ulagaikkavarntha padaippaaligal - 1 shakespeare - written by n.varadharajalu உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் -1 : ஷேக்ஸ்பியர் - நா. வரதராஜுலு
ulagaikkavarntha padaippaaligal - 1 shakespeare - written by n.varadharajalu உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் -1 : ஷேக்ஸ்பியர் - நா. வரதராஜுலு

உலகைக் கவர்ந்த படைப்பாளிகள் -1 : ஷேக்ஸ்பியர் – நா. வரதராஜுலு

(ஷேக்ஸ்பியர் நாடகச் சுவையின் ஒரு துளியை நம் நாவில் தடவுகிறார், தமிழ்-இங்கிலீஷ் இலக்கியங்களைத் தமது மூச்சாக்கிக்கொண்டுள்ள இக்கட்டுரையாளர், ஷேக்ஸ்பியரைப் படிப்பதற்காகவேனும் இங்கிலீஷ் படித்தாகவேண்டும்! ஆம்! ஆனால் இங்கிலீஷ் கற்றவர்களில் எத்தனைபேர் ஷேக்ஸ்பியரைப் படித்துள்ளனர்? அந்தோ!)

இன்றைக்கு 400 ஆண்டுகளுக்கு முன்னர், உலக இலக்கியத்தில் புத்தொளி ஒன்று தோன்றியது. ஷேக்ஸ்பியர் 52 ஆண்டுகள் வாழ்ந்து 37 கவிதை நாடகங்களையும், இரண்டு நீண்ட கவிதைக் காவியங்களையும் பல சிறு கவிதைகளையும், மனித குலத்துக்கு ஈந்தார். எம்மொழியிலும் எக்காலத்தும், எந்த ஆசிரியரும் எட்டிப்பார்க்க முடியாத புகழ் ஷேக்ஸ்பியருடையது. அவர் நூல்கள் உலக மொழிகள் அனைத்திலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளன.

அவர் நாடகங்களை ஆங்கிலத்திலோ, மற்ற மொழிகளிலோ, அரங்கேற்றுவதே தம் திறமைக்குச் சான்று என இன்றைக்கும் நடிகர் கருதுகின்றனர். அவர் கருத்துகளையும், மொழியையும், நாடக அமைப்பையும், பாத்திர உற்பத்தியையும் ஆராய்வதே தம் இலக்கியத் திறனுக்குச் சான்று என அறிஞர் கருதுகின்றனர். அவர் காலத்தில் அவர் கவித்திறமையுடன் நடிகத் திறமையையும்
பெற்று விளங்கியிருந்தார் என்பது உறுதி.

ஷேக்ஸ்பியருடைய வாழ்க்கையைப் பற்றி நமக்குத் தெரிந்த செய்திகள் சிலவே. கம்பனும், காளிதாசனும் போன்ற கவிஞர் அனைவருக்கும் இதுவே விதி போலும்! ஷேக்ஸ்பியர் பிறந்தததும் இறந்ததும் இங்கிலாந்தில் ஆவான் நதிக்கரையில் உள்ள ஸ்ட்ராட்போர்ட் என்ற ஊரில். அவர் வாழ்ந்தது பெரும்பாலும் லண்டனில், அக்கால வழக்கப்படி லத்தீனும், கிரேக்க மொழியும், சிறிது ஃபிரஞ்சு மொழியும் அறிந்திருந்தார்
எனத் தெரிகிறது. மக்கள் அவருடைய பெருமையை அவர் காலத்திலேயே உணர்ந்து இருந்தனரா என்பது ஐயுறத் தக்கது. அவர் நூல்களிலிருந்து ஓரளவு அப்போதிருந்த பெரும் பணக்காரரை அண்டி வாழ்ந்திருக்கலாம் என நினைக்க வழி உண்டு.

ஷேக்ஸ்பியர் வாழ்ந்தது, முதல் எலிசபெத் இராணியின் ஆட்சியில். ஆங்கிலக் கடற்படை ஆதிக்கம் வலுத்திருந்த காலம் அது. ஆங்கிலேயே கம்பெனிகள் இந்தியாவிலும் அமெரிக்காவிலும் வியாபாரம் செய்யத் தொடங்கிய காலம். திரைகடல் ஓடித் திரவியம் தேடியும், பிறநாடுகளிலிருந்து பொருளுடன் அறிவு
திரட்டி பிரிட்டனை வளப்படுத்திய காலம், ரோமன் கத்தோலிக்க மதத்தளையினின்று ஆங்கிலச் சமூகம் பிரிந்த காலம். ரினே ஸான்ஸ் என்ற புரட்சி இயக்கம் ஐரோப்பாவில் தோன்றி, புதுக்கலைகளும் புது விஞ்ஞானமும் வளரத் தொடங்கிய காலம்.

விஞ்ஞான சாஸ்திரிகள் கோபர்னிகஸ், கெப்லர், கலிலேயோ,கலை வல்லுநர் மிகாலான்ஜலோ, லியனார்டோ டாவின்ஸி போன்றவரை உலகம் அறிய வந்த காலம்.
ஐரோப்பாவில் மனித குலம் ஆயிரம் ஆண்டு உறக்கத்திலிருந்து வீறுகொண்டு எழுச்சி பெற்ற காலம் அது. அச்சூழ்நிலையில் ஷேக்ஸ்பியர் என்ற மகாகவி தோன்றினார்.
ஆங்கில இலக்கியத்தில் அவருக்கு முன்னும் பின்னும் எவரும் எட்டியிராத அளவுக்குச் சொல்வளமும் பொருள்ஆழமும் கவிதை நயமும் செறிந்து விளங்குவது ஷேக்பியருடைய வாக்கு. மாத்யூ ஆர்னல்ட் கூறுகிறார்: “எவரும் எட்டமுடியாத அறிவு. நுழைய முடியாத நுண்மாண் நுழை புலம். உள்ளொளி ததும்பும்
உணர்ச்சிகள். எளிமையில் எளிமை; அருமையில் அருமை. மக்களின் துயரங்களையும் எழுச்சிகளையும் அகத்தே தாங்கும் திரு நுதல்-‘‘ஐயா, பிறர் எம் வினாக்களுக்கு விடை பகருகின்றனர்.

நும் உயர் நிலையைத்
தொழுவதன்றி வேறென்ன யாம் செய்ய உளது?”

தமிழ்ப் புலவர் ஒருவர் கூறியதுபோல, “

தலை அல்லால்
கைம்மாறு இல்லனே”.

“ஷேக்ஸ்பியர் கவிதையைக் கற்குந்தோறும் உலகில் சிறந்த அறிவாளி ஒருவருடைய நட்பைப் பெறுகிறோம். அவர் கவிதையைப் பற்றி பிறர் எழுதிய நூல்களைப் படிக்கும்போது அறிவுக்கும் பேதைமைக்கும் உள்ள ஏற்றத் தாழ்வை அறிகிறோம்”, என்றார் ஹாஸ்லிட். இலக்கிய நுகர்ச்சி இலக்கண வரம்புக்கு உட்பட்டதன்று. கவிஞன் இதயம் அவன் பாத்திரங்களின் வாயிலாக வெளிப்படுகிறது. ஒவ்வொரு நாடகப் பாத்திரமும் தன் கருத்தையும் உணர்ச்சியையும் வெளிப்படுத்தும்போது கவிஞன் அப்பாத்திரத்தின் மனதில் நுழைந்து அனுபவித்து அவ் உணர்ச்சியை முற்றிலும் அறிந்திருந்தாலன்றி அப்பாத்திரத்தின் இயல்பு வெளிவராது. ஷேக்ஸ்பியர் கவிதையில் ஆயிரத்துக்கு மேற்பட்ட பாத்திரங்கள் உளர்; 37 நாடகங்களிலும் நூற்றுக்கு மேற்பட்ட பாட்டுடைத்தலைவர், பாட்டுடைத் தலைவியர். இவர் ஒவ்வொருவருடைய அகம் புகுந்து, வழி உணர்ச்சிகளை நுகர்ந்து
அப்பாத்திரங்களில் வாக்காக வெளிப்பட்டன ஷேக்ஸ்பியரின் கருத்துகள்.

ஷேக்ஸ்பியர் நாடகம் எழுதியதால், கம்பனையும் சங்கப் புலவரையும் போல இயற்கையையும் கடவுளையும் மக்களையும் அதிகமாகப் புகழ இடமிராது. ஒவ்வொரு பாத்திரமும் தம்மைத் தம் உரையால் வெளிப்படுத்த வேண்டும். அவ்வுரையே அன்றோ நாடகம்? நாடகப் பாத்திரங்கள் எந்தப் பாத்திரத்தையும் அவர்ரவர் கூற்றின் இரண்டு தொடர்களால் அறுதி இட்டுக் கூற முடியும். இது சிறந்த ஆசிரியர்களுக்கு உரிய பண்பு. கம்பனில் இரண்டு வரிகள் சொன்னால் போதும்; அக்கூற்று
இராமனுடையதா, இந்திரசித்துடையதா, அனுமானுடையதா எனச் சொல்லி விடலாம்.

ஷேக்ஸ்பியர் பல நூறு பாத்திரங்களை உண்டாக்கி இருந்தாலும், நடையிலும் உணர்விலும் ஒவ்வொரு பாத்திரத்துக்கும் வேறுபாடு உண்டு. உபபாத்திரங்களும், ஆசிரியன் ஏற்படுத்தும் சூழ்நிலையும் தலைவன் தலைவியர்க்கு உயர்வு தருவன. “அரம்பையர் சானகிக்கு அழகு தந்து அயல்சார” என்ற கம்பன் வாக்குப்போல ஒவ்வொரு நாடகத்திலும் ஷேக்ஸ்பியரின் உபபாத்திரங்கள் தலைவனுக்கும் தலைவிக்கும் பொலிவு தரும். ஒரு இயாகோ, ஒரு எமிலியோ, ஒரு ஒதல்லோ, ஏன் ஒரு கைக்குட்டைத் துணிகூட டெஸ்டமோனாவின் பெருமையை விளக்கவே துணை ஆகிறது”, என்பார் ப்ராட்லி.

ஏனைய மகாகவிகளைப்போன்று ஷேக்ஸ்பியரும் தமக்குமுன் வழக்கில் இருந்த கதைகளையும் வரலாற்றையும் ஆதாரமாகக் கொண்டே தம் நாடகங்களைப் புனைந்தார். அவருக்கு ஆதாரம் பெரும்பாலும் ஆங்கில நாட்டு வரலாற்று நூல்களும், புளூடார்க் என்ற கிரேக்கர் எழுதிய வாழ்க்கை வரலாறுகளும், பொக்காஷியா என்ற இத்தாலியர் எழுதிய கதைகளுமாம். மகா கவிகள் புதுக் கதைகளையும்
புதுநிகழ்ச்சிகளையும் புனைந்து புகழ்தேட வேண்டியது இல்லை. அப்புகழைத் துப்பறியும் நாவல்கள் எழுதுவோர் அடையட்டும்! தாம் கொண்ட பாத்திரங்களுக்கு உயிர் ஊட்டி, பெருமையிலும் சிறுமையிலும் அவர்களை நாம் வியக்கும்படி சிறப்புத்தந்து அவர்களுடைய மேம்பாட்டையும் தாழ்வையும் காட்டி,
வாழ்க்கையோடு ஒன்றி நிற்பது காவியம். இப்பெருமையைச் சிலப்பதிகாரம், கம்பராமாயணம் முதல் கதே (Goethe) ஈறாகப் பல மொழிக்காவியங்களிலும் நாம் காணலாகும். ஷேக்ஸ்பியர் இதற்கு விலக்கன்று.

ஷேக்ஸ்பியர் நாடகங்கள் நடிப்பதற்காகவே எழுதப்பட்டவை. அவற்றை ஆங்கிலமொழி பேசப்படும் நாடுகள் மட்டிலும் அன்றிப் பிற மொழிகளிலும் இன்றைக்கும் நடிக்கிறார்கள். ஷேக்ஸ்பியர் நாடகங்களில் நடித்துப் புகழ்பெற்றாலன்றி உலகம் எந்த நடிகரையும் சிறந்த நடிகராக ஏற்றுக்கொள்ளாது. ஷேக்ஸ்பியர் நாடகங்களை இயற்றிய காலத்தில் இருந்த நாடக அரங்குக்கும் இன்றைய அரங்குக்கும் பல வேறுபாடுகள் உளவேனும், அவை இன்றைக்கும் மக்களுடைய மனதைக்கவருகின்றன. பலமுறை அவற்றைப் படித்திருந்தாலும் நாடகங்களைப் பார்த்திருந்தாலும் ‘காமம்’ செறிதோறும் புதுமை காண்கிறோம்: “நவில் தொறும் நூல் நயம் போலும்; காணுந்தோறும் அன்னதே ஆம்.”
இனி, ஷேக்ஸ்பியர் நாடகச் சுவையை நுகர முற்படுவோம். ஆயினும், மறுபடியும் கூறுவேன். நாம் படிப்பது, எழுதுவது, காண்பது எதுவும் தாமே நுகர்வதற்கு ஈடாகாது.

ஷேக்ஸ்பியர் நாடகங்களை மூவகையாகப் பிரிக்கலாம். இன்பியல் நாடகங்கள், வரலாற்று இயல் நாடகங்கள், துன்பியல் நாடகங்கள் எனச் சில வரலாற்று இயல் நாடகங்கள் துன்பியல் தழுவியனவாகவும் சில இன்பியல் தழுவியனவாகவும் உள. இன்பியல் நாடகங்களுள் சிறந்தனவாகக் கருதப்படுவன: சூறாவளி
(The Tempest), நடுவேனிற் கனவு (Midsummer Nights Dream), விரும்பிய விதமே (As You Like it), பன்னிரண்டாம் இரவு (Twelth Night). துன்பியல் நாடகங்களுள் சிறந்தன:
ஹாம்லட் (Hamlet), ஒதல்லோ (Othello), மாக்பெத் (Macbeth), லீயர் அரசன் (King Lear), ரோமியோ- ஜூலியத் (Romeo and Juliet). வரலாற்று இயல் நாடகங்களுள், ஜூலியஸ் சீஸர் (Julius Caesar), கோர்யோலேனஸ் (Coriolanus), அந்தோனி-கிளியோபாட்ரா (Antony and Cleopatra), ரிசர்ட் நாடகங்கள் (Richard 11nd Richard 111) போன்றவை, துன்பியல் நிறைந்தனவாகவும் ஐந்தாம் ஹென்ரி (Henry V) இன்பியல் நாடகமாகவும் கருதப்படும்.

இன்பமும் துன்பமும் துன்பத்தில் இன்பம் கலந்திருத்தலும் இன்பத்தில் துன்பம் கலந்திருத்தலும் வாழ்க்கையில் நாம் அறிந்ததே. துன்பமே முற்றும் அனுபவித்தவர் யார் உளர்? அவ்வாறே குறை எதுவும் அற்ற காவியத் தலைவனோ தலைவியோ இரார். குற்றம் அற்றவர், குறைவே இன்றி நிறைவே பொருந்தியவர் யார் உளர்? வாழ்க்கை
இருண்டோ முற்றிலும் ஒளியுடனோ இராது. இவ்வுண்மை அறிந்த ஷேக்ஸ்பியர் தம் துன்ப நாடகங்களுடன் இன்பத்தையும், இன்ப நாடகங்களுடன் துன்பத்தையும் இரண்டறக் கலந்து அளித்துள்ளார். இரண்டும் கலந்ததே வாழ்க்கை. இன்பத்தையும் துன்பத்தையும் வெவ்வேறாகக் காணாது ஒருங்கே காட்டியுள்ளார்.

ஹாம்லெட் வஞ்சம் தீர்க்க டென்மார்க்குக்குத் திரும்புகிறான். அவனுக்குக் கிடைக்கும் எதிர்பாராத வரவேற்பு ஆஸ்ரிக் இடம். ஆஸ்ரிக்கின் ஒய்யார மேடைப் பேச்சு ஹாம்லெட்டின் தீவிரச் சிந்தனைக்கு மாறுபட்டு ஒலிக்கிறது. ஹென்ரி V இங்கிலாந்தின் அரசனாக முடிசூடித் தன் நாட்டை உறக்கத்தினின்று எழுப்பி இங்கிலாந்தைத் திருத்தி, அறத்திலாயினும் மறத்திலாயினும் சீரிய நிலைக்குக் கொண்டுவருவதாக வாக்குறுதி செய்கிறான். உடனே, அவனுடைய பழைய குடிகாரத் தோழர்கள் தோன்றுகின்றனர், ஹென்றியை வாழ்த்த அவனிடம்
சிறு பேறுகளை அடைய. அப்போது ஹென்றியின் பெருமிதப் பேச்சும் அவர்கள் ‘பழையம் எனக் கருதப் பண்பல்ல செய்யும் கெழுதமையையும்’ ஒரே சமயத்தில் பெருமையையும் சிறுமையையும் இணைப்பன.

அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு என்பன தமிழ் இலக்கியத்தில் மகடூஉக் குணங்களாகப் போற்றப்படுவன. ஆங்கிலத்தில் காணல் அரிது. அத்தகைய குணங்கள் பொருந்திய தலைவி ஒருத்தி ஷேக்ஸ்பியரிலும் உண்டு,
மிராண்டா. கண்காணாத தீவில் தந்தையால் வளர்க்கப்பட்ட மிராண்டா முதலில் பெர்டினான்டைக் கண்டதும் காதல் கொள்கிறாள். ‘எத்துணை வனப்பு! உலகமே வாழி, இத்தகைய மக்கள் உள்ள உலகம் சீரியது; புதியது’ என்கிறாள். அவள் காதலன் பெர்டினான்ட் மிராண்டாவின் தந்தை ஆணையின்படி மரக்கட்டைகளை எடுத்து அடுக்கும் போது அவள் தன் காதலை அவனிடம் வெளியிடுகிறாள். அவனுடைய
உடல் துன்பத்திலும் அக்காதல் அவனுக்கு மன இன்பம் பயக்குகிறது. வாழ்வில் ஆசை உண்டாக்குகிறது.

“நீ என்னை மணந்தால், நான் உன் மனைவி ஆவேன்; நீ என்னை மணக்காவிட்டால் நான் உன் அடிமையாவேன்” என்ற சொற்கள் என்ன கனிவு, ஆர்வம்!
உலகறிந்த வைரங்கள் உலகமே ஒரு நாடக அரங்கு இருப்பதா, இறப்பதா? கணவனே தலைவன், கணவனே உயிர், கணவனே உடல் கருணையின் ஒழுக்கு, மாரி போன்றது இந்த ஆங்கில நாடு தற்பெருமையே, உன்னிடம் விடைகொண்டேன்.

ஒரு முத்தம்; என் நாடு கடந்த வாழ்க்கை போல நீண்டது; என் வஞ்சினம் போல இனியது பெயர் எதுவாயின் என்? மல்லிகை வேறு பெயர்கொண்டு அழைப்பின் மணம் கமழாதோ? இமையத்தை அசைப்பாயோ நீ தளர்ந்தவன் நானோ?
அணையா விளக்கே; உன்னை அணைவித்த பின் ஏற்றும் திறனுடையேனோ யான்?
எனப் பல பல சொற்றொடர்கள், அவற்றுடன் தொடங்கும் பேச்சுகள், அவற்றில் ததும்பும் உணர்வுகள், அவ்வுணர்வுகளைக் காட்டும் மேடை நடிப்பு யாவும் ஆங்கில மொழியில் உலகறிந்த வழக்கு. யாவற்றிற்கும் மேலாக ப்ராட்லி ஒன்று கூறுவார்: “ஷேக்ஸ்பியர் நாடகங்கள் யாவும் அழிந்துபோய் ஒன்று மட்டும் எஞ்சும்
என்றால் அது ‘சீயர் அரசன்’ என்ற நாடகம் ஆகட்டும்” அந்த நாடகத்திலும் சில வரிகள்: லீயர் தன்னைச் சுற்றி உலகம் சுழல்கிறது என எண்ணும் பேதைகளுள் ஒருவன். ஓட்டாண்டியாக விரட்டப்படுகிறான். கடும் குளிரில் போர்த்த ஆடையின்றி, ஒண்ட இடமின்றி, உண்ண உணவின்றி, மழையால் நனைந்து கான வெளியில் திரியும்போது தன் மடமையை உணருகிறான். தன் செயலுக்குக் கழுவாய் தேடி அலைகிறான்.

இறைவனைப் பற்றிய எண்ணம் ஒரு புறமும், மண்ணோடு ஒட்டிய உணர்ச்சிகள் ஒரு புறமும் அவனை இழுக்கின்றன. ஒரு கூப்பாடு போடுகிறான். தனக்காக அல்ல;
உடையற்று, உணவற்று, இருக்க இடமற்று, அலையும் ஏழை மக்களுக்காக “ஓ அரசே, இவ் ஏழைகள் படும் பாட்டை அறிவதற்காக உன் ஆடம்பரத்தை அகற்றிவிட்டு இங்கு வா! அவர்கள் உணர்ச்சியை நீயும் அறி. தெய்வம் உண்டா இல்லையா? தெய்வம் நீதியைக் காக்கிறதா? அநீதியை வளர்க்கிறதா? என்பதை மக்கள் காணட்டும்” இத்துடன் லியருக்குப் பைத்தியம் பிடித்து விடுகிறது. இப்பேச்சுக்காக ஷேக்ஸ்பியரை உளமாறப் போற்றுவோம், கும்பிடுவோம் என்பார் ப்ராட்லி.

ஷேக்ஸ்பியர் வாழ்க!

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *