லிங்கராசு கவிதைகள்
சங்கீதத்திற்கு சாதி உண்டா?
**************************************
சங்கீதத்திலும் சமூக நீதி என
குரல் கொடுத்த பாடகனை
ஏனோ ஒரு சிறு கூட்டம்
ஏளனமாய்ப் பார்க்கிறது
யுகங்களுக்கு ஒரு முறைதான்
யுக புருஷர்கள் தோன்றுவார்களா
தீட்டு என்று ஒதுக்கப்பட்டோருக்கும்
பூணூல் அணிவித்த புரட்சிக் கவி போல் ?
எங்களால் மட்டுமே எல்லாம்
சாத்தியம் என்பவர்கள்
மற்றவருக்கும் சொல்லித் தந்து
மனமாற்றம் பெறலாமே?
விரல் தொட்டு வாசிக்கின்ற
வாத்தியத்தின் வரலாறு
தெரிந்தும் தெரியாத பாவனை
கால காலத்திற்கும்
கனிந்த பழக்கமோ?
ஆடுமாடுகளின் மாமிசம்
அவர்களுக்கு
அபச்சாரம்
அவற்றின் தோலில் செய்யும்
மிருதங்கமோ
அவர்களுக்குப் பெருந்தங்கம்
உயிரற்ற மிருதங்கமோ
உலகளந்தவன் பக்கத்தில்….
படைத்த மனிதர்களோ
பல காத தூரத்தில்!
‘ சேரிக்கும் கேட்க வேண்டும்’
என்றவர்கள்
சில்லறையைப் பார்த்ததோடு
தொலைந்து போனார்கள்
யதார்த்தத்தைக் கண்டவர்கள்
மார்கழியில் மக்கள் இசையை
மகிழ்கிறார்கள் கொண்டாடி.
அப்பா
********
பணி நிறைவு செய்த பாசம் குறையாத
அப்பா
பல வீடுகளில் நகைச்சுவை
நடிகராக்கப்பட்டவர்
அம்மாவின் ஒரு காலத்தில்
அன்பான கணவர்
இன்று பிள்ளைகளின் பலத்தோடு
கேலிக்கும் கிண்டலுக்கும்
உள்ளாக்கப்படுபவர்
கேலியையும் கிண்டலையும்
எதிர்க்கத் துணிந்தால்
எங்கே
நம்மைக் கொடுமைக்கார அப்பாவாக்கி விடுவார்களோ
என்ற பயத்தில்
அசடு வழியும் அப்பா!
எதிர்த்துப் பேசிவிட்ட பிள்ளைகள்
தன்னிடம் மன்னிப்பு கேட்கும்
என்ற நப்பாசையில் இருக்கும்
அப்பாவிடம் எந்தச் சலனத்தையும் காட்டாமல் இருக்கும்.
பிள்ளைகளை
தானே மன்னித்துக் கொண்டு
பேச ஆரம்பிக்கும்
அப்பாவி அப்பா
மோசமான பாடல் தொலைக்காட்சியில்
வந்தால் நெருடலாய்ப் பார்க்கும்
அப்பாவை உதாசீனம் செய்து
பாடலை கேட்கும் பிள்ளைகள்
ஆடிப் போகும் அப்பா
அலட்சியம் காட்டும் அம்மா!
கால ஓட்டத்தில் மகள் பேரப்பிள்ளைகள்
மாப்பிள்ளை என்று அடைக்கலம்
தேடிக்கொண்ட அம்மா
முதியோர் இல்லத்தில்
முடிவுக்காக காத்திருக்கும்
அப்பா!
கவிதை எழுதியவர்:
ச.லிங்கராசு
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

