ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 14:-
கலையின் ரகசியம்
– உதயசங்கர்
கலை வெறும் பொழுதுபோக்கு சாதனமல்ல. ஆனால் பொழுதுபோக்குச் சாதனம் தான். கலை பணம் சம்பாதிப்பதற்கான வழியல்ல. ஆனால் கலையினால் பணம் சம்பாதிக்க முடியும். கலை புகழ்பெறுவதற்கான கருவியல்ல. ஆனால் கலையினால் புகழ் வந்து சேரும். கலை பல்வேறு நிர்ப்பந்தங்களினால் உருவாக முடியுமா? நிர்ப்பந்தங்களும் கலையை உருவாக்க முடியும். பணத்துக்காக, புகழுக்காக, தன்னை முன்னிறுத்துவதற்காக, தன்னுடைய முக்கியத்துவத்தை உலகிற்குப் பறை சாற்றுவதற்காக, தன்னை நிரூபிப்பதற்காக, சமகாலச்சமூகத்தில் மனநிலை பிறழாமலிருப்பதற்காக, தன் வாழ்வைப் பகிர்ந்து கொள்வதற்காக, அபூர்வங்களின் அனுபவங்களைச் சொல்வதற்காக, இதுவரை பேசப்படாத உலகத்தைச் சொல்வதற்காக, குரலற்றவர்களின் குரலாக, சமூக மாற்றத்துக்காக, சாமானியர்களை விட தன்னை உயர்ந்தவன், தன்னை இந்த உலகின் வழிகாட்டி இப்படி ஆயிரமாயிரம் புறக்காரணங்கள் கலை இலக்கியத்தைப் படைப்பதற்குத் தூண்டுதலாக இருக்கலாம்.. ஆனால் இந்தப் புறக் காரணங்களில் மட்டும் ஒரு படைப்பு கலையாகி விடுவதில்லை. இந்தக் காரணங்களில் படைப்பூக்கத்தின் ஊற்றுக்கண் இருக்கலாம். அதை அறிந்து கொள்வதால் ஒரு படைப்பாளியின் உளவியலைப் புரிந்து கொள்ளலாம். அதற்கு மட்டுமே இந்தக் காரணங்கள் பயன்படும்.
அடுத்தது, ஒரு படைப்பாளி ஒரு குறிப்பிட்ட தத்துவத்தைப் பின்பற்றுபவராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சியின் ஆதரவாளராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சார்ந்தவராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட பாலினத்தைச் சேர்ந்தராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட மதத்தைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவராக இருக்கலாம். ஒரு குறிப்பிட்ட மொழி பேசுபவராக இருக்கலாம்.
இந்தப் பிரிவுகளில் அவர் எதைச் சார்ந்தவராக இருந்தாலும் அவருடைய சார்புநிலைக்காகப் படைப்புகள் வாசிக்கப்படுவதில்லை. அல்லது சார்புநிலையினால் படைப்பு கலையாகி விடுவதில்லை. முற்போக்கான அரசியலும் தத்துவசிந்தனைகளும் இருப்பதினாலேயே அந்தப் படைப்பாளிகளின் அத்தனை படைப்புகளும் முற்போக்கானவையாகவோ கலைப்படைப்பாகவோ உருவாகிவிடும் என்று எந்த உத்திரவாதமுமில்லை. அதேபோல பிற்போக்கான அரசியலும் சமூகப்பார்வையும் இருப்பதினாலேயே அந்தப் படைப்பாளிகளின் அத்தனை படைப்புகளும் பிற்போக்கானவையென்று முத்திரை குத்தி விட முடியாது. அதேபோல ஒருவர் ஆணாக இருப்பதினாலோ, பெண்ணாக இருப்பதினாலோ, மாற்றுப்பாலினத்தவராக இருப்பதாலோ, மாற்றுத்திறனாளியாக இருப்பதாலோ, தலித்தாக இருப்பதாலோ, விளிம்புநிலைச் சமூகத்தினராக இருப்பதாலோ கலை எந்தச் சலுகையையும் அளிப்பதில்லை. அந்தப் படைப்புகளோ, படைப்பாளிகளோ கலையிடம் எந்தச் சலுகையும் கோரவும் முடியாது.
இவையனைத்துமே ஒரு வகையில் படைப்பாளியின் பின்னணியாக இருந்து படைப்பெனும் உயிர் முளைக்க நிலமாக இருக்கலாம். உரமாக இருக்கலாம். ஒளிச்சேர்க்கைக்கு உதவும் சூரியக்கீற்றுகளாக இருக்கலாம். மகரந்தச்சேர்க்கைக்கு உதவும் பூச்சிகளாக இருக்கலாம். ஆனால் முளைத்து துளிர் விட்டு இலைகளும் கிளைகளும் பூக்களும் காய்களும் கனிகளும் கொண்ட முழுமையான ஆகிருதி தான் ஒரு படைப்பு.
அந்த ஆகிருதியைத் தான் வாசகர் பார்க்கிறார். வாசிக்கிறார். உணர்கிறார். அனுபவிக்கிறார். எனவே கலையின் வடிவமே அதன் உயிர். கலையின் உயிரே அதன் வடிவம். இரண்டுக்குமிடையிலான இயக்கவியலே படைப்புக்கு உயிரும் உடலும் தருகிறது. எப்போது ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்தை, அதன் இயங்கியலை, அங்கே நிலவும் தத்துவங்களை, அரசியலை, பண்பாட்டை, இலக்கியத்தை, நேர்மையாக, எந்தச் சார்பிநிலையுமின்றி எதிர்கொண்டு அணுகி ஆராய்ந்து தனக்கான கலைக்கோட்பாட்டை உருவாக்குவதும் அதைத் தன் படைப்புகளின் வழியே தனித்துவமானதாக உருவாக்கும்போது அந்தப் படைப்பு தனித்துத் தெரியும்.
கலையின் ரகசியம் வெளிப்படுத்துதலில் தான் இருக்கிறது. தன்னை வெளிப்படுத்தல், தான் சார்ந்த சமூகத்தை வெளிப்படுத்தல், சமூகத்தின் இயங்கியலை வெளிப்படுத்தல், சமூகத்தில் எந்தப் பகுதியினர் பாதிக்கப்பட்டிருக்கிறார்களோ அவர்களுடைய துயரங்களை வெளிப்படுத்தல், இவற்றுக்குப் பின்னாலுள்ள உண்மைகளை வெளிப்படுத்தல் அந்த உண்மையை நேர்மையாக வெளிப்படுத்தல் இவற்றில் தான் கலையின் ரகசியம் ஒளிந்திருக்கிறது.
ஒரு படைப்பாளி யாராக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர் தான் வாழும் சமூகத்தை உற்றுநோக்கி புறத்தோற்றத்தைத் தாண்டிய அகத்தில் இயங்கும் உண்மைகளை, சாதாரணத்தோற்றுத்துக்குப் பின்னாலுள்ள அசாதாரணங்களை நேர்மையாகச் சொன்னாலே போதும். அந்தப் படைப்பு ஒளி மிக்கதாக மாறிவிடும். அந்த ஒளி வாசகரின் மனதிலும் ஒளியேற்றும்.
📚 எழுதியவர்:

உதயசங்கர்
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

