(தமிழர்கள் அறிந்திராத வெளிநாட்டுப் பெரியார்கள் பலர்-மிகப்பலர்-இருக்கின்றனர். பலதுறைகளிலும், எழுத்துத் துறையில், ஃப்ரெஞ்சு நாட்டில் தலைசிறந்து விளங்கிய பேனா மன்னர் ஒருவரைப் பற்றியது இக்கட்டுரை)
அவன் இலக்கியக் கடலின் மறுகரையை அடைந்தவன். ஆனால் இன்பம் என்ற சொல்லின் பொருள் என்ன என்பதையே அறியாதவன். ஆயிரமாயிரம் மக்களின் உள்ளத்தில் தன் எழுத்து வன்மையால் மகிழ்ச்சியையும், மனநிறைவையும் ஏற்படுத்தியவன்; ஆனால் அவன் மனமோ ஏக்கத்தால் நிரம்பி வழிந்தது. அவனுடைய ஆதரவால் முன்னுக்கு வந்தவர்கள் எத்தனையோ பேர்கள்; ஆனால் அவன் என்னவோ வாழ்க்கை என்னும் ஓட்டப்பந்தயத்தில் கடைசியிலேயே ஓடிவந்தான். அவனை உயிருள்ள பல்கலைக்கழகம் என்றும் சொல்லலாம். தோல்வியின் திருவுருவம் என்றும் கூறலாம்.
சார்லஸ் அகஸ்டின் ஸான்ட் – பீவ், 23-12-1804 அன்று, பூலோன் என்ற ஊரில் பிறந்தான். அவன் தந்தை சார்லஸ் பிரான்சிஸ் சுங்க இலாகாவில் அதிகாரியாகப் பணியாற்றி வந்தார். தாயின் பெயர் அகஸ்டின் கோலியோ. ஸான்ட்-பீவ் பிறந்தபோது அவன் தந்தை உயிருடன் இல்லை. தன்னுடைய ஐம்பத்து ஒன்றாம் வயதில் அவர் இறந்துவிட்டார். அப்போது அவன் தாய்க்கு வயது நாற்பது.
ஸாண்ட்-பீவினுடைய தந்தையும் பெரிய படிப்பாளியல்ல. தாயும் மிகச் சர்வ சாதாரணம். அப்படியிருக்க அவன் எப்படி நடமாடும் பல்கலைக்கழகமாக முடிந்தது. அதுதான் வியப்பாக இருக்கிறது. ‘சூழ்நிலைகள் மனிதனை உருவாக்குகின்றன’ என்று சொல்பவர்களுக்கு ஸாண்ட்-பீவ் ஒரு புதிராகவே இருக்கிறான்.
‘பிளெரியோ’ பள்ளிக்கூடம் (Institute Bleriot) என்றழைக்கப்பட்ட கல்விக்கூடத்தில் ஆரம்பக்கல்வி கற்ற ஸாண்ட்-பீவ், தன்னுடைய பதின்மூன்றாவது வயதுக்குள்ளேயே ஏராளமான லத்தீன் நூல்களைப் படித்துவிட்டான். அதன்பிறகு ஸெயின்ட்-லூயி மருத்துவ நிலையத்தில் சேர்ந்து பயிலத் தொடங்கினான். அவனுக்கு இலக்கியக் கலையில் இருந்த ஆர்வம், மருத்துவத்தில் இல்லை. ஆகவே அவன் நான்காண்டுப் பயிற்சிக்குப் பின்னர், இலக்கியத்தில் ஈடுபட்டான். அதில் அவன் தாய்க்கு அதிக ஏமாற்றமே.
‘குளோப்’ (Le Globe) என்றழைக்கப்பட்ட இலக்கிய ஏடு ஒன்று அப்போது பாரிஸ் நகரில் வெளியாயிற்று. தன்னுடைய பத்தொன்பதாவது வயதிலே சான்ட்-பீவ் எழுதித் தந்த இலக்கியக் கட்டுரை ஒன்று அதில் வெளியாயிற்று. ஃபிரெஞ்சுக் கலை மன்றத்தினர் நடத்திய கட்டுரைப்போட்டி ஒன்றில் ஸான்ட்-பீவ் கலந்து கொள்ளும்படி வற்புறுத்தப்பட்டான். “பதினொறாம் நூற்றாண்டின் பிரெஞ்சுக் கவிதைகள்” என்பது பொருள். பத்துப் பக்கங்கள் கொண்ட கட்டுரையே போதுமானது. ஆனால் அவன் படித்திருந்ததோ ஏராளம். ஆகவே அவன் இரண்டு தொகுதிகள் கொண்ட நூல் ஒன்றை அனுப்ப நேரிட்டது. அது வெளியானதும், அவன் புகழ் பரவியது. பூர்பான் கல்லூரியில் படித்துவந்த இரண்டு ஆங்கில நண்பர்கள் அவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் சென்றார்கள். அப்போது அவனுக்கு வயது இருபத்து மூன்று. “நான் மறுபிறவி எடுக்க நேரிட்டால், ஓர் ஆங்கிலேயனாகப் பிறக்கவே விரும்புகிறேன்” என்றான் அவன்.
ஜோசப் டெலொர்ம்’ (Joseph Delorme) என்ற பெயரில் அவன் பல கவிதைகளை எழுதினான். அவை அவ்வளவாக உயர்ந்தன வல்லவெனினும் அவனுடைய கவிதை நூல்கள் இரண்டு மூன்று தொகுதிகளாக வெளியாயின.
விக்டர் ஹ்யூகோ என்ற உலகப்புகழ்பெற்ற கதாசிரியர் அப்போது தம்முடைய கவிதைத் தொகுதி ஒன்றை வெளியிட்டிருந்தார். அதைப்பற்றிய திறனாய்வுக்கட்டுரை ஒன்றை ‘குளோப்’ ஏட்டில் சான்ட்-பீவ் எழுத நேரிட்டது. அதன் விளைவாக விக்டர் ஹ்யூகோவுக்கும், அவனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. ஹ்யூகோவுக்கு அப்போது வயது இருபத்தி ஐந்து. அவர் தம்முடைய இளம் மனைவி அடெலே(Adele)யுடன் இன்பகரமான இல்லறம் நடத்தி வந்தார். ஸான்ட்-பீவைத் தம் வீட்டுக்கு விருந்துண்ண அழைத்தார் ஹ்யூகோ. அச்சமயம் திருமதி அடெலேய்க்கும் ஸான்ட்-பீவுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. அந்த வினாடியிலிருந்து ஸான்ட்-பீவ் நிம்மதியிழந்தான்.
வழுக்கி வீழ்தல்
திருமதி ஹ்யூகோ பேரழகி, அவள் தன் கணவனைத் காதலித்து மணந்திருந்தாள். சுக வாழ்க்கை நடத்தி வந்தாள். ஸான்ட்-பீவோ, ஏழை, அதிக வருமானமில்லாதவன். விகாரமான தோற்றமுடையவன். ஆனால் இளைஞன். இந்த இருவருக்கும் ஏற்பட்ட தொடர்பு, வினோதமானது. ஸான்ட்-பீவின் அறிவுத்திறனில் தன் உள்ளத்தைப் பறிகொடுத்தாள் அடெலே. அவள் அழகில் தன் மனதைப் பறிகொடுத்தான் அவன். இரகசியமாகக் கடிதங்கள் எழுதத் தொடங்கினர் இருவரும். கடைசியில் உடலுறவும் ஏற்பட்டது. அன்றுமுதல் விக்டர் ஹ்யூகோவுக்கும், ஸான்ட்-பீவுக்கும் தீராப்பகை உண்டாயிற்று.
தன்னுடைய காதல் அனுபவத்தை அடிப்படையாக வைத்து ஸான்ட்-பீவ் ‘வாலுப்டே’ என்ற நவீனத்தை எழுதினான். அது மிகவும் அழகாக எழுதப்பட்டிருந்த போதிலும் பெரும்பாலோர் அதை விரும்பவில்லை. அதற்குப் பிறகு தன்னுடைய கடைசிக் கவிதைத் தொகுதியை வெளியிட்டான் அவன். அதுவும் மகத்தான தோல்வியாக அமைந்தது. அவன் மனம் மாறியது. அதன் பிறகு அவன் சொந்தமாக நாவல்களோ, கவிதைகளோ எழுதுவதை விட்டுவிட்டான்.
ஸ்விட்ஸர்லாந்துக்கும், இத்தாலிக்கும் சுற்றுலா சென்று வந்தான் ஸான்ட்-பீவ். லாசேன் என்ற நகரில் அவனுடைய சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்திருந்தார்கள். அவனுடைய பேச்சில் அழுத்தம் இருந்த போதிலும் சுவை இல்லை. அவன் பேச்சாளனல்ல. ஆகவே அவன் மனம் சோர்ந்து தன் நாட்டுக்குத் திரும்பினான். ஆனால் திரும்பிவந்ததும் தன்னடைய லாசேன் சொற்பொழிவுகளையே நூலாக எழுதினான். ‘போர்ட்-ராயல்’ என்ற தலைப்புள்ள அந்த நூல், அவனுடைய ஆராய்ச்சித் திறமையையும், எழுத்து வன்மையையும் அகில உலகுக்கும் பறை சாற்றியது. அவன் புகழ் உயர்ந்தது. விக்டர் கசின் என்ற அவனுடைய நண்பரும், ஆதரவாளருமான அமைச்சர் அவனை ‘மஜாரின்’ நூல் நிலையத்தின் உதவித் தலைமை அதிகாரியாக நியமித்தார். அதில் இருந்த ஆயிரக்கணக்கான நூல்கள் அவனைக் கனவுலகுக்குக் கொண்டு சென்றன. மாதந்தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை சம்பளமாகக் கிடைத்தது. அவன் வாழ்க்கையில் முன் எப்போதுமில்லாத நிம்மதி உண்டாயிற்று. அவன் திருமணம் செய்துகொள்ள விரும்பினான். ஆனால் அவன் விரும்பிய பெண்கள், அவனை உதறித்தள்ளினர். அவனை விரும்பின பெண்கள் அவனால் புறக்கணிக்கப்பட்டார்கள். ஆகவே திருமணம் ஆகவில்லை.
ஃபிரெஞ்சுக் கலைமன்றம் (French Academy) என்பது ஃபிரான்ஸின் பேரறிஞர்களை உறுப்பினர்களாகக் கொண்டதோர் அமைப்பு. அதன் பெருமையும் புகழும் மேனாடுகள் அனைத்திலும் பரவிக் கிடந்தன. அதில் உறுப்பினர்கள் நியமிக்கப்படுவதில்லை. தேர்ந்தெடுக்கப்படுவர். தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் மன்ற உறுப்பினர்களே! ஸான்ட்-பீவ் அப்பெருமன்றத்தின் உறுப்பினராக விரும்பி முயன்றான். மிகவும் கசப்பான அனுபவங்களுக்குப் பிறகு அவனுக்கு வெற்றி கிடைத்தது. அது உண்மையில் பெரிய சாதனையே. அவனை வரவேற்று உரை நிகழ்த்தியவர் யார் என்று எண்ணுகிறீர்கள்? அவனுடைய பகைவரான மாபெரும் மேதை விக்டர் ஹ்யூகோவேதான்! கலைமன்ற உறுப்பினர்களுக்கு அரசியலிலும், சமூகத்திலும் செல்வாக்கு அதிகம். அவர்கள் எழுதும் நூல்களுக்கு அன்பளிப்பும் மிக அதிகம். ஸான்ட்-பீவ் அந்த விதத்தில் பேறுடையவனே.
ஸான்ட்-பீவ் கல்லூரியில் படித்துப் பட்டம் பெறாத மேதை என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். ஆனாலும் அவன் காலத்தில் அவனைவிடச் சிறந்த படிப்பாளி யாருமேயில்லை. ஃப்ரான்ஸ் முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகப் பேராசிரியர்களின் அறிவின் திரட்சி அவனுடைய பேனா முனைக்கு முன்னால் மண்டியிட்டு நிற்கும். ஆகவே அவனை பெல்ஜிய நாட்டு அரசாங்கம் மதிப்புடன் வரவேற்று லீஜ் பல்கலைக்கழகத்தில் கௌரவப் பேராசிரியராக நியமித்தது. ஃபிரெஞ்சு இலக்கியத்தின் வளர்ச்சியைப் பற்றி அவன் வாரம் இரு சொற்பொழிவுகள் வீதம் அறுபத்து நான்கு சொற்பொழிவுகளை நிகழ்த்தினான். அதன் பிறகு இன்னோர் இலக்கியப் பிரிவைப் பற்றி இருபத்திரண்டு தொடர் சொற்பொழிவுகள் இயற்றினான். அவனுடைய கரைகாணாத புலமையையும், நினைவாற்றலையும், ஆழ்ந்த சிந்தனையின் விளைவையும், லீஜ் பல்கலைக்கழகத்தினர் சுவைத்தனர். இருந்தபோதிலும் பொறாமை பிடித்த சிலர் அவனுக்கு விரோதமாகப் பிரச்சாரம் செய்தனர். “ஃபிரெஞ்சு இலக்கியத்தைப் பற்றிப் பேச இந்த ஆசாமிதானா கிடைத்தான்? முழுநீளப் பட்டம் பெற்ற பேரறிஞர்கள் எவ்வளவோ பேர் இருக்கிறார்களே!” என்ற முணு முணுப்பு எழுந்தது. ஆனால் முழுநீளப்பட்டம் பெற்ற அந்த அறிஞர் பெருந்தகைகளே, ஸான்ட்-பீவின் பேரறிவின் முன்னே வெட்கித் தலைகுனிந்து அமர்ந்த சங்கதி அவர்களுக்குத் தெரியாது.
புகழ் ஏணியின் உச்சி
பொறாமை பிடித்த பேராசிரியர்களது தூண்டுதலின் விளைவினால் போக்கிரி மாணவர்கள் செய்த குழப்பம் அவன் மனதை வருத்தியது. ஆகவே புண்பட்ட உள்ளத்துடன் அவன் பாரிஸ் திரும்பினான். அங்கே நல்ல வேளையாக அவனுக்கு ஒரு வாய்ப்புக் காத்துக் கிடந்தது. ‘கான்ஸ்டிடியூஷனல்’ என்ற வார இதழில் ஒவ்வொரு திங்கட் கிழமையும் ஏதாவது ஒரு பொருள் பற்றி அவன் கட்டுரை எழுதவேண்டுமென்றும், ஒவ்வொரு கட்டுரைக்கும் நூறிலிருந்து நூற்றைம்பது ஃபிராங்குகள் வரையில் அன்பளிப்புத் தருவதாகவும் அந்த ஏட்டின் ஆசிரியர் அவனிடம் ஒப்பந்தம் செய்து கொண்டார். ஏதாவது சரித்திர நிகழ்ச்சிபற்றியோ அல்லது இலக்கியத்தைப் பற்றியோ அவன் எழுதினால் போதுமானது என்றும் ஆசிரியர் கூறினார். அவன் உடன்பட்டான். முதல் கட்டுரை 1-10-1849ல் வெளியாயிற்று. அந்த வாரத்திலிருந்து தொடர்ந்தாற்போல் இருபது ஆண்டுகள் அதாவது 1869ல் அவன் இறக்கும் வரையிலும் அவன் பேனா எழுதித் தள்ளிக் கொண்டேயிருந்தது. ஆயிரத்துக்கு மேற்பட்ட கட்டுரைகளை அவன் ‘லுண்டிஸ்’ (Lundis) என்ற வரிசையில் எழுதி வந்தான். அவன் திரட்டிவைத்திருந்த அறிவுச் செல்வம் அனைத்தும் ஒவ்வொரு திங்கட்கிழமையும் ஃபிரான்ஸ் நாடுமுழுவதிலும் எல்லா இல்லங்களிலும் படிக்கப்பட்டன. அவை தொகுதி தொகுதியாக அடிக்கடி வெளியானதால் மற்ற ஐரோப்பிய மொழிகளிலும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்பட்டன. 1849லிருந்து 1869ம் ஆண்டு வரையிலும் ஸான்ட்-பீவ் என்ற பெயர் ஐரோப்பாக் கண்டம் முழுவதிலும் எதிரொலித்தது. அமெரிக்காவிலும் அவன் நூல்கள் விரும்பிப் படிக்கப்பட்டன.
அவன் எழுதாத பொருளில்லை. அவனுக்குத் தெரியாத நூலுமில்லை. அவன் புகழேணியின் உச்சியில் இருக்கும்போது அவன் தாய் மகிழ்ச்சியின் மிகுதியால் இறந்தாள். 1869ம் ஆண்டு அக்டோபர் 13ந்தேதியன்று பிற்பகல் 1-30 மணிக்கு அவன் இறந்தான். அவனுடைய விருப்பப்படி அவனை அவனுடைய தாயின் கல்லறைக்கு அருகில் புதைத்தார்கள். “தான் இறந்தபின் எந்தவிதமான மதச்சடங்கும் செய்யத் தேவையில்லை” யெனவும் நீண்ட இரங்கல் உரைகள் எதுவும் தேவையில்லை எனவும் அவன் இறக்குமுன்னர் தன் அன்பர்களைக் கேட்டுக் கொண்டான். ஆனால் அவனுடைய சவ ஊர்வலம் நீண்டதாகவே இருந்தது. ஃபிரான்சின் பெரிய எழுத்தாளர்கள் அனைவரும் குஸ்தாவ், அலெக்ஸாண்டர் டூமாஸ், ரேனான், டுரூபாட் உட்பட வந்திருந்தார்கள். அவன் மரணத்தைக் கேட்டு ஐரோப்பாக் கண்டமே அழுதது. அவனுக்குப் பின் ஃபிரான்சில் அவனைப் போன்றவர்கள் யாரும் பிறந்ததாகத் தெரியவில்லை. இன்றையவரையில்!