பிச்சுமணி எழுதிய தமிழ் கவிதைகள் (Tamil Poems) | Tamil Kavithaikal | 1. வெய்யோன் துயில் | 2. மரக்கட்டைகளே மாண்டு போகும் பாறைகள் அல்ல

பிச்சுமணி எழுதிய தமிழ் கவிதைகள்

பிச்சுமணி எழுதிய தமிழ் கவிதைகள்
1. வெய்யோன் துயில்

மின்சார மின்மினிகள்
அவனின் நகலாய் நடித்துக்கொண்டிருக்கிறது

அவளின் தலைமையில்
எண்ணிலடங்கா வீரர்கள்
விழி விரித்து காவல்காக்கிறார்கள்

உயிர்கள் அனைத்தும்
ஓய்வெடுக்கும் அவனுக்கு உதவ..
உறக்கம் தவமிருக்கிறது

தினம் தினம்
தன் ஒற்றை விழியை மூடி
தூக்கம் கலையும் வரை
அப்படியென்ன கனவு கண்கிறானோ தெரியவில்லை அந்த
வெய்யோன்.

**************************************

2. மரக்கட்டைகளே மாண்டு போகும் பாறைகள் அல்ல.

மரக்கட்டையைச் சீர்ப்படுத்தி
கூர்ப்படுத்தி..
வண்ணங்கள் சில தீட்டி
கண்கள் மிளிர அழகுபடுத்தி
துருப்பிடித்து தூளாகும்
இரும்புக் குச்சிகளை
மரக்கட்டை முனையில்
அறைந்து…
மரக்கட்டையும்
இரும்புக் குச்சியும் இணைத்து.
நூலொன்றின் மூலம்
தன்விருப்பப்படி நாக்பூர் கைகள்
சுற்றிச் சுழற்றுகின்றன..
கற்றோரை கற்பிப்பவரை
அறம் நூல் அறிந்தவரை
பகுத்தறியும் நூல் படைப்பவரை
சித்திரத்தைப் பேசவைப்பவரை
இசையால் நடிப்பால்
மனிதம் வளர்ப்பவரை..
மரக்கட்டைகளும்
இரும்புக் குச்சிகளும்
மனிதம் மறுக்கும் நூல் கொண்டு
இறுக்கி அழிக்கப் பார்க்கின்றன
அந்த நாக்பூர் கைகள்
வித விதமாய்
வீதிக்கு ஒரு மரக்கட்டையை
வெவ்வேறு இரும்புக் குச்சிகளை அறைந்து
அதே நூல் மூலம் சுழற்றி விட்டிருக்கின்றன!

அந்த மரக்கட்டைகள்..
சுய புராணம் மட்டும் பேசும்
நூலுக்கு வால் பிடிக்கின்றன
கலையை, கலைஞனை
காயப்படுத்தி
வரலாற்றைத் திரித்தெழுதுகின்றன
வாயால் மலம் கழித்து
கழித்த மலத்தையே திரும்ப திரும்ப..
உண்டு களித்து மகிழ்கின்றன.

பாறைகள் மீது மோதுகிற அச்சமெல்லாம்
அந்த மரக்கட்டைகளுக்குக் கிடையாது

நூலின் அரவணைப்பில்
அகமகிழ்ந்து கிடக்கின்றன

இரும்பு நாக்கு தனக்கு இருப்பதாய் இறுமாப்பில்….

ஆனால்
அந்த மரக்கட்டைகள்
அறிவதில்லை

நூலின் விசை அதிகரிக்க அதிகரிக்க ..
இரும்பு நாக்கின் கூர்மை மழுங்க மழுங்க
மோதி.. மோதி..
மாண்டு போவோமென்று.

எழுதியவர்:

பிச்சுமணி
தமுஎகச மாவட்டக்குழு
தென்காசி மாவட்டம்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *