Uncontested Selection - Election Moments Like 'Play Stopped by Rain'| போட்டியின்றி தேர்வு - ‘மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது’ என்பதைப் போன்ற தேர்தல் தருணங்கள்       

அசோக் லவாசா 

முன்னாள் தேர்தல் ஆணையர், நிதிச் செயலர் 

தி ஹிந்து

மக்கள் எவரும் வாக்களிக்கவில்லை என்றாலும், ‘சுதந்திரமாக, நியாயமாக’ தேர்தல் நடைபெற்றது என்ற மாயையை ஏற்படுத்தியுள்ள சூரத், அருணாச்சலப் பிரதேச தேர்தல் முடிவுகள் விவாதங்களுக்கான அழைப்புகளை விடுக்கின்றன.

C:\Users\Chandraguru\Pictures\Lavasa\AshokLavasa_380PIB.jpg

தற்போதுள்ள தேர்தல் சட்டங்கள் மற்றும் நடைமுறைகளில் போட்டியின்றி ஒருவர்  தேர்ந்தெடுக்கப்படுவது சட்டபூர்வமான காரியமாகவே இருக்கிறது. அது மெய்சிலிர்க்கவும் வைக்கிறது வாக்குச்சீட்டில். ஒருவருடைய பெயர் மட்டுமே இடம் பெறும் காரணத்தால் அவரால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மக்களின் நிகரற்ற பிரதிநிதியாகி விட முடிகிறது. தேவையான முயற்சிகள் எதுவுமின்றி சாதித்துக் காட்டும் செயலாகவே அதுபோன்ற வெற்றி அமைகிறது.

தேர்தல் நடத்தை விதிகள் – 1961இல் உள்ள பதினொன்றாவது விதி

‘(1) போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் குறைவாக அல்லது அதற்குச் சமமாக இருக்கும்பட்சத்தில், அந்தத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலின் நகலை தேர்தல் நடத்தும் அலுவலர் தன்னுடைய அலுவலகத்தில் குறிப்பிடத்தக்க ஓரிடத்தில் ஒட்டி வைக்க வேண்டும். அவ்வாறு ஒட்டிய பிறகு இரண்டாவது துணைப் பிரிவு அல்லது விதி 53இன் மூன்றாவது துணைப் பிரிவின் கீழ் 21 முதல் 21 பி வரையிலான படிவங்களில் பொருத்தமானதாக உள்ள படிவத்தில் தேர்தல் முடிவை அந்த அலுவலர் அறிவித்திட வேண்டும்….’

எனக் கூறுகிறது.

ஜனநாயக உரிமைகள், செயல்முறைகள்

C:\Users\Chandraguru\Pictures\Lavasa\Picture1.jpg

தேர்தலின்றி அதுபோன்று அறிவிக்கப்படும் முடிவுகளில் வெற்றியாளர் என்று ஒருவர் இருப்பார். ஆனாலும் தோற்கடிக்கப்பட்டவர் என்று யாரும் இருப்பதில்லை. தேர்தல் விதிகளில் வேட்புமனு நிராகரிக்கப்பட்டவர்கள், தாமாக முன்வந்து வேட்புமனுக்களைத் திரும்பப் பெற முடிவு செய்தவர்கள் போன்றவர்களுக்கு மட்டுமே இடம் இருக்கிறது. சூரத் மக்களவைத் தொகுதியில் இரண்டு வேட்பாளர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டு, எட்டு பேர் தங்கள் வேட்புமனுவைத் திரும்பப் பெற்றுக் கொண்ட சமீபத்திய நிகழ்வை இங்கே நினைவில் கொள்ளலாம்.

இந்தக் கட்டுரையின் நோக்கம் அசாதாரணமான நிகழ்வுகளின் பின்னணியில் இருக்கின்ற சூழல்கள் குறித்த கேள்விகளை எழுப்புவதாக இல்லாமல், ஜனநாயக உரிமைகளைப் பயன்படுத்திக் கொள்வதற்கான அடிப்படையான செயல்முறைக்குள் ஆழ்ந்து செல்வதை நோக்கியதாக இருக்கிறது.

C:\Users\Chandraguru\Pictures\Lavasa\GJ-mV-_akAAUcbl.jpg

தேர்தல்களே இல்லாமல் அருணாச்சலப் பிரதேசத்திலும் பத்து சட்டமன்ற இடங்கள் கைப்பற்றிக் கொள்ளப்பட்டுள்ளன. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம்-1951இன் 53ஆவது பிரிவு பின்வருமாறு குறிப்பிடுகிறது:

‘(1) நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கையைக் காட்டிலும்  போட்டியிடும் வேட்பாளர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் போது தேர்தல் நடத்தப்பட வேண்டும்

(2) வேட்பாளர்களின் எண்ணிக்கை நிரப்பப்பட வேண்டிய இடங்களின் எண்ணிக்கைக்குச் சமமாக இருக்கும் போது தேர்தல் நடத்தும் அலுவலர் அந்த இடங்களை நிரப்பும் வகையில் வேட்பாளர்கள் அனைவரையும் முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் என்று உடனடியாக அறிவிக்க வேண்டும்’

இதுபோன்ற வெற்றிகளை அறிவிக்கும் செயல்முறை வாக்காளர்கள் ‘மேலே இருக்கும் வேட்பாளர்கள் யாரும் இல்லை’ (நோட்டா) என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதை அனுமதிக்கவில்லை என்ற பிரச்சனையை  ஒருசிலர் எழுப்புகின்றனர். நோட்டா என்ற தேர்விற்கு சட்டத்தில் முதலில் இசம் கிடையாது. மக்களில் சிலர் தங்களைப் பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை  அரசியல் கட்சிகள்,  வேட்பாளர்களுக்குத் ‘தெரிவிக்கும்’ வகையில் நீதிமன்ற உத்தரவுகள் மூலமாக அத்தகையதொரு தேர்வு சட்டத்தில் உள்ள விதிகளுடன் பின்னரே இணைத்துக் கொள்ளப்பட்டது.

C:\Users\Chandraguru\Pictures\Lavasa\images (1).jpg

நோட்டாவைத் தேர்வு செய்வது எந்த வகையிலும் தேர்தல் நடைமுறையைப் பாதிப்பதில்லை என்பது நோட்டா பற்றி அவ்வாறான கருத்து உள்ளவர்களுக்கு அவமானமாகத் தோன்றலாம். ஆனாலும் அரசியல் கட்சிகளிடம்கூட அதுபோன்றதொரு  தேர்வு எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றவில்லை என்பது வருத்தத்தையே ஏற்படுத்துகிறது. அரசியல் கலாச்சாரத்தில் செல்வாக்கைச் செலுத்துவதற்கான முற்போக்கான சீர்திருத்தம் எனக் கருதப்பட்ட நோட்டா, அழகான ஒரு தேவதை தனது ஒளிரும் இறக்கைகளை பயன் எதுவுமின்றி வெற்றிடத்தில் வீணாக அடித்துக் கொள்வதைப் போல இந்த தேர்தல் அமைப்பில் இன்னும் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

தேர்தலில் யாரும் போட்டியிடாமல் அல்லது வாக்காளர்கள் அனைவரும் ஒட்டுமொத்தமாகத் தேர்தலைப் புறக்கணித்து தங்கள் பிரதிநிதியாக ஒருவரைத் தேர்ந்தெடுக்கத் தவறினால்… காலியிடத்தை நிரப்பத் தவறினால் என்ன நடக்கும் என்ற கேள்வி  இங்கே எழுகிறது. அரசு கொள்முதலுக்கான ஏலத்தை வென்றவர் பதிலளிக்காமல் இருப்பது அல்லது ஏலத்தில் யாருமே கலந்து கொள்ளாத நிலை இருக்கும் போது, வேறொருவரைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் மீண்டுமொரு முறை மேற்கொள்ளப்படுவதைப் போல, தனக்கான பிரதிநிதியை அந்தத் தொகுதி தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வகையில் இந்தியத் தேர்தல் ஆணையம் மீண்டுமொரு முறை அழைப்பை விடுக்கலாமா?

அரசு நிதிகள் தொடர்பான விஷயங்களைக் கையாளும் போது பின்பற்றப்பட வேண்டிய இந்திய அரசின் விதிகள், உத்தரவுகளின் தொகுப்பான பொது நிதி விதிகள் (GFRs) (மத்திய நிதி மற்றும் செலவினத் துறையின் செயலாளராக நான் இருந்த போது அந்த விதிகள் மிக விரிவாகத் திருத்தப்பட்டன) அரசு கொள்முதலுக்கான நேர்மையான, வெளிப்படையான, நியாயமான நடைமுறைகளைப் பற்றி பேசுகின்றன. எடுத்துக்காட்டாக பொருட்களை வழங்கப் போகிறவரே உற்பத்தியாளராகவும் இருந்தால் அல்லது அவசரநிலை ஏற்படும் போது அல்லது தரநிலைப்படுத்தும் நோக்கத்துடனான தொழில்நுட்பம் தேவைப்படும் வேளையில் ஒற்றை டெண்டர் பரிசீலனைக்கு அந்த விதிகளில் இடம் பெற்றுள்ள 166ஆவது விதி அனுமதியளிக்கிறது. ஏலதாரர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் மட்டுமே போட்டியில்லை என்று தீர்மானிக்கக் கூடாது என்று 173(xx)ஆவது விதி குறிப்பிடுகிறது. கொள்முதல் பற்றி திருப்திகரமான விளம்பரங்கள் செய்யப்பட்டு, ஏலங்களைச் சமர்ப்பிப்பதற்குத் தேவையான கால அவகாசம் முறையாக அளிக்கப்பட்ட நிலையில் தகுதிக்கான அளவுகோல்கள் மீது தேவையற்ற கட்டுப்பாடுகள் எதுவுமின்றி, சந்தை மதிப்புகளுடன் ஒப்பிடுகையில் ஏல விலைகள் நியாயமாக இருக்குமேயானால் – ஒரேயொருவர் ஏலத்தில் கலந்து கொண்டிருந்தாலும் அந்தச் செயல்முறை செல்லுபடியாகும் எனக் கருதலாம் என்றும் அந்த விதி கூறுகிறது.

இதுபோன்ற தேவைகள் அனைத்தையும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் கீழ் பின்பற்றப்படும் நடைமுறைகள் நிறைவேற்றித் தருகின்ற போதிலும், ஏலம், தேர்தல் ஆகிய இரண்டும் எந்தவிதத்திலும் தொடர்புடையவை கிடையாது. தங்களுக்கு முன்பிருக்கும் வாய்ப்புகளிலிருந்தே வாக்காளர்களால் தங்களுக்கான தேர்வை மேற்கொள்ள முடியும். தங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தேர்வு செய்வதற்கு ஒரேயொரு ‘ஒற்றை ஏலதாரர்’ மட்டுமே இருந்தால் அவர்கள் தங்கள் தேர்வை மேற்கொள்ள வேண்டிய அவசியமே இருப்பதில்லை. இந்தப் பொருளில் அவையிரண்டிற்கும் இடையில் ஒற்றுமை இருக்கலாம்.

C:\Users\Chandraguru\Pictures\Lavasa\output-onlinejpgtools.jpg

ஒரேயொரு ஒற்றை வேட்பாளர் என்று வரும் போது தன்னுடைய பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் செயல்முறையிலிருந்து வாக்காளர் (மக்கள் பிரதிதித்துவச் சட்டத்தில் வாக்காளர் என்பவர் ‘தற்போது நடைமுறையில் உள்ள அந்தத் தொகுதியின் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர், எந்தவொரு தகுதியிழப்புக்கும் உட்படாதவர்’ என்பவராக வரையறை செய்யப்பட்டுள்ளார்) ஒரு வகையில் விலக்கியே வைக்கப்படுகிறார். தொகுதி மக்களிடமிருந்து ஒரு வாக்கைக்கூட பெறாத ஒருவர் அந்தத் தொகுதியின் சார்பாக நாடாளுமன்றத்தில் சட்டமியற்றும் உரிமையைப் பெறுகிறார்.

என்னைப் பொருத்தவரை இவை தற்போதைய தேர்தல் நடைமுறை உருவாக்கும்  இருவேறு கருத்துகளாகவே இருக்கின்றன. நியாயமற்றவையாகத் தோன்றினாலும் அவை நடைமுறைக்கு ஏற்பவே வடிவமைக்கப்பட்டுள்ளன. தங்களுடைய  வாக்குகள் மீதான முரண்பாடான கோரிக்கைகள் எதுவும் இல்லாத நிலையில் வாக்காளர்களுக்கு வாக்களிக்காமல் இருப்பதைத் தவிர வேறு வழி எதுவுமில்லை என்பதால் அவர்களுடைய விருப்பம் நிறைவேற்றி வைக்கப்பட்டதாகவே கருதப்படுகிறது. ஒரு சில வேட்பாளர்களால் லட்சக்கணக்கான வாக்காளர்களின் உரிமையைப் பறிக்கும் வழியில் தேர்தல் செயல்முறையைக் கட்டுப்படுத்த அல்லது கையாள முடியும் என்பதாக இத்தகைய நடைமுறையை எடுத்துக் கொள்ளலாமா?  மிக அபூர்வமான சூழலில் 543 நாடாளுமன்றத் தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவராலும் (அவர்கள் வெவ்வேறு அரசியல் கட்சிகள் அல்லது சுயேட்சைகளை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற பத்தாயிரம் பேர் என்ற எண்ணிக்கையில் இருந்தாலும்) இந்த தேர்தல் அமைப்பில் இதுபோன்று பங்கேற்க முடியும். அவ்வாறு நடந்து கொள்வதன் மூலம் தற்போதுள்ள செயல்முறைக்கு இணங்கிச் செல்லும் அந்த வேட்பாளர்களால் நூறு கோடி வாக்காளர்களின் சட்டப்பூர்வ உரிமையை முற்றிலுமாக மறுத்து, ஜனநாயக உணர்வுகளைச் சிதைத்து விட முடியும்.  இவ்வாறு நடப்பதற்கான வாய்ப்பே இல்லை என்று கூற முடியாத அளவிற்கு நடப்பதற்கான சாத்தியம் மிகக் குறைவாக உள்ள இந்த வாய்ப்பைச் சரிசெய்ய என்ன செய்வது?

போட்டியில் வேட்பாளர்கள் யாரும் இல்லாத போது வாக்காளர்களுடைய உரிமை மறுக்கப்படுகிறது என்ற வாதம் முன்வைக்கப்படுகிறது. தேர்தல் ஜனநாயகச் செயல்முறையின் நோக்கம் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்கள் மத்தியில் ஆர்வம் இருந்தால் மட்டுமே நிறைவேற்றப்படும். நீங்கள் யாருக்காவது உங்கள் வாக்கைச் செலுத்த வேண்டுமென்றால், உங்களிடம் யாராவது வந்து வாக்கு கேட்டேயாக வேண்டும்.

வேட்பாளருக்கே தேர்தலில் முக்கியத்துவம்

உண்மையாகப் பார்த்தால் இந்த தேர்தல் அமைப்பு முற்றிலும் வேட்பாளர்களுக்கு ஆதரவாகவே இருக்கிறது. மக்களின் தேர்தல் புறக்கணிப்பை வேட்பாளர்கள் அனைவரும் பூஜ்ஜியம் வாக்கைப் பெறுகிறார்கள் என்றே மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் கருதுகிறது. எனவே  ‘சமமான வாக்குகள்’ பெறுவது தொடர்பான 65ஆவது பிரிவில் அந்த நிலைமையைக் கையாளுகிறது.

C:\Users\Chandraguru\Pictures\Lavasa\Section 65.jpg

குறிப்பிட்ட அந்தப் பிரிவில் ‘வாக்கு எண்ணிக்கை முடிந்ததும் வேட்பாளர்கள் சம வாக்குகளுடன் இருப்பது கண்டறியப்பட்டு, கூடுதலாக ஒரு வாக்கு சேர்த்தால் அந்த வேட்பாளர்களில் ஒருவர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படலாம் என்றால், அந்த வேட்பாளர்களுக்கு இடையே சீட்டைக் குலுக்கிப் போட முடிவு செய்து, சீட்டு சாதகமாக விழும் வேட்பாளர் கூடுதல் வாக்கைப் பெற்றார் என்று கருதி தேர்தல் நடத்தும் அலுவலர் நடவடிக்கையை மேற்கொள்ளலாம்’ என்று கூறப்பட்டுள்ளது. மக்கள் தேர்வு செய்வதற்கு உதவுவதற்கு மாறாக தேர்தல் செயல்பாட்டில் பங்கேற்காத மக்களை யார் பிரதிநிதித்துவப்படுத்தப் போகிறார்கள் என்பதைக் கண்டறிவதாக தேர்தல் அமைப்பின் நோக்கம் மாற்றமடைகிறது. இந்த இடத்தில் ‘மக்களால், மக்களுக்காக நடத்தப்படும் மக்கள் அரசு’ என்று ஜனநாயகத்தை வரையறுப்பது முரண்பாடாகவே உள்ளது.

வேட்புமனுவை யாருமே தாக்கல் செய்யாத நிலைமையில் இன்னொரு முறை மீண்டும் அறிவிப்பை வெளியிட வேண்டுமென்று கூறும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் திரும்பவும் இரண்டாவது முறையாக அதே போன்று நடந்தால் செய்ய வேண்டியவை பற்றி எதுவும் கூறாமல் தவிர்க்கிறது. மக்கள் தேர்தலில் இருந்து விலகியிருப்பது, ஜனநாயக நடைமுறையில் நோட்டாவுக்கு எந்தவொரு முக்கியத்துவமும் இல்லை என்று கருதி நோட்டாவைத் தேர்வு செய்யும் வாய்ப்பிலிருந்து மக்களை விலக்கி வைப்பது போன்ற காரியங்களால் தேர்தலிலிருந்து மக்கள் முழுமையாக விலக்கி வைக்கப்படுகின்றனர். வேட்பாளர்களால் தேர்தல் நடைமுறையை ரத்து செய்ய முடிகின்ற போதிலும், வாக்காளர்களால் கூட்டுச் சேர்ந்து  அவ்வாறு செய்து விட முடிவதில்லை.

அதிகம் வாக்குகளைப் பெறுபவர் வெற்றி பெறுகிறார் என்று தற்போது நடைமுறையில் இருக்கின்ற முறையை மாற்றி வெற்றி பெறுவதற்கு வேட்பாளர் குறைந்தபட்ச சதவிகித வாக்கைப் பெற வேண்டும் என்று திருத்திக் கொள்ளலாமா? இரண்டாவது முறையும் எந்தவொரு வேட்பாளரும் தேர்தலில் போட்டியிட முன்வரவில்லை என்றால் அரசைக் கலந்தாலோசிக்காமல் இந்தியக் குடியரசுத் தலைவரால் பரிந்துரைக்கப்படும் தகுதியுள்ள ஒருவரை அந்த இடத்திற்கு நியமனம் செய்து கொள்ளும் வகையில் அந்தக் காலியிடத்தை மாற்றிக் கொள்ளலாமா?

இதுபோன்ற கேள்விகள் பரந்த விவாதத்திற்கான அழைப்பை விடுக்கின்றன. பயத்தால் அடிபணிந்து போவது அல்லது ஆதரவான நடவடிக்கைகளால் தள்ளாடுவது என்று வாக்களித்து வருகின்ற வாய்ப்பை வாக்காளர்களுக்கு வழங்காமலேயே தேர்தல் சுதந்திரமாக, நியாயமாக நடத்தப்பட்டது என்று மாற்றிக் காட்டுகின்ற ‘மழையால் ஆட்டம் நிறுத்தப்பட்டது’ அல்லது ‘வஞ்சமாக வெல்வது’ போன்ற வாய்ப்புகள் உருவாவதை அத்தகைய விவாதங்களின் மூலமாகத் தவிர்த்து விட முடியலாம்.

https://www.thehindu.com/opinion/lead/questioning-the-polls-rain-washes-out-play-moments/article68107149.ece

நன்றி: தி ஹிந்து

தமிழில்: தா.சந்திரகுரு
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம்,   கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *