தங்கேஸ் எழுதிய 2 கவிதைகள்
1. உரையாடல்
எங்கள் உழைப்பின் மீது
ஒரு கரும்புள்ளியாய் விழுந்திருக்கிறது
உங்கள் சாதி
எங்கள் உடல் விளைவித்த பண்டங்கள்
உவப்பானதாகவும்
எங்கள் உடல் அருவெறுப்பாகவும்
ஆகி விடுகிறது உங்களுக்கு
நான்கு வர்ணங்கள்
நான்கு வேதங்கள்
அதிலிருந்து முளைத்து விட்டன
நாலாயிரம் தெய்வங்கள்
தெய்வங்கள் நன்மை செய்பவை
என்றுதான் கேள்விப் பட்டிருக்கிறோம்
“நீ பாதத்திலிருந்து பிறந்தவன்
சூத்திரன்
உழைத்து மடிவதே
உனக்கிடப்பட்ட விதி
புரிகிறதா? ”
தெய்வங்களின் மீது அமர்ந்து கொண்டு
பிரம்மன் சிரிக்கிறான்
“கர்மாவை கடைத்தேற்று மகனே
அடுத்த முறை என் சிரசிலிருந்து பிறப்பாய் நீ’
பிரம்மனை உந்தித் தாமரையில்
உதிக்க வைத்த பரந்தாமனிடம்
செல்கிறோம்
” உலகத்தை உய்விக்கும் பொருட்டே
நான்கு வர்ணங்களும் என்னால்
படைக்கப்பட்டவை
சத்ரிய ராமன் என்னுடைய அம்சம்
சம்பூகனுக்கு ஏற்கனவே
மோட்சம் அருளப்பட்டு விட்டது”
இந்த நம்பிக்கையும் பொய்த்தது
இப்போது முழு முதற் கடவுள்
முப்புரத்தை எரித்தைவன்
மூவுலகத்தையும் கடந்தவன்
ஆதி சிவனிடம் செல்கிறோம்
“ஐயனே ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
அடிமைப் பட்டுக் கிடகின்றன
எங்களின் தலைமுறைகள
முப்புரத்தை நொடியில்
எரித்தது போல்
இந்த சாதியை எரித்து
சாம்பலாக்குங்கள்
எங்களை கடைத் தேற்றுங்கள்”
ஐயன் அருள்கிறான்
” கவலை வேண்டாம்
அப்படியே தொடருங்கள்
நானும் உங்கள் சாதிதான்
எனக்கும் சுடுகாட்டில் தான்
இடம் அளித்திருக்கிறார்கள்”
” ஐயனே உங்களாலும் சாதியை
ஒழிக்க இயலாதா ?”
“ஒழிக்க முடியாது
ஆனால் உங்களுக்கு மோட்சம் தர
முடியும்”
” சாதியை ஒழிப்பதை விட
வேறு மோட்சம் என்ன இருக்கப் போகிறது எங்களுக்கு”?
“மௌனம் தான் பதிலா,?
மகாத்மாக்களாலும் முடியவில்லை
மகான்களாலும் முடியவில்லை
இப்பொழுது மும்மூர்த்திகளாலும்
முடியவில்லை
முப்பத்து முக்கோடி தேவர்களை விடவும்
வலிமை வாய்ந்ததாக இருக்கிறதே
இந்த நாட்டில் சாதி”
நாங்கள் வேண்டுமானால் மதம் மாறிவிடவா ஐயனே ?
” மதம் மாறினால் எண்ணிக்கை குறையாதா?
“அடிமைகளின் எண்ணிக்கையா?”
” அப்டியில்லை அப்படியில்லை’
” உங்கள் நெற்றிக் கண்ணை
திறந்து பாருங்கள்
எங்கள் முன்னோர்கள் எங்களுக்குள்ளிலிருந்து
அழுதழுது விம்முகிறார்கள்
உடைந்த சுவர்களில் விழும்
கீறல்களைப் போல
எங்கள் இதயங்களில்
கீறல் விழுகின்றன
அவர்களின் பெருமூச்சுக்களினால் ”
“இந்த யுகத்தின் முடிவில்
அவர்களை அமைதி கொள்ளச் செய்கிறேன் நான் ”
“ஆனால் அவர்களின் ஆன்மா
சாதியை ஒழிக்காமல்
சத்தியமாக அமைதியடையாது”
” சாதியை தவிர்த்து வேறு வரம் கேள்
வழங்கப்படும் ”
” சாதியை ஒழிக்க இயலாத தெய்வங்களிடம்
நாங்கள் என்ன வரம் கேட்பது?
முன்னர் முப்புரத்தை எரித்த தீ
இன்னும் அவிந்து விடவில்லையே ?
” இல்லை”,
” இனி அது போதும் எங்களுக்கு ”
2. செம்மறி ஆடுகளின் பெருமைகள்
செம்மறி ஆடுகளைத்தான் யாருக்குப் பிடிக்காது
இயேசு முதல்
நவீன மீட்பர்கள் வரை
கால்நடையாகவே எவ்வளவு தூரமும் நடக்கும்
பேருந்துப் பயணம் எல்லாம் கேட்காது
திடு திப்பென்று நடுரோட்டில்
நின்று கொண்டு போராடாது
பரம சாது
செம்மறியின் பெருமையை
நாள் முழுவதும் சொன்னாலும் மாளாது
கறிக்கடைக்கே கூட்டிப்போனாலும்
பரம சாதுவாய் உடன் வரும்
சின்னச் சின்ன எருமைகள் மாதிரி
அசைபோட்ட படியே நடைபோடும்
நாற்றத்தை மட்டும்
சகித்து கொள்ளப் பழகி விட்டால்
நடமாடும் ஏடிஎம் என்று வைத்துக்கொள்ளுங்கள்
ஆடு வளர்ப்பவர்களுக்கு
ஒரு கைப்பிடி இலை தழையைக்
காட்டி விட்டால் போதும்
யார் அழைத்தாலும் விசுவாசமாய்
உடன் வரும்
சமயத்தில் ஐந்து வருடங்களுக்கும் மேல்
இரண்டு நாய்களை இரண்டு பக்கமும்
பாதுகாப்பிற்கு விட்டுக்கொண்டு
துறட்டிக் கம்பை தோளில் போட்டுக்கொண்டு
நீங்கள் தாராளமாய் அழைத்துப்போகலாம்
மிரட்டும் வேலையே உங்களுக்குக் கிடையாது
அத்தனைப் பணிவு அதனிடம்
பசி எடுத்தால் பயந்து போய்த்தான் செருமும்
கை வசம் ஒரு பிரியாணிப் பொட்டலம்
அல்லது நாலைந்து நல்ல சினிமா சுவரொட்டிகள்
இருந்தால் கூட போதும்
செம்மறி ஆடுகளைப்பற்றிச் சிலாகித்துச் சொல்ல
இவ்வளவு விஷயங்கள் இருந்தாலும்
ஏனோ
கறி என்று வரும்போது
வரிசையில் நின்றாவது
வெள்ளாட்டுக்கறியைத்தான்
வாங்கிப்போகிறார்கள்
யாவரும்
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.