தமிழிலக்கிய வெளியில் இன்று மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்கான அறுவடைக்காலம் நிகழ்ந்து கொண்டிருக்கிறது. தாய்மொழியில் எழுதப்படும் இலக்கியங்களைவிட மொழிபெயர்ப்பு இலக்கியங்களுக்குப் பெரிதும் “மவுசு” கூடியிருக்கிறது என்றொரு கருத்து நிலவுகிறது. பதிப்பகத்தார் பலரும் இதை நோக்கிப் படையெடுப்பதைப் பார்த்தால் இந்தக் கருத்து மேலும் வலுப்பெறுகிறது. பரிச்சயமில்லாத புதுப்புது வெளிகளைத் தேடி அலையும் வாசகர்களின் உளவியல் தேவையை நிறைவேற்றிவைப்பதில் மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் முன்னே நிற்கின்றன என்பது ஒரு காரணமாக இருக்கலாம். மேலும் உலகமயமாதலுக்குப் பிறகு – உலகச் சுற்றுலா பிரமாண்டமாக வளர்ச்சி அடைந்த பிறகு – உலகிலுள்ள வெவ்வேறு நாட்டு மக்களின் பண்பாட்டு முறைமைகளையும் அவர்களின் வேறு வேறான உளவியல் கூறுகளையும் அறிந்து ஆனந்தம் அடையும் ஆவல் எல்லோருக்குள்ளும் பெரிய அளவில் திரண்டு கிடக்கிறது.
இந்தப் பேராவலுக்கு மொழிபெயர்ப்பு இலக்கியங்கள் அழகிய பெருந்தீனியாக அமைகின்றன. அதனால்தான் முன்பு எப்போதும் இல்லாத அளவிற்கு பிரிட்டன், அமெரிக்கா நாட்டு இலக்கியங்களில் இருந்து என்பது மட்டும் இல்லாமல் இலத்தீன் அமெரிக்கா, கொரியா, சீனா, ஜப்பான், ஆப்பிரிக்கா, இரஷ்யா, பிரான்சு, ஜெர்மன், துருக்கி, எகிப்து, சிங்களம் முதலிய பல்வேறு நாட்டு இலக்கியங்களில் இருந்தும் தமிழ் மொழிபெயர்ப்புக்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.
இப்படியான ஒரு போக்கில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புச் செய்து கொண்டிருப்பவராக பிரஞ்சுப் பேராசிரியர் சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகர் விளங்குகிறார். நேரடியாகப் பிரஞ்சு மொழியிலிருந்து நோபல் பரிசு பெற்ற நாவல் (லெ கிளெஸியோ-வின் Tempête) “சூறாவளி” உட்பட பல்வேறு குறிப்பிடத்தக்க புனைகதைகளையும், கவிதைகளையும் தமிழில் தந்துள்ள நாயகர், இங்கே 75 வயதான தஹர் பென் ஜெலூன் எழுதிய “லெ மரியாழ் தெ பிளெஸீர் (Le mariage de plaisir)” என்ற பிரஞ்சு நாவலை ‘உல்லாசத் திருமணம்’ என்ற தலைப்பில் தந்துள்ளார். ‘’மொழிபெயர்ப்பின் வலிமை அதன் எளிமைதான்’’ எனக் கருதும் நாயகர் (மொழியாக்கம் எனும் படைப்புக்கலை – பக்கம் 269) அதற்கேற்ப மிகவும் பரிச்சயமில்லாத ஆப்பிரிக்க இஸ்லாமியப் பின்னணியில் நிகழ்த்திக் காட்டப்படும் இந்த நாவலை எளிமையாகவும் அழகு குன்றாமலும் மொழிபெயர்த்துள்ளார்.
வடக்கு ஆப்பிரிக்க நாடான மொராக்கோ நாட்டின் முக்கிய நகரமான ‘தாஞ்சியரி’லும், அதன் பண்பாட்டுத் தலைநகரமான ‘ஃபேஸ்’ஸிலும் நாவல் மையம் கொண்டு பலவாறு விரிகிறது. அமீர் என்கிற மொராக்கோ நாட்டு, வெள்ளை நிற வணிகனின் வாழ்க்கைப் பாடுகளை மூன்று தலைமுறை என்கிற அளவிற்கு விரித்துப் பிரமாண்டமாக எடுத்துரைக்கிறார் கதை சொல்லி. லாலா ஃபாத்மா என்ற பெயருடைய வெள்ளைநிறப் பெண்மணியை அதிகாரப்பூர்வமான மனைவியாகக் கொண்ட அமீர், வணிக நிமித்தமாகக் சென்ற வேற்றுப் புலமான செனெகல் நாட்டிள்ள ‘நபூ’ என்கிற கருப்பு நிறப் பெண்னை அன்றைய வழக்கப்படி எந்தக் கட்டுப்பாட்டிற்குள்ளும் அடங்காத உல்லாசத் திருமணம் செய்து கொள்கிறான்; இது வணிகர்கள் சாதாரணமாகக் கடைப்பிடிக்கும் ஒரு வழக்கம்தான்; ஆனால் நபூ-வின் பண்பு நலன்களால் கவரப்பட்ட அமீர், வேலை முடிந்து ஊருக்குத் திரும்பும்போது அவளைத் தன்னோடு அழைத்து வந்து சட்டப்படி இரண்டாவது மனைவியாகவே ஆக்கிக்கொள்கிறான்.
இஸ்லாமிய சமயத்தில் நான்கு பெண்களைத் திருமணம் முடித்துக் கொள்ளலாம் என்ற முறைமை இருந்தாலும் கூட, இரண்டாவதாக ஒருத்தி வந்து ஒட்டிக் கொள்ளும்போது முதல் மனைவி லாலா ஃபாத்மா எப்படி எதிர்வினை ஆற்றுகிறாள்; அமீர் எப்படி எதிர் கொள்ளுகிறான் என்கிற ஒரு சிறு முடிச்சில் கருக்கொண்டு நாவல் பேருருவாக வடிவம் எடுக்கிறது. இரண்டாவதாக வந்த கறுப்பினப்பெண்ணை அவமானப்படுத்தும் பாங்கும் பில்லி, சூன்யம் வைத்து அவள் வாழ்வை அழித்தொழிக்க எடுக்கும் முயற்சியும் பாலியல் பொறாமை என்பதையும் தாண்டி நிறவெறி எந்த அளவிற்கு வன்மமாக மனத்தில் வடிவமெடுத்துக் கிடக்கிறது என்பதைக் கதைசொல்லி நுட்பமாகக் காட்சிப்படுத்திவிடுகிறார்.
நபூ – அமீர், ஆகியோரின் காதல் கதை போல நகரும் எடுத்துரைப்பின் அழகியல் பின்னணியில் மனிதர்களிடம் அகத்தில் கூடிக்கிடக்கும் வெறுப்பு, வஞ்சகம், குரூரம், அதிகாரவெறி, சூழ்ச்சி, கெட்ட எண்ணம் முதலிய அனைத்தையும் மொழியாடலுக்குள் கொண்டு வந்து விடுகிறார்; கூடவே புறத்தில் – சமூக வெளியில் – இயங்கும் மணிதத்தன்மை அற்ற அனைத்தையும் போகிற போக்கில் பதிவு செய்து விடுகிறார். மொராக்கோவைத் தன் காலனி நாடாக்கி அதன் வளத்தைச் சுரண்டி அட்டூழியம் புரியும் பிரான்சின் ஆக்ரமிப்பு மனப்பான்மையையும், அரசாங்க அதிகாரிகளின், காவல்துறைகளின், மதத் தலைவர்களின் ஈவு இரக்கமற்ற அதிகாரச் செயல்பாடுகளையும், மொராக்கோவின் ஒவ்வொரு நகரத்திலும் நகரத்திற்கே உரிய ஒர் இயல்பான குணம் போல உருவாகிக் கிடக்கும் ரெளடிகளின் சாம்ராஜ்ஜியத்தையும் அடிப்படைத் தேவைகளுக்காக உயிரைப் பணையம் வைத்தும் பூமிப்பரப்பு எங்கும் புலம் பெயர்ந்து வாழும் வாழ்வின் வலியையும், நகரத்தின் விளிம்பு நிலை மக்களின் அவலத்தையும் வாசகர் நெஞ்சிற்குள் சென்று சேரும்படிச் சொல்லிவிடுகிறார்.
வியாழக்கிழமை தோறும் ஆப்பிரிக்காவில் இருந்து கொண்டு வரப்பட்ட அடிமைகளை விற்கும் சந்தை ஏற்படுத்தப்பட்டு, அது எப்படி வாழ்வின் இயல்பான ஒன்றாக மாறி விட்டது என்பதையும் வெள்ளை நிறம் x கருப்பு நிறம் என்கிற நிறவேறுபாட்டு அரசியல் சமூகத்தில் கோலோச்சிய தன்மையையும் நாவல் மிக நுட்பமாகவும் மேன்மையான முறையிலும் எடுத்துரைத்து விடுகிறது. ஆப்பிரிக்க மக்கள் தங்களை “பீரங்கிகளுக்கான உணவு நாம்” என்று எண்ணிக் கொள்ளும் அளவிற்கு அவர்கள் உள்ளத்தாலும் ஊனமுறும் நிலைக்கு ஆக்கப்பட்டுவிட்ட மனிதக் கொடூரத்தைப் பதிவு செய்கிறது நாவல்.
நாவலின் தொடக்கத்தில் ‘கோஹா’ என்கிற கதை சொல்லி தோன்றி அவர்தான் இந்த அமீரின் கதையைச் சொல்லுவது போல ஆசிரியர் நாவலை உருவாக்கியுள்ளார்; அந்தக் கதை சொல்லி, கதை சொல்லத் தொடங்கும்போது, “என் கதைகளுக்குச் செவிமடுப்பவர்களே!” என்று அழைத்துக் கீழ்வருமாறு சொல்லுவாராம்:-
“எப்போதும் விருப்பங்களின் உச்சத்தில் வாழ்ந்தவன், மணல்மேடுகளின் அருகில் வளர்ந்தவன் சொல்லும் அறிவுரையினைக் கேளுங்கள். கெட்டவர்களாக இருக்கத் தயங்காதீர்கள்; கெட்டவர்களாக இருங்கள்… ஒரு போதும் சந்தேகப் பார்வையை நிறுத்தாதீர்கள், தீமை மீது பரிவு காட்டுங்கள்… கொடூரமாகவும் கெட்டவர்களாகவும் இருங்கள்; ஈவு இரக்கமற்றவர்களாக இருங்கள்… உங்களுக்கு ஆயுள் கூடும்; நீண்ட காலம் வாழ்வீர்கள்.”
இன்னொரு இடத்திலும் இரவு நேரம் மட்டும் பாம்பாக மாறிப் பேசும் பணியாள் ஒருவனும் இப்படித்தான் பேசுகிறான்:
“இந்தப் பைத்தியக்கார உலகில் தீய ஒழுக்கம் மட்டும் அதாவது பெருந்தீமை மட்டுமே வெல்ல முடியும்”.
இவ்வாறு தீமையின் வீச்சைப் பலவாறு நாவல் முழுவதும் சித்தரிக்கும் கதை சொல்லி, அமீர் – நபூ காதல் மூலம் நன்மை வெற்றி பெறும் இடத்தையும் விட்டுவிடாமல் படைத்துக் காட்டியுள்ளார். சாத்தானுக்கும் இறைவனுக்குமான போர்க்களம் ஓய்ந்தபாடில்லை; தீமை, அவ்வளவு வலுவானதாக இருக்கிறது.
எடுத்துரைப்பு என்கிற நோக்கில் இந்த நாவல் ஆசிரியர் எந்த விதமான சித்து வேலைப்பாடுகளும் சோதனை முயற்சிகளும் மேற்கொள்ளாமல் இயல்பான நடப்பியல் முறையில் எழுதிச் செல்வதன் மூலமாகவே நடப்பியல் அழகியலின் உச்சத்தைத் தொட்டுள்ளார்.
இந்த நாவலில் வரும் அமீரின் இளைய மகன் கரீம் மூளை வளர்ச்சி அடையாத அழகான பையன்; அவனை இந்த மனித வாழ்வின் ஒரு புதிராகப் படைத்துள்ளார் ஆசிரியர். பின்னால் நடக்க இருப்பதை முன்கூட்டியே சொல்பவனாகப் புதிரான ஆற்றல் ஒன்றைப் பெற்றவனாக விளங்குகிறான். இப்படி வாழ்வின் புதிர்ப்பாதைகள் நாவல் நெடுக்க வாசிக்கக் கிடைக்கின்றன. இந்த நாவலை வாசித்து முடித்த கணத்தில் அவன்தான் மனம் முழுக்க நிறைந்து நிற்கிறான். நாவலாசிரியர்க்கு அப்படியொரு மகன் உண்டு என்று அறிய நேர்ந்த போது இது ஒரு சுய புனைவு நாவல் என்று கொள்ளலாமோ எனத் தோன்றியது. எழுத்து என்பதே தன்னைப் பலவாறாக எழுதிப் பார்த்துக்கொள்வதுதான் போலும்.
இவ்வாறு இஸ்லாமிய வாழ்வின் பின்புலத்தில் சொல்லப்படும் இந்த நாவல், தமிழ் வாசகர்களுக்குள்ளும் தமிழ் எழுத்தாளர்களுக்குள்ளும் நின்று வினைபுரியும் என்பது உறுதி. இப்படியான ஒரு படைப்பைப் பிரஞ்சிலிருந்து நேரடியாகத் தமிழக்குள் கொண்டு வந்த சு.ஆ.வெங்கட சுப்புராய நாயகரையும் ‘தடாகம்’ பதிப்பகத்தாரையும் பாராட்டலாம்.
பேராசிரியர் க.பஞ்சாங்கம்,
புதுச்சேரி – 605 008.
நூல் விவரம்: தஹர்பென்ஜெலூன், உல்லாசத் திருமணம், (மொ.பு), சு.ஆ.வெங்கடசுப்புராய நாயகர், (2020) தடாகம் பதிப்பகம், சென்னை.
பக்.263. ,உருபா,300.