உதயசங்கர் (Udhayasankar) எழுதிய ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) புத்தகம் - 2023 ஆம் ஆண்டுக்கான 'பால புரஸ்கார் விருதைப் பெற்றுள்ளது.

உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) – நூல் அறிமுகம்

உதயசங்கரின் ஆதனின் பொம்மை (Aadhanin Bommai) – சிறார் இலக்கிய வகைமையில் இளையோருக்கான இந்நூல் 2023 ஆம் ஆண்டுக்கான ‘பால புரஸ்கார் விருதைப்’ பெற்றுள்ளது.

சிறுவர்களுக்குக் கதை சொல்வதென்பது எளிதான ஒன்றல்ல.பாரதியார் தனது ‘கண்ணன் – என் தாய்’ என்னும் கவிதையில் அம்மா கதை சொல்வதை இப்படிக் கூறுவார்,
“என்பருவம் என்றன் விருப்பம்….
என் உள்ளமறிந்தே
அன்போடு அவள் சொல்லி வருவாள்.”

பாரதி கூறிய பருவம்,விருப்பம் எனும் இரண்டு பற்றிய தெளிவும்,சிறார் விரும்பும் மொழியும் கைவரப்பெற்றாலே சிறந்த சிறார் இலக்கியம் மலர முடியும்.எழுத்தாளர் உதயசங்கர் இத்தகைய திறன்களை உடைய சிறந்த சிறார் எழுத்தாளர்.
தொடரும் அவரது படைப்புச் செயலில் சிறந்த ஒன்று இந்நூல்.

உதயசங்கரின் ‘ புலிக்குகை மர்மம்’ நாவலில் வரும் கேப்டன் பாலுவே இந்த நாவலிலும் கதாநாயகனாக வருகிறான். விடுமுறைக்கு மாமாவின் ஊரான கீழடிக்கு வரும் பாலு அங்குள்ள தென்னந்தோப்புக்குச் செல்கிறான்; அங்கு ஓரிடத்தில் கிடக்கும் கருப்பும் சிவப்புமான மண்பாண்ட ஓடுகளைக் காண்கிறான்; அதில் பொம்மையின் முகம் வரையப்பட்ட ஒரு ஓட்டைக் கையில் எடுக்கிறான்; அதனால் அவனுக்கு மட்டுமே தெரியும் ‘ஆதனின்’ நட்பு கிடைக்கிறது. ஆதன், பாலுவை மூவாயிரம் ஆண்டுகள் பழமையான தமிழ்ச் சமூகத்திற்குள் அழைத்துப் போகிறான்.

பாலுவுக்கும் ஆதனுக்குமான உரையாடல் மூவாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட கீழடி வாழ்வை நம் கண்முன் கொண்டு வருகிறது. ஆதன், அவன் தந்தை வேளாண்கோ- குவிரன், தாய் கோதை, மாமன் கலம்செய்கோ- இரவாதன், மாமன் மகள் திரமிடா, தங்கை வெண்ணிலை, அவள் விரும்பி உண்ணும் கானாங்கோழியின் ஊன் கலந்த நெய்ச்சோறு…என பழந்தமிழ் வாழ்க்கை விரிகிறது.

ஆதனின் மூலம் பழந்தமிழர் வாழ்வைத் தெரிந்துகொண்ட பாலு, காக்கைபாடினியார் நூலகத்தில் உள்ள ஒரு புத்தகத்தின் மூலம் ஆதனின் தோழன் அந்துவனாகி சிந்துவெளி நாகரிகத்தையும் அறிகிறான்.

ஆரியர்களின் வருகையும், சிந்துவெளி சமூகத்தின் வீழ்ச்சியும், எஞ்சிய அச்சமூகத்தின் தொடர்ச்சியாகக் கீழடியையும் இணைத்துப் பேசுகிறது நாவல்.

‘ஆதனின் பொம்மை’ நாவல் தமிழ்ச்சமுகத்தின் இயல்புகள்,மேன்மைகள் குறித்துப் பேசுவதோடு அச்சமூகம் எதிர்கொண்ட சவால்களையும் உணர்த்திப் பேசுகிறது.

Udhayasankar Aadhanin Bommai Book Review By Mani Meenakshi Sundaram

தமிழ்ச்சமூகத்தின் தொன்மை வாழ்வை உலகிற்கு வெளிச்சமாக்கிய கீழடியை வெறும் தகவலாக அல்லாமல் உணர்வுபூர்வமாக படிப்போரை உணரச் செய்கிறது நாவல்.

சாகசக் கதைகளை விரும்பிப் படிக்கும் இளையோர் விரும்பும் வண்ணம் இந்நாவல் அமைந்துள்ளது.இந்நாவல் படிப்பவரை விறுவிறுப்பாகப் பக்கங்களைத் திருப்ப வைப்பதோடு,தாம் வாழும் சமூகத்தின் உயர்வை, விழுமியங்களை உணர்த்தவும் செய்கிறது.

கீழடி அகழாய்வில் கண்டறியப்பட்ட ஆதன் முதலான பல பெயர்கள் நாவலில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அப்பெயர்களை இரத்தமும் சதையுமான மனிதர்களாக மாற்றி, புதையுண்ட கீழடிக்கு உயிரூட்டி,அதன் தெருக்களில், அங்குள்ள வீடுகளில், அங்குள்ள மனிதர்களுடன் நம்மையும் வாழ்ந்து பார்க்கச் செய்கிறது நாவல்.

சிந்துசமவெளிக்கும் கீழடிக்கும் உள்ள நெருங்கிய தொடர்பு உறுதிப்பட்டுள்ள நிலையில், நாவலும் சிந்துவெளிப் பண்பாட்டின் தொடர்ச்சியாகவே கீழடி வாழ்வையும் பேசுகிறது.

இயல்பாகவே தேடலும், புதியன காண விரும்பும் பண்பும் கொண்ட இளையோருக்கான விருப்பங்களை மட்டுமல்லாமல்,அவர்களை நெறிப்படுத்தும் கூறுகளையும் கொண்டுள்ளது  ‘ஆதனின் பொம்மை ‘ என்னும் கால ஊஞ்சல்.

இளையோருக்குப் பரிசளிக்கவும், சிறுவர்களுக்குப் படித்துக்காட்டவும் பெரியவர்களின் கையில் இருக்க வேண்டிய நூல் இதுவென்பேன்.

நூல் விவரம் :
————————

நூல்: ஆதனின் பொம்மை (இளையோர் நாவல்)
ஆசிரியர்: உதயசங்கர்,
வெளியிடு: வானம் பதிப்பகம் – 600089
விலை: ரூ.80

கட்டுரை ஆசிரியர் குறிப்பு :

No photo description available.

மணி மீனாட்சி சுந்தரம், மதுரையில் அரசுப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றுகிறார். தமிழக அரசின் புதிய பாடநூல் உருவாக்க ஆசிரியர் குழுவில் பணியாற்றியவர். அகில இந்திய வானொலியிலும், மதுரைப் பண்பலையிலும் நூல் விமர்சனம், சுற்றுச்சூழல் பற்றிய உரைகளைத் தொடர்ந்து வழங்கி வருபவர்.முகநூல் குழுக்களில் தொடர்ந்து இலக்கியம் சார்ந்து இயங்கி வருபவர்.

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *