நூல் அறிமுகம்: உள்நாட்டு அகதிகள் – கார்த்தி டாவின்சிநூல்: உள்நாட்டு அகதிகள் (மூன்று மாநில கள ஆய்வு)
ஆசிரியர்: எம்.எஸ். செல்வராஜ், சங்கர் கோபாலகிருஷ்ணன், த்ரெபான் சிங் சௌஹான், ராமேந்திர குமார்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 70.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/ulnaatu-agathikal/

அகதிகள் என்றால் அறிவோம் ஆனால், உள்நாட்டு அகதிகள் என்றால் மேம்போக்காக கேட்பவர்களுக்கு புரிவது சிரமம். இருப்பினும் நூலின் தலைப்பின்படி, இந்தியாவிற்குள் வாழும் இந்தியர்களில் ஒரு சாரார் தங்களது சொந்த நாட்டுக்குள்ளேயே கதியற்றவர்களாக இருக்கிறார்கள். அவர்களுக்கு உழைக்க நிரந்தரமான வேலை இல்லை, உறைவதற்கு வீடில்லை இடமில்லை, உயிருக்கு எந்த உத்திரவாதமும் இல்லை. அநாதரவானவர்களின் கூட்டம் இந்தியாவிற்குள் இருக்க, அது நாளுக்கு நாள் கூடிக் கொண்டே இருக்க, இவர்களை நமது அரசுகளும் கண்டும் காணாமலிருக்க, பொது மக்களாகிய நாமும்கூட அவர்களை கண்டும் காணாமல்தான் இருக்கிறோம் என்பதே உண்மை. நமது தேவைக்கு மட்டும் அவர்களது உழைப்பை வாங்கிக் கொண்டு விட்டு விடுகிறோம். ஆனால் அவர்களுக்கோ அடுத்தவர்கள் வேலை வழங்கும்வரை கதியற்றவர்களாகவே இருக்க வேண்டும். இப்படி மாறி மாறி பலரால் தேவைக்கு மட்டும் பயன்படுத்தப்படும் இந்த கதியற்றவர்களெல்லாம் யார்.?

இவர்கள் பெரும்பாலும் தலித்துகள்தான், ஆக, இந்துக்களே அதிகமாக இருக்கின்றனர். இவர்களில் பெரும்பாலோர் கட்டிடத் தொழிலாளர்களாக இருக்கிறார்கள். அதையொட்டிய மற்றத் தொழில்களிலும் ஈடுபடுகின்றனர்.

சரி, யார் இவர்கள்.? இவர்களெல்லாம் அவர்களது சொந்த ஊரில் விவசாயிகளாகவோ, விவசாயக் கூலிகளாகவோ, கிராம பொருளாதாரம் பாதிக்கப்பட்ட ஊரார்களாகவோ இருக்கின்றனர். மாதத்திற்கு 5000 கூட சம்பாதிக்க முடியாத நிலைமையில் வாழும் விவசாயிகள் இவர்கள். இதில் தமிழகத்தில் மிக மிக மோசமான நிலை மாதத்திற்கு 2000 வரை கூட வருமானம் ஈட்ட முடியாமல் விவசாயிகள் தவிக்கின்ற நிலை உள்ளது. வாழ்வதற்கான ஆதாரங்கள் ஏதுமற்று, வாழ்வில் தன்னிறைவை அடைய வேறு வழி இருக்கிறதா என்று இடம் பெயர்ந்து வந்த இந்த மாதிரியான மக்களையே ‘உள்நாட்டு அகதிகள்’ என்ற வரையறையில் வைத்து பார்க்க முடியும். ஆக, டேராடூன், தமிழ்நாடு, டெல்லி ஆகிய மூன்று மாநிலங்களின் உழைப்பாளர்களிடம் ‘ஸ்நோபால்’ என்ற ஆய்வை மேற்கொண்டனர்.
இப்படி இந்தியா முழுக்க அநாதரவாக இருப்பவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வுகளின் முடிவில் பல உண்மைகள் தெரிய வந்துள்ளன.1. கடந்த 20 ஆண்டுகளில் மட்டும் புலம்பெயர்ந்த நாள்கூலி தொழிலாளர்கள் அதிகமாக உருவாகியிருக்கிறார்கள். உதாரணமாக, தமிழகத்தில் மட்டும் 10 லட்சத்திற்கும் அதிகமான வடநாட்டினர் வேலைக்கு வந்திருப்பதாக அரசு ஆய்வறிக்கை சொல்கிறது. ‘பெரும் எண்ணிக்கையிலானவர்கள் இடம் மாறிச் செல்வது குடிபெயரும். தொழிலாளர் சமூகத்தின் அரசியல் தன்மையைக் கடுமையாக பாதிக்கிறது.’ (ப 26).

2. இந்திய சட்டத்தின் படி, புலம் பெயர்ந்து நீண்ட நாட்கள் ஆனவர்களையே ‘புலம் பெயர்ந்தவர்கள்’ என்று அரசாங்கம் கணக்கெடுக்கிறது. ஆனால் ஒரு எடுத்துக்காட்டை ஒரு புள்ளி விவரத்தில் இருந்து எடுத்துக் காட்டப் பட்டிருக்கிறது. ‘சில குறிப்பிட்ட காலகட்டத்தில் ஆண்டுக்கு 10 கோடி தொழிலாளர்கள் குடி பெயர்கிறார்கள்.’ (ப 27)

3. உழைப்பது, அதன்மூலம் வருவாய் வருவாயின் மூலம் அங்கேயே சொந்த வீட்டை உருவாக்கி தங்குவது. இம்மூன்றும் இவர்களின் முன்னேற்றப் படிநிலை. ஆனால் இவர்களில் பெரும்பாலானோர் இந்த மூன்றாம் நிலையை அடைவதே இல்லை.

இப்படியே குடி இடம்பெயரும் பல தொழிலாளர்களின் நலனுக்காக 1979இல் வேலைவாய்ப்பு மற்றும் சேவைகள் ஒழுங்குமுறை சட்டம் இயற்றப்பட்டது. இந்த சட்டம் பெரும்பாலும் பயன்படுத்தப்படாத அல்லது பலனில்லாத சட்டங்கள் ஆகவே இருக்கின்றன. ஒப்பந்த முறையில் ஒரு துறையை ஒரு நிறுவனத்தால் அழைத்து வரப்படும் தொழிலாளர்களுக்கு மட்டுமே இந்த சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். தன்னிச்சையாக வேலைத் தேடி வருபவர்களுக்கு இந்த சட்டம் பயன்படுவதில்லை. இச்சட்டத்தின்படி வாரத்திற்கு 48 மணி நேரம் மட்டுமே வேலை. சட்டப்படியான குறைந்தபட்ச ஊதியம். பணியிடங்களில் உணவகம், கழிவறைகள், குழந்தைகள் காப்பகம், பாதுகாப்பு உபகரணங்கள் போன்ற அடிப்படை வசதிகள் செய்து தரப்பட வேண்டும் என்பது சட்ட விதி. ஆனால் நிறைய இடங்களில் இந்த சட்ட விதிகள் பின்பற்றப்படுவதில்லை.

தொழிலாளர் நல வாரியங்கள் பற்றிய முழுமையான புரிதலின்றியே, பல உழைப்பாளர்கள் இருக்கின்றனர். உதாரணமாக, ‘தொழிலாளர் நலத்துறையினரிடம் இருந்து உரிமைகள் மறுக்கப்பட்டாலும் கட்டுமான தொழிலாளர் சட்டத்தின் கீழ் வழங்கப்படும் பொதுநல திட்டங்களை பெறும் உரிமைகள் இந்தத் தொழிலாளர்களுக்கு உண்டு. குடி பெயர்ந்த தொழிலாளர்களில் ஒருவர் இறந்து விட்டால், அவரது வாரிசுக்கு இழப்பீடு வழங்கும் சட்டத்தை பீகார் அரசு பின்பற்றுகிறது. ஆனால் இதுபற்றி டேராடூனில் உள்ள அதிகாரிக்கு எதுவும் தெரியவில்லை. தமிழகத்தில் சந்தித்த தொழிலாளர்களுக்கு தொழிலாளர் நலத்துறை என்று இருப்பதே தெரியவில்லை.’ (ப 41)இவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவது சிரமம், பொது வினியோக திட்டத்தின்படி உணவுக்கு சிரமம். சுகாதார திட்டங்களில் இடம்பெயர்ந்தவர்களுக்கு என சில சலுகைகளை அரசுகள் செயல்படுத்துகின்றன. ஆனால் எதிர்பாராத நேரத்தில் ஏற்படும் இக்கட்டான நிலைதான் அவர்களை மருத்துவ உதவிகள் கிடைக்கப் பெறாமல் தடுக்கிறது. இப்படியே பலர் பாதுகாப்பற்ற பொருளாதார நிலையிலேயே வாழ்கின்றனர்.

இவர்களுக்கு வீட்டு வசதியில், கூலியில், மொழியினால், போலீசால் என பலவகைகளில் பாகுபாடு நிகழ்கின்றது. செல்லும் இடமெங்கும் பாகுபாடு நிறைந்திருந்தால் தான் சாதாரண மனிதனைவிட கீழ்த்தரமாக நடத்தப்படுவதை தன்மீது சுமத்துப்படும் பெரும் சுமையாக அனுபவிக்கின்றனர். இதன் விளைவாக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சிலருக்கு ஓர் இலக்காக மாறுகின்றனர். அவர்கள் மொழியினால் முற்றிலும் விடுபடும்போது மாநிலத்தின் இனவாத அமைப்புகளுக்கும் அரசியலவாதிகளுக்கும் இலக்காக ஆகிவிடுகின்றனர். இன்றைய நிலவரப்படி, தமிழ்நாட்டின் அரசு பணியிடங்களில் மற்ற மாநிலத்தவர்கள் பணியாளர்களாக அமர்ந்துவிடும் சூழல் நிலவுகிறது. அவர்களுக்கு மொழி பெரும்தடையாக இருக்கிறது. ஆனால் அதையெல்லாம் அரசு பணியால் வரும் பொருளாதாரம் கவனத்திலிருந்து பின்தள்ளிவிடும். அரசுபணியிலல்லாத, இடம்பெயர்ந்த தொழிலாளிக்கு இப்படி எந்த பொருளாதார, பணி பாதுகாப்புமே இல்லாதபோது ஏற்படும் பெரும் ஏமாற்றம் அவர்களை பல்வேறு இன்னல்களுக்கு ஆளாக்குகின்றன. ஒவ்வொருவேளை தமிழகத்தின் அரசு பணியிடங்கள் தமிழ்களுக்கே உரியது என்று சட்டம் இயற்றப்பட்டால் அதைத் தொடர்ந்து அரசு பணியாளர்களாக இன்று உள்ள மற்ற மாநிலத்தவர்கள் பாதிக்கப்படுவார்கள். இதை கவனத்தில் கொள்ளாமல் ஆளும் அரசு தமிழர்களுக்கு துரோகம் இழைத்திருக்கிறது. மேலும் தமிழக படித்த பட்டதாரி இளைஞர்களுக்கான அரசு பணியிடங்களை நிரப்பாமலும், அவர்களின் வயதை, உழைப்பை, நேரத்தை பயன்படுத்தாமலும் விட்டிருக்கிறது. இதனால் இயங்க உழைத்து இயங்கவொரு பணியில்லாமல் கோடிக்கணக்காண இளைஞர்கள் நிர்கதியாக நிற்கின்றனர். இவர்களுக்கே இப்படியானால், எந்த அநாதரவுமற்ற, குடிபெயர்ந்த ஏழைத் தொழிலாளர்களுக்கு என்னென்ன நிகழுமோ என்று ஊகிக்க முடியவில்லை.

பாகுபாடுகள் எப்படி நிகழ்கிறதோ அதேப்போல ஒடுக்கு முறைகளும் நிகழ்கின்றன. உதாரணமாக, ‘ டில்லிக்கு குடிபெயர்ந்து வந்தவர்களால்தான் கற்பழிப்புகள் அதிகமாகிவிட்டன என்பது டெல்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் பிரபலமான வார்த்தை. எனவே டில்லியிலுள்ள தொழிலாளர்களும் பாரபட்சம் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர்.’ (ப 58)

இப்படி சொன்னால் ஒட்டுமொத்த இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் மீதும் பொது மக்களிடம் ஒரு இழிபார்வை உருவாகும். இதுவும் தீண்டாமையின் வடிவங்களில் ஒன்றாக அமைகின்றது. இந்த எண்ணத்தை பொதுமக்களின் மனங்களிலிருந்து மாற்றுவதுதான் சிரமமான காரியம். எவ்வளவு தான் உண்மையாக நேர்மையாக அவர்கள் உழைத்தாலும் கூட, மக்களிடம் உள்ள அந்த இழிபார்வை அகலாது. ஆக, அரசுகள் இப்படி இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மிக மோசமான அரசியல், சமூக சூழல்களை உருவாக்குகின்றன.அந்த ஷீலா தீட்சித்தின் எண்ணம் அரசு பணியாளராக வெளிப்பட்ட சொற்கள் அல்ல, தனிநபர் ஒருவரின் தனிப்பட்ட கருத்தை அரசு அதிகாரத்துடன் செயல்படுத்துவதாகும். அப்படியானால் மக்களைக் காக்கவே அரசு என்ற அடிப்படையே தகர்ந்துவிடுகிறதே..!

குடிபெயர்ந்த தொழிலாளர் மட்டும் மக்கள் இல்லையா.? அவர்களையும் பாதுகாக்க அரசு செயல்படாதா.? இடம்பெயர்ந்தவர்களால் குற்றங்கள் பெருகுகிறது என்ற கருத்தால் எத்தனைப்பேர் பாதிக்கப்படுவார்க்ள் என்பது அவர்களுக்கு தெரிவில்லையா.? இப்படி ஏராளமான கேள்விகள் எழுகின்றன. இப்படியெல்லாம் இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு எதிராக அணி திரட்டுவதையும் இந்நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது. அரசுதுறையினர்களே இப்படி அணியாகும்போது அநாதரவானவர்களால் என்ன செய்ய இயலும். முழு அதிகாரப் பசிக்கும் பலியாவார்கள்.

இந்த அடக்குமுறையைப் பற்றி எந்த அறிவும் இல்லாமலேயே இந்த தொழிலாளர்கள் இருக்கின்றனர். பணியும் அதற்கான கூலியும் மட்டுமே பாதுகாப்பு என்று கருதுகின்றனர். அப்படி இருக்க, பாதுகாப்பு எனுறால் என்ன என்பதே இவர்களக்கு இன்னும் முழுமையாக தெரியவில்லை. இது வருத்தத்திற்குறிய ஒன்று.
‘குடிபெயர்ந்த தொழிலாளர்களை சுரண்டுவதற்கான கட்டமைப்புகளை உருவாக்குவதில் மாநிலங்கள் பெரும்பங்கு வகிக்கின்றன.’ (ப 65)

அதாவது எப்படியெல்லாம் சுரண்டுகின்றன என்று ஒரு அட்டவணையே தருகிறது இந்நூல். காலந்தாழ்த்தி கூலி கொடுப்பதும் கூலியை எந்த ஆதாரமுமின்றி ஏமாற்றுவதும், தராமல் இழுத்தடிப்பதும்கூட குற்றம்தான் என்று சொல்லி சட்டபடி எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாதபடிக்கான அளவில்தான் இங்கு சட்டங்கள் இருக்கின்றன. அவற்றைப்பற்றியும் இந்நூல் கூறுகிறது.

சரி,.. இவ்வளவு பிரச்சனைகளுக்கும் தீர்வு என்ன..? அதையும் இந்நூலில் படிப்படியாக விளக்கியிருக்கின்றனர்.இதற்கு அரசியல் கொள்கையில் பெரும் மாற்றம் கொண்டுவர வேண்டியிருக்கிறது. ஏனெனில், இந்த அதீத சுரண்டல்களுக்கு அரசியலே காரணம் என்று வெளிப்படையாக உடைத்நுவிட்டது இந்நூல். ஆக, இந்த மக்களை உள்நாட்டு அகதிகள் என்ற நிலையிலேயே வைத்திருக்கும் இந்திய அரசாங்கம் இனிமேலாவது இவர்களுக்கான நன்மைகளை செய்ய வேண்டும் என்பதே இந்நூலின் கோரிக்கை..

– கார்த்தி டாவின்சி.
சேலம்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)