கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “தித்திக்கும் தென்றல்!” புத்தகம் | Umayal Meenakshi Sundaram's Thithikum Thendral Tamil Book Review | Popular Book Reviews | www.bookday.in

கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரம் எழுதிய “தித்திக்கும் தென்றல்!” – நூல் அறிமுகம்

கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரத்தின் நான்காவது கவிதைத் தொகுப்பு 2023 ஆம் ஆண்டில் `படி வெளியீடாக’ வெளியான `தென்றல் காற்றே’ என்கிற கவிதைத் தொகுப்பாகும். இதற்கு முன்பாக இவர் மூன்று முத்தான படைப்புகளை – ஆழ்மனதின் ஆசைகள், கருவாச்சி காதல், மெளன மொழி – படைத்துள்ளார்.

அயலகத்தில் வாழ்ந்தாலும் இவர் தமிழ் மொழி மீது கொண்டிருக்கும் ஆர்வம் இவரது கவிதைத் தொகுப்புகளில் தொடர்ந்து வெளியாகி வருகிறது. இத் தொகுப்பில் காதல், இயற்கை, சுற்றுச்சூழல், கல்வி, பெண்ணியம், மொழி என பலவகையான தலைப்புகளில் 175 கவிதைகளை எழுதியிருக்கிறார்.

இதில் இடம் பெற்றிருக்கும் ஒவ்வொரு கவிதையும் ரசிக்கத் தக்கது. அதில் எதைச் சொல்வது, எதை விடுவது? இருப்பினும் ஒரு சிலவற்றை மட்டும் இங்கு குறிப்பிடுகிறேன்.

தமிழ் மொழி பற்றி பற்றி பல கவிதைகள் இந்நூலில் இடம் பெற்றிருந்தாலும் `என்னுள்ளே தமிழாய்!!’ என்கிற கவிதையில் தமிழை அவர் எழுத்தாய், ஏகாந்தமாய், காதலாய், காற்றாய், புன்னகையாய், முதல்வனாய், முத்தமிழாய், சங்கமமாய், சிலையாய், வெண்ணிலவாய், பிம்பமாய், கன்னியாய், எட்டுத்தொகை அறியாவிட்டாலும், எசைப்பாட்டு படிக்காவிட்டாலும் எழுச்சியாய் தன்னுள்ளே வைத்திருப்பதாகக் குறிப்பிட்டிருக்கிறார்.

அடுத்து மச்சான் ஆகப் போகிறவனின் வரவை எதிர்நோக்கி இருக்கும் காதலி

`ஒத்தமரமா நிக்குறேனே மச்சானே;
ஒத்திகையப் பார்ப்பதெப்ப மச்சானே;
ஒத்தமனமா வாழ்வதெப்ப மச்சானே;
ஒத்திவைச்ச ஆசையிங்க மச்சானே!

மூணுமுடிச்சி போடுவீங்கன்னு மச்சானே;
மூணுமாசமா காத்திருக்கே மச்சானே;

வானமும் பூமியும் சாட்சியாக வாழ்வதெப்ப மச்சானே! என்று தன் மச்சானுக்காக ஏங்கும் காதலியின் ஏக்கக் கவிதை வாசிக்கும் வாசகர்களையும் அவளோடு சேர்ந்த அவளுக்காக ஏங்க வைக்கும்.

நூலாசியர் பகுத்தறிவையும் விடவில்லை. `அன்றும் – இன்றும்’ எனும் தலைப்பின் கீழ்

அன்று….
பகுத்தறிவு கற்றிடவே பள்ளி சென்றோம்
பயின்ற பாடமெல்லாம் கேள்வி ஞானமானது!

எட்டாத அறிவியலையும் வியந்து பயின்றோம்
எல்லோரும் ஒரே இனமென்று கற்றோம்!

இப்படியாகச் செல்லும் இக்கவிதை

சட்டத்தின் கீழ் அனைவரும் சமமென்றோம்;
சத்துணவுக்காகவே பள்ளி சென்று படித்தோம்!

தலைமுறை தழைக்கவே தன்மானத்தோடு பயின்றோம்
தன்னலமற்ற அறிஞர்களால் தளர்வின்றி கற்றோம்! என்று அன்றைய நிலைமையை உரத்து உரைக்கும் நூலாசிரியர் இன்றைய நிலைமையை எடுத்துரைக்கும்போது

பால்மனம் மாறாக் குழந்தையைப் பள்ளிக்கு அனுப்பினோம்
பாசத்தை காட்டாது பாடத்தைப் புகட்டினோம்!

தனியார் பள்ளியில் குழந்தையை தள்ளினோம்
தரமில்லா கல்வியை கற்றிட பணத்தைக் கொட்டினோம்!

ஏரோட்டத்தை விடுத்து கணினியை பிடித்தோம்
ஏர் உழும் உழவனை மதிக்க மறந்தோம்!

ஐயனாரை இன்று யாரென்று கேட்டோம்
ஐப்பில் டவரை செல்பியில் பிடித்தோம்!

இப்படியாகச் செல்லும் இக்கவிதை

அன்றும்-இன்றும் நாமாக இருப்போம்
அச்சமின்றி தன்னம்பிக்கையோடு வாழ்வோம்
அறத்தோடு வாழ்ந்து சிறந்திடுவோம்! என முடிகிறது. ஆக, காலங்கள் மாறினாலும் காட்சிகள் மாறினாலும் அறமும், தன்னம்பிக்கையும், தன்மானமும் ஒருவர் வாழ்க்கையின் முக்கியக் கூறுகள் என்பதை அழுத்தாமாகவே சொல்லிச் செல்கிறார்/

`வான் புகழ் கொண்ட தமிழ்’ எனும் தலைப்பில் உயிரான தமிழை உயிரெழுத்தில் எழுத முயன்றிருக்கிறார். இக்கவிதை `அ’ வில் ஆரம்பித்து `ஒள’-வில் முடிகிறது. நல்லதொரு முயற்சி. 28 வரிகளில் கவிதையும் சிறப்பாக இருக்கிறது.

சுற்றுச்சூழல் குறித்தும், தொழில் அபிவிருத்தி என்கிற பெயரில் இயற்கை வளங்களைச் சுரண்டுவது குறித்தும் `விழிப்படைவாய் மனிதா!!” எனும் தலைப்பில் தனது ஆதங்கத்தையும், கவலையையும், சினத்தையும் கொட்டியிருக்கிறார்.

வெய்யோனின் கதிர்வீச்சால் வெப்பமாகும் புவியிங்கே
குய்யோ முறையோவெனக் குரலிட்டால் குளிர்ந்திடுமோ?
வானுயர்ந்த மரமெல்லாம் தரிசானதிங்கே
விளைநிலங்கள் தொழிற்சாலைகளாகிப் போனதிங்கே!.

`ஆற்றுப்படுகையெல்லாம் அள்ளி மணலெடுத்து….

`கருவேலங் காடெல்லாம் கண்டபடி வளர்ந்திடவே…

`அவசரகதி உலகிலே ஆளுக்கொரு வாகனந்தான்
புகையால் நிரம்பிய பூமியிங்கு வெந்திடுதே….

`காசுபணம் நிரம்பிவிட்டால் கண்மூடும் அரசாங்கம்
கழிவுகளின் மேலாண்மை காகிதத்தில் மட்டுமே….

`ஊழலே வாடிக்கையாகி நேர்மை மலிந்து….’ என்று இன்றைய நிலை கண்டு வெகுண்டு எழுகிறார் கவிதாயினி.

தமிழர்களுக்கும் `போதையில் லகித்திருந்தது போதும்; போராடி வரலாற்றில் இடம்பெற்றிட; போராடும் குணத்தை கையிலெடுத்து – அங்கே; போர்க்குணம் கொண்டு புறப்படுடா! என்று தமிழர்களை விழித்துக் கொள்ளும்படி அறைகூவல் விட்டிருக்கிறார்.

`கல்வி சமத்துவம் கானல்நீரா?’ எனக் கேட்கும் நூலாசிரியார் `உழவனின் குரலா’கவும் ஒலிக்கிறார்.

பெண்களைப் பொங்கியெழு என்கிறார். `விழிப்படைவாய் மனிதா!!’ கவிதையே சில பக்கங்கள் கழித்து ”புதுமை படைப்போம்!!” கவிதையாக சில வரிகள் வித்தியாசத்தோடு மலர்ந்திருக்கிறது.

`எதில் புதுமை படைக்கப் போகிறோம்…?
பேச்சிலா? எழுத்திலா? கவிதையிலா?
விவசாயித்திலா? விஞ்ஞானத்திலா?
ஊழலிலா? ஆலைகளிலா?
எதுவாகிலும் மனிதன் புனிதனாகிட
இன்றே புதுமைப் படைத்திடுவோம்!’

என அனைவரையும் அவசரப்படுத்துகிறார்.

சுற்றுச்சூழல் சம்பந்தமாக இன்னொரு கவிதை `வெட்டப்பட்ட மரங்கள் பேசினால்!! என்ன பேசும். இக்கவிதையின் முடிவில்,

எல்லோருக்கும் எல்லாமுமாய் இருந்தவனும் நான்தான் –
இன்று இல்லாமல் போனவனும் நான்தான்..!!
நான் செய்த பாவமொன்றே…
மனித பாம்பிற்கும் பாலூற்றி காத்தேனே!

இது உண்மைதானோ? என எண்ணத் தோன்றுகிறது.

சிந்தனையின் எழுச்சியான இவரது கவிதைகள் பலவும் நிகழ்கால பிரச்சினைகள் குறித்து காத்திரமாகப் பேசுகின்றன.

இந்நூலை `படி வெளியீடு’ அனைவரும் `படி’க்கும்படி மிகவும் சிறப்பாக வடிவமைத்திருக்கிறது. `தென்றல் காற்றே’ வாசிக்கையில் தென்றலை உணர்வதோடு இன்னும் இது போல பல கவிதை நூல்களை இவர் எழுத வேண்டுமெனவும் நினைக்கத் தோன்றுமென்பதில் ஐயமில்லை.

நல்லதொரு வாசிப்பனுபவம்!!

கவிதாயினி உமையாளுக்கு அவர் எழுதியிருக்கும் ஒரு கவிதையின் தலைப்பு போல `எழுத்து ஒரு வரமாக’ அமைந்திருக்கிறது. அதைத் தமிழ்கூறு நல்லுலகுக்கு தொடர்ந்து வழங்க வேண்டும். வழங்குவார் என நம்புவோம்!!

📚 நூலின் விவரங்கள்:

தலைப்பு விவரம்
நூலின் பெயர்: தித்திக்கும் தென்றல்!
ஆசிரியர்: கவிதாயினி உமையாள் மீனாட்சிசுந்தரம்
வெளியீடு:
படி வெளியீடு
விலை: ₹.480
அறிமுகம் எழுதியவர்:  
சித்தார்த்தன் சுந்தரம்

******************************************************************************

புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வு

2026 ஆம் ஆண்டில் ஜனவரி 8 முதல் 21 வரை  49வது சென்னை புத்தகக்காட்சி நடைபெற உள்ளது.  ஆண்டுதோறும் புத்தக காட்சியில் சிறந்த நூல் அறிமுகம் எழுதுபவர்களுக்கான போட்டி, கதை சொல்லல் போட்டி, சிறுகதை போட்டி என நடத்தி சிறந்த படைப்புகளுக்கு தொடர்ந்து பரிசுகளை வழங்கி வருகிறது பாரதி புத்தகாலயத்தின் புக் டே இணைய இதழ். இந்த ஆண்டும் சென்னை புத்தக காட்சியை  நேரடியாக வந்து பார்வையிட்டு அதில் தங்களுக்கு பிடித்த புத்தகம் குறித்த நூல் அறிமுக கட்டுரையை ஜனவரி 8 முதல் ஜனவரி 18 வரை www.bookday24@gmail.com என்ற மெயிலில் அனுப்பி வைக்கவும். அதில் தேர்வாகும் சிறந்த அறிமுக கட்டுரைக்கு ரூ.10,000 மதிப்பிலான பரிசும்,  புத்தக்காட்சி அரங்கில் ஜனவரி 20 அன்று நடக்கும் புக்டே இணையதள எழுத்தாளர்கள் மற்றும் வாசகர்கள் சந்திப்பு நிகழ்வில் பரிசும் வழங்கப்படும்.  இந்நிகழ்வில் திரைப்பட இயக்குனர், கவிஞர் சீனு ராமசாமி, எழுத்தாளர்கள் இந்திரன், ஆயிஷா நடராசன் மற்றும் அரசியல் செயற்பாட்டாளர் தோழர் ஜி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்க இருக்கின்றனர். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை  https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/ZqZv4x8HCrwkJKs56

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *