உடல் ஆயுதம் – புலியூர்முருகேசன் | நூல் மதிப்புரை – கருப்பு அன்பரசன்

அடக்குமுறை எங்கெல்லாம் தன் குரூரத்தை கட்டவிழ்த்துவிடுகிறதோ அங்கெல்லாம் தன் அடிவயிற்றில் இருந்திடும் சக்தியனைத்தும் திரட்டி, கழுத்து நரம்புப் புடைக்க, உயர்த்திய கரங்களின் மூடியிருக்கும் முஷ்டிக்குள் கம்யூனிஸ்டுகளே இருப்பார்கள். உலக வரலாற்றுப் பக்கங்களைத் தொட்டு வாசிக்கும் போதெல்லாம் இன்னும் ஈரத்தோடு பிசுபிசுக்கும் கருஞ்சிவப்பு ரத்தமதனின் வாசத்தில் உணரலாமதை. எதிரிலிருப்பவர் வலுமிகுந்தவன் என அறிந்தாலும் தீர்க்கமாக நேர்கொண்டு எதிர்க்கும் அறத்தினை அவர்களுக்குள் அணையவிடாது உயிர்ப்பித்து வைத்திருப்பது வெறும் எழுத்து நடையில் இருக்கும் திட்டமும், இலட்சியமும் மட்டுமேயல்ல; அதற்கும் மேலே எதிரிகளைக் களத்தில் நேர்கொண்டுப் போராடி குரல்வளை அறுக்கப்பட்ட.. குத்திட்டிகள் வயிற்றில் சொருகப்பட்டு, ஒங்கியக் கொடுவாள் கொண்டு மண்டை பிளக்கப்பட்டு மூளை தெறித்து விழ, அரசதிகாரக் கைக்கூலிகளான ராணுவ, காவல்துறையின் தோட்டாக்களை நெஞ்சிலேந்தி உயிர்த்துறந்த எண்ணற்ற தியாகிகளின் நினைப்புமே இன்றளவும் களத்தில் நிற்கும் போராளிகளுக்கு உயிர்ப்பு மிக்க சக்தியாக நிற்கிறது.
அவர்களின் பெயரும்.. உடலும் அல்லவா எதிராளிகளுக்கு பேரச்சத்தை உருவாக்கியது..அதிகாரக் கன்னிகளின் அடிவயிற்றில் ஆழப்பாய்ந்த ஆயுதங்களாக வாழ்ந்தவர்களின் வேர்தேடிப்போன ஒரு போராளி.. பாட்டுக்கலைஞன், ஆசிரியன், சமூக விஞ்ஞானியொருவன், இன்னுமொரு வேராக மாறிய நிஜத்ததை புனைவாக்கி வளரும் இளம் கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஆயுதமாக்கியிருக்கிறார் களப்போராளியும் எழுத்தாளர்மான புலியூர் முருகேசன் அவர்கள் “உடல் ஆயுதம்” என்ற புதினமாக. ஆயுதத்தை கைகளில் கொடுத்திருக்கிறார் பொன்னுலகம் பதிப்பகத்தார்.
பாலமுத்து என்கிறப் பாட்டுக்கலைஞனின் வழியாக இயக்கத்தின் வேர்கள் ஒவ்வொன்றையும் வாசிப்பவரின் மனசிற்குள் தீயாக எரியவிடுகிறார் நாவலாசிரியர். ஒவ்வொரு அத்தியாயத்திற்குள்ளும் அந்தப்பகுதி மக்களிடையே தோழர்கள் எப்படியெல்லாம் இணைந்து இயைந்து அவர்களின் வாழ்வியலோடு.. பண்பாட்டோடு கலந்து நின்றார்கள் என்பதை அழகியலோடு பதிவாக்கியிருப்பார் புலியூரார்.
பள்ளி ஆசிரியர் தோழர் பெருமாள்சாமி வழியாக தோழர் அப்புவை, அவர் தலைமறைவு வாழ்க்கையின்போது தோழர்களின் குடும்பத்தில் ஒருவனாக இருந்து, அன்றாடத் தினக்கூலி வேலைக்கும் சென்று கிடைக்கும் பணத்தை முழுவதுமாக, தான் தங்கி இருக்கும் தோழர் குடும்பத்திற்கே கொடுத்து குழந்தைகளுக்குக் கறிச் சோறு ஆக்கிப்போடும்படி சொல்லும் போதும், தலைமறைவின் தொடர்ச்சியாக வேறு ஊருக்கு செல்ல வேண்டி  வெறும்
பஸ் டிக்கட்டுக்கான காசை மட்டும் வாங்கிச் செல்லும் போதும் தான் கொண்ட லட்சியத்திற்கும், தோழர்களின் குடும்ப உறவுகளுக்கும் அப்பாற்பட்டதே பணம் காசு என்பதை நேர்த்தியாக சொல்லி; காவல் துறையினரால் அப்பு ஒரு நாள் இரவு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டு  அடித்தே கொன்று இன்றளவும் தேடப்படுபவராகவே அறிவித்து நாடகமாடுவதென்பது போராளியின் மரணமும் ஆள்பவர்களை அச்சுறுத்திக் கொண்டேயிருக்கிறது என்பதை வலிகொண்ட ஆத்திரத்தோடு அறிமுகப்படுத்துவார் பாலமுத்துவுக்கு அப்புவை.. அது நமக்கும்தான்.
தன்னை ஒரு பாடலாசிரியனாகவும்.. பாட்டுக் கலைஞனாகவும் பரிணாமம் கொள்ளவைத்த மாடக்கோட்டை தோழர் சுப்பு, பாடல் ஆட்டக் கலைஞன் வசந்தன், தோழர் வியாகுலமேரி, நாராயணன், நெல்சன் ஆகியோரோடு தொடங்கிய கலைக்குழு பயணம் குறித்தும்.. அப்பயணத்தில் சுப்பு தோழரின் இணையர் தோழர் காளியம்மாளின் அரும்பணியையும் பாலமுத்துவின் பேச்சுவழியாக பதிவாக்கி இருப்பார் நாவலாசிரியர். மாடக்கோட்டையை சுற்றி இருக்கும் கிராமப்புறங்களில் ஆதிக்கச் சக்திகளுக்கெதிராக, சாதிக் கொடுமைகளுக்கு எதிராக, நடைபெற்ற தொடர்ப் போராட்டங்கள், போராட்டங்களில் வெற்றியை நோக்கியான நடைமுறைத் தந்திரங்கள், கொண்டாட்டம் மிக்க சிறுவாச்சி முத்து நாச்சியம்மன் கோயில் நுழைவுப் போராட்டம், ஆயிரக்கணக்கான உழைக்கும் மக்களைத் திரட்டி நடைபெற்ற நிலமீட்புப் போராட்டம்.. நீலமீட்பு போராட்டத்தின் போது ஆண்டைகளின் எதிர்ப்பை எதிர்கொண்ட  சக்தியான தந்திரம்வாய்ந்த செங்கொடியேந்தியப் போராட்டம்.. மீட்ட நிலத்தை நிலமற்றோருக்கு பகிர்ந்தளித்த முறை.
இப்படி மாடக்கோட்டை எப்படி படிப்படியாக செங்கொடி மக்களின் கோட்டையாக உருகொண்டதென்பதைக் கூறி “நாம உயிரோட இருக்குற வரைக்கும் நம்ம கட்சியைப்பார்த்தும், நம்ம மக்களைப் பார்த்தும் பயப்படற எதிரிக்கூட்டம், நம்மளயக் கொன்னுட்டாலும், கொலையான நம்ம ஒடம்பைப்பார்த்து காலத்துக்கும் பயப்படனும்; பயப்படும்.” என்று, போராளிகளை நேரிடையாக எதிர்கொள்ள தைரியமற்ற ஆதிக்கச் சக்திகளும், காவல்துறையும் எங்கேயோ நடைபெற்ற, எவரோ செய்த கொலையில் வலுக்கட்டாயமாக தோழர் சுப்பு, நாராயணன் இருவரையும் இணைத்து, சிறையிலடைத்து, பெயிலில் தினமும் நிபந்தனை கையெழுத்ததிட்டு திருநெல்வேலியில் ஒரு டீ கடையில் தினசரி நாளிதழ் படிக்க தலைக்குனிந்து  இருந்தபோது கூலிபடைக் கொண்டு சுப்புவின் கழுத்தில் வெட்டி குருதி கொப்பளிக்க உடலை தனியாக்கி தம் வெறியினைத் தீர்த்துக் கொண்டார்கள் ஆதிக்கச் சக்திகள் என்பதை கண்கள் சிவந்திட பதிவாக்கி முடித்திருப்பார்.
இப்படி நாவல் முழுக்க சந்திர சேகர், சந்திர குமார் போன்ற தியாகிகளின் வீரம்செறிந்த போராட்டங்களையும், அவர்தம் வேர்களையும் தேடித் தேடி நம் கண்முன்னெ கொண்டுவந்து நிறுத்தி இருப்பார் நாவலாசிரியர் புலியூர் முருகேசன் தன் பாலமுத்துவின் தேடுதலின் விரல் பிடித்து. தோழர்கள் சந்திரகுமாரும், சந்திரசேகரும் படுகொலையானதெப்படி..
அதிகாரமும்…ஆதிக்கமும் இப்படுகொலைசெய்திட எத்தனை கீழ்த்தரமான வேலை பார்த்ததென்பதை நீங்களும் அறிந்திட “உடல் ஆயுதம்” வாசித்திடுங்கள். வேர்களைத் தேடி கவிபாடிய பாட்டுக்கலைஞன் பாலமுத்து காவல்துறையால் எப்படிக் கைதாகிறான்.. அவனது உடலில் காயமேதுமில்லாமல் எப்படியெல்லாம் சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டு விடுவிக்கப்படுகிறான்..
வெளியே வந்த மூன்றாம் நாளே புள்ளத்தாய்ச்சியாக இருக்கும் தன் இணையர் வீரம்மாளின் மடியில் மூச்சுவிட முடியாமல் செத்துப்போகும் சோகம்.. வேர்களைத் தேடிச் சென்று வெளிச்சமிட்ட கவி எப்படி இன்னுமொரு வேராகிப் போனான்.. முழுக்காதலையும் மொத்தமாய் இழுத்துப்போன பாட்டுக் கலைஞன் பாலமுத்துவின் இறப்பிற்கு பிறகு  வீரம்மாள் என்னவானாள்.. அவளுக்கு பிறந்த குழந்தை சந்திரகுமார் வளர்ந்து பெரியவனானபிறகு தன் தந்தை கம்யூனிஸ்ட் என அறிந்து  தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கும், சென்னை இராயப்பேட்டை அரசு மருத்துவ மனைக்கும் ஏன் வந்தான்.. வந்தவன் தன் வேரினை பார்த்தானா..? வேரின் அடையாளமறிந்து
பார்த்திடும் வேளைதனில் அவனின் மன நிலை என்ன?..
சென்னை ராயப்பேட்டை மருத்துவமனை பிணவறையில் கிடத்தப்பட்ட நடிகையின் உடல், எழுத்தாளன் உடல், சாதி வெறியால் தலை துண்டிக்கப்பட்ட தாழ்த்தபட்ட மனிதனின் உடல், தனியார் பள்ளியின் அலட்சியத்தால் மூட்டையாகக் கட்டிக் கொண்டுவரப்பட்ட சிறுமியின் உடல், போராட்டத்தால் பழிவாங்கப்பட்டு மருத்துவமனைக்குள் சிகிச்சையளித்தும் காப்பாற்ற முடியாமல் கிடத்தப்பட்டிருக்கும் ஒரு போராளியின் உடல்.. இத்தனை உடல்களும் நம்மோடு பழகிய..
பேசிய.. பார்த்த.. விளையாடிய.. கரம்கோர்த்த..போராடிய எவரின் உடல்களாகவோ இருக்கும்.. உங்கள் உணர்வுக்குள் ஏதேனும் செய்யும்..
வாசித்து முடித்ததும் எனக்கென்னவோ கொஞ்ச காலத்திற்கு முன் நம்மை மீளாத்துயரில் ஆட்படுத்திச் சென்ற களப் போராளி.. இந்திய மாணவர் சங்கத்தின் தலைவர்களுள் ஒருவராக இருந்து, சென்னை ராமச்சந்திரா மருத்துவக் கல்லூரிப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, அன்றைய அரசாங்கத்தை தன் ஓங்கியக் குரலின் முன் பணிய வைத்த; கடந்த வருடத்தில் மருத்துவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து சக்தியான போராட்டத்தை நடத்தி, தமிழக மக்களின் நலன் முன்னிட்டு, தமிழக அரசின் நயவஞ்சக வாக்குறுதியை நம்பி கடைசிவரை அரசின் திமிர்த்தனம் அழைக்க மறுக்க.. போராட்டத்தில் பங்கேற்ற பல மருத்துவர்கள் வலுக்கட்டாயமாக தமிழகத்தின் பல பகுதிகளுக்கு இடமாற்றம் ஆணையிட, அந்த மன உளச்சலிலேயே தன் இருதயம் துடிப்பதை நிறுத்திக் கொண்ட அந்தக் களப் போராளி தோழர் லட்சுமி நாராயணன்..
அரசின் இத்தகைய செயல்படாத அடக்குமுறையும்கூடா போராளிகளை கொன்று புதைக்கும் என்பதற்கு தோழர் லட்சிமியின் இழப்பும் கூட நமக்கும்..போராளிகளுக்கும் பெரும் அனுபவமாகும். நேற்றய தினம் அவரின் இணையர் அனுராதா அவர்கள் காணொளிப்பதிவு துயரத்தை மேலும் கூட்டியது.. தோழர் டாக்டர் லட்சுமி நாராயணன் புதைக்கப்பட்ட தோட்டமிடத்தையும் அரசு கையகப்படுத்த நினைக்கும் அருவெறுப்பு மிக்க பணிகளில்
ஈடுபடுவதாக அறிகிறேன்.. ஒரு போராளி புதைக்கப் பட்ட இடம் கூட எத்தகைய அச்சுறுத்தலை நிகழ்த்தி வருகிறது ஆட்சியில், அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு.
வீர வணக்கம்
தோழர் லட்சுமி நாராயணன்.!
கம்யூனிஸ்ட்டுகளின் உடல் மட்டுமல்ல
ஆயுதம்…
அவர்களின் நினைப்பும் கூட
நமக்கு ஆயுதமாகும்.
வாசியுங்கள்
புலியூர் முருகேசன் எழுதிய
“உடல் ஆயுதம்”.
கருப்பு அன்பரசன்