கட்டுப்படாத தொற்றுநோய் : மோடி இழைத்த தவறுகள் – கார்டியன் தலையங்கம் | தமிழில்: தா.சந்திரகுரு
‘Mr Modi’s brand of Indian exceptionalism bred complacency.’ Photograph: Pranabjyoti Deka/EPA

கட்டுப்படாத தொற்றுநோய் : மோடி இழைத்த தவறுகள் – கார்டியன் தலையங்கம் | தமிழில்: தா.சந்திரகுரு



இந்தியாவில் இருந்து வருகின்ற அரசியல்ரீதியான இறுமாப்பு தொற்றுநோயின் யதார்த்தத்தை இந்த வாரம் சந்தித்தது. நரேந்திர மோடி தலைமையிலான ஹிந்து தேசியவாத அரசு நாடு கோவிட்-19 இன் இறுதியாட்டத்தில் இருக்கிறது என்று இந்த ஆண்டு மார்ச் மாத துவக்கத்தில் கூறியிருந்த போதிலும் இப்போது இந்தியா ஒரு நரகமாகவே இருந்து வருகிறது. போதிய படுக்கைகள், ஆக்சிஜன் இல்லாத மருத்துவமனைகளுடன் மிகுந்த பேரழிவை ஏற்படுத்தியிருக்கும் இரண்டாவது அலை மூலம் பி.1.617 என்றழைக்கப்படுகின்ற கொரோனா வைரஸின் புதிய இரட்டைப் பிறழ்வு தீவிரத்துடன் வெளிப்பட்டுள்ளது. சவக்கிடங்குகள் நிரம்பி விட்டதால் வீடுகளிலேயே உடல்கள் சிதைவடையும் நிலை ஏற்பட்டுள்ளது. தொண்டு நிறுவனங்கள் இறப்பை ஏற்படுத்துகின்ற வகையிலே தெருக்களை ஆபத்து சூழ்ந்திருப்பதாக எச்சரிக்கின்றன.

கடந்த வெள்ளிக்கிழமை புதிய சார்ஸ் கோவி-2 நோய்த்தொற்றுகள் 3,32,730 என்ற அளவில் இந்தியாவில் பதிவாகியுள்ளன. தொடர்ந்து இரண்டாவது நாளாக உலகளவிலே அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் என்ற அளவிலே அந்த எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கடந்த இருபத்தி நான்கு மணி நேரத்தில் 2,200க்கும் மேற்பட்ட இறப்புகள் பதிவாகியுள்ளன. இந்தியாவில் இருந்து வருகின்ற விமானங்களைத் தடைசெய்துள்ள நாடுகள் தங்களுடைய மக்கள் இந்தியாவிற்கு பயணிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்று பரிந்துரைத்திருக்கின்றன அல்லது தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று இந்தியாவிற்குச் சென்று திரும்பி வந்தவர்களைக் கேட்டுக் கொண்டுள்ளன.

ஆறு வாரங்களுக்கு முன்னர் இந்திய மக்கள்தொகையில் ஒரு சதவீதம் கூட தடுப்பூசி போட்டுக் கொள்ளாதிருந்த நிலையில் பிரதமர் மோடி தன்னுடைய நாட்டை ‘உலகின் மருந்தகம்’ என்று அறிவித்திருந்தது தொற்றுநோய்க்கு முந்தைய வாழ்க்கை மீண்டும் தொடங்கப்படலாம் என்பதற்கான அறிகுறியாகவே அற்யப்பட்டிருந்தது. தொற்றுநோயின் அதிவிரைவுப் பரவல் ஆயிரக்கணக்கானவர்கள் கிரிக்கெட் மைதானங்களில் குழுமிய போது, லட்சக்கணக்கான ஹிந்துக்கள் கும்பமேளாவின் போது கங்கையில் நீராடிய போது நடந்தேறியது. தொற்றுநோய்ப் பரவல் அதிகரித்த வேளையில் டொனால்ட் ட்ரம்பைப் போல திரு மோடியும் தன்னுடைய தேர்தல் பிரச்சாரத்தைக் கைவிடவில்லை. ஐந்து மாநிலத் தேர்தல்கள் நடைபெற்ற இந்தியாவில் முகக்கவசம் அணியாத மோடி மிகப்பெரிய பேரணிகளை ஏப்ரல் மாதம் நடத்தினார். மோடியின் குணாம்சமாக இருந்து வருகின்ற இந்திய விதிவிலக்குவாதம் மெத்தனத்தையே வளர்த்தெடுத்துக் கொடுத்தது.



தேசிய மகத்துவம் குறித்து இருந்து வந்த அனுமானம் குறிப்பாக தடுப்பூசி உற்பத்தியில் ஆயத்தமின்மைக்கே வழிவகுத்துக் கொடுத்தது. உலகளாவிய மருந்து தயாரிப்பில் இந்தியாதான் அச்சாணியாக இருக்கப் போகிறது என்று மேற்குலக நாடுகள் ஊக்குவித்தன. ஆனால் ஜெர்மன் அதிபர் ஏஞ்சலா மேர்க்கெல் இந்த வாரம் ‘அது ஒரு பிழையாக இருக்கலாம்’ என்று கருத்து தெரிவித்திருந்தார். சீனாவும் அமெரிக்காவும் இப்போது இந்தியாவை விட அதிகமாக கோவிட்-19 தடுப்பூசிகளை உற்பத்தி செய்து வருகின்றன. ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளை எளிதாக்கித் தருவதில் இன்னும் வாஷிங்டனை இந்தியாவால் சமாதானப்படுத்த முடியவில்லையாதலால் அது ரஷ்யாவிலிருந்து தடுப்பூசிகளை இறக்குமதி செய்ய வேண்டிய கட்டாயத்திற்குள்ளாகியுள்ளது.

தனது உள்ளுணர்வு மற்றும் நிபுணர்களின் ஆலோசனைகளை ஏளனம் செய்கின்ற அதீத நம்பிக்கை ஆகியவற்றால் இந்தியப் பிரதமர் இப்போது அவதிப்பட்டு வருகிறார். இந்த வாரம் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கு சற்று முன்னதாக தங்களுக்கு ஆலோசனை வழங்கத் துணிந்த முன்னாள் காங்கிரஸ் பிரதமர் மீது மோடியின் அமைச்சர்கள் தாக்குதலை மேற்கொண்டனர். கடந்த ஆண்டு கோடிக்கணக்கான இந்திய மக்கள் மீது மிகக் கடுமையான திடீர் பொதுமுடக்கத்தை மோடி திணித்திருந்தார். எந்தவொரு எச்சரிக்கையுமின்றி கொண்டு வரப்பட்ட பணிநிறுத்தம் நாட்டின் உயர்மட்ட தொற்றுநோயியல் நிபுணர்களின் ஆலோசனைகளுக்கு எதிராகவே சென்றது. ஆனால் தன்னிடமுள்ள நாடகத்தனமான உடல்மொழிகள் மீது கொண்டிருக்கும் ஆர்வத்திற்கு ஏற்றவையாகவே அவரது அந்தச் செயல்பாடு இருந்தது. கோவிட்-19ஆல் இறந்து போனவர்களின் விகிதம் மிகவும் இளைய வயதினரை அதிகமாகக் கொண்டுள்ள இந்தியாவில் மற்ற நாடுகளை விடக் குறைவாகவே இருக்கும். இறந்து போனவர்களின் எண்ணிக்கை குறைத்துக் காட்டப்பட்டிருப்பதாக சந்தேகங்கள் இருந்து வரும் நிலையில், இந்தியர்கள் எப்படியோ வைரஸிலிருந்து தப்பித்துக் கொள்ளும் அளவிற்கு நோய் எதிர்ப்பு சக்தி கொண்டவர்களாக இருக்கிறார்கள் என்ற ஆதாரமற்ற உணர்வு பரவியிருந்தது. அந்தக் கூற்று மோடியால் எதிர்க்கப்படாமலேயே இருந்தது.



முதல் அலையின் போது கோவிட் தொற்று இந்திய நகரங்களைத் தாக்கியது. இப்போது அது நாட்டின் பெரும்பகுதி மக்கள் வசிக்கும் கிராமப்புறங்களுக்கு நகர்ந்து கொண்டிருக்கிறது. கடுமையான தாக்குதலுக்குள்ளான பல நாடுகளைப் போல அல்லாமல் இந்தியாவின் இறப்பு எண்ணிக்கை பெரும்பாலும் தவிர்க்கக் கூடியதாகவே இருந்தது. ஏற்பட்ட இறப்புகளும் திமிர்பிடித்த, திறமையற்ற அரசாங்கத்தின் விளைவாக ஏற்பட்டவையாகவே இருந்தன. இந்தியா என்பது மிகப் பெரிய, சிக்கலான, பரந்துபட்ட நாடு. இதுபோன்ற தேசிய நெருக்கடி நிறைந்த காலத்தில் மட்டுமல்லாமல், மிகச் சிறந்த காலங்களிலும்கூட அதை ஆட்சி செய்வது மிகவும் கடினம் ஆகும். இப்போது கொரோனா வைரஸ் மற்றும் பயத்தின் காரணமாக எழுந்துள்ள இணைநோய்களால் இந்தியா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. உயிரியல்ரீதியான, சமூகரீதியான தொற்றுநோய்களைக் கட்டுப்படுத்த பீதியைத் தணிக்கும் வகையில் நம்பகமான உறுதி மீட்டளிக்கப்பட வேண்டும். முகக்கவசங்களை அணிந்து கொள்வது, உடல்ரீதியான சமூக இடைவெளி போன்ற விதிகளுக்கு மக்கள் கீழ்ப்படிய வேண்டும்.

தன்னால் ஏற்பட்டிருக்கும் குழப்பத்தை அகற்ற வேண்டிய பொறுப்பை மாநில அரசுகள் மீது மோடி திணிக்கிறார். தனக்கான பொறுப்பை அவர் தட்டிக் கழிக்கிறார். மகத்தான துயரத்தை ஏற்படுத்தியிருக்கின்ற தன்னுடைய தவறுகளை ஒப்புக் கொண்டு அவர் அவற்றைத் திருத்திக் கொள்ள முன்வர வேண்டும். கட்டுப்பாடுகளை நிலைநிறுத்துவது குறித்து நிபுணர்களுடன் அவர் முழுமையாக ஈடுபட வேண்டும்; உறுதிமொழிகளை அரசாங்கம் நிறைவேற்றுவதை உறுதிப்படுத்த வேண்டும்; ஒற்றுமை தேவைப்படுகின்ற வேளையில் தன்னிடமுள்ள பிரித்து வைக்கும் குறுங்குழுவாத சித்தாந்தத்தை அவர் கைவிட வேண்டும். பொதுசுகாதாரத்தின் பேரழிவுகரமான முடிவுக்கு வழிவகுக்கின்ற விதிவிலக்கான கருத்துக்களை அவர் தொடர்வாரேயானால் எதிர்கால வரலாற்றாசிரியர்கள் மோடி குறித்து மிகவும் கடுமையான தீர்ப்பையே எழுதுவார்கள்.

நன்றி: கார்டியன் இணையதளம் | 2021 ஏப்ரல் 23

https://www.theguardian.com/world/commentisfree/2021/apr/23/the-guardian-view-on-modis-mistakes-a-pandemic-that-is-out-of-control

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *