ரவி அல்லது எழுதிய இரண்டு அழகிய, புதிய தமிழ் கவிதைகள் | Two Tamil Poems Written By Poet Ravi Allathu | புதுக்கவிதை

ரவி அல்லது எழுதிய இரண்டு தமிழ் கவிதைகள்

ரவி அல்லது கவிதைகள்

1. இரவுத் தளர்ச்சி

சூழ்ந்த இரவில்
வாய்த்த சந்தர்ப்பத்தில்
நிகழ்ந்துபோன
உதட்டு ஸ்பரிசத்தைத் தவிர
வேறொன்றும்
நடக்கவில்லை என்றாலும்
வௌவால்கள் படபடத்திருக்கக் கூடாது.
பூனை
மதில் தாண்டி ஓடி இருக்கக்கூடாது.
நிலவு
மேகத்தினுள் ஒளிந்திருக்கக் கூடாது.
யாவிற்குமிடையிலான
குருதியோட்ட அணுக்களின் விழிப்பில்
இந்த
மின்சாரம்
வந்திருக்கக்
கூடவே கூடாது.
***

2. நன்றி கெட்டவனின் நடுசாமக் கேவல்

இழி நிலையின் இயலாமை
யாவிலும்
கேட்காத புறத்திலிருந்து
காவந்துகளைக் கையளித்திட்ட
உன் நேசத்தில் நெகிழ்ந்த
தருணங்கள் தாம்
இத் தாழ்நிலையில்
ஆசுவாசம் கொண்டு
அடுத்த வெற்றிக்கு
அயராது
உழைக்க வைத்தன.

வினோதப் போக்கின் வேதனையில்
கல் தூணில்
கரையான் உள் நுழைந்து
உருக் குலைக்காதென்ற
நம்பிக்கையை நாசமாக்கி.
நிமித்திவிட்ட நீயே
சறுக்கிக் கிடப்பது தான்
சலனத்தைக் கூட்டுகிறது.

கால ஓட்டத்தில் கரைந்திடாமல்
காத்த உன்னிடம்
கை நீட்டி வாங்கியதை
கண்ணீர் சிந்தவிடாமல்
கையளிக்காத கவலை
கையலாகாதவனாக
பார்வையில் சிக்காமல்
படுக்க வைத்துவிட்டது
பாதகம் செய்யுமாறு
பழுதொன்று வந்து.

உன்
காது மட்டும்
இப்பொழுது வேண்டும்
நண்பா…
நீரற்ற மீன்
நெஞ்சடைத்துத் துடிப்பதைப் போல
பார்க்க முடியாமல் போனாலும்
உனக்கான உள்ளன்பில்
உருகுவதன் ஒலியை
நீ கேட்ப்பதற்கு.

கவனமற்றுத் தொட்ட
கைபேசி அழைப்பாக
வருகின்றவொன்றில்
வாய்க்காதாவென
கண்ணீருடன் காத்திருக்கின்றேன்
எந்நொடியிலும்
ஏதாவதொரு
அற்புதம் நிகழுமென்ற நம்பிக்கையில்
நாளும் பொழுதும்
நமக்காகக் காத்து.
***

எழுதியவர் : 

ரவி அல்லது
ravialladhu@gmail.com

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *