களுக்குத் தலைமை தாங்குவதற்காக ஆயிரக்கணக்கான முஸ்லீம் பெண்கள், அந்தப் போராட்டங்களுக்கு ‘பாலின மறைப்பை’ வழங்குவதற்காகவே ‘அழைத்து வரப்பட்டிருந்ததாக’ குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள்.
அவர்களிடம் இருந்த மோசமான நோக்கத்தை மறைப்பதற்காக வடிவமைக்கப்பட்ட தேசியக் கொடியை அசைப்பது, இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் முகப்புரையை பொதுவெளியில் வாசிப்பது, இந்த ஆர்ப்பாட்டங்களைக் குறிக்கும் வகையிலான கவிதை மற்றும் இசை போன்ற அன்பின் வெளிப்பாடுகள் என்று அனைத்துமே, ஒருவிதமான நேர்மையற்ற போலித்தனம் என்று நிராகரிக்கப்பட்டிருக்கின்றன. வேறு வார்த்தைகளில் கூறுவதானால், காவல்துறையைப் பொறுத்தவரை, எதிர்ப்பின் முக்கிய அம்சம் ஜிஹாதியாக (ஆண்) இருந்தது. மற்றவை அனைத்தும் வெறும் அலங்காரமாக மட்டுமே இருந்தன.
எனக்கு நன்றாகப் பழக்கமான, இளம் ஆய்வாளர் டாக்டர் உமர் காலித், பொய்யான செய்திகளைக் கொண்டு பல ஆண்டுகளாக ஊடகங்களால் துன்புறுத்தப்படுகிறார், வேட்டையாடப்படுகிறார். முக்கிய சதிகாரர்களில் அவரும் ஒருவர் என்பதாக காவல்துறையினரின் குற்றச்சாட்டு இருக்கிறது. பத்து லட்சத்திற்கும் அதிகமான பக்கங்களில் அவருக்கு எதிராகச் சேகரித்திருக்கும் சான்றுகள் இருப்பதாக காவல்துறையினர் கூறுகிறார்கள். (உலகின் மிகக் கொடூரமான கோவிட்-19 பொதுமுடக்கத்தை மோடி அறிவித்த பின்னர், மார்ச் மாதத்தில் நூற்றுக்கணக்கான – சிலர் ஆயிரக்கணக்கான – கிலோமீட்டர் தூரத்திற்கு தங்கள் கிராமங்களுக்கு நடந்து செல்ல வேண்டியிருந்த ஒரு கோடித் தொழிலாளர்கள் குறித்து எந்தத் தகவலும் தங்களிடம் இல்லை – அவர்களில் எத்தனை பேர் இறந்தார்கள், எத்தனை பேர் பட்டினி கிடந்தார்கள், எத்தனை பேர் நோய்வாய்ப்பட்டார்கள் என்பது பற்றி தங்களுக்குத் தெரியாது என்று அறிவித்த அந்த அரசாங்கம்தான் இது)
உமர் காலித்திற்கு எதிராக இருக்கின்ற அந்த பத்து லட்சம் பக்க ஆதாரங்களில் ஜஃப்ராபாத் மெட்ரோ நிலையத்தின் சி.சி.டி.வி காட்சிகள் – அவரது மிகச்சிறந்த சதி நடைபெற்ற, ஆத்திரமூட்டல் நடந்த இடம் – சேர்க்கப்படவில்லை. வன்முறை உச்சத்தில் இருந்த பொழுது, பிப்ரவரி 25 அன்றே, அந்தக் காட்சிகளைப் பாதுகாத்து வைக்குமாறு தில்லி உயர்நீதிமன்றத்தில் ஆர்வலர்கள் முறையிட்டிருந்தனர். ஆனாலும் அந்தக் காட்சிகள் யாராலும் விவரிக்க முடியாத வகையில் அழிக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில் கைது செய்யப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான முஸ்லீம்களுடன் உமர் காலித்தும் இப்போது சிறையில் இருக்கிறார். அவர் மீது யுஏபிஏவின் கீழ் குற்றம் சாட்டப்பட்டிருப்பதோடு, கொலை, கொலை முயற்சி மற்றும் கலவரம் செய்தது போன்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன. இந்த பத்து லட்சம் பக்கங்கள் கொண்ட ‘சான்றுகளைப்’ படிப்பதற்கு நீதிமன்றங்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் எத்தனை ஆயுட்காலம் தேவைப்படுமோ?
பயங்கரமான காலகட்டத்தில் இந்தியாவில் தாங்கள் இருப்பதாக டொனால்ட் டிரம்பிற்குக் காட்டுவதற்காக, முஸ்லீம்கள் தங்களைத் தாங்களே கொலை செய்வதற்கு, தங்களுக்குச் சொந்தமான மசூதிகளை எரிப்பதற்கு, தங்களுக்குச் சொந்தமான வீடுகளை அழிப்பதற்கு, தங்களுடைய சொந்தக் குழந்தைகளை அனாதைகளுக்குவதற்காக அந்தச் சதியைச் செய்தனர் என்று, மசூதி தன்னைத் தானே இடித்துக் கொள்ளத் தீர்மானித்தது என்று சிறப்பு நீதிமன்றத்தில் கூறப்பட்டிருப்பதைப் போலவே, 2020 தில்லி படுகொலை குறித்த காவல்துறையினரின் கதையும் இருக்கிறது…
எதிர்ப்பு போராட்டங்கள் மற்றும் அமைதியான உள்ளிருப்பு போராட்டங்கள் தில்லியில் நடந்து வந்த இடங்களில் தங்களுடைய ஆதரவை அளிக்கவும், அவற்றை ஒருங்கிணைக்கவும் முயற்சிக்கும் வகையில், மாணவர்கள், ஆர்வலர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு ஆதரவாக இயங்கி வந்த குழுக்களுக்கு இடையில் நடைபெற்ற நூற்றுக்கணக்கான பக்க வாட்ஸ்ஆப் உரையாடல்களை, தாங்கள் ஜோடித்த வழக்கை நிரூபிக்கும் வகையில் காவல்துறையினர் தங்கள் குற்றப்பத்திரிகையில் இணைத்துள்ளனர். தங்களை மிகவும் கட்டுக்கோப்பான ஹிந்து ஒற்றுமையாளர்கள் என்று அழைத்துக் கொள்ளும் மற்றுமொரு குழுவினரின் வாட்ஸ்ஆப் உரையாடல்களின் தொகுப்பிலிருந்து அவை முற்றிலும் வேறுபட்டவையாகவே இருந்தன. உண்மையில் அந்தக் குழுவில் முஸ்லீம்களைக் கொல்வது பற்றி அவர்கள் பெருமை பேசுகிறார்கள். பாரதிய ஜனதா கட்சித் தலைவர்களை வெளிப்படையாகப் பாராட்டுகிறார்கள். அந்த உரையாடல்கள் மற்றுமொரு தனியான குற்றப்பத்திரிக்கையின் பகுதியாக இருக்கின்றன.
இளைஞர்களின் உணர்வுகள் மற்றும் அவர்களுடைய நோக்கங்களால் முழுமையாக நிறைந்தவையாக, நீதியின்பாற்பட்ட கோபத்தின் அடிப்படையிலான அவர்களுடைய உணர்வுகளால் ஊக்கமளிக்கப்பட்டவையாக மாணவர்கள் – ஆர்வலர்களின் உரையாடல்கள் இருக்கின்றன. அவர்கள் தொடர்ந்த வேலையைப் பற்றிப் பேசுவதாக அவை இருக்கின்றன. அந்த உரையாடல்களை வாசிப்பது உற்சாகமளிப்பதாக, கோவிட்டுக்கு முந்தைய அந்த நாட்களுக்கு நம்மைத் திருப்பி அழைத்துச் செல்வதாக, ஒரு புதிய தலைமுறை தன்னை நிலைநிறுத்திக் கொள்வதைப் பார்க்கின்ற உற்சாகத்தை அளிப்பதாக இருக்கிறது. அமைதியாகவும், தெளிவாகவும் இருக்க வேண்டியதன் அவசியம் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் அந்த உரையாடல்களுக்குள் அனுபவம் வாய்ந்த ஆர்வலர்கள் மீண்டும் மீண்டும் தலையிட்டுக் கொண்டே இருக்கிறார்கள். செயற்பாட்டாளர்களுக்கே உரிய வழியில், அவர்கள் தங்களுக்குள் வாதிடுகிறார்கள், சண்டையிட்டுக் கொள்கிறார்கள் – ஜனநாயகமாக இருப்பதன் ஒரு பகுதியாகவே அந்த உரையாடல்கள் இருக்கின்றன.
ஆச்சரியப்படத்தக்க வகையில் பல வாரங்களாக ஒன்றிணைந்திருந்தது, குளிர்காலக் கடுமையான குளிரைத் துணிந்து எதிர்கொண்டது, முக்கிய சாலையில் அமர்ந்தது, போக்குவரத்தைத் தடுத்தது, குழப்பத்தை உருவாக்கினாலும் போராட்டத்திற்கான தேவையின் மீதும், தங்கள் மீதும் அதிக கவனத்தை ஈர்த்த ஆயிரக்கணக்கான ஷாஹீன்பாக் பெண்களின், அந்த ஆர்ப்பாட்டத்தின் வெற்றியை அவர்கள் பிரதிபலிக்க முயற்சிக்கிறார்களா இல்லையா என்பதுதான் அந்த உரையாடல்கள் குறித்த சர்ச்சையின் மையமாக இருக்கிறது.
2020ஆம் ஆண்டின் டைம் பத்திரிகையின் மிகவும் செல்வாக்கு மிக்க நபர்கள் பட்டியலில் ஷாஹீன்பாக்கைச் சார்ந்த முதியவர் பில்கிஸ் பானோ இடம் பெற்றுள்ளார் (2002ஆம் ஆண்டு முஸ்லீம்களுக்கு எதிராக நடத்தப்பட்ட படுகொலையில் இருந்து தப்பிய 19 வயதான இன்னொரு பில்கிஸ் பானோவுடன் இவரைக் குழப்பிக் கொள்ள வேண்டாம். நரேந்திர மோடி குஜராத் மாநில முதல்வராக இருந்தபோது நடந்த படுகொலைகள் குறித்து அவர் சாட்சியம் அளித்தார். அந்தப் படுகொலையில், அவரது மூன்று வயது மகள் உட்பட அவரது குடும்ப உறுப்பினர்கள் 14 பேர் ஹிந்து வெறி கொண்ட கும்பலால் கொல்லப்பட்டனர். கர்ப்பமாக இருந்த அவர் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார்… ‘மட்டும்’)
வடகிழக்கு தில்லியில் ஒரு ‘சக்கா ஜாம்’ – சாலை மறியலுக்குச் செல்லலாமா, வேண்டாமா என்பது குறித்து மக்களிடம் இருந்த கருத்து வேற்றுமை தில்லி ஆர்வலர்களின் வாட்ஸ்ஆப் உரையாடலில் இருக்கிறது. சாலை மறியலை நடத்துவது குறித்து திட்டமிடுவதில் புதிதாக எதுவும் இருக்கவில்லை. விவசாயிகள் அதை அடிக்கடி செய்துள்ளனர். சிறு விவசாயிகளை நெருக்கடிக்குள் தள்ளுவதாக, இந்திய விவசாயத்தையே அடியோடு அச்சுறுத்துவதாக இருக்கின்ற சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட விவசாய மசோதாக்களை எதிர்த்து பஞ்சாப், ஹரியானா மாநிலங்களில் விவசாயிகள் இப்போதும் சாலை மறியலை நடத்தி வருகிறார்கள்.
தில்லி ஆர்ப்பாட்டங்களைப் பொறுத்தவரை, ஆர்வலர்களின் அரட்டைக் குழுக்களில் இருந்த ஒருசில ஆர்வலர்கள் சாலைகளைத் தடுப்பது எதிர்விளைவுகளை உருவாக்கும் என்ற வாதத்தை முன்வைத்தனர். சில வாரங்களுக்கு முன்பாக நடைபெற்று முடிந்திருந்த தில்லி தேர்தலில் தாங்கள் அவமானப்படுத்தப்பட்டது குறித்து ஆத்திரமடைந்திருந்த அந்தப் பகுதி பாஜக தலைவர்களின் வெளிப்படையான அச்சுறுத்தல்களைக் கருத்தில் கொண்டு, சாலைகளைத் தடுப்பது அவர்களுடைய கோபத்தைத் தூண்டும் என்றும், சமூகங்கள் மீதான வன்முறையை அது வழிநடத்தும் என்றும் சில உள்ளூர் ஆர்வலர்கள் அஞ்சினர். விவசாயிகள் அல்லது குஜ்ஜார்கள் அல்லது தலித்துகள்கூட சாலை மறியல் செய்வது பெரிய விஷயம் அல்ல என்பதையும், முஸ்லீம்கள் அதைச் செய்வது வேறு மாதிரியாக இருக்கும் என்பதையும் அவர்கள் அறிந்திருந்தார்கள். இதுதான் இந்தியாவில் இன்று இருக்கின்ற உண்மை.
மற்றவர்களோ சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி, நகரத்தின் கவனத்தைத் திருப்ப வேண்டிய கட்டாயத்தை ஏற்படுத்தவில்லையென்றால் போராடக்காரர்கள் ஓரங்கட்டப்பட்டு புறக்கணிக்கப்படுவார்கள் என்று வாதிட்டனர். இறுதியாக போராடம் நடந்த சில இடங்களில், சாலைகள் மறிக்கப்பட்டன. ஏற்கனவே அறிந்திருந்தவாறு, ஆயுதங்கள் மற்றும் கொலைவெறி கொண்ட முழக்கங்களுடன் இருந்த ஹிந்து வெறிக்கும்பல்கள் தேடிக் கொண்டிருந்த வாய்ப்பை அது ஏற்படுத்தித் தந்தது.
அடுத்த சில நாட்களில், நம்மை அதிர்ச்சிக்குள்ளாகும் வகையில் அவர்கள் மிருகத்தனமான நடவடிக்கைகளைக் கட்டவிழ்த்து விட்டார்கள். வெளிப்படையாக அவர்களுக்கு காவல்துறையினரால் ஆதரவு அளிக்கப்படுவதை வீடியோக்கள் காட்டின. முஸ்லீம்கள் திருப்பித் தாக்கினார்கள். இரு தரப்பிலும் உயிர்களும், சொத்துக்களும் பறிபோயின என்றாலும் அது முற்றிலும் சமமற்றதாகவே இருந்தது. எந்த சமநிலையும் இங்கே செய்ய முடியாது.
வன்முறை பெருகவும், பரவவும் அனுமதிக்கப்பட்டது. படுகாயமடைந்திருந்த முஸ்லீம் இளைஞர்கள் தேசிய கீதத்தைப் பாடுமாறு கட்டாயப்படுத்தப்பட்டு, காவல்துறையினரால் சூழப்பட்டு சாலையில் கிடந்த காட்சியை நாம் அவநம்பிக்கையுடனே பார்த்துக் கொண்டிருந்தோம். அந்த இளைஞர்களில் ஒருவரான பைசான் விரைவிலேயே இறந்து போனார்.
பாதிக்கப்பட்டவர்களின் நூற்றுக்கணக்கான துயர அழைப்புகள் காவல்துறையினரால் புறக்கணிக்கப்பட்டன. கலவரம் மற்றும் படுகொலைகள் தணிந்த பிறகு, இறுதியாக நூற்றுக்கணக்கான புகார்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. தங்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களின் பெயர்களையும் அடையாளங்களையும், துப்பாக்கி, வாள் கொண்டிருந்த கும்பல்களால் எழுப்பப்பட்ட வகுப்புவாத முழக்கங்களையும் தங்களுடைய புகார்களிலிருந்து நீக்குமாறு காவல்துறையினர் தங்களைக் கட்டாயப்படுத்தியதாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினர். பெயர் குறிப்பிடப்பட்டு அளிக்கப்பட்ட புகார்கள் முடிவை எட்டாதவாறு, குற்றவாளிகளைப் பாதுகாக்கும் வகையில் மறுவடிவமைக்கப்பட்டு பொதுவான புகார்களாக மாற்றப்பட்டன. (வெறுப்பு சார்ந்த குற்றங்களுடன் தொடர்புடைய வெறுப்பு விலக்கப்பட்டது)
வாட்ஸ்ஆப் அரட்டை ஒன்றில், வடகிழக்கு தில்லியில் வசித்து வந்த முஸ்லீம் ஆர்வலர் ஒருவர், சாலை மறியலின் அபாயங்கள் குறித்து பலமுறை மற்றவர்களை எச்சரித்து வந்தவர். இறுதியில் மறுபரிசீலனை செய்யுமாறு செய்தியை வெளியிட்ட பிறகு அவர் அந்தக் குழுவிலிருந்து வெளியேறினார். அவருடைய அந்தச் செய்தியையே தங்களுடைய மோசமான வலையை விரிப்பதற்கும், இந்தியாவில் மிகவும் மரியாதைக்குரிய ஆர்வலர்கள், ஆசிரியர்கள், திரைப்படத் தயாரிப்பாளர்கள் என்றிருந்த அந்தக் குழுவின் மீது ஒட்டுமொத்தமாக, கொலை செய்யும் நோக்கத்துடன் வன்முறை கொண்ட சதிகாரர்களின் குழுவாக அவர்கள் இயங்கியதாக. குற்றம் சுமத்துவதற்குமான ஆதாரமாக காவல்துறையும் ஊடகங்களும் பயன்படுத்திக் கொண்டுள்ளன. உண்மையில் இதைவிட அபத்தமானது என்று வேறெதுவும் இருக்க முடியுமா?
அவர்களின் அப்பாவித்தனத்தை நிலைநாட்டுவதற்கு பல ஆண்டுகள் ஆகலாம். அதுவரையிலும் அவர்கள் சிறையில் இருக்கக்கூடும் என்பதால், அவர்களுடைய வாழ்க்கை முற்றிலுமாகப் பாழாகி விடும். உண்மையில் கொலை செய்தவர்களும், ஆத்திரமூட்டியவர்களும் சுதந்திரமாகத் சுற்றித் திரிந்து தேர்தலில் வெற்றி பெறுவார்கள். இந்த செயல்முறையே அவர்களுக்கான தண்டனை என்று கருதப்படுகிறது.
இதற்கிடையில், வடகிழக்கு தில்லியில் நடந்த வன்முறைகளுக்கு தில்லி காவல்துறையினர் உடந்தையாக இருந்ததாக சுதந்திரமான பல ஊடக அறிக்கைகள், குடிமக்கள் உண்மை கண்டறியும் அறிக்கைகள் மற்றும் மனித உரிமை அமைப்புகள் கண்டறிந்துள்ளன. 2020 ஆகஸ்ட் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையில், நாம் அனைவரும் பார்த்த, அதிர்ச்சியூட்டும் வன்முறை வீடியோக்கள் சிலவற்றை, தடயவியல் ரீதியாக பரிசோதித்த பின்னர், போராட்டக்காரர்களை அடித்து சித்திரவதை செய்தது, கும்பலுக்கு ஆதரவாக செயல்பட்டது என்று தில்லி காவல்துறையினரே குற்றவாளிகள் என்று அம்னஸ்டி இன்டர்நேஷனல் என்ற சர்வதேச அமைப்பு கூறியது. அப்போதிருந்தே அம்னஸ்டி அமைப்பு மீது நிதி முறைகேடுகள் செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, அதன் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டன. விளைவாக தன்னுடைய இந்திய அலுவலகங்களை மூடிவிட்டு, இந்தியாவில் உள்ள 150 ஊழியர்களையும் கைவிட்டுவிட்டு அந்த அமைப்பு இந்தியாவிலிருந்து வெளியேற வேண்டியதாயிற்று.
பொதுவாக விஷயங்கள் மிகவும் மோசமடையத் தொடங்கும் போது, இதுபோன்று சர்வதேச பார்வையாளர்களே முதலில் வெளியேறுவது அல்லது வெளியேற வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகிறார்கள். இவ்வாறான முறையை இதற்கு முன்பு எந்த நாடுகளில் நாம் பார்த்திருக்கிறோம்? சிந்தித்துப் பாருங்கள். அல்லது கூகுள் செய்து பாருங்கள்.
உலக விவகாரங்களைப் பொறுத்தவரை, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தனக்கான நிரந்தர இடத்தைப் பெறுவதற்கு இந்தியா விரும்புகிறது. ஆனால் உலகிலேயே சித்திரவதைக்கு எதிரான சர்வதேச உடன்படிக்கைக்கு தொடர்ந்து ஒப்புதல் அளிக்காத ஐந்து நாடுகளில் ஒன்றாக இருப்பதற்கும், பொறுப்புணர்வு இல்லாத ஒரு கட்சி ஜனநாயகமாக (நகைமுரண்) தன்னை இருத்திக் கொள்ளவும் அது விரும்புகிறது.
காவல்துறையால் அபத்தமாகத் தயாரிக்கப்பட்டுள்ள 2020 தில்லி சதித்திட்டத்தின் உண்மையான நோக்கம், ஆர்வலர்கள், மாணவர்கள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், பேராசிரியர்கள், தொழிற்சங்கவாதிகள் மற்றும் இணங்கிப் போகாத தன்னார்வ தொண்டு நிறுவனங்களைச் சார்ந்தவர்களைக் குறி வைப்பது, சிறையில் அடைப்பது என்று அதற்குச் சமமான அபத்தமான 2018 பீமா-கோரேகான் சதியைப் போன்றே (அபத்தம் என்பது அச்சுறுத்தல் மற்றும் அவமானப்படுத்துவதின் ஒரு பகுதியாக உள்ளது) இருக்கிறது. கடந்த கால, நிகழ்காலக் கொடூரங்களை அழிப்பதாக மட்டுமல்லாமல், இனிமேல் வரவிருக்கின்ற விஷயங்களுக்கான தளங்களைத் தயாரித்து வைப்பதாகவும் அது இருக்கின்றது.
பத்து லட்சம் பக்க அளவிலான அந்த சான்றுகள், 2,000 பக்க நீதிமன்றத் தீர்ப்புகள் ஆகியவற்றிற்கு நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்றே நான் நினைக்கிறேன். ஏனென்றால், செத்துப் போன ஜனநாயகம் இங்கே இன்னும் சுற்றிக் கொண்டிருக்கிறது என்பதற்கு அவையே சான்றுகளாக இருக்கின்றன. உத்தரபிரதேசத்தின் ஹத்ராஸில் கொலை செய்யப்பட்ட சிறுமியைத் தகனம் செய்ததைப் போல, அந்தச் சடலம் இன்னும் தகனம் செய்யப்படவில்லை. சடலமாகவே இருந்தாலும், அது தனக்கென்று கொண்டிருக்கும் மரியாதையால் நடைபெறும் விஷயங்கள் மெதுவாகவே நடைபெறுகின்றன. ஆனால் அந்தச் சடலம் மரியாதையை இழக்கப் போகும் நாள் வெகு தொலைவில் இல்லை. இப்போது மெதுவாக நடைபெறும் விஷயங்கள் அந்த நாளில் முழுவேகம் பெறும். ‘ஒரு முறை அல்லது இரண்டு முறை உந்தித் தள்ளு. ஜனநாயகத்தைப் புதைத்து விடு’ என்பது நம்மை ஆட்சி செய்து கொண்டிருப்பவர்களின் இதுவரையிலும் பேசப்படாத முழக்கம் அப்போது ஓங்கி ஒலிக்கும். சடலம் அடக்கம் செய்யப்படும்.
அந்த நாள் வரும் போது, காவலில் வைக்கப்பட்டிருந்தவர்களில் 1,700 பேரை ஓராண்டில் கொலை செய்வது என்பது, நமது சமீபத்திய, புகழ்பெற்ற கடந்த காலத்தை நினைவுகூருவதைப் போல நமக்குத் தோன்றக்கூடும்.
இந்த சிறிய உண்மை நம்மை ஒருபோதும் தடுத்து நிறுத்தி விடக்கூடாது. ஏழ்மையான நிலைக்கு, போருக்கு நம்மை இட்டுச் செல்லும் நபர்களுக்கு, நம்மைத் துண்டு துண்டாகப் பிய்த்து எறிபவர்களுக்கே நாம் வாக்களிப்போம். குறைந்தபட்சம் அவர்கள் நமக்காக பெரிய கோவில் ஒன்றை கட்டுகிறார்கள். எனவே நமக்காக அவர்கள் ஒன்றும் செய்யவில்லை என்று சொல்வதற்கில்லை.
https://scroll.in/article/974758/arundhati-roy-two-conspiracies-and-a-cremation
நன்றி: ஸ்க்ரோல் இணைய இதழ்
தமிழில்: தா.சந்திரகுரு