1. முள்
மீன் முள்ளைப் போல
புரையோடிக் கிடக்கும்
நினைவுகள்
இப்படி திடு திப்பென்று
மேலேறி வருமென்று
யாருக்கு தெரியும்
ஒரு சொல்லோ
பார்வையோ
தனித்துப் பறக்கும்
ஒற்றைப் புறாவோ
வானில் அனாதையாய்க் கிடக்கும்
பிறை நிலவோ
எப்படி சட்டென்று மண்வெட்டியாய் மாறுகிறதென்பது
கடவுளுக்கும் புரியாத
பிரபஞ்ச ரகசியம்
சொல்லை கண்டு பிடித்தவன்
மரணத்தைக் கண்டு பிடித்தவனாவான்
அது ஒரு சதி
கொலை , துயரம்
இதயத்திற்கு அருகில் செல்லாத
பாசாங்கு என்றறிந்த பின்,
காலத்தோடு சேர்த்து
நிஜத்தையும் புதைத்து விட்டு
மறுகி மறுகி மெளனித்து
செத்துப் போனான்
வாழ்க்கையின் ஆகப் பெரும் துயரம்
என்னவென்றால்
வெகு காலமாய்
புதையுண்டு கிடக்கும்
மீன் முட்கள்
எதிர்பாராத கணத்தில்
பேருரு கொண்டு
நெஞ்சைக் குத்தி கிழிப்பது தான்
2. சொற்களில் உதிக்கும் நிலவு
கருங்குருதியைப் போல்
பெருகி ஓடுகிறது
இன்றைய இரவு
தொண்டையில் சிக்கிக் கொண்ட
மீன் முள்ளைப் போல
வானில் தொத்திக் கொண்டு நிற்கிறது
பிறை நிலவு
கருஞ்சிறகு விரித்த காக்கையாலும்
கவ்விச் செல்ல முடியவில்லை
கடைசியாக பறந்து போன
ஒற்றைப் புறாவாலும் முடியவில்லை
மலைப் பாம்பைப் போல்
வாயைப் பிளந்து கொண்டு வந்த
கரு முகில்களாலும் முடியவில்லை
வைத்தகண் வாங்காமல்
பார்த்துக் கொண்டேயிருக்கும்
உன்னால் மட்டும் முடியுமா
சொல் ?
அருகில் விழித்துக் கிடக்கும்
அத்தனை நட்சத்திரங்களெல்லாம்
ஊழிக் காலம் முதல்
அதற்காகத் தானே
காத்துக்கிடக்கின்றன
வேண்டுமானால் சொல்
துயரத்தின் சாயலில்
பூத்துக் கிடக்கும
நிலவை
ஒரு பூவாக வரைந்து
தருகிறேன்
நீ அந்த ஓவியத்தை
சொற்களாக்கி கவிதையாக மாற்று
உன் கவித்துவத்தின்
சிலிர்ப்பில்
அது பூரண மெய்தட்டும்
கவிதை எழுதியவர்:
தங்கேஸ்
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.