தலைப்பை பார்த்ததும் நீங்கள் எந்த புத்தகத்தை எதிர்பார்த்திருப்பீர்கள் என்பது எனக்கு தெரிகிறது. ஆனால் அந்த புத்தகம் இது இல்லை.

அமெரிக்க எழுத்தாளர் ஜான் ரீடு அவர்கள் எழுதி, மாமேதை லெனினால் மனப்பூர்வமாக பரிந்துரைக்கபட்ட  “உலகைக்குலுக்கிய பத்து நாட்கள்” புத்தகம் இல்லை இது. ஆனால், நீங்கள் கொஞ்சம் கூட ஆர்வம் குறையாமல் அந்த புத்த்கத்தை வாசிக்க வேண்டுமா? ஆம்! என்றால், இந்த புத்தகத்தின் அறிமுகமும், இந்த புத்தகமும் உங்களுக்கு கட்டாயம் தேவை.

ஜான் ரீடு அவர்கள் தனது புத்தகத்தில் 448 பக்கங்களில் எதை சொல்ல வருகிராரோ, அதன் சரம்சத்தை வெறும் 48 பக்கங்களில் ஆங்காங்கே பொருத்தமான அழகிய படங்களுடன் 40 நிமிடங்களில் நமக்கு விவரிக்கிறார் மலையாள எழுத்தாளர் வி.பத்மநாபன். எழுத்தாளர் யூமா.வாசுகி அவர்களின் தமிழாக்கம் மிகச்சிறப்பு. அதுவும் குழந்தைகளுக்கு கதை சொல்லும் அவரது தனித்த எழுத்து நடையைப்பற்றி சொல்லவா வேண்டும்?

ஆம், வசந்தி அக்கா  எனும் கதாப்பாத்திரம் மூலம் செல்வி, குமரன் ஆகிய இரண்டு சிறுவர்களுக்கு கதை சொல்வது போல நமக்கும் சொல்லப்படுகிறது “ரஷ்ய புரட்சியின் கதை”. கதையினூடே ஆங்காங்கே வரும் உரையாடல்களில்  செல்வி, குமரன் இருவரும் கேட்கும் கேள்விகளும், அதற்கு நேர்த்தியாகவும், சுருக்கமாகவும் வசந்தி அக்கா சொல்லும் பதில்களும் விளக்கங்களும், நமக்கு இன்னும் இன்னும்  சுவாரஸ்யத்தை அதிகப்படுத்துகிறது.

நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ...

சோவியத் யூனியனின் மகத்துவத்தையும், சோசலிச அரசின் பெருமைகளையும் விளக்கி கதையை ஆரம்பிக்கிறார் வசந்தி அக்கா. இடையில் சோசலிசம் என்றால் என்ன? புரட்சி என்றால் என்ன? என்று சிறுவர்களுக்கு எழும் சந்தேகங்களுக்கு தனது கற்பனையால் புனையப்பட்ட உதயபுரம் எனும் கிராமத்தை ரஷ்யாவுக்கு உதாரணமாக சொல்லி, அங்கே பண்ணையடிமை முறையை மக்கள் ஒன்று திரண்டு எதிர்த்து நிலங்களை விவசாயிகளே பங்கிட்டுக்கொள்ளும் கதையை சொல்லி, அப்படி மக்கள் அனைவராலும் ஒன்றுசேர்ந்து நிகழ்த்தப்படும் ஒரு சமுதாய மாற்றமே புரட்சி என்றும், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கும் சமமான சமூகமே சோசலிசம் என்றும் மிக எளிமையாக விளக்குவார். இதில், மறைகுறிப்பாக நிலம் அனைத்தும் சோவியத்துகளுக்கே! என்று மாமேதை லெனின் அறிவித்ததையும் –அது நடைமுறைப் படுத்தப்பட்டதையும் விளக்குகிறார் வசந்தி அக்கா.

பின்னர், புரட்சிக்கு முன்பு ரஷ்ய மக்கள் எப்படி மன்னராட்சியின் கொடுங்கோன்மைகளுக்கு மத்தியில் துன்புற்றிருந்தனர்? “ரத்தம் குடிக்கும் ஜார்” இரண்டாம் அலெக்சாண்டர் நிக்கோலஸ் மக்களை எப்படி கொடுமைபடுத்தி கொன்று குவித்தான் என்பதையும் அவனுக்குக்கு எதிராக எத்தகைய கிளர்ச்சிகள், போராட்டங்கள் ஆரம்ப காலத்தில் எழுந்தன என்பதும் விவரிக்கப்படுகிறது. இந்த அத்தியாயத்தில் லெனினது அண்ணன் அலெக்சாண்டர் குறித்து சொல்லும்போது, தனிநபர் தாக்குதல்கள், எதிர்ப்புகள் ஏன் புரட்சி ஆகாது? என்பதையும் ஓரிரு வரிகளில் மிக நுட்பமாக விளக்குவது அபாரம்.

ஏகாதிபத்திய சக்திகளுக்கு இடையிலான முதல் உலகப்போர் துவங்கிய காலத்தில், மிகத்துல்லியமாக திட்டமிட்டு “உணவு, சமாதானம், அமைதி”, “உலகப்போரை உடனே நிறுத்துங்கள்! நிலம் அனைத்தும் விவசாயிகளுக்கே!! ஆலைகள் அனைத்தும் தொழிலாளிகளுக்கே!!!” எனும் கோஷங்களை முன்வைத்து சோவியத்துகள் தலைமையில் உள்நாட்டு போர் துவங்குகிறது. சோவியத்துகள் என்றால் புரட்சிக்கான பல்வேறு படையணிகளைக்கொண்ட அமைப்புக்குழு. அதில் சோசியலிஸ்ட் ரெவல்யூஷ்னரி கட்சியும், மென்ஷ்விக் கட்சியும், லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியும் பிரதான அங்கம் வகித்தன. ஆனால் அப்போது ரஷ்ய அரசியல் களத்தில் சின்னஞ்சிறு கட்சி போல்ஷ்விக். மென்ஷ்விக் கட்சியும், சோசியலிஸ்ட் ரெவல்யூஷ்னரி கட்சியும் தான் பெரிய கட்சிகள். லெனின் தலைமையிலான  போல்ஷ்விக் கட்சி மட்டுமே உண்மையில் தொழிலாளி வர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கும் கட்சியாக இருந்தது. மற்ற இரு கட்சிகளும் தொழிலாளி வர்க்க கட்சி என்ற போர்வையில் பெரும் நிலப்பிரபுக்கள், முதலாளிகளின் நலனை பாதுக்காக்கும் கட்சிகளாகவே இருந்தன.

Vasili Filippovich Ivanov - Virtual Museum of Political Art

1917ம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பெத்ரோகிரேடு நகரத்தில் நடைபெற்ற மாபெரும் கிளர்ச்சியின் விளைவாக ஜார் மன்னன் ஆட்சியிலிருந்து விரட்டப்படுகிறான். ஆட்சி அதிகாரம் சோவியத்துகளின் கைகளுக்கு வருகிறது. மென்ஷ்விக் காட்சியை சார்ந்த என்.ச்கீத்ஸெ தலைவராகவும், சோசியலிஸ்ட் ரெவல்யூஷ்னரி கட்சியை சார்ந்த ஏ.கெரன்ஸ்கி துணை தலைவர்களாகவும் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஆட்சி சோவியத்களின் கைகளுக்கு வந்துவிட்டாலும் சோவியத் அமைப்பின் தலைமை பொறுப்புகளில் பெரும் பூர்ஷ்வாக்களின் கைக்கூலிகளே வீற்றிருந்தனர். அவர்கள் அரச குடும்பத்தை சார்ந்த “ல்வோவ் இளவரசன்” என்ற ஒருவனை பிரதமராக்கினார்.

ஆட்சி மட்டும் தான் மாறியது. அதைத்தவிர அனைத்தும் ஜார் மன்னன் ஆட்சி போல அப்படியே தான் இருந்தன. உலகப்போர் நடந்துகொண்டே இருந்தது… அதில் ரஷ்யாவின் பங்களிப்பு தொடந்தது… இழப்பு ஈடு செய்ய முடியாத அளவுக்கு ஏற்பட்டுக்கொண்டே இருந்தது… பஞ்சமும், பசியும் தலைவிரித்து ஆடியது. இவற்றிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட அப்பாவி மக்கள் மீதான அடக்குமுறை இன்னும் இன்னும் அதிகமானது.

இந்த நிலையில் தான் அவ்வளவுகாலம் வெளிநாடுகளில் தங்கியிருந்து புரட்சியை வழிநடத்திக்கொண்டிருந்த லெனின் ரஷ்யா வருகிறார். “லெனின் கையில் கிடைத்தல் உடனடியாக கொன்றுவிடுங்கள்” என்று உத்தரவு பிறப்பிக்க பட்டிருந்த காலத்தில் அப்படிபட்ட தலைமறைவு வாழ்க்கை லெனினுக்கு தவிர்க்கமுடியாததாக இருந்தது. ரஷ்யா வந்ததும் லெனின் மக்களிடம் உரையாற்றினார்.  கேரன்ஸ்கி அரசாங்கத்தின் முகத்திரையை கிழித்தெறிகிறார். உண்மையாக பாட்டாளி வர்க்கத்தின் நலனை பிரதிபலிக்கும் ஒரு நிரந்தர அரசாங்கத்தை உருவாக்கும்படியும், தற்போதைய கெரன்ஸ்கி  அரசாங்கத்தை தூக்கியெறியுமாறும் தொழிலாளிகளுக்கும் விவசாயிகளுக்கும் அறைகூவல் விடுக்கிறார். நிலங்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு… ஆலைகள் அனைத்தும் தொழிலாளிகளுக்கு… அதிகாரம் அனைத்தும் சோவியத்துகளுக்கு… யுத்தம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். சோசலிச புரட்சி தான் இதற்கான ஒரே வழி என்று பிரகடனம் செய்கிறார் அந்த மாமேதை. “சோசலிச புரட்சி வெல்லட்டும்…” என்று ஆர்ப்பரிக்கிறது மக்கள் பெருங்கடல்.

அந்த ஆர்ப்பரிப்பிலிருந்து மீண்டும் துவங்குகிறது கிளர்ச்சி. ஆர்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், அமைதி ஊர்வலங்கள் என மக்கள் கிளர்ந்தெழ துவங்கினர். மக்களின் இத்தகைய கிளர்ச்சிகளை ஒடுக்க கடுமையான அடக்குமுறையை ஏவி விடுகிறது  கெரன்ஸ்கி அரசு. புதிய அரசாங்கத்தின் முகத்திரை கிழிபட்டுவிட்டது. மென்ஷ்விக் கட்சியினரின், சோசியலிஸ்ட் ரெவல்யூஷ்னரி கட்சியினரின் சாயம் வெளுக்க துவங்கியது. பெரும்பகுதியான தொழிலாளிகளும், விவசாயிகளும் ராணுவ வீரர்களும் போல்ஷ்விக் கட்சியில் இணைகின்றனர். இப்போது சோவியத் அமைப்பிற்குள் லெனின் தலைமையிலான போல்ஷ்விக்  கட்சி தான் மிகப்பெரிய கட்சி.

The Soviet Union Is Gone, But It's Still Collapsing – Foreign Policy

இந்த நிலையில் தான் சோவியத் அமைப்பின் கூட்டம் நடத்தப்பட்டு, அதில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கபட வேண்டும் என்கிற கோரிக்கை வலுபெற்றது. ஆனால் கூட்டம் நடத்தப்பட்டால், போல்ஷ்விக்குகள் வெற்றி பெற்றுவிடுவார்கள் என்பதை அறிந்திருந்த கெரன்ஸ்கி. கூட்டத்தை நடத்த தயாராக இல்லை. புரட்சி உச்சகட்டத்தை எட்டிய நிலையில் நிலைமை கைமீறி சென்றுவிட்டதை உணர்ந்த  கெரன்ஸ்கி தப்பி ஓடி விடுகிறான்.

மறுநாள் பொழுது விடிந்தது. வந்தது அந்த மகத்தான திருநாள். ஆம் அது நவம்பர் 7. அன்று மாலை சோவியத் கூடுகிறது. ஆட்சி அதிகாரம் அனைத்தும் சோவியத்துகளுக்கே என்று பிரகடனபடுத்தப்படுகிறது. வெற்றி பெற்றது மாபெரும் சோவியத் சோசலிச புரட்சி. மலர்ந்தது உழைக்கும் மக்கள் தலைமையிலான உலகின் முதல் குடியரசு. பாட்டாளி வர்க்கத்தின் படைத்தளபதி மாமேதை லெனின் அதன் தலைவராகிறார். கிராம்ளின் கோட்டையில் பாட்டாளி வர்க்கத்தின் வீரமும் தியாகமும் நிறைந்த உதிரச்செங்கொடி பட்டொளி வீசி பறந்தது.

அன்றிலிருந்து அடுத்த பத்து நாட்களுக்கு எத்தகைய நெருக்கடிகளை சோவியத் அரசு சந்தித்தது? அதை எவ்வாறு திறம்பட எதிர்கொண்டது? எதிரிகளின், துரோகிகளின் நயவஞ்சக துரோகங்களையும், சூழ்ச்சிகளையும் அது எவ்வாறு எதிக்கொண்டு முறியடித்து,  பாட்டாளி வர்க்கத்தின் சோசலிச ஆட்சியை கட்டி காத்தது என்பதை மிக மிக சுவாரஸ்யமாக, கதையாக சொல்கிறார் வசந்தி அக்கா. கெரன்ஸ்கியின் எதிர் புரட்சி படைகளை, முறியடித்து, நிலம் அனைத்தும் சோவியத்துகளுக்கே என்பதை உத்திரவாதம் செய்து, நவம்பர் 16 அன்று நடைபெற்ற சோவியத்துகளின் மாநாட்டோடு முழுமையாக வெற்றி பெறுகிறது இந்த மகத்தான புரட்சி.

போரில் சண்டையிட்டு வீரமரணம் அடைந்த செஞ்சேனை வீரர்களின் உடல்கள் கிராம்ளின் மாளிகைக்கு அருகில் அடக்கம் செய்யப்பட்டு,

“பட்டினியின் கைதிகளே..!

எழுங்கள்…

நீங்கள் வீறுகொண்டு எழுங்கள்”

என்று துவங்கும் பாட்டாளி வர்க்க சர்வதேசகீதம்  உணர்ச்சி பீறிட பாடப்படும் தருணத்தை  வசந்தி அக்கா நம் முன் காட்சிப்படுத்தும்போது நாமும் உணர்ச்சிவயப்பட்டு அந்த மாவீரர்களுக்கு செவ்வணக்கம் செலுத்திட அப்பாடலை நிச்சயம் முணுமுணுப்போம்…

“பட்டினியின் கைதிகளே..!

எழுங்கள்…

நீங்கள் வீறுகொண்டு எழுங்கள்” என்று.

குளிர்கால அரண்மனையில் நடைபெற்ற சோவியத்துகளின் கூட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த போல்ஷ்விக்குகளின் முடிவுகளை ஏற்க மறுத்த மென்ஷ்விக்குகளுக்கும், சோசியலிஸ்ட் ரெவல்யூஷ்னரி கட்சியினருக்கும் எச்சரிக்கை விடுக்கும் விதமாக, நிவா நதியில் நின்றிருந்த போர்க்கப்பலிலிருந்து பீரங்கி குண்டு ஒலிப்பது,

எதிர் புரட்சி சக்திகளான யுங்கர் குழுக்களின் துரோகத்தாலும், நயவஞ்சக சூழ்ச்சியாலும் கைப்பற்றபட்ட தொலைபேசி நிலையத்தை, தந்திரமாக யாரும் எதிர்பார்க்காத ஒரு விதத்தில் தாக்குதல் நடத்தி அவர்களை வீழ்த்துவது போன்றவற்றை வசந்தி அக்கா விவரிக்கும் போது  ஒரு கிளாசிக் ஹாலிவுட் சாகச திரைப்படத்தின் காட்சி போல நம் கண்முன் அது விரிகிறது.

Long live the Great October Revolution! 100 years of screwing ...

இச்சிறு புத்தகத்தின் பாதி பகுதியையை நீங்கள் கடந்த பிறகு, அடுத்த பக்கத்தை திருப்பும் சிறு நேர இடைவெளியை கூட உங்களால் பொறுத்துக்கொள்ள முடியாது. அந்த அளவிற்கு கதையின் ஓட்டம் விறுவிறுப்பாகவும்,  சுவாரஸ்யமாகவும் இருக்கும்.

புரட்சி வெற்றிபெற்ற பிறகு இருந்த பஞ்சத்தையும், பட்டினியையும், வறுமையையும் எப்படி லெனின் தலைமையிலான அரசாங்கம் எதிர்கொண்டது என்று சொல்ல துவங்கி, லெனின் குறித்து சின்னஞ்சிறு அறிமுகம் மட்டுமே கொடுக்கும்போது,

“லெனினைப் பற்றி இன்னும் நிறைய சொல்லுங்கள் வசந்தியக்கா” என்று மிகவும் ஆசையுடன் செல்வி கேட்பாள்.

அதற்கு,  “சொல்கிறேன். லெனினைப் பற்றிய கதையை இன்னொரு நாள் விரிவாக சொல்கிறேன்..!” என்று அவளை சமாதானபடுத்தும்படியாக புத்தகம் முடியும்.

செல்வியை போலவே நமக்கும், ரஷ்ய புரட்சியை பற்றியும் மாமேதை லெனினை பற்றியும் இன்னும் இன்னும் கேட்டுக்கொண்டே… வாசித்துக்கொண்டே… இருக்க வேண்டும் என்ற ஆர்வம் இயல்பாகவே மேலெழுவதை தவிர்க்க முடிவதில்லை.

குறிப்பு: லெனினின் கதையை வசந்தியக்கா செல்லியிருந்தால் என்னவெல்லாம் சொல்லியிருப்பார் என்று தெரிந்துகொள்ள ஆர்வமாக உள்ளதா? அப்படியென்றால், எழுத்தாளர் ஆதி.வள்ளியப்பன் அவர்களின் மொழி பெயர்ப்பில் வெளிவந்துள்ள “குழந்தைகளுக்கு லெனின் கதை” என்கிற புத்தகத்தை வாசியுங்கள். அந்த புத்தகத்தை இரண்டொரு நாட்களில் அறிமுகம் செய்கிறேன்.

புத்தகத்தின் பெயர்    : உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்

ஆசிரியர்             : வி.பத்மநாபன்

தமிழாக்கம்      : யூமா.வாசுகி

பக்கங்கள்             : 48

பதிப்பகம்             : பாரதி புத்தகாலயம்

விலை               : ரூ.30

புத்தகம் வாங்க       : https://thamizhbooks.com/product/ulagai-kulukkiya-10-naatkal-1781/

Image

தோழமையுடன்…

க.வி.ஸ்ரீபத்,

இந்திய மாணவர் சங்கம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *