வாசல் பதிப்பகம் வெளியிட்ட இந்த உனக்குப் படிக்கத் தெரியாது புத்தகம் 2011  இல் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு சொல் ஒரு குழந்தையை எப்படி பாதித்து உலகத்திற்கே உதாரண மனுஷியாக  அக்குழந்தையை உயர்த்தியுள்ளது என்ற வரலாறு தான் இது.
ஆயிரத்து எண்ணூறுகளின் இறுதியில் ஆரம்பித்து 1950க்குள் உலகின் ஒவ்வொரு இடத்திலும் வேறு வேறு மாதிரியான நிகழ்வுகள் வரலாற்றில் இடம் பெற்றுள்ளதை நம்மால் இணைத்துப் பார்க்க முடிகிறது.
தன்னை வல்லரசாகக் காட்டிக் கொள்ளும்  அமெரிக்காவுக்கு , தன்னைக் கட்டி எழுப்பியவர்களே அங்கு  வாழும் கறுப்பினத்தோர் என்பது மறந்து அவர்கள் மீதான ஒடுக்குமுறையும் பாகுபாடும் வலுத்த நாட்கள் தான் இப்படி ஒரு கறுப்பினத் தலைவர்கள் உருவாகவும் காரணமாக இருந்திருக்கின்றது. ஏகாதிபத்ய நாடான அமெரிக்காவில் கருப்பு இன மக்கள் எவ்வாறெல்லாம் வெள்ளை இனத்தால் அடிமைகளாக நடத்தப்பட்டனர் என்பதை உருக்கமாகப் பதிவு செய்கிறது இப்புத்தகம் .
மேரி மெக்லியாட் பெத்யூன் தான் அந்தக் குழந்தை , பருத்திக் காட்டில் தன் 10 வயது வரை  கறுப்பின மக்களில் ஒருவராக விவசாயம் மட்டுமே செய்து வருவதும் , மேரியைப் போன்ற எந்தக் குழந்தைக்கும் அது கறுப்பினமாக இருக்கும் பட்சத்தில் கல்வி மறுக்கப்படுவது என்பதும் எத்தகைய  வரலாற்றின் துயரம் என்பதை இப்புத்தகப்  பக்கங்களால் நம்மால் அறிய முடிகிறது.
புதிய நம்பிக்கை - YouTube
அமெரிக்காவின் சாவித்திரி பாய் பூலே
இப்போது கல்வி குறித்தான பல பரிமாணங்கள் பற்றி பேசுகிறோம் . அனைவருக்கும் பொதுவான கல்வி , மெய்நிகர் வகுப்பறைகள் ( Virtual Class room) என நம் பார்வை விரிந்துள்ளது. ஆனால் ஒன்றரை நூற்றாண்டுக்கு முன்பு நம் இந்தியாவிலும் கல்வி மறுக்கப்படும் சூழல் இருந்தது உண்மை தான். ஆனால் 1800களில் இங்கு பெண் கல்விக்காக ஒரு சாவித்திரி பாய் பூலே என்பதும் அமெரிக்காவில் கறுப்பினக் குழந்தைகளின் கல்விக்காக தன்னை அர்ப்பணித்த மேரி மெக்லியோட் பெத்யூனும் , எனது பார்வையில் ஒரே நேர்க்கோட்டில்  இணையாக நிற்பதாகத் தோன்றுகிறது.
தன் தாயுடன் துவைத்து தேய்த்த துணிகளைக் கொண்டு சென்று வெள்ளையர் வீட்டில் தருகையில், அங்கிருந்த புத்தகத்தை எடுத்துப் பார்த்த கருப்பினக் குழந்தை மேரியின் கைகளில் இருந்து அதைப் பிடுங்கியதோடு, அந்த வெள்ளையர் குழந்தை “உனக்குப் படிக்கத் தெரியாது”  எனக் கூறியது தான் மேரியின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகிறது.
அந்தப் புத்தகமும்  , உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வார்த்தைகளும் மேரியின் காதுகளில் வாழ்க்கை முழுவதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது உலகின் எந்தக் கருப்பினக் குழந்தையும் இந்த சொற்களை தங்கள் வாழ்க்கையில் யாரிடமிருந்தும் கேட்டு விடக் கூடாது என்ற அச்சத்திலும் வலியிலும் மேரி தன் கனவுகளைக் கட்டி எழுப்பி நனவாக்க உழைப்பைக் கொட்டிக் கொடுக்கிறார்.
12 வயது சிறுமி முதன் முதலில் ரயில் பயணம் கல்வி கற்கும் பொருட்டு மேற்கொள்ளும் தருணத்தில் ஊர் மக்கள் முழுவதும் தங்கள் இனத்திலிருந்து முதலில் படிக்கப் போகும் பெண்ணை வாழ்த்தி அனுப்புவது முதல் , ஸ்காட்டியாவில் மேரி தனது தங்கும் விடுதியுடன் கூடிய பள்ளியின் அறைகளை , உணவு உண்ணும் தட்டு , ஸ்பூன் முதற்கொண்டு வித்யாசமாகப் பார்ப்பதும் என காட்சிகள் மனதில் ஆழமான பதிவுகளைத் தருகின்றன.
Mary McLeod Bethune is a favorite to replace Florida's Confederate ...
போட்டோ சானில் ரயில் பெட்டி வகுப்பறைகளைப் பார்த்திருப்போம் , முதல் ஆசிரியரில் குதிரைக் கொட்டகை வகுப்பறைகளைப் பார்த்திருப்போம். இங்கு குப்பைக் கொட்டுமிடத்தை பள்ளியாக மாற்றும் மேரி மெக்லியோட்டின் உழைப்பு நம்மை அணு அணுவாகச் சித்ரவதை செய்கிறது. பொதுக் கல்விக்கான பள்ளிகள் இருந்தும் கறுப்பினக் குழந்தைகளுக்கு என பள்ளியே இல்லாத சூழல் தான் மேரியை இப்படி இயங்க வைக்கிறது.
இப்படிக் கூட ஒருவர் கல்வி மறுக்கப்படும் குழந்தைகளுக்காக உழைக்க முடியுமா என்று நமக்குள் ஒரு குரல் ஒலித்துக் கேட்டுக் கொண்டே இருக்கிறது. 5 கருப்பின க் குழந்தைகளுடன் தாய்தோனா கடற்கரை நகரின் ஒரு பகுதியில் ஒரு வாடகை வீட்டில் தனது பள்ளியைத் துவக்கிய மேரி ,
அடுத்த நிலையாக சொந்தமான கட்டிடத்தில் குப்பை கொட்டும் இடத்தை விலைக்கு வாங்கி நூற்றுக்கணக்கான கருப்பின மாணவர்களின் கல்விக் கனவை  எவ்வாறு நிறைவேற்றுகிறார் , தாய் தோனா கல்வி தொழிற்பயிற்சிப்  பள்ளி , கருப்பின மாணவர்களுக்கான மருத்துவ சிகிச்சைக்கான மருத்துவமனை உருவாக்கம் என அவரது அர்ப்பணிப்பும் சேவையும் விரிகிறது.
இவற்றின் ஒவ்வொரு நகர்வுக்கும் மேரி கையேந்தி புரவலர்களைக் கண்டறிந்து தான் செயல்படுத்துகிறார்.  மேரியின் பணிகளைப் பார்க்கும் போது , நோயாளிகளுக்காகக் கையேந்திய அன்னை தெரசாவின் நினைவையேக் கொண்டு வருகிறது நம் கண் முன்னால் .
ஒரு முறை கரீபியன் கடல் தீவான ஹைட்டியின் ஜனாதிபதி,  மேரி பெத் யூனை தங்களது தீவில் 10 நாட்கள் செலவழிக்க வேண்டுகோள் விடுத்து 1949 இல் பெத் யூன் ஹைட்டி போய்ச் சேர , வழியெல்லாம் மக்கள் கூட்டம் நிறைந்து வாழ்ச்சியிருக்கின்றனர்.
பருத்திக் காட்டில் பயிர் செய்த ஒரு மாணவி 60 வருடங்களில் தன் இனத்திற்காக  , உலகின் அனைத்துப் பகுதிகளின் ஆயிரக் கணக்கான மக்களின் வாழ்க்கைக்குச் செறிவை ஊட்டும் ஒரு நீண்ட வாழ்க்கையை வாழ்ந்து 1955 இல் உயிர் விட்ட கதை தான் இந்தப் புத்தகம்.
Mary McLeod Bethune statue, Florida Forever ready for Senate approval
இவர் இறப்பதற்கு ஒரு ஆண்டு முன்பு அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் , ஒரு வரலாற்றுச் சிறப்பு மிக்க தீர்ப்பைப் பிரகடனமாக அறிவித்தது. ஆம்  ‘பொதுப் பள்ளிகளில் கருப்பினக் குழந்தைகளைச் சேர்த்துக் கொள்ளாமல் இருப்பதும் , வெள்ளையினக் குழந்தைகளையும் கருப்பினக் குழந்தைகளையும் தனித்தனிப் பள்ளிக்கு அனுப்பும் படி நிர்ப்பந்திப்பதும் சட்டவிரோதம் என்பதே அந்தத் தீர்ப்பு.
வரலாற்றின் பக்கங்களில் உனக்குப் படிக்கத் தெரியாது என்ற வார்த்தைகளின் வலிமையை நேர்மறையாக  பிரம்மாண்டமான மாற்றத்தை உருவாக்கியப் பெண்மணியாக மேரி மேக்லியட் பெத்யூன் நம் மனதில் நிற்கிறார்.
புறக்கணிப்பு என்ற சொல்லுக்கான வலிமையை இந் நூலைப் படிக்கும் எல்லோருக்கும்  கற்றுக் கொடுக்கும் இப்புத்தகம் ஒரு வரலாற்று சாசனம்.
புத்தகம் : உனக்குப் படிக்கத் தெரியாது
நூலாசிரியர் : கமலாலயன்  
வெளியீடு : வாசல் பதிப்பகம் 
உமா

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *