Udal Book By Harishankar Bookreview By Karuppu Anbarasan நூல் அறிமுகம்: அரிசங்கரின் உடல் - கருப்பு அன்பரசன்

நூல் அறிமுகம்: அரிசங்கரின் உடல் – கருப்பு அன்பரசன்

உயிரின் உடலின் கடைசி தேவையாக கொஞ்சம் மண்ணும் கொஞ்சம் நெருப்பும் மட்டுமே. அதற்குள்தான் இந்த உடல் உயிர் கொண்டு நடத்திடும் வேட்டையும் சாகசமும்தான் எத்தனை எத்தனை!

இதன் தேவைகள் நூறு நூறு உண்டு. பல ஆயிரமாயிரம் மனிதர்களுக்கும் மனித மிருகங்களுக்கும் அவரவரின் இதயங்களில் கசிந்துருகும் பேரன்பின் உணர்வுகளாய்.. சிந்தனைக்குள் புழுக்கள் நெளியும் மனித உடலின் உணர்ச்சிப் பெருக்காய்.. பேரன்புமாக.. அழுகையாக.. கோவமாக.. அன்பில்லாததாக.. இரக்கமற்றதாக..  ஈர்ப்பை புறம் தள்ளுவதாக. சந்தேகமுமாக.. உயிர் மூச்சின் இருப்பை தெரிவிப்பதற்காக முளைவிடும் எண்ணங்களின் போக்கில் தேடிக்கொண்டே..  எப்போதும் பொது வெளிகளில் கேள்வியாக பதிலாக அலைந்து கொண்டிருக்கிறது உடல்.

உயிர் கொண்டு பறந்தலையும் உடல் வாழ் நொடியின் கடைசிக்குள் பல உயிர்களை அழகு என்றும் அசிங்கம் என்றும் அவசியம் என்றும் புனிதம் என்றும் நேரத்திற்கு ஏற்ற முகமூடிகள் தரித்து அவதானித்து எழுகிறது.

பல உயிர்களால் கொண்டாடப்பட்டும் இகழப்பட்டும் வருவது என்பது இன்னொரு உயிரை ஆட்கொள்ள தொடங்கிய காலம் முதலே இங்கு. மனது சொல்வதை அறிவு  கேட்டுக்கொண்டும்; கேட்க மறுத்ததும் உடல் வழியாக உடலின் மீது பெரும் போர் ஒன்றினை நிகழ்த்துவது இன்றளவும் தொடர்கிறது.

அவர்களுக்கு உயிர் உண்டு உடல் உண்டு உடலில் வளர்ச்சியும் உண்டு.. அவர்களின் உதட்டோரத்தில் இருந்து எச்சில் ஒழுகிக் கொண்டே இருக்கும்..
அதை “அவர்கள்” அறிய மாட்டார்கள்.

அவர்கள் சிரிப்பார்கள்.. அவர்கள் அழுவார்கள்.. அவர்கள் சத்தமிடுவார்கள்.. எதற்காக சிரிக்கிறோம் ஏன் அழுகிறோம் எதற்காக கத்துகிறார்கள் என்பதை அறியாதவர்கள்..

அவர்களுக்கு பசி எடுக்கும் சொல்லத் தெரியாது.. அவர்களுக்கு உண்ணக் கொடுத்தால் சாப்பிட்டுக்கொண்டே இருப்பார்கள் வயிறு நிரம்பியதை அவர்களால் உணர முடியாது.

எல்லோரும் பார்த்துக் கொண்டிருக்கும்போதே ஆடை நழுவினாலோ, அணிந்திருக்கும் கால்சட்டையின் பட்டன் அவிழ்ந்து கீழே விழுந்தாலும் அவர்கள் சலன படமாட்டார்கள்.. புனிதம் என்றும் கௌரவம் என்றும் அவமானம் என்ற எதுவுமே அவர்களுக்குள் கிடையாது.

அவர்களின் உலகத்திற்குள் எவராலும் செல்ல முடியாது.. அவர்களின் மனசுக்குள் நாம் எவருமே இருக்கவும் முடியாது.. அங்கு “அவர்” ஒருவருக்கு மட்டுமே இடமுண்டு..

அவர் ஒருவரால் மட்டுமே அவர்களின் செய்கைகள் அனைத்திற்கும் பொருள் விளங்கிக் கொள்ள முடியும்.. அவர் அவர்களின் தேவதை.. அவர் அவர்களின் பிடித்தமானவள்..

அவர் இல்லாமல் அவர்களில்லை.. அவர்களுக்கு அவரில்லாமல் எவருமில்லை.. அவர் தன் தொப்புள்கொடி வழியாக அவர்களுக்கு மூச்சுக்காற்றை அனுப்பி வைத்தவர்.. கருஞ்சிவப்பு ரத்தத்தை அமுதாக்கி அவர்களின் உடல் வளர்த்தவர் “அவர்தான்” அவர்களின் அம்மா.! “அவர்கள்தான்” மனவளர்ச்சி குன்றிய மாமனிதர்கள்.. எத்தனை வயதானாலும் அன்று பிறந்த குழந்தைகள்தான் அவர்கள் என்றும்.

எதற்கு நான் இப்படி தொடங்குகிறேன் என்று நினைக்கிறீர்களா.. இதற்கு நான் கடைசியில் வருகிறேன் “உடல்” சிறுகதை தொகுப்பின் ஆசிரியர் அரிசங்கர் அவர்களே. முதலில் உங்களுக்கு என்னுடைய பேரன்பினை தெரிவித்துக்கொள்கிறேன். சிறப்பான முறையில் அச்சிட்டிருக்கும் “எதிர் வெளியீடு” நிறுவனத்திற்கு என்னுடைய வாழ்த்துகள்.

பெருமுதலாளிகளின் கார்ப்பரேட் நிறுவனங்களின் வசியம் மிகுந்த கண்டுபிடிப்பே தொலை தொடர்புத் துறையில் செல்போன். பெண்கள் இப்படித்தான் இருக்க வேண்டும் இப்படித்தான் பேச வேண்டும் இப்படித்தான் நடக்க வேண்டும் என்கிற வளையத்திற்குள் வைத்து வளர்க்கப்பட்டச் சமூகத்தில்.. அறிவியலின் வளர்ச்சியை தமது வாழ்க்கையின் மேம்பாட்டிற்காக பயன்படுத்திக்கொள்ள அறியாத, உணராத; பெண் உடலோடு மட்டுமே பேசி பழகிய ஆண் சமூகத்தில், மனைவிக்கும் குழந்தைகளுக்கும் வாழ்வதற்கு தேவையான ஆதாரத்தைக்கூட கொடுக்க இயலாத ஆண்கள் இருக்கக்கூடிய குடும்பத்தில் இக்கதை களமாக இருக்கிறது.

கார்ப்பரேட்டுகளின் வியாபாரச் சந்தையில் மலிவாகக் கிடைக்கக்கூடிய செல்போன், மனைவியின் கையில் ஒலி எழுப்பும்போது, உடலை மட்டுமே பார்த்துப் பழகிய ஒருவனுக்குள் ஏற்பட்ட சந்தேகத்தின் விளைவே மனச்சிதைவு ஏற்படும் இடத்தில் அவனை கொண்டுபோய் நிறுத்துகிறது இக்கதையில்.

கதையில் வரும் ஆணைப் போன்றே எளிய குடும்பத்தில் மட்டுமல்லாது அறிவியல் தகவல் தொழில் நுட்ப அறிவார்ந்தவர்கள் மத்தியிலும் கூட பல ஆண்கள், தன்னுடைய மனைவியின் அல்லது காதலியின் முகநூல் அடையாளம் பாஸ்வேர்டை வாங்கி அவளின் உள் பெட்டியில் நுழையும் பொழுதும், மனைவியின் அல்லது காதலியின் வாட்ஸ் ஆப் எண்ணில் ஆன்லைன் என்கிற எழுத்து வரும்பொழுதும் அறிந்து கொள்ளலாம் அந்த ஆண்களின் கீழான மனநிலையை .

“உடல்” சிறுகதை பெரும்பாலான குடும்பங்களில் ஆண்களின் மன அழுக்கை அப்பட்டமாக வெளிக்கொண்டு வந்திருக்கிறது. பெண்கள் தங்களின் குடும்ப உறவுகளில் இன்றைக்கு சந்தித்து வரக்கூடிய சவாலான சூழ்நிலையை பேசுகிறது.

உடலின் ஓர் அங்கமான விழிகளில் ஒரு நாள் திடீரென்று இருட்டு ஏற்படும்பொழுது; அதுவே நிரந்தரமாகி விடும் பொழுது வாழ்வின் வழிகாட்டியாக ஒலி தொடர்கிறது அவனுக்கு. சத்தங்களை கொண்டு வடிவமைத்துக் வாழ்ந்து வரும் அவனுக்குள் தாழ்வுமனப்பான்மை மேலோங்கிட தன்னுடைய மனைவி பேச்சின் ஒலிஅளவிலும், சிரிப்பின் ஒலிஅளவிலும், நடந்து வரும் நடையின் சத்தத்திலும் குற்றம் கண்டுபிடிக்கத் தொடங்கி என்னவாகிறான் என்பதே “ஒலிக்குறிப்புகள்” என்கிற சிறுகதை.

மேற்சொன்ன இரண்டு கதைகளுமே ஆண்களின் உளவியல் சார்ந்த கதைகள். இப்படியான மனிதர்களை நாம் ஒவ்வொரு நாளும் சந்தித்துக் கொண்டேதான் இருக்கிறோம்.

மனித உடல்களின் அதி முக்கியமான கொண்டாடப்பட வேண்டிய சுகம் நிறைந்த ஒன்றாகும் கலவி. ஆண் பெண் இருவருமே மன, உடல் ஈடுபாட்டுடன் கலவியில் தங்களை உட்படுத்திக் கொள்ளும் பொழுது கண்டடையும் அந்த பேரின்பத்தை எழுத வார்த்தைகள் கிடையாது. வாழ்நிலையில் தேவைகள் சில நேரங்களில் நம்மை வந்தடையாதபோது மனதை அமைதிப்படுத்த ஒருநிலைப்படுத்த கலவியோடு இருவருக்கும் நடைபெறும் உரையாடல் இன்னும் வலிமையாக்கச் செய்யும் அவர்களை.

உலகமயமும் நுகர்வுக் கலாச்சாரமும் மனிதர்களை முழுவதுமாக ஆக்கிரமித்து ஆளுமை செய்து கொண்டிருக்கிறது இன்று. இதிலிருந்து எவர் ஒருவருமே தப்ப முடியாது புறச்சூழலை அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் வாழ்வின் எல்லை வரை ஒவ்வொருவரோடும் பயணித்துக் கொண்டிருக்க வேண்டிய கட்டாயத்தினை கார்ப்பரேட் முதலாளிகள் திட்டமிட்டு தம்முடைய வியாபார உத்திகளை தினமும் நிகழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்.

கணவன் மனைவி இருவருமே பல நூறு கிலோ மீட்டர் தூரம் பயணம் செய்து சந்தித்துதான் அன்பு மிகுந்த உரையாட வேண்டியிருக்கிறதென்றால், அவர்கள் இருவரின் இளமைக்கால முக்கிய ஒன்றான கலவி என்பது ஏக்கம் நிறைந்த ஒன்றாகவோ அல்லது அதற்காக தங்களை தயார்படுத்தி ஈடுபடும் மனநிலை இல்லாத ஒன்றினை புறச்சூழல் அமைந்துவிட்டால் அவர்கள் இருவரின் உடல் தேவை என்பது மிகுந்த வலி கொண்டதே. அந்த வலியினை தீர்த்துக்கொள்ள மனைவியை விட்டு வெகு தூரத்தில் இருக்கும் ஆணுக்கு இச்சமூகம் இன்னொரு பெண்ணோடு அந்தநேரத்திற்கான உறவு வைத்துக்கொள்ள பல வழிவகைகளை செய்து வைத்திருக்கிறது.

அதே நிலையில் இருக்கும் பெண்ணுக்கான மனவலியை, ஆசையை சக பெண்களோடு கூட பகிர்ந்து கொள்வதை இச்சமூகம் அவளின் கற்பு என்ற புனிதத்தின் மேல் நின்று கேள்விக்குள்ளாக்குகிறது. பொதுவெளியில் அவள் குறித்து அவதூறு பேச தயங்குவதும் கிடையாது. இவைகளை உடைத்தெறிந்து இக்கதையில் ஒரு பெண் இன்றைய பொருளாதார சூழ்நிலையில் நானும் ஏன் அவனைப் போல் இருக்கக்கூடாது என்கிற கேள்வியினை எழுப்புகிறாள். காதலும் பேரன்பும் வெறும் உடல் சார்ந்ததல்ல ஒவ்வொருவரின் சூழ்நிலை அறிந்து ஆண் பெண் இருவருமே நிஜமான நேர்மையான அன்பொழுக விட்டுக்கொடுத்து பழகுவதே. இதில் உடல் எப்பொழுதுமே இரண்டாம்பட்சம்தான். பொதுச் சமூகத்தில் “காமமுறுதல்” கதை கலகத்தை நிகழ்த்த கூடியது. இப்படி இருந்தால் என்ன என்ற ஒரு கேள்வியைக் கேட்கிறது. சபாஷ் அரிசங்கர்.

இப்பொழுது மனவளர்ச்சி குன்றிய குழந்தைகளுக்கும் தாய்க்கும் ஆன உறவு குறித்து எழுதிய ஆரம்ப நிலைக்கு வருகிறேன் அரிசங்கர். “அம்மா இன்னும் சாகவில்லை” என்கிற உங்களின் கதையில் அம்மா குறித்த உங்களின் பார்வையில் இருந்து முற்றிலுமாக நான் மாறுபட்டு இருக்கிறேன். இங்கு ஒவ்வொருவருக்கும் வெவ்வேறு அம்மாக்கள் இருக்கிறார்கள்.

அம்மா என்கிற வார்த்தை இங்கு புனிதமாக கட்டமைக்கப்பட்டிருக்கிறது. அதிலும் எனக்கு முழு உடன்பாடு கிடையாது. அம்மா என்பவர் வெறும் தியாகம் செய்வதற்காகவே என்றும் எழுதப்பட்டு வந்திருக்கிறது, இப்பொழுதும் எழுதிக் கொண்டிருக்கிறார்கள்… இவைகளையும் நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன்.

அம்மா என்பவருக்கும் ஆயிரம் ஆசைகள் இருக்கும் எண்ணங்கள் இருக்கும் நேசங்கள் இருக்கும். அவைகள் எல்லாம் இங்கு எப்பொழுதுமே தியாகம் என்கிற ஒற்றைச் சொல்லுக்குள் அடைக்கப்பட்டு அவளுள் இருக்கும் எல்லாவற்றையும் நிர்மூலமாக்கிய வந்திருக்கிறது ஆண் சமூகம். சமூகத்தில் எத்தனையோ மீறல்கள் நடந்து வந்து கொண்டிருந்தாலும் எல்லோரும் மனிதர்களாகவே, பேரன்பு கொண்டவர்களாக வாழ்ந்து வருகிறோம். அவலங்களை எதிர்க்கிற பெரும் கோபத்தால் நம்முடைய செயல்களை வெளிப்படையாக தெரிவிக்க முடியவில்லை என்றாலும் மனசுக்குள் அந்தக் கோபத்தை அடக்கி வைத்துக் கொள்கிறோம். நேரம் பார்த்து அந்த கோபம் வேறு வழியில் நம்மிலிருந்து வெளிப்படுகிறது நடைபெற்ற கொடுமைகளுக்கு எதிராக.

அதேபோன்றுதான் அன்பும் கனிவும். வெளிப்படையாக பல நேரங்களில் சொல்ல முடியவில்லை என்றாலும் என்றாவது ஒரு நாளில் அது நம்முடைய கண்களில் சிரிப்பினையும் கண்ணீரையும் வரவழைத்துவிடும். இரண்டுமே வலிமை பொருந்தியது மனிதர்களிடத்தில். மனித மிருகங்கள் என்பது வெகு கொஞ்சமே. அது சமூகத்திற்கே சீர்கேடாக வரும் என்று ஒரு படைப்பாளி நினைத்தல் அவர்களை தன்னுடைய கதையின் மாந்தராக படைத்து அவர்கள் குறித்து எச்சரிக்கையாக சமூகம் இருக்க வேண்டும் என்பதை பிரதிபலிக்கலாம். அதுதான் ஒவ்வொரு படைப்பாளியும் காலத்தின் கண்ணாடியாக இருக்க வேண்டும் என்பது.

ஆனால் அம்மா இன்னும் சாகவில்லை என்கிற உங்களின் கதையில் மனவளர்ச்சி குன்றிய மகனுக்கும் தாய்க்குமான உறவு. பாசம் இப்படி நான் எங்கேயும் பார்த்ததில்லை. அப்படியான குழந்தைகளின்பால் ஆண்கள்தான் பல இடங்களில் அக்குழந்தைகளுக்கு எதிர் நிலையில் இருக்கிறார்கள். பெண்கள் எல்லோருமே அக்குழந்தைகளின் தேவதைகளாக இருக்கிறார்கள். நான் அறிந்து பல குடும்பங்களில் இருக்கக்கூடிய ஆண்கள் இப்படிப்பட்ட குழந்தைகள் பிறந்தவுடன் குடும்பத்தை விட்டு வெளியேறி இன்னொருவரை திருமணம் செய்து கொண்டு வாழ்வதை நான் நேரடியாகவே கண்டிருக்கிறேன். அவர்களைத்தான் நான் மனித மிருகங்கள் என்கிறேன். மனித மிருகங்கள் எப்போதுமே பேரன்பு கொண்ட மனிதர்களோடு வாழ்வது கிடையாது.

இதில் வரக்கூடிய குமரனின் அம்மா ஒருவேளை மனித மிருகம் என்றாலும் அவர்களைப் போன்ற கதாபாத்திரங்களை உங்களின் கதைகளுக்குள் கொண்டுவருவது நம் சமூகத்திற்கு அப்படியான குழந்தைகளின் அம்மாக்கள் குறித்து தவறான ஒரு புரிதலை ஏற்படுத்தும்.

எல்லா அனுபவங்களையும் கதையாகச் சொல்வது ஒரு படைப்பாளியின் நோக்கமாக இருக்க முடியாது. தான் படைக்கிற படைப்பு பொதுவெளியில் என்ன செய்யப்போகிறது என்பதே அதன் வெற்றி. இக்கதைகளத்தை தாங்கள் தேர்வு செய்யாமல் தவிர்த்து இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். அம்மா எப்போதுமே சாகமாட்டாள்.

இத்தொகுப்பில் வரும் “மாகாளி’ மிக முக்கியமான ஒன்றாகும். பதின்பருவ ஆண் ஒருவன் தனக்குள் ஏற்படும் பாலின மாற்றத்தை உணரத் தொடங்கிய பிறகு அவன் சமூகத்தில் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் குறித்தான கதை.

“அதேபோன்று கூண்டுக்கு வெளியே சில நிமிடங்கள்” சிறுகதையும். வித்தியாசமான கதைக்களம். வயதான தம்பதியினர் இருவருக்கும் இடையே நடைபெறும் அன்பின் ஆசையின் போராட்டம்.

“முகம்” கதையும் கூட. நிலை தவறிய அப்பாவின் முகஜாடையாக தன்னை எவரும் பார்த்துவிடக்கூடாது என நினைத்து வாழும் கல்லூரி வாலிபன் ஒருவனின் மன நிலை சொல்வதாக கதை.

நுகர்வுக் கலாச்சாரத்திற்குள் சிக்கித் தவிக்கும் தகவல் தொழில் நுட்பத் துறை சார்ந்த மனிதர்கள், அலுவலகம் மற்றும் புறச் சூழலின் வாழ்நிலையே கதைக்களமாக “மிக நீண்டு முடிவில்லாத முத்தம்” என்கிற கதையில் “பைனரி மழை” என்கிற கதையினுள் என்னால் நுழைய முடியவில்லை. காரணம் கணினி துறையில் வேலை செய்த அனுபவம் ஏதும் எனக்கு இல்லை என்கிற நிலையினால்தான் என்பதாக நான் உணர்கிறேன்.

உடல் சிறு கதைகள் தொகுப்பில் ஒன்பது கதைகள். பேசப்பட வேண்டிய தொகுப்பாக இது இருக்கும். அன்பும் வாழ்த்துகளும் தோழர் அரி சங்கர்.

நூல்: உடல்
ஆசிரியர்: அரிசங்கர்
வெளியீடு: எதிர் வெளியீடு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *