ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 15 - உதயசங்கர் | Understanding a Literary Work Tamil Article Series 15 By Udhayasankar | கலை கலைக்காவே – சில குறிப்புகள் | www.bookday.in

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 15:- கலை கலைக்காவே – சில குறிப்புகள் | உதயசங்கர்

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 15:-

கலை கலைக்காவே – சில குறிப்புகள்

– உதயசங்கர்

பதினெட்டாம் நூற்றாண்டிலேயே கலையில் பிரச்சாரம் இருக்கக்கூடாது. கலை கலைக்காகவே படைக்கப்படவேண்டும். கலைக்கு எந்த நோக்கமும் தேவையில்லை. கலை தூய்மையானதாக இருக்கவேண்டும் தூயகலையே கலைஞனின் இலட்சியம் என்ற கோட்பாடுகள் உருவாகின. இந்தக் கோட்பாடுகளின் உருவான காலகட்ட மென்பது நிலவுடைமைச் சமூகம் சிதைந்து புதிய முதலாளித்துவ சமூகம் உருவாகிக் கொண்டிருந்த காலம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். நிலவுடமைச்சமூகத்தில்  மன்னர்களுக்காகவும், கடவுளர்களுக்காகவும் மட்டுமே படைக்கப்பட்டுக் கொண்டிருந்தன. அரசர்களும் கடவுளர்களும் கலையைச் சிறை வைத்திருந்தனரென்று சொல்லலாம். எனவே கலை மன்னர்கள், பிரபுக்கள், உயர்குடிகள், புலவர்களின் தனிச்சொத்தாக இருந்தது. சாமானிய மக்களைப் பொறுத்தவரை வாய்மொழி இலக்கியமே அவர்களுடைய கலையாக இருந்தன. எப்போதும் போல எதெல்லாம் அரசின் ஆதரவுடன் இயங்குகிறதோ அதெல்லாம் உயர்ந்ததென்றும் அப்படி அரசின் ஆதரவில்லாத கலைகள் தாழ்ந்த தென்றும் கருதப்பட்டன. இப்படியான காலகட்டத்தில் முதலாளித்துவம் நிலவுடமைச் சமூகத்தைத் தகர்த்து ஒரு புதிய சமூக ஒழுங்குமுறையைக் கொண்டு வருகிறது.

சமயம், கடவுளர், அரசர்களின் சிறைக்கொட்டடியில் ஏவல்பணி செய்து கொண்டிருந்த அத்தனை அறிவுத்துறைகளின் விலங்குகளையும் உடைத்து அவற்றை விடுதலை செய்கிறது முதலாளித்துவம். அப்படி முதலாளித்துவம் விடுதலை செய்தத தற்கான காரணமென்னவென்றால் முதலாளித்துவத்தின் அடிப்படை இயங்கியல் கொட்பாடுகளான உற்பத்தி, உழைப்பு, சுரண்டல், லாபம் இவற்றுக்கு மிக அத்தியாவசியமான ஜனநாயகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். உழைப்பைச் சனநாயகப்படுத்தும்போது தான் சுரண்டலையும் சனநாயகப்படுத்த முடியும். அப்போது தான் உபரியும், லாபமும் அபரிமிதமாகக் கிடைக்கும். பழைய கெட்டிதட்டிப்போன நிலவுடமைச் சமூகத்தில் அனைத்து அறிவுத்துறைகளும் குறுகிய எல்லைகளுக்குள் கட்டுப்படுத்தப்பட்டிருந்தன. அவற்றை விடுதலை செய்தால் மட்டுமே புதிய எல்லைகளை உருவாக்கமுடியும்.

உதாரணத்துக்கு இந்தியாவைப் பொறுத்தவரை, ஆதியில்  நிலவுடமைச் சமூகத்தின் முன்னேற்றத்துக்குத் தேவையான உழைப்புச்சக்திகளின் தேவைக்காக வர்ணாசிரமக்கோட்பாடுகள் உருவாக்கப்பட்டாலும் அந்தக் கோட்பாடுகளே அறிவுத்துறைகளின் முன்னேற்றத்துக்கும் தடையாக இருந்தன. உலகம் முழுவதுமே இனம், மொழி, சமயம், அரசு ஆகியவற்றின் ஆதிக்கம் அறிவுத்துறைகளின் புதிய கண்டுபிடிப்புகளை நிராகரித்தது. கலிலியோ, புருனோ போன்றவர்களுக்கு நடந்த கொடுமைகளை உதாரணமாகச் சொல்லலாம். எனவே முதலாளித்துவம் அனைத்து அறிவுத்துறைகளையும் விடுதலை செய்வதை முன்நிபந்தனையாகக் கொண்டிருந்தது. வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால், டார்வின், ஹம்போல்ட், மார்க்ஸ், ஏங்கெல்ஸ், நியூட்டன், ஃஃப்ராய்டு போன்ற மேதைகள் உருவான காலம் தான் இன்றுவரை அறிவுத்துறைகளின் விடுதலையின் உச்சம் எனலாம்.

மற்ற அறிவுத்துறைகளைப்போலவே கலையும் நிலவுடமைச் சமூகத்துக்குப் பணி செய்து கொண்டிருந்த து. அதாவது கலை கடவுளுக்காக, கலை அரசருக்காக, அவர்கள் இந்தச் சமூகத்துக்காகவே அதிகார த்திலிருப்பதால் அவர்களுடைய அரச நீதிகளை மக்களிடம் கொண்டுசெல்வதற்காக, அதனால் கலை சமூகத்துக்காக என்று இருந்த நிலைமையை முதலாளித்துவம் கலை கலைக்காக, அறிவியல் அறிவியலுக் காக, த த்துவம் த த்துவத்துக்காக, என்ற கோட்பாடுகளை உருவாக்கி மாற்றியது. எனவே கலை கலைக்காகவே என்ற கோட்பாடு தோன்றும்போது அந்தக் காலகட்ட த்தில் முற்போக்கானக் கோட்பாடாகவே தோன்றியது என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும்.

கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டை முன்வைத்த போது கலை பரவலானது. அனைவரும் கலையைப் படைக்கமுடியும். யாருக்கும் சேவகம் செய்ய வேண்டியதில்லை. யாருக்கும் அஞ்சவேண்டியதில்லை. சுதந்திரமாக தாங்கள் விரும்பியதைப் படைக்க முடியும். கலையின் சிறகுகளை விரித்து தங்கள் விருப்பம்போல பறக்கலாம். என்பது போன்ற நிலையை உருவாக்கியது முதலாளித்துவம். இது அனைத்து அறிவுத்துறைகளுக்குமே பொருந்தும். முதலாளித்துவம் பிறக்கும்போது சனநாயகம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற கோட்பாடுகளை முன்வைத்ததென்றாலும் அதனுடைய அடிப்படை இயங்கியல் அவற்றையும் போலியான வெற்று முழக்கங்களாக மாற்றிவிட்டதென்பதையும் கவனத்தில் கொள்ளவேண்டும். அதாவது சனநாயகம் இருக்கிறது ஆனால் இல்லை. சமத்துவம் இருக்கிறது ஆனால் இல்லை. சகோதரத்துவம் இருக்கிறது ஆனால் இல்லை. என்பதைப் போல கலை கலைக்காகவே, அறிவியல் அறிவியலுக்காகவே என்று சொல்லிக் கொண்டே மறைமுகமாக அவற்றைக் கட்டுப்படுத்துகிறது. தன்னுடைய லாபவெறிக்கு அத்தனை அறிவுத்துறைகளையும் பலியாக்குகிறது. நேரடியாகவும் மறைமுகமாகவும் கலைஞர்களுக்கும் அறிவியலறிஞர்களுக்கும் அழுத்தம் கொடுக்கிறது. தன்னுடைய இயக்கவியலுக்கு ஏற்ற கண்டுபிடிப்புகளை, படைப்புகளைப் படைக்கச் சொல்கிறது. அப்படியென்றால் தான் பணம், புகழ் கிடைக்குமென்று சொல்லாமல் சொல்கிறது. கலையை மட்டுமல்ல அத்தனை அறிவுத்துறைகளையும் விற்பனைப்பண்டங்களாக மாற்றிவிட்டது. ஆனால் இப்போது தோன்றும்போது இருந்த அர்த்தத்தில் கலை கலைக்காகவே என்ற கோட்பாடு இல்லை. அது பிறந்தபோது இருந்த முற்போக்கான அம்சத்தை இழந்து விட்டது.

எப்போது முதலாளித்துவம் தன் கருப்பையிலிருந்தே தொழிலாளிவர்க்கத்தை உருவாக்கியதோ அப்போதே கலை கலைக்காகவே என்ற கோட்பாட்டின் முற்போக்கான பணி முடிந்து விட்டது. கலை மக்களுக்காக என்ற புதிய கோட்பாடும் முதலாளித்துவத்தின் வளர்ச்சிநிலையில் உருவான புதிய முற்போக்கான கோட்பாடு தான். முதலாளித்துவம் உற்பத்தியின் பலன்களிலிருந்து மட்டுமல்ல தொழிலாளிகளை அந்நியப்படுத்திய போதே மற்ற அறிவுத்துறைகளையும் அந்நியப்படுத்தி விட்டது. நிலவுடமைச் சமூகம் போலவே அறிவுத்துறைகளைக் கட்டுப்படுத்தி தனக்கு ஏவல் செய்ய வைக்கிறது. அதற்காகவே கலை கலைக்காகவே என்ற முகமூடியை அணிந்து கொள்கிறது.

அந்த முகமூடிக்குப் பின்னால் முதலாளித்துவத்தின் லாபவெறி கொண்ட கோரப்பற்கள் மறைந்திருக்கின்றன. அதன் கரங்கள் பழைய நிலவுடமைச் சமூகத்தின் எலும்புக்கூட்டுக்கைகளுடன் கரம் கோர்த்திருக்கின்றனவென்பதை படைப்பாளிகள் புரிந்து கொள்ள வேண்டும்.

📚 எழுதியவர்:

உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *