நூல் அறிமுகம்: எழுத்தாளர் ஆயிஷா இரா.நடராசன் “உலக பெண் விஞ்ஞானிகள் ” – இரா.இரமணன்இந்த வருட வேதியியல் நோபல் பரிசு இரண்டு பெண்பால் அறிவியலாளர்களுக்கு கிடைத்துள்ளது. பிரான்ஸ் நாட்டை சேர்ந்த இம்மானுவேல் ஷார்பென்டியர் மற்றும் அமெரிக்க ஜெனிபார் டவுட்னா ஆகியோருக்கு உயிர் மூலக்கூறை திருத்தும் CRISPR-Cas9 DNA எனும் முறையைக் கண்டுபிடித்ததற்காக வழங்கப்பட்டுள்ளது. முதல்முறையாக ஆண்கள் இல்லாத பெண்கள் குழுவிற்கு நோபல் பரிசு வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்களையும் சேர்த்து இதுவரை நோபல் பரிசு பெற்ற பெண்கள் மொத்தம் ஏழு பேர்தான். தங்களுக்கு நோபல் பரிசு வழங்கப்படலாம் என்று பலமுறை செய்திகள் வந்ததாகவும் ஆனால் இந்த வருடம்தான் அது உண்மையாகியுள்ளது என்றும் பரிசு பெற்ற இந்த அறிவியலாளர்கள்  கூறியுள்ளார்கள். 

இந்த நேரத்தில், பெண்பால் விஞ்ஞானிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள், அவர்களின் சாதனைகள் குறித்து  இரா.நடராசன் அவர்கள் எழுதிய  புத்தகம் ‘உலக பெண் விஞ்ஞானிகள்’ குறித்து எழுதுவது பொருத்தமாக இருக்கும். இந்தப் புத்தகம்  புக்ஸ் ஃபார் சில்ரன் பதிப்பகத்தால் 2009இல் வெளியிடப்பட்டு ஐந்தாம் அச்சு 2017இல் வெளிவந்துள்ளது. ‘வாய்ப்பு கிடைத்திருந்தால் தலை சிறந்த விஞ்ஞானியாகியிருக்க வேண்டிய என் வாழ்க்கை துணைவி பா.மாலாவுக்கு’ சமர்பித்திருக்கிறார். 32 பெண் விஞ்ஞானிகள் குறித்து ஒவ்வொருவருவருக்கும் இரண்டு மூன்று பக்கங்களில் எழுதியிருக்கிறார்.  அதிலிருந்து  சில பகுதிகளை பகிர்கிறேன்.

அலையல்ல சுனாமி: உலக பெண் விஞ்ஞானிகள்

*1903இல் கணவருடன் சேர்ந்து நோபல் பரிசு பெற்றவர் மேரி கியூரி. அவரே நோபல் பரிசு பெற்ற முதல் பெண்மணி. 1911இல் மீண்டும் தனியாக வேதியியலுக்காக நோபல் பரிசு பெற்றார். அவரது மகள் ஐரீன் கியூரி ஜூலியட் 1935இல் நோபல் பரிசு பெற்றார். இவர் இரண்டாம் உலக யுத்தத்தின்போது தனது கண்டுபிடிப்பான அணுசேர்க்கை, பேரழிவு ஆயுதங்களுக்கு இட்டு செல்லும் என்பதால் தனது ஆய்வுக் கட்டுரைகளை நிறுத்தி வைத்தார். யுத்தத்திற்கு எதிரான ரகசிய இயக்கத்தையும் தொடங்கினார்.

கி.பி முதல் நூற்றாண்டில் அதாவது இயேசு கிறிஸ்துவின் சம காலத்தில் வாழ்ந்த பெண்பால் அறிவியலாளர் மரியா. வேதியியல் துறையை தோற்றுவித்தவர் என்றும் சொல்லலாம். உலோகங்கள் குறித்து பல கண்டுபிடிப்புகளை செய்தவர். இவரது கண்டுபிடிப்பினால் அந்தக் காலத்தில் வீட்டிலிருந்தே தங்கத்தை உருவாக்க முயன்ற பல பேராசைக்காரர்களின் பிழைப்பில் மண் விழுந்தது. பிளாஸ்கின் முதல் முன்னோடியை உண்டாக்கியவர்.

கடல்துறை விஞ்ஞானியான லூயிஸ் கர்சன், பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லியான டிடிடி(DDT) சுற்றுசூழலில் ஏற்படுத்தும் நாசம் குறித்து  ‘Silent Spring’ எனும் ஒப்பற்ற ஆய்வு நூலை எழுதினர். அந்த ஆய்வில் தன்னையும் உட்படுத்திக்கொண்டதால் புற்று நோய் வந்து இறந்துபோனார். அதற்குப் பிறகே டிடிடி அமெரிக்காவில் தடை செய்யப்பட்டது.  

ரோசலிண்த் எல்சி பிராங்கிளின் என்ற அறிவியலாளர் எக்ஸ் கதிர் வரைபட இயலால் டிஎன்ஏவின் வடிவத்தைக் கண்டுபிடித்திருந்தார். இதை அவருடன் வேலை பார்த்த ஒருவர் அவருடைய அனுமதியில்லாமல் அதே துறையில் ஆய்வு செய்துகொண்டிருந்த வாட்சனுக்கு தெரிவித்துவிட்டார். வாட்சனும் கிரிக்கும் பிராங்கிளின் பெயரைப் போடாமலேயே தங்கள் பெயரில் உலகப் பிரசித்தி பெற்ற கட்டுரையை NATURE இதழில் வெளியிட்டனர். பிராங்கிளின் இந்த துரோகத்தை ஒரு புன்னகையோடு (எல்லாப் பெண்களையும் போலவே) கடந்து சென்றுவிட்டார்.இரண்டாம் உலகப்போர் காலத்தில் ஹார்வர்ட் பல்கலைக் கழகத்தில் மார்க்1 வகையான கம்ப்யூட்டர் 51அடி நீளத்தில் நான்கு அறைகளுக்கு  விரிந்து பரந்து இருந்தது. அடிக்கடி பழுதான அதைப் சரி செய்ய கிரேஸ் முர்ரே ஹாப்பர் அனுப்பப்பட்டார். பத்தே நாட்களில் தனது குழுவுடன் அதை சிறிய நேர்த்தி மிக்க கணினியாக மாற்றினார். (பற்சக்கரங்கங்களில் தடிமனான பட்டாம்பூச்சிகள் சிக்கியிருந்தன. இப்பொழுது நாம் பயன்படுத்தும் DEBUGGING என்ற வார்த்தை இதிலிருந்துதான் தொடங்கியிருந்தது)

அணுப்பிளவு ஏற்படும்போது ஏராளமான ஆற்றல் வெளிப்படும் என்பதைக் ஓட்டோ பிரிச்சுடன் இணைந்து கண்டுபிடித்த லிஸி மெயிட்னர் அதுதான் அணுகுண்டு தயாரிக்க உதவும் என்று அறியவில்லை. ஆனால் அணுகுண்டு வீசப்பட்டபோது லிசி கடும் எதிர்ப்பு தெரிவித்தார். அணுப்பிளவிற்காக நோபல் பரிசு ஓட்டோ ஹான் என்பவருக்கு தரப்பட்டது. இந்த விசயத்திலும் லிஸி மெயிட்னரைக் கைகழுவி நோபல் குழு துரோக நாடகத்தை நடத்தியது. 

மாஸசெட்டஸ் மாநிலத்தில் 40000 இடங்களிலிருந்து குடிநீர் சேகரித்து அதன் பல்வேறு கூறுகளை சோதித்து குடிநீர் ஆதாரங்கள் எப்படி பாதுகாக்கப்பட வேண்டுமென்று 1887இல் எலன் ஸ்வாலோ ரிச்சார்ட்ஸ் விளக்கியபோது ‘உலகின் முதல் குடிநீர் வடிகால் வாரியம்’ ஏற்படுத்தப்பட்டது.

விச்சு

1947இல் மருத்தவத்திற்கான நோபல் பரிசு பெற்ற ஜெர்டி தெரசா ராட் நிட்ஸ் கோரி நோபல் பரிசு பெறும் மூன்றாவது பெண்மணி. அவரது வழிகாட்டுதலில் ஆய்வுகள் செய்த மேலும் ஆறு பேர் அடுத்தடுத்த நோபல் பரிசு பெற்றார்கள் என்பது அவரைப் பற்றிய சிறப்பான செய்தியாகும்.

புற்று நோய் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் கீமோ தெரபியை 1958இல் கண்டுபிடித்தவர் மேரி ஜேன் ஆஸ்பர்ன். அவர் 1961இல் கலரா நோய்க் கிருமியை ஒழிக்கும் முறையைக் கண்டுபிடித்தார். புற்று நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சிகளுக்கு அமெரிக்க அரசை தனது வருடாந்திர பட்ஜெட்டுகளில் பெரிய அளவில் நிதி ஒதுக்கீடு செய்யவைத்தவர்.

ராக்கெட்டுகளில் பயன்படும், வெடித்து சிதறாத எரிபொருள் குறித்து கண்டுபிடிப்புகள் நிகழ்த்திய ரீத்தா கிளார்க் கிங்  கருப்பு இன அறிவியலாளர்.          

அந்த இன தாய்மார்கள் எந்த வயதானாலும் கல்வி கற்க ஓய்வு நேரப் பள்ளிகளை நிறுவி,இன்றைய தொலைதூரக் கல்விக்கும் முறை சேராக் கல்விக்கும்  முதியோர் கல்விக்கும் வித்திட்டார்.

பூச்சிகளின் தாக்குதலை தவிர்க்க நெல்மணிகளில் பேக்டீரியாவை மரபணு முறையில் புகுத்தியவர் டெட்சுகோ டெக்காபே எனும் ஜப்பானிய விஞ்ஞானி. இதன்மூலம் பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்த வேண்டியதில்லை என்பதை ஏற்படுத்தியவர் 

தென் பசிபிக்கில் பிரான்ஸ் அடிக்கடி அணு ஆயுத சோதனைகள் நடத்தியதால் ஆச்திறேல்யாவின் அடிலெய்டு நகரில்  கதிர்வீச்சு காற்றில் கலந்து நீர் ஆதாரங்களையும் அழித்திருந்தது. 1972-77குழந்தைகளில் எண்பது சதம் பேருக்கு ‘கைஸ்டிக் பைப்ரோசிஸ்’ எனும் நோய் தாக்கியது. இது குறித்து ஹெலன் கால்டிகாட் எனும் மருத்துவர் ஆய்வு நடத்தினார். அரசாங்கம் அவரது ஆய்வு முடிவுகளை வெளியிட தடை செய்தது. பொதுமக்களிடம் தனது முடிவுகளை வெளியிட்டு விழிப்புணர்வைத் தூண்டினார். மக்களின் எழுச்சியினால் அரசாங்கம் பணிந்தது. உடனடியாக சோதனைகளை நிறுத்தக் கோரி பிரான்ஸ் மீது சர்வ தேச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து வெற்றியும் பெற்றது. இவர் 1983இல் அணு ஆயுதப் போருக்கு எதிராக மருத்துவப் பிரச்சாரம் எனும் அமைப்பை தொடங்க உதவினார்.   ஜெர்டு பில்லி எலியன் (டர்டி) – பெற்றோர்கள் கியூபாவை சேர்ந்த அகதிகள். 1918இல் பிறந்தவர் குடும்பம் நிலயைற்றதாக இருந்ததால் பெரும்பாலும் வீட்டிலியே கல்வி கற்க வேண்டி வந்தது. ஆனால் 15வயதானபோது நேரடியாக பள்ளி இறுதி தேர்வை எழுதி நிறைய மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சியுற்றார்.பி.ஏ பட்டத்திற்குப் பிறகு படிப்பதற்கு சாத்தியமே இல்லை. தாய் நோய்வாய்ப்பட்டிருந்தார். பகுதி நேர வேலைகள் பார்க்கத் தொடங்கினார். மாலை நேர வகுப்புகளில் சேர்ந்து குடும்ப சூழலையும் தாங்கிக்கொண்டு வேதியியலில் முதுகலைப் பட்டத்தை முடித்தார். பேக்டீரியாக்களை ஆண்டிபயாடிக்கை செலுத்தி அது தான் உணவருந்திவிட்டதாக நம்பவைத்து அழிக்க முடிவதுபோல புற்று நோய் செல்களையும் ஏமாற்ற முடியும் என்பதைக் கண்டுபிடித்தார். குழந்தைகளை இரத்த புற்றுநோயிலிருந்து காப்பாற்றும் 6MP எனும் மருந்து அவர் கண்டுபிடித்ததுதான்.1988இல் வழங்கப்பட்ட நோபல் பரிசுத் தொகையை ஏழைப் பெண்களின் கல்விக்கு என வழங்கிய அவரது மனித நேயத்தையும் குறிப்பிட வேண்டும்.

கல்பனா சாவ்லா -இந்தியாவில் கர்னாலில் பிறந்தவர். அப்பாவுக்குத் தெரியாமல் விமான ஓட்டி உரிமம் பெற்றார். இந்தியப் பெண்கள் தங்களது அனைத்து வகை சூழலுக்கும் வெளியே கனவுகள் காண பழக வேண்டும் என்று அடிக்கடி கூறி வந்தார். அமெரிக்காவில் 2962பேர் விண்ணப்பித்திருந்த விண்வெளி வீரர்களுக்கான தேர்வில் முதலாவதாக வந்தார். 104 மில்லியன் கிலோமீட்டர்கள், 760 மணி நேரம், 252 முறை புவியை சுற்றியவர்.

                           ********************

              பெற்றோர்கள் பெண் குழந்தைகளுக்கு இந்தப் புத்தகத்தை அவசியம் வாங்கித் தரவேண்டும் என்று முன்னுரையில் திரு நடராசன் கூறியிருப்பது முற்றிலும் சரியானது.        நூல் : உலக பெண் விஞ்ஞானிகள்
ஆசிரியர் : ஆயிஷா இரா.நடராசன் 
பக்கங்கள் : –
விலை : ரூ.70
பதிப்பகம் : பாரதி புத்தகாலயம்
புத்தகம் வாங்க இங்கே கிளிக் செய்க: உலக பெண் விஞ்ஞானிகள் -ஆயிஷா இரா.நடராசன்