ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – உலகின் மற்றொரு சந்தோஷமான பெண் – பா.அசோக்குமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – உலகின் மற்றொரு சந்தோஷமான பெண் – பா.அசோக்குமார்

 

 

 

 

வாழ்த்துகள் தோழர் ரஞ்சிதா.

“வாழ்க்கைக்கு அர்த்தமெல்லாம் தேடவேணாம். வாழ்க்கையே அர்த்தமுள்ளது தான்!”

உண்மையான வரிகள்.

ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய சிறந்த நூல். தன் வரலாற்று நூலாக வெளிவர வேண்டியதன் சுருங்கிய வடிவமே இந்நூல்.

ஆயிரங் கதைகளில் தெரிந்தெடுத்த பத்து கதைகள் மட்டுமே இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஆதலால், பக்கங்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கலாம். ஆனால் இந்நூல் ஏற்படுத்தும் கணம் தாங்க இயலாத ஒன்றே ஆகும்.

சந்தோஷமான பெண் என்று ஒருவர் தன்னை எப்பொழுது கூற‌இயலும்? அந்த துணிவை ஒருவர் எப்பொழுது பெற இயலும்?? இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்வு என்று இதுவரை கூறி வந்ததெல்லாம் பொய்யா? போன்ற வினாக்களை நம்முள் எழுப்பி விடையை பகிர்வதே இந்நூலின் சிறப்பு.

பைக்கில் ஊர் சுற்றும் ஒரு பெண்ணின் சாகச கதையாக இருக்குமென்றே இந்நூலை அனுமானம் செய்திருந்தேன். நூல் வெளியீட்டு விழாவில் மதிப்புரை வழங்கிய தோழர்கள் மூலமாகவே சிறு அதிர்ச்சிக்கு உள்ளானேன். இன்று இந்நூலை படிக்க படிக்க பேரதிர்ச்சியில் உறைந்து நிற்கிறேன்.

34 வயது நிரம்பிய ஒரு பெண்ணின் வாழ்வை எவ்வித ஒளிவு மறைவுமின்றி உலகிற்கு பகிர துணிந்த பாங்கிற்கு முதல் சபாஷ். தனது நிறை குறைகளை மிக யதார்த்தமாகப் பகிர்ந்த விதம் போற்றுதலுக்குரியது.

அறிவுரையோ ஆலோசனைகளோ வழங்காமல் தனது வாழ்வில் நிகழ்ந்ததை உள்ளது உள்ளபடி கூறி நம்மை நாமே சுய பரிசோதனைக்குட்படுத்தி நம்மை நமது வாழ்வின் சந்தோஷத்தை அளவிட உதவும் வகையில் இந்நூல் அமைந்திருப்பதாக கருதுகிறேன்.

பெரியாரின் “பெண் ஏன் அடிமையானாள்?” என்ற நூலிற்கு ஒரு எளிய எடுத்துக்காட்டாக தோழர் ரஞ்சிதா அவர்களின் வாழ்வை மேற்கோள் காட்ட துணியலாமென்றே நினைக்கிறேன்.

தனது காதல்(கள்), கல்யாணம், விவாகரத்து, குழந்தை பிறப்பு குறித்த கருத்தாக்கம், படிப்பு, திறமைகள், தொழில், பயணம் மற்றும் நோய்மை வரை யாவற்றையும் நம்மை அருகில் அமர்த்தி கதை கூறும் தொனியிலேயே இந்நூலை படைத்துள்ளார்.‌ அது இந்நூலை நாம் எளிதில் அணுக உதவி செய்வதாகவே கருதுகிறேன்.

ஒரு பெண் காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை பைக்கில் பயணம் செய்கிறாள் என்று கேள்விப்பட்டால் அவளது பொருளாதார நிலை மற்றும் குடும்ப பிண்ணனியை பற்றியே இந்த ஊர் உலகம் பேசுவது இயல்பு. ஆனால் இப்பெண்ணின் பயண அனுபவங்கள் சற்றே வித்தியாசமானது என்பதே உண்மை.

தனது வாழ்வின் வழியே இன்றைய இளம் யுவதிகளுக்கு எளிய வாழ்க்கைப் பாடம் நிகழ்த்தி காட்டியதாகவே எண்ணுகிறேன். தென்கோடியில் ஏதோவோர் ஊரில் பிறந்து இன்று ஊர் பாஷை தெரியாத வட எல்லையில் சுயதொழில் செய்து வாழும் பெண்ணின் வாழ்க்கை எவ்வளவு அதிசயமிக்கது.

ஆணாதிக்க சமூகத்தின் குடும்ப முறைக்கு எதிரானதாக இப்பெண்ணின் வாழ்வு இருப்பதாகவே தோன்றுவது இயல்பு. இந்நூலின் எந்தவொரு இடத்திலும் தான் செய்வதே சரியென்றோ தனது கொள்கையே மேலானதென்றோ தன்னையே யாவரும் பின்பற்றினால் எல்லோரும் சந்தோஷமாக வாழலாமென்றோ கூறவில்லை என்பதே இந்நூலின் வெற்றி.

இது எனது வாழ்வு… இதில் நான் செய்த பிழைகள் இவை. இதனால் அடைந்த துயரங்கள் இவை. எதிர்பாராமல் வந்த வேதனைகளை நான் கடந்து வந்த பாதைகள் இவை. ஆதலால் இப்பொழுது நான் சொல்கிறேன்,” நானுமொரு சந்தோஷமான பெண்”.

“நீங்களும் உங்களுக்கு பிடித்த குடும்ப வாழ்வை, தொழிலை செய்து துணிவோடு வாழுங்கள் ; சந்தோஷமான பெண்ணாக வாழுங்கள்!” என்பதே தோழர் ரஞ்சிதாவின் வேண்டுகோளாக பாவிக்கிறேன்.

வெறுமனே தன்னம்பிக்கை கட்டுரைகளை வாசிப்பதை விட இதுபோன்ற எளிய மனிதர்களின் வாழ்வியல் மூலமாக தன்னம்பிக்கை பெறுவதே சாலச் சிறந்தது.

ஒரு கட்டத்தில் அழகான குடும்ப வாழ்வை இப்பெண் வலிந்து சீரழித்துவிட்டதோ என்ற எண்ணம் மேலிட்டது என்பதும் உண்மை. ஆனால் தான் விரும்பிய விரும்பும் வாழ்வை தமது விருப்பப்படி வாழ்வதே உண்மையான சந்தோஷம் என்பதை தெள்ளத்தெளிவாக தனது வாழ்வின் மூலம் தெளிவுபடுத்தியுள்ளார் தோழர் ரஞ்சிதா. வாழ்த்துகள் தோழர்.

பயணத்தின் மேன்மையை அது உண்டாக்கும் மன வலிமையை கொடுக்கும் உற்சாகம் மற்றும் உத்வேகத்தை தமது பயண அனுபவங்கள் வாயிலாக எடுத்தியம்பிய விதம் அலாதியானது. வீடு பற்றிய இவரது கனவு தனித்துவமானது.

SJS (STEVEN JHONSHON SYNDROME) நோயை பற்றிய அறிமுகம் மற்றும் புரிதலுக்கு இந்நூல் வழிவகுத்துள்ளது. செத்து பிழைத்தவள் தானே சந்தோஷத்தை உணர முடியுமென்பது மெய்யாகியுள்ளது. அதை பகிரவதன் மூலம் பலருக்கும் தன்னம்பிக்கை அளிக்கும் சுடராக ரஞ்சிதா அவர்கள் மிளிர்கிறார் என்பதே தனிச்சிறப்பு.

நேர்மறை எண்ணங்கொண்ட பெற்றோர் மற்றும் நண்பர்கள் கிட்டியது தோழருக்கு ஒரு வரப்பிரசாதமே… தோழரின் அம்மா அவர்களின் எளிய உரையின் வாயிலாக அம்மாவின் அன்பு புலனாகியது. இதுபோன்று எத்தனை அம்மாக்கள் இருப்பார்கள் என்று தெரியவில்லை.

பா.அசோக்குமார்

 

நூலின் பெயர் : உலகின் மற்றொரு சந்தோஷமான பெண்
ஆசிரியர் : ரஞ்சிதா
பதிப்பகம் : புத்தகக்கடை.காம்
பக்கங்கள்: 70
விலை : ₹.90

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்

 

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *