உமையவனின் ‘மந்திரச் செருப்பு’ இளையோர் குறுநாவல் புத்தகம் | Umaiyavan's Manthira Seruppu Tamil Book Review | விஜி ரவி | www.bookday.in

உமையவனின் ‘மந்திரச் செருப்பு’ இளையோர் குறுநாவல் – நூல் அறிமுகம்

‘மந்திரச் செருப்பு’ இளையோர் குறுநாவல் – நூல் அறிமுகம்

நகர்ப்புறப் பள்ளிகளில் படிக்கும் சிறுவர்களும் சிறுமிகளும் சீருடையுடன், கால்களில் பளபளப்பான ஷூக்கள் அணிந்து கொண்டு மிடுக்காக பள்ளிக்குப் போவார்கள். ஆனால் கிராமப்புறங்களில் வசிக்கும் எளிய குடும்பத்துப் பிள்ளைகளுக்கு காலில் போடும் செருப்பு கூட ஒரு கனவுதான்.

1990-களின் முற்பகுதியில் வாழ்ந்த ஒரு கிராமத்துச் சிறுவன் முகிலன். ஒரு செருப்புக்காக அந்த சிறுவன் படுகின்ற பாட்டையும், அவன் ஆசைப்பட்ட செருப்பு அவனுக்குக் கிடைத்த பின்பு அவனது வாழ்வில் என்னவெல்லாம் மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பது பற்றியும் மிக அழகாக ‘மந்திரச் செருப்பு’ என்கிற குறுநாவலில் ஒரு கதையாகச் சொல்லியிருக்கிறார் ஆசிரியர் உமையவன்.

உமையவன் கவிஞர், எழுத்தாளர், இதழாசிரியர், உரையாசிரியர், பதிப்பாசிரியர் என பன்முகம் கொண்ட படைப்பாளி. இவர் சிறுவர்களுக்காக நிறையக் கதைகளையும், பாடல்களையும் புத்தகங்களையும் எழுதியிருக்கிறார். ‘மந்திரச் செருப்பு’ இவரது முதல் குறுநாவல் ஆகும்.

முகிலன் ஐந்தாம் வகுப்பு படிக்கும் ஒரு சிறுவன். கிராமத்தில் தனது பெற்றோர்களுடன் வசித்து வருகிறான். அவனது பள்ளி பக்கத்து ஊரில் இருக்கிறது. பள்ளி நேரம் போக வீட்டில் இருக்கும்போது அம்மாவிற்கு வீட்டு வேலைகளில் உதவுவான்.

தினமும் பேருந்தில் பள்ளிக்குச் சென்று வருவான். அவனுடைய அப்பாவிடம் ஒரே ஒரு சைக்கிள் மட்டுமே இருக்கிறது. வீட்டில் வேறு வாகனங்கள் இல்லை. தினமும் பள்ளிக்குப் போகும்போது பேருந்துக் கட்டணத்தை அப்பா தருவார். சில சமயங்களில் அவரிடம் பணம் இல்லாதபோது, முகிலன் நடந்தே பள்ளிக்குப் போக வேண்டிய சூழல் ஏற்படும்.

அவனுக்கு நடந்து செல்வதிலெல்லாம் எந்தத் தயக்கமோ அல்லது சிரமமோ இல்லை. ஆனால், வெறும் கால்களுடன் நடந்து போக வேண்டும் என்பதுதான் அவனுக்குச் சிரமமாக இருக்கிறது. ஏனென்றால், அவனிடம் செருப்பு இல்லை. அதை வாங்கப் போதுமான பணமும் இல்லை.

சிறுவனாகிய அவனுடைய பாதங்கள் கல்லிலும் மண்ணிலும் நடந்து செல்லும்போது வலிக்கும். அதனால் ஒரு செருப்பு வாங்க வேண்டும் என்பது அவனுடைய நீண்ட நாள் ஆசையாக இருந்தது. கூடவே ஓர் இங்க் பேனா வாங்க வேண்டும் என்றும் ஆசைப்படுகிறான். ஆனால்  பேனாவை விட செருப்பு வாங்க வேண்டும் என்பதே அவனுடைய முதன்மையான ஆசையாக இருந்தது.

கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேகரித்து பக்கத்துச் சந்தையில் ஒரு நாள் செருப்பு வாங்கப் போகிறான். ஆனால், பணம் போதுமானதாக இல்லை. அவனுக்கு மிகவும் வருத்தமாகிவிடுகிறது. ‘என்ன செய்யலாம்?’ என்று யோசிக்கிறான். பள்ளிக்குப் போக வர அப்பா தரும் பணத்தைச் சேமிக்க ஆரம்பிக்கிறான். அத்துடன் வீட்டில் இருக்கும் வேப்ப மரத்திலிருந்து உதிரும் வேப்பம்பழங்களைச் சேகரித்து, அதையும் கடையில் போட்டு பணம் வாங்கிக் கொள்கிறான். இப்போது செருப்பு வாங்க அவனுக்குப் பணம் கிடைத்துவிடுகிறது.

அடுத்த வாரச் சந்தையில் அவன் மிகவும் ஆசைப்பட்ட அந்தச் செருப்பை வாங்கிக் கொள்கிறான். அதைப் போட்டு நடக்கும்போது இந்த உலகமே அவனுக்குப் புதியதாகத் தெரிகிறது. நடையில் ஒரு கம்பீரமும் நிமிர்வும் ஏற்படுகிறது. மிக ஆனந்தமாக நடந்து வீட்டிற்கு வருகிறான். இப்போது அவனுடைய கால்களில் வலியே தெரியவில்லை.

ஆச்சரியம் என்னவென்றால், அந்தச் செருப்பு சாதாரணச் செருப்பு அல்ல; மந்திரச் செருப்பு! அதை அடுத்த நாள் அறிந்துகொள்கிறான். எந்த இடத்திற்குப் அவன் போக வேண்டும் என்று நினைக்கிறானோ, அந்த இடத்திற்கு அடுத்த நொடியில் அவனைக் கொண்டு சேர்த்துவிடுகிறது அந்தச் செருப்பு. நீண்ட நாள் பார்க்காமல் இருந்த நண்பனைப் போய் பார்க்கிறான் மந்திரச் செருப்பின் உதவியோடு.

அவனுக்குக் காட்டுக்குள் நுழைந்து பார்க்க வேண்டும் என்று ஆசை எழுகிறது. அதிலும் சிங்கம், புலி போன்ற மிருகங்களை அருகில் இருந்து பார்க்க வேண்டும் என்பது அவனுக்கு நீண்ட நாள் ஆசை. ஒரு நாள் இரவு அவனுடைய அப்பாவின் சட்டையை எடுத்து அணிந்துகொண்டு, மந்திரச் செருப்பின் உதவியால் காட்டிற்கு வருகிறான்.

காடு மிகப் பிரம்மாண்டமாக இருக்கிறது. யானையை அருகில் பார்க்கிறான். அதனுடைய பெரிய உருவம் அச்சமூட்டுவதாக இருக்கிறது. தான் மலைப்பாம்பின் மீது நின்று கொண்டிருப்பதைப் பார்த்து அலறுகிறான். புலியை மிக அருகில் பார்த்துப் பயந்து போகிறான். புலியால் அவனுக்கு ஆபத்து நேர்ந்ததா?

சில நாட்கள் கழித்து மந்திர சக்தி வாய்ந்த செருப்பு காணாமல் போகிறது. அதைத் தேடி காடு மேடெல்லாம் அலைகிறான். அவனுக்கு அந்த மந்திரச் செருப்பு மீண்டும் கிடைத்ததா? காட்டில் தொலைத்த சைக்கிள் சாவியை எடுத்தானா? என்கிற ‘சஸ்பென்ஸ்’ உடன் கதை முடிகிறது.

இந்தக் குறுநாவலில் மொத்தம் நான்கு அத்தியாயங்கள் உள்ளன. மிகவும் விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் கதையின் நடை இருக்கிறது. அருமையான படங்களும் ஒவ்வொரு அத்தியாயத்திலும் உள்ளன. கிராமத்து வாழ்க்கையைக் கண்முன்னே கொண்டுவருகிறார் ஆசிரியர். முகிலன் காட்டுக்குப் போகும்போது நாமும் காட்டுக்குள்ளே போய் அதன் அழகை ரசிக்க முடிகிறது.

இந்த நூலின் முதல் பகுதியை மட்டுமே நிறைவு செய்திருக்கிறார் ஆசிரியர். இரண்டாம் பகுதியைச் சிறுவர்கள் எழுதலாம்’ என்று தன்னுடைய முன்னுரையில் சொல்கிறார். இதனுடைய இரண்டாம் பதிப்பு விரைவில் வெளிவர வேண்டும் என்கிற ஆவலை இந்தக் கதை தூண்டுகிறது. சிறுவர்கள் அவசியம் வாசிக்க வேண்டிய அருமையான குறுநாவல் ‘மந்திரச் செருப்பு’.

📚 நூலின் விவரங்கள்:

தலைப்புவிவரம்
நூலின் பெயர்:‘மந்திரச் செருப்பு’ இளையோர் குறுநாவல்
ஆசிரியர்:உமையவன்
வெளியீடு:பயில் பதிப்பகம்
விலை:₹.66
அறிமுகம் எழுதியவர்:  

✍🏻 விஜி ரவி, ஈரோடு.

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *