உதயசங்கர் எழுதிய ‘சாதிகளின் உடலரசியல்’ புத்தகம் | Udhayasankar's Saadhigalin Udalarasiyal Tamil Book Review | கண்ணன்.க | www.bookday.in

உதயசங்கர் எழுதிய ‘சாதிகளின் உடலரசியல்’ – நூல் அறிமுகம்

உதயசங்கர் அவர்களின் சாதிகளின் உடலரசியல் நூல் அறிமுகம் :

மனிதனின் பரிணாம வளர்ச்சியென்பது குரங்கிலிருந்து மனிதன் தோன்றினான் என்பதே அறிவியல் சான்று.அவ்வாறு பரிணாம வளர்ச்சி பெற்ற மனிதன் அவனின் உணவுத் தேவைகளுக்காக முதலில் வேட்டைச் சமூகமாகவும்,மரங்களிலும் செடி கொடிகளிலும் கிடைக்கும் பழங்களையும் தானாக பூமிக்கடியில் விளைந்து கிடக்கும் கிழங்குகளையுமே உண்டு வாழ்ந்தான்.அதன் பின்பு தான் ஒரு வேளாண் சமூகமாக உருவெடுத்தான்.அந்த சூழலில் அனைவரும் ஒரே சமூகமாகவே இருந்தார்கள் மற்றும் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.இதில் எங்கிருந்து வந்தது இத்தனை சாதி,மதங்கள் என்ற கேள்வி நம் அனைவருக்கும் எழுகிறது? எழ வேண்டும்.

ஆரியர்களின் வருகைக்கு பின்னரே தலையிலிருந்து பிறந்தவன் பார்ப்பனன் தோளிலிருந்து பிறந்தவன் சத்ரியன் தொடையிலிருந்து பிறந்தவன் வைசியன் பாதத்திலிருந்து பிறந்தவன் சூத்திரன் என நான்கு வர்ணங்களாக பிரிக்கப்பட்டனர். இவ்வர்ண பகுப்பு நான்காண்டுகளுக்கு ஒருமுறை மாறக்கூடியதாகவே இருந்தது. அதன் பின்பு தான் நாவர்ணங்களுக்கு ஏற்றார் போல் ஆசிரமங்களும் உருவாகின.இதன் அடிப்படையில் தான் வர்ணாசிரம கோட்பாடு உருவாகியது. குருகுலத்தில் பயிலும் ஒவ்வொருவரும் அவரவர் தகுதிக்கேற்றார் போல் சிறந்து விளங்கினர்.

இதை அடிப்படையாக வைத்தே ஆசிரமத்தின் குருவானவர் அவர்களுக்கு பூணூல் அணுவித்து வர்ணங்களை ஒதுக்கினார். அப்பொழுதும் அதில் மேல் கீழ் உயர்வு தாழ்வு என்றில்லை. எல்லோரும் ஒன்றாகவே கலந்திருந்தனர். இவ்வாறு ஒதுக்கப்பட்ட வர்ணங்கள் நீண்ட ஆண்டுகளுக்கு கடைபிடிக்கும்படியானது. அதனால் நான்காண்டுகளுக்கு ஒருமுறை வர்ணம் மாறுவது அழிந்து போனது. இதில் பார்ப்பனர்கள், பார்ப்பனர்களாகவே இருந்தார்கள். ஆனால் அவர்களின் குழந்தைகள் வேறு வேறு வர்ணங்களாகவே இருந்தனர். இதனால் பார்ப்பனர்கள் தங்களை தக்க வைத்துக் கொள்ள குருகுல ஆசானிடமிருந்து வர்ணங்கள் ஒதுக்கும் முறையே தாங்களே பெற்றுக் கொண்டு தந்தை எவ்வர்ணமோ அதுவே அவர்களின் வாரிசுகளுக்கும் உரியதென்று தக்க வைத்துக் கொண்டனர்.

பின் தீண்டாமை தீட்டென்று பார்ப்பனர்கள் சூத்திரர்களை தொடக்கூடாது, அதே போன்று சூத்திரர்களும் பார்ப்பனர்களை தொடக்கூடாதென்று அவர்களை அவர்களே ஒதுக்கி வைத்துக் கொண்டனர்.அப்படி பார்த்தால் பார்ப்பனர்களும் தீண்டத்தகாதவர்கள் தானே ?

இதில் பார்ப்பனர்கள் யாகங்கள் வளர்ப்பது மந்திரங்கள் ஓதுவது பலியிடுவது போன்ற காரியங்களை செய்பவர்களாகவும் சத்ரியர்கள் போர் செய்பவர்களாகவும் வைசியர்கள் வணிகம் பொருளாதாரம் போன்றவற்றில் ஈடுபவர்களாகவும் சூத்திரர்கள் இவர்கள் அனைவருக்கும் உழைத்து கொடுக்கும் ஒரு தொழிலாளர்களாகவே பகுக்கப்பட்டனர்.

இயற்கையை கும்பிட்டு வந்த மக்களுக்கு உடல்நிலை சரியில்லை என்றாலோ அல்லது இறந்து போனாலோ அது ஆவிகளின் மூலமாக செயல்படுவதாகவும் அதைக் கட்டுப்படுத்த மந்திரங்கள் உதவும் என்றும் அதை பார்ப்பனர்களே செய்தாக வேண்டுமென்றும் ஒரு சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு அது இன்றளவும் நாம் கடைபிடித்துக்கொண்டு வருகின்றோம்.

உடலில் ஏதோ ஒரு பாகம் செயலிழந்து போனால் அதைப்போலவே “போலச் செய்வது” போன்ற சம்பிரதாயங்கள் உதாரணமாக கண்ணில் எதாவது குறைபாடு வந்தால் கண் வாங்கி வைப்பது,குழந்தைப்பேறு இல்லையென்றால் தொட்டில் வாங்கி கட்டுவது,திருமணம் ஆகவில்லையென்றால் தாலி கயிறு கட்டுவது போன்ற பழக்கங்கள் உண்டாகின.

புதிதாக வீடு கட்டினாலோ,ஒரு பெண் பூப்படைந்தாலோ,திருமணமோ, பிறப்போ அல்லது இறப்போ‌ இது போன்ற பல காரியங்களில் தீட்டு கழித்தால் தான் நல்லதென்று நம் புத்திக்குள் புகுத்தியதோடு, இடது கை மற்றும் வெள்ளிக்கிழமையானால் காசு குடுத்தல் கூடாது போன்ற சாஸ்திர சம்பிரதாயங்களையும் நமக்குள் பழக்கப்படுத்தி அதோடு தான் நாம் இதுவரை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.

அதோடு மட்டுமல்லாமல் இந்த சமூகம் தாய்வழி சமூகமாகவே இருந்தது. பார்ப்பனர்கள் பெண் என்பவள் வீட்டிலேயே இருந்து அனைத்து வேலைகளையும் செய்ய வேண்டுமென்றும் அவள் தீட்டு என்பதோடு மட்டுமல்லாமல் வெளியில் அவளது தொடர்பு இல்லாமலும் சாஸ்திர சம்பிரதாயங்கள் அனைத்தும் பெண்களே கடைபிடிக்குமளவு பழக்கப்படுத்தி அவர்களை ஒரு ஆணாதிக்க சூழ்நிலையிலேயே வைத்திருந்தார்கள்.அதற்கு பெண்களும் பழகியிருந்தார்கள். இப்பொழுதும் அது பழக்கத்திலேயே இருக்கிறது.இதற்கு பின்பு தான் பார்ப்பனர்கள் இதை ஆண் வழிச் சமூகமாக மாற்றினார்கள்.இதற்காகத் தான் பெரியார் சடங்கு சம்பிரதாயங்களை மறுத்ததோடு மட்டுமல்லாமல் பெண் அடிமைத்தனத்தையும் உடைத்தெறிந்தார்.

இச்சடங்கு முறைகளை உடைத்தெறிந்த பௌத்த சமணத்தவரையும் புஷ்யமித்ர சுங்கன் என்பவரின் ஆட்சிக்காலத்தில் அவர்களை ஒடுக்கியதோடு அச்சமயத்தில் பார்ப்பனர்கள் அவர்களுக்கு இணங்க மனுஸ்மிருதி என்ற சட்ட புத்தகத்தை இயற்றினார்கள். மனுஸ்மிருதியில் பெண்கள் அவர்களுக்கான சுதந்திரத்தை பெற்றுவிடக்கூடாதென்றும் அவர்கள் கல்வி கற்று அறிவை பெறக்கூடாதவர்களாகவும் அவள் ஆண்களை மயக்கி தவறான வழியில் செல்ல வைப்பவள் என்றும் பெண்களை பெரும்பாலும் கட்டுக்குள் வைத்திருக்கும் படியே அதில் இருந்தது. இதன் பொருட்டே அவள் சொந்தமாக யோசிக்க கூடாதென்று சிறுவயதில் திருமணமும் மறுமணம் செய்து கொள்ள உரிமையின்றி கணவன் இறந்தால் உடன்கட்டை ஏறுதல் போன்ற பழக்கங்களும் இருந்தன. இதனாலேய டாக்டர் அம்பேத்கர் நான் இந்துவாக பிறந்தாலும் ஒரு இந்துவாகவே இறக்க மாட்டேனென்று சொன்னார்.அவர் பௌத்த மதத்தையும் கடைபிடித்தார். இதற்காகவே அண்ணல் அம்பேத்கர் அவர்கள் நாம் இன்றளவும் கொண்டாடும் சட்டங்களை வகுத்தார்.

மனுஸ்மிருதி எழுதப்படுவதற்கு முன்பு புறமணமுறை இருந்திருக்கிறது.இதில் யார்‌ யாரை வேண்டுமானாலும் மணமுடித்துக் கொள்ளலாம் இதில் உயர்வு தாழ்வு மேல் கீழ் என்றில்லை.இதில் அனைவரும் கலந்திருந்தார்கள்.ஆனால் பார்ப்பனர்கள் தாங்கள் பார்ப்பனர்களாகவே இருக்க வேண்டுமென்று புறமணமுறையே தவிர்த்து அகமணமுறையே கையாண்டனர்.பார்ப்பனர்களாலேயே வர்ணங்கள் பிரிக்கப்பட்டு அதன் மூலம் பல சாதிகள் உருவாகின.இன்று நாம் எல்லா சடங்கு முறைகளையும் ஏற்றுக் கொண்டு சாதிகளையும் உயர்வாக நினைத்துக் கொண்டு ஒருவரையொருவர் வெட்டியும் தாக்கியும் சண்டையிட்டுக் கொள்கிறோம்.

ஆகவே நாம் குரங்கிலிருந்து தோன்றிய மனிதனைப் போல் எந்த சமூகமும் இல்லாமல் ஒரே சமூகமாக இருந்ததைப் போலவே இப்பொழுது மக்களும் சாதி மதமின்றி அனைவரும் சமம் என்றும்,ஒன்றோடொன்று கலந்து இணைந்திருத்தலே வேண்டுமென்றும் சடங்கு சம்பிரதாயங்களை முடிந்த அளவு புறக்கணிக்க வேண்டுமென்றும் இப்புத்தகத்தில் ஆசிரியர் குறிப்பிடுகிறார்.

சாதிகளின் உடலரசியல் சாதிகளை உடைப்பதோடு மட்டுமல்லாமல் சம்பிரதாயங்களையும் உடைத்து நாம் முன்பு எப்படி இருந்தோம் என்பதையும் சிந்திக்க வைக்கிறது.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:சாதிகளின் உடலரசியல்
ஆசிரியர்:உதயசங்கர்
வெளியீடு:நூல் வனம்
விலை:₹.75
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 கண்ணன்.க
வல்லம்பட்டி
விருதுநகர் மாவட்டம்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *