பிறிதொரு மரணம் - உதயசங்கர் | Udhayasankar - Pirithoru Maranam

 

‘ஒரு நல்ல இலக்கிய படைப்பு என்பது எப்படி எழுதப்படுகிறது? எது நல்ல இலக்கியம்?’
என்பது போன்ற கேள்விகள் வாசகர் மத்தியில் அவ்வப்போது நிழலாடிக்கொண்டேயிருக்கும்.
இதற்கான பதில் எளிது. ஒரு உண்மையான சமூக ஆர்வலர், கட்டுரையாளர் தன் கருத்தை
அழுத்தம் திருத்தமாக கட்டுரையாக பதிவு செய்கிறார். அதுவே ஒரு புனைவு எழுத்தாளர்
எப்போதும் தன் கருத்தை பதிவிடுவதேயில்லை. அவர் செய்வது எல்லாம் தான் கண்டதை,
வாழ்வின் சரடுகளில் பின்னிப்பிணைந்த பகுதிகளில் கதையாக சொல்லத்தோன்றுவதை சரியான
அளவில் எடுத்து நமக்குச்சொல்வதே.

இதைத்தான் பலரும் செய்கிறார்கள் எனும்போதும், பலரின் எழுத்துக்கள் பக்க
நிரப்பிகளாக இருக்கும்போது, ஒருசிலரின் கதைகளே இலக்கியமாக மலர்கிறது. அதன்
அடிப்படை காரணம், உண்மை இலக்கிய எழுத்துக்கள் எழுதப்படுவதின் அடித்தளமாக அன்பு
எனும் ஒன்று மறைபொருளாக இருப்பதே. கூடுதலாக ஒரு நல்ல இலக்கிய படைப்பாளி குழந்தை
இலக்கியத்தில் மிகுந்த ஆர்வமுடையவராக இருப்பது மிகப்பொருத்தமானது. அன்புமயமான
குழந்தைகளுக்கும் படைக்கும் ஒரு படைப்பாளியின் பெரியவர்களுக்கான தீவிர எழுத்துக்களில்
உண்மை இலக்கியம் எப்போதும் மின்னும். உதாரணமாக, பாரதி, டால்ஸ்டாய், தாகூர்
போன்றோரைச்சொல்லலாம்.

உதயசங்கர் அவர்கள், குழந்தை இலக்கியத்தில் தீவிரபடைப்பாளி. அவரிடம் இருந்து
வெளிவரும் சிறுகதைகளும் அழகிய இலக்கிய பூக்களாக மலர்வதில் ஆச்சரியம் ஏதுமில்லை.
“பிறிதொரு மரணம்” எனும் இந்த சிறுகதைத்தொகுப்பில் பல்வேறுகாலங்களில் அவர்
எழுதிய நாற்பத்தெட்டு சிறுகதைகள் அணிவகுக்கின்றன. எதை சிறுகதையாக எழுதலாம் என்று
குழம்பாமல், வாழ்வின் எல்லா பகுதியிலும் சிறுகதைகள் இருக்கின்றன என்று சொல்லாமல்
சொல்லும் தொகுப்பு.

முதல் கதையான, ‘டேனியல் பெரிய நாயகத்தின் புல்லாங்குழல்’ அப்படியான ஒரு
படைப்பு. இயந்திரத்தனமான வாழ்வின் பாரங்கள் மனிதனின் மெல்லிய உணர்வுகளை எப்படி
தன் காலடியில் மிதித்து வைத்திருக்கின்றன எனச் சொல்கிறது கதை. ‘சகமனிதன்’ மனித பயத்தின்
நிழல்களை மனதில் பரப்பி புன்னகைக்க வைக்கிறான். அடுத்து சொத்துகளுக்காக அலையும்
‘உறவு’ களின் விகாரங்களை சொல்லிச்செல்லும்போது அன்னை எனும் உறவின் தன்மையை
கடைசி வரியில் பொட்டென்று அறைந்து செல்கிறது கதை.

காதலின் பிரிவு கவிதையாக வடிக்கப்படுகிறது. மனிதர்களின் மூப்பில் இளைய வயது
உறவுகளின் பிரிவு அழுத்தமாக பதியப்படுகிறது. எந்த கதையிலும் சிறு சுணக்கமும் இல்லாத
இயல்பான ஓடை போல் ஓடும் நடையில் மனதை அள்ளுகிறது. கோவில்பட்டி வழக்காடு
நடையில் பல கதைகளை படித்திருந்தாலும், அதிக வசனங்கள் கொண்ட உதயகுமாரின் கதைகள்
இன்னமும் அந்த வட்டார நடையை மனதில் ஆழப்பதிக்கின்றன. முதலில் பேச்சுக்கள் கொஞ்சம்
அந்நியமாக தெரிந்தாலும், சில கதைகளைத் தாண்டியதும் முழுவதுமாக நமக்குள்
புகுந்துகொள்ளும் மொழி லயம் அழகு. ‘டேவிட் செல்லையா’ வுடன் நாமும் அங்கேயே இருப்பது
போன்ற வர்ணனைகள். இன்னமும் புது புது வார்த்தைகள் போகும் போக்கில் அறிமுகமாகி
மனதை கவர்கின்றன. “ஏனம், கோட்டி” எனும் வார்த்தைளை பொருள் தேடி அறிய, ஆச்சரியமாக
இருக்கின்றன.

அதுவும் ஒவ்வொரு கதையும் அதன் இயல்பான போக்கில் போய்க்கொண்டிருக்க, எந்தவித
திருப்பத்தையும் எதிர்பாராமல் கதையின் நடை சுவாரசியத்தில் நாமும் பயணிக்க, சிறுகதைக்கே
இலக்கணமான அந்த கடைசி வரி திருப்பத்தை எந்தவித உறுத்தல் துருத்தலும் இல்லாமல்
உடலோடு ஒன்றிய பாகம் போல தருகிறார் நமக்கு. ‘போலீஸ்காரருக்கும் நம்மைப்போலவே
வேலை தேடும் பையன் இருக்கலாமோ’ என்று சொல்லி “ அட… ஆமால்ல” என யோசிக்க
வைக்கிறார். ஆமாம், கதைகளின் வானம் எல்லையில்லாததுதான். சில பெருமூச்சுகள் இன்னமும்
கதைகளுக்குள்ளேயே சுற்றிக்கொண்டுதான் இருக்கின்றன.

கதைகளின் மாந்தர்கள் மிக எளிய நடுத்தர மனிதர்களாக அமைந்தது, ஆசிரியர்
தன்னைச்சுற்றி எவ்வளவு கவனித்திருக்கிறார் என்பதை உணர்த்துகிறது. ஒரு சில எளிய
சம்பவங்களை எடுத்துக்கொண்டு அதன் ஜீவனை, அங்கே மறைந்து இருக்கும் அழகிய
புகைப்படம் போன்ற காட்சிகளை, சில பக்கங்களில் கதையாக வடித்துவிடுகிறார்.
பெரும்பாலான கதைகளில் வரும் ரயில் போலவே கதையின் மாந்தர்களின் குரல்கள் நம் மனதில்
ரீங்காரமிட்டுக்கொண்டே இருக்கின்றன.

வெறுமனே ஒரே பாணியில் இல்லாமல், எல்லாவகையிலும் அவர் முயற்சித்திருப்பது
அறிய ஆச்சரியமாக இருக்கிறது. ஆனால் கதையின் பாணியை அவராக தீர்மானிக்காமல்
கதையின் போக்கே தீர்மானிப்பதுதான் இங்கே குறிப்பிட வேண்டியது. மதியான சோற்றையும்
மார்ட்டின் ஹைடேக்கரையும் நாமும் ரசிக்கிறோம். இன்னமும் கதைகளின் நடையில் அங்கங்கே
புதுமைப்பித்தனின் எள்ளல் தொனி, கி.ரா வின் கிராமிய நடை, அழகிரிசாமியின் கதைக்கரு
தேர்வு நுட்பம் என எல்லாமும் கலந்து எதிரொலிப்பது உதயசங்கரின் வாசிப்பின் வீச்சை
காட்டுகிறது.

இடைஇடையே அவரின் வர்ணனைகளில் சில மனதில் பிரமிப்பை ஏற்படுத்துகின்றன.
“இருளை சேர்ந்திழுத்துக்கொண்டு திரள் திரளாய் மேகங்கள் வந்து குவிந்தன. நான் மேகங்களை
விளிம்பிடும் கடைசி ஒளியை வெறித்துக்கொண்டிருந்தேன்” என்ற வரிகளை படித்து
முடிக்கும்போது, நாம் கண்டு ரசித்து மறந்து செல்லும் ஒரு நொடியை அவர் எப்படி நிரந்தர
படமாக பதிய வைக்கிறார் என்பது புரிகிறது. ‘சித்திரக்குள்ளர்களின் கலகம் ஒரு
வரலாற்றுக்குறிப்பு’ ஒரு உலக சிறுகதை எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாக

இருக்கிறது. கதைகளில் அடிநாதமாக உறையும் ஏகாந்தம், அவர் சொல்வதைப் போலவே
தனக்கான சுருதியை நம் மனதில் மீட்டிக்கொண்டேதான் இருக்கின்றன. புத்தக தலைப்பான
‘பிறிதொரு மரணம்’ இன்னதென்று சொல்ல முடியாத கனத்தை நம் மனதில் ஏற்றிவிடுகிறது.
நாமும் இப்படித்தானே பல சமயங்களில் குமைந்துபோகிறோம். ஆனால் எதும் நடவாதது
போலவே வாழ்வின் கணங்களில் உழன்றுகொண்டுதான் இருக்கிறோம். ‘ஒரு விளக்கும் இரண்டு
கண்களும்’ படித்துவிட்டும் ஒரு மனிதனால் மதவெறி பிசாசுகளிடம் இருந்து
தப்பிக்கமுடியவில்லையெனில் அங்கே மனிதம் என்பதே மாயை என்றாகிவிடும்.
கதைகளை ரகவாரியாக அடுக்காமல் எழுதிய வரிசைப்படியே அடுக்கி இருப்பதான
சிந்தனை வருகிறது. ஏனெனில் நொடிக்கு நொடி முகத்தை மாற்றி வேடிக்கை காட்டும் தேர்ந்த
கலைஞனின் முக பாவத்தை தரும் வகையில், விதவிதமான உணர்வுகளின் குவியலில் மூழ்கி எழும்
பரவசத்தை தரும் விதவிதமான கதைக்களங்கள். அதேபோல இதுதான் தான் சொல்ல வந்தது
என்று எங்கேயும் குறிப்பிடாமல், ஒரு பார்வையாளனாக நம்முடனேயே பயணித்து மிகத்தேர்ந்த
எடிட்டராக மாறி சரியான சமயத்தில் கதையை முடித்து அதன் ஜீவன் நிரந்தரமாக நம் மனதில்
சுழலும் மாயாஜாலத்தை நிகழ்த்துகிறார் ஆசிரியர் உதயசங்கர்.
வாசிக்கத் தவறவிடக்கூடாத சிறுகதைத் தொகுப்பு.

 

நூலின் தகவல்கள் 

 

நூல் : பிறிதொரு மரணம்

தமிழில் : உதயசங்கர்

வெளியீடுகிழக்கு பதிப்பகம்

விலை : ரூ.150

 

எழுதியவர் 

 

அப்புசிவா

 
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *