ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 12 - உதயசங்கர் | Understanding a Literary Work Tamil Article Series 12 By Udhayasankar | கலையின் சுதந்திரம் | www.bookday.in

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 12:- கலையின் சுதந்திரம் | உதயசங்கர்

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 12:-

கலையின் சுதந்திரம்

– உதயசங்கர்

கலை சுதந்திரமானதாக இருக்க வேண்டும். கலைஞன் சுதந்திரமானவனாக இருக்கவேண்டும். கலைஞன் எந்த அமைப்பிலும் இருக்கக்கூடாது. கலைஞன் எந்தத் தத்துவத்தையும் பின்பற்றக் கூடாது. கலைஞனுக்குச் சார்பு நிலை இருக்கக் கூடாது. இப்படியான குரல்கள் கலையின் வரலாறு நெடுகக் கேட்டுக் கொண்டிருக்கிறது. உண்மையில் கலை சுதந்திரமாக வெளிப்படுகிறதா?

ஆதிப்பொதுவுடமைக் காலத்திலும் கூட கலை சமூகத்துக்காகவே வெளிப்பட்டது. கலை வெளிப்பாடு தனிமனிதச்செயல்பாடாக இருந்தாலும் அதன் வேர் தனிமனிதன் சமூகத்துடன் கொள்கிற உறவுநிலையாகவே இருக்கிறது. சமூகத்திலுள்ள தனிமனிதர்கள் சமூகத்துடன் உறவாட, தொடர்பாடல்களை எண்ணற்ற செயல்பாடுகளை மேற்கொள்கிறார்கள். அவற்றிலொன்று தான் கலைச் செயல்பாடு. மற்ற துறைகளைப் போலவே கலைஞனின் முயற்சி, பயிற்சி, கலை அறிவு ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு கலை வெளிப்படுகிறது.

அந்தச் செயல்பாட்டிற்கான உந்துதல் சமூகத்துக்கானது. தனக்குத் தெரிந்ததை மற்றவரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டுமென்ற உள்ளுணர்வு சமூகத்தினால் உருவானது. மனித சமூக சாரம் நூலில் ஜார்ஜ் தாம்சன் கலை தோன்றும்போது மாந்திரீகமாகத் தோன்றியது. ஒலிக்குறிப்புகளைத் திரும்பத் திரும்பச் சொல்லும்போது அதற்கு மந்திரசக்தி வந்து விடுவதாக நம்பினார்கள். அந்த மந்திரசக்தியைப் பெறுவதற்காக தனியாக, பல விசித்திரமான செயல்பாடுகளைச் செய்தார்களென்று சொல்கிறார். எனவே கலையே மந்திரசக்தி வாய்ந்தது என்று சமூகம் நம்பியது. அப்போது கலை, அறிவியல், மருத்துவம் இவையெல்லாவற்றையும் இந்த மந்திரவாதிகளே கண்டுபிடித்தார்கள். கற்றுக் கொண்டார்கள். அப்போதிருந்த சமூக அமைப்பின் உள்ளார்ந்த தேவையே இப்படியான கலைஞர்களை உருவாக்கியது. அப்போதும் கலை சுதந்திரமாக இல்லை.

ஆதிப்பொதுவுடமைச் சமூகத்திலிருந்து நிலவுடமைச் சமூகத்துக்கு மாறியபோது அரசு அதிகாரம் தோன்றி விட்டது. சுரண்டலுக்கான திட்டங்கள் உருவாகிவிட்டன. கடவுளர்கள் தோன்றிவிட்டார்கள். அப்போது ஒரே ஆளிடமிருந்த கலையும் மருத்துவமும் அறிவியலும் சமூகத்தின் அறிவுவளர்ச்சியினால் தனித்தனியாகப் பிரிந்து செயல்படத் தொடங்கி விட்டன. அவை அனைத்துமே அந்தக் காலச் சமூகத்துக்குச் சேவை செய்தன. ஆளும்வர்க்கத்துக்கு ஆதரவான நிலைபாடுகளை எடுத்தன. கடவுளர்களையும் அரசனையும் புரோகிதரையும். புனிதமானவர்களாக்கியது. அப்படியே அறிவுத்துறைகளையும் ரகசியம், புனிதமென்று சாமானியர்களிடமிருந்து விலக்கி வைத்தது.  ஆனால் எந்தச் சமூகத்தின் தேவையினால் அந்த அறிவுத்துறைகளில் நிபுணத்துவம் பெற்றார்களோ அந்தச் சமூகத்தின் பொருளாதார உற்பத்தி சக்திகளுக்குச் சேவை செய்தது. எனவே நிலவுடமைக் காலத்திலும் கலை சுதந்திரமானதாக இல்லை.

நிலவுடமைச் சமூகத்தின் நெருக்கடிகள் முற்றியதும் புதிய அறிவியல் கண்டுபிடிப்புகளும் உற்பத்தி முறையில் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டு வந்தன. அதிகமான உற்பத்தி சந்தையை அறிமுகப்படுத்தியது. அதுவரை உற்பத்தியாளர்களுக்கும் நுகர்வோருக்குமிடையிலிருந்த நேரடியான உறவுகள் முறிந்தன. இதன் விளைவாக உற்பத்தி உறவுகளும் மாறின. கலையும் இந்த மாற்றங்களுக்குள்ளாகியது.

நிலவுடமைச் சமூகத்தில் ஒரு கலைஞன் தான் யாருக்காகப் படைப்பை உருவாக்குகிறான்? யார் அதன் நுகர்வாளர்களென்று தெளிவாகத் தெரியும். அரசர்களோ, பிரபுக்களோ, புலவர்களோ தான் நுகர்வாளர்களாக இருந்தார்கள். அதனால் கலை அரசர்களுக்குச் சேவை செய்வதாக இருந்த து. அரசர்கள், பிரபுக்களின் போற்றுதலில் கலைஞர்கள் வாழ்ந்தார்கள். வெகுமக்களுக்கு எழுத்தறிவு கிடையாது. அப்படியே கிடைத்திருந்தாலும் வாழ்க்கையின் அன்றாட நடைமுறைகளுக்கான கல்வியாக மட்டுமே இருந்தது. எனவே அரசவையில் இயற்றப்பட்ட, அரங்கேற்றப்பட்ட கலை இலக்கியம் மக்களுக்குக் கிடைக்கவில்லை. பெரும்பானமையான மக்கள் அதைப் பற்றிக் கவலைப்படவுமில்லை.

ஆனால் முதலாளித்துவத்தின் அடிப்படையே சந்தை தான். முதலாளித்துவச் சந்தையைப் பொறுத்தவரை அனைத்துப் பொருட்களும் விற்பனைக்கே. எனவே கலையையும் விற்பனைப் பொருளாக மாற்றியது. அச்சுத் தொழில்நுட்பம் வந்தபிறகு இந்த மாற்றங்கள் வேகமாக சமூகத்தில் உருவாயின. தன்னுடைய இயங்கியலின் தேவைக்காக ஜனநாயகத்தை அறிமுகப்படுத்தியது. ஜனநாயகம் அனைத்துத் துறைகளையும் மக்களிடம் அறிமுகப்படுத்தியது. அனைவருக்கும் கல்வியை அளிக்க வேண்டிய கட்டாயத்துக்காளானது முதலாளித்துவம். இப்போது யாரோ எழுதிய இலக்கியத்தை, யாரோ படைத்த கலைப்படைப்பை யார் யாரோ வாசித்தார்கள். யார் யாரோ பார்த்தார்கள். யார் யாரோ நுகர்ந்தார்கள். முதலாளித்துவம் கலைஞர்களையும் சந்தை விதிகளுக்கு உட்படுத்தியது.

கலைஞர்களும் சமூக விதிகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே. அவர்களும் சந்தைகளில் தங்கள் படைப்புகளைக் கூவிக் கூவி விற்கவேண்டிய தேவை ஏற்பட்ட து. முன்னெப்போதையும் விட முதலாளித்துவம் கலைஞர்களைப் பாதுகாப்பாற்றவர்களாக மாற்றிவிட்ட து. மாறிக் கொண்டேயிருக்கும் முதலாளித்துவத்தின் தன்மைகளுக்கேற்ப தங்களுடைய படைப்புத்திறன்களையும் மடைமாற்றிக் கொள்ளவேண்டிய தேவை கலைஞர்களுக்கு ஏற்பட்டது.

நவீன உலகமயமாக்கலின் முதலாளித்துவம் தன்னுடைய புதிய உத்திகளான டிஜிடல் கேபிடலிசம், டேட்டா கேபிடலிசம், மெய்நிகர் சமூக ஊடகங்களின் வழியே இன்னும் சிக்கலான நிலைமைகளை உருவாக்கியிருக்கிறது. கலை மேலும் மேலும் ஜனநாயகப்படுத்தப்பட்டிருக்கிறது. லட்சக்கணக்கான மக்கள் கலைச் செயல்பாடுகளில் ஈடுபடுகிறார்கள். இவற்றில் போலியான கலைப்படைப்புகளும், கலையல்லாத கலைப்படைப்புகளும் உண்டென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே நேரம். கலை புனிதமானது, கலை ஒரு மர்மம், கலை ஒரு புதிர்  கலை ஒரு ஆன்மீக அனுபவம், என்பதைப் போன்ற நிலவுடமைக்கால மதிப்பீடுகளை அதன் தேவைக்காகத் தகர்த்திருக்கிறது.

இப்போது கலைஞர்கள் தங்களையறியாமலேயே நவீன முதலாளித்துவத்தின் சந்தை விதிகளுக்குள் சிக்கியிருக்கிறார்கள்.. தன்னுடைய படைப்புகளை பரவலான வாசகர்களிடம் கொண்டு செல்ல வேறுவழியில்லை. முதலாளித்துவ மைதாசின் விரல் நுனி தங்கள் மீது பட்டுவிடாதா என்று ஏங்கிக் கொண்டிருக்கிறார்கள்.

எனவே கலை ஆதிப்பொதுவுடமைக் காலம் தொடங்கி இன்றுவரை எந்த சமூக அமைப்பில் பிறக்கிறதோ அந்தச் சமூக அமைப்பைப் பிரதிபலிப்பதாகவும் அந்தச் சமூக அமைப்பின் தேவைகளுக்குச் சேவை செய்வதாகவுமே இருந்து வருகிறது.

கம்யூனிச சமூகத்தின் உயர்ந்த நிலையில் வர்க்கங்களற்ற சமூகத்தில் மட்டுமே கலை எந்தக் கட்டுப்பாடுகளுமின்றி சுதந்திரமாக இயங்கமுடியும். அப்போதும் சகமனித உறவுகளின் மேன்மைக்காகவே வெளிப்படும். அதுவரை கலை விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் அந்தந்தக் காலச் சமூகத்துக்குக் கட்டுப்பட்டதாக இருக்கும்.

📚 எழுதியவர்:

உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *