எதிர்காலம்
****************
கடவுள்களின் நூலகத்தில்
சாத்தான்கள்
என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்?
துகிலுரி தாளாமல்
துடிக்கின்றன அம்மணங்கள்
கீழுலகக் குற்றங்களின்
நிரூபிக்கப்படாத குற்றங்களின்
நடமாடும் நிழல்களாய்
அரசியல் கோமாளிகள்
அரிச்சுவடிக் கொலையாளிகள்
சுத்தியல் குற்றவாளிகள்
பிரேதத் தொழிலதிபர்கள்.
புனைபெயர்களில் ஒளிந்து கொண்டிருக்கும்
வழிப்பறிக் கொள்ளையர்களை
அடையாளம் காணாத இலக்கியத்திற்கு
வாழ்வாதாரம் இல்லை.
லென்ஸ்கள் பொருத்தப்படாத கவிதைகள்
இனி
ஜீவிக்கப் போவதில்லை.
வாழ்வின் தரிசனம்
*****************************
தொட்டிலில் கிடத்தப்பட்டபோதே
மரணத்தின் மூங்கில் கழிகள்
தயாராகிவிடுகின்றன.
வாழ்க்கை விரட்ட
ஒவ்வொரு சாலையாய் ஓடியோடி
கடைசியாய்த்
திகைத்து நிற்கும்
முட்டுச் சந்துதான் மரணம்.
வாழ்க்கையின் சாயலை
மரணத்தில்தான் பார்க்க முடியும்.
எப்படியெப்படியோ பார்த்த ஒருவனை
வேறெப்படியும்
வேறெப்போதும்
பார்க்க முடியாத தருணம்தான்
மரணம்.
ஒரே நேரத்தில் ஒரு திருமணம்
ஒரு மரணம்
எனில்
நான் மரண வீட்டிற்குத்தான் போவேன்
யாரோ ஒருவரின் மூடிய கண்களின் வழியே
வாழ்க்கை தரிசனமாகிறது.
நின்று போன அவரது இதயம்
கடந்துகொண்டிருக்கும் காலத்தின்
காலடிச் சப்தமாய்க் கேட்கத் தொடங்குகிறது.
நா.வே.அருள்
முதல் கவிதை சிற்சில தருணங்களில் நா,காமராசனை நினைவு படுத்துகிறது,
இருக்கட்டும், பரவாயில்லை,
ஆயின் நம்பிக்கையை விதைக்க வேண்டிய கடமையும் நமக்கிருப்பதை தள்ளிவிட முடியாது,