“உலகம்மை” திரைப்படம் ஓரு முன்னோட்டம்:
அமரர் தோழர் சு.சமுத்திரம் அவர்கள் செம்மலரில் தொடராக எழுதி நாவலாக நூல் வடிவம் பெற்று வெளி வந்த புகழ்பெற்ற ஒரு கோட்டுக்கு வெளியே , “உலகம்மை” என்ற பெயரில் திரைப்படமாக செப்டம்பர் 22 வெளியாகிறது.
இயக்குநர் வி.ஜெயப்பிரகாஷ் இயக்கத்தில் 1970 காலத்தின் பீரியட் படமாக வரவிருக்கிறது.
எது சனாதனம் , சனாதனம் என்பது என்ன என சூடுபிடித்திருக்கின்ற தமிழ்நாடு இந்தியா எனும் பாரத் சூழலில் அவசியமான படமாக வெளிவரவிருக்கிறது உலகம்மை.
இசைஞானி இளையராஜா இசையில் உணர்த்த வேண்டிய உணர்வுகளை செய்திகளைச் சொல்கிறாள் உலகம்மை.
புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழ்கிற நாடுகள் தோறும் உலகம்மை கொண்டாடப்பட வேண்டிய ஒரு காலத்தின் கதையாக வந்திருக்கிறாள்.
தென்காசி மாவட்டத்தின் ஒரு கிராமத்தின் பனைக்காடுகளில் வாழ்கின்ற வானம்பார்த்த மனிதர்களின் சித்திரமாக , அவர்களின் முரண்பட்ட வாழ்க்கையை இரண்டாயிரமாண்டின் குளவிகள் தெரிந்து கொள்ள வேண்டிய டிஜிட்டல் சினிமாவாக வந்திருப்பது சிறப்பு.
உலகம்மை எனும் காதலும் கனிவும் கோபமும் கொண்ட பனைவிடலிக் காட்டின் இளம்பெண்ணாக கெளரி கிஷன் அசத்துகிறார்.நல்ல கதாநாயகியாக வரும் தடம் தெரிகிறது. உலகம்மையின் காதலனாக வெற்றிமித்திரன் கவனிக்க வைக்கிறார். கிராமத்தின் அநியாயங்களை தட்டிக் கேட்கும் இளம் கருப்புச்சட்டை இளைஞன் பிரணவ் இவர் யார் என கேட்க வைக்கிறார்.
பிரிட்டிஸ் ஏகாதிபத்தியத்தின் பொருளாதார முதுகெலும்பை பலவீனப்படுத்த பயன்பட்ட கதரை அணிந்து, மாறிய 70 களில் சூழ்ச்சி கொண்ட ஊர்பெரிய மனிதர்களாக வருகிற சமீபத்தில் மறைந்த மாரிமுத்து, ஜி.என்.சுந்தர் தெக்கத்தி மொழி பேசி ரசிகர்களை கரித்து கொட்ட வைக்கும் அளவிற்கு நெகட்டிவ் பாத்திரங்களில் மிளிர்கிறார்கள்.
பனையேறியாக உலகம்மையின் அய்யாவாக முதுமைபாத்திரம் ஏற்று நடித்து , யார் இந்த குணசித்திர நடிகர் என தன்னை தேட வைக்கிறார் படத்தின் இயக்குநர் ஜெயப்பிரகாஷ்.
வணிகத்திரைபடங்களுக்கு திரையரங்கும் ஊடகப்பின்புலமும் கிடைப்பது எளிது. மசாலா பார்முலா படங்கள் வெற்றி பெறுவதற்கும் கூட உலகம்மை போன்ற படங்கள் அவசியமானது என்பதை தியேட்டர்களை தம் பிடிக்குள் வைத்திருக்கிற ஆதிக்க சக்திகள் புரிந்து கொள்ள வேண்டும்.
நல்ல படங்களை அறிந்த உடனேயே திரையரங்குகளுக்கு ரசிகர்கள் சென்று பார்த்தால்தான் கலையும் வணிகம் ஆகும். மசாலாப்படம் ,கலைப்படம் இரண்டு துருவப்படங்களும் வெல்லும் என்பதை தமிழ்நாடும் புரிந்து கொள்ள வேண்டும்.
வாழ்த்துகள் தயாரிப்பாளர் டாக்டர் ஜெயப்பிரகாஷ்; இயக்குநர் வி.ஜெயப்பிரகாஷ்.