ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 3 - உதயசங்கர் | Understanding a Literary Work Tamil Article Series 2 By Udhayasankar | படைப்பின் விதை | www.bookday.in

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 3:- படைப்பின் விதை | உதயசங்கர்

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 3:-

படைப்பின் விதை

– உதயசங்கர்

ஒரு எழுத்தாளர் தன்னுடைய படைப்பின் விதையை எங்கே கண்டுபிடிக்கிறார்? அந்த விதையை எப்படி கண்டுபிடிக்கிறார்? அந்த விதையிலிருந்து முளைவிடும் படைப்பை  பிரம்மாண்டமான விருட்சமாக தன்னுடைய கலையெனும் ரசவாதத்தால் மாற்றுகிறார்? ஒவ்வொரு எழுத்தாளரும் படைப்பிற்கான விதைகள் கலைஞன் தன்னுடைய வாழ்வில் எதிர் கொள்ள நேரிடும் அனுபவநிகழ்வுகளில் சில அநுபவப்பொறிகள்  மின்னலெனப் பாதிப்பை ஏற்படுத்துகின்றன. இந்தப் பாதிப்பை யாரும் அனுமானிக்கமுடியாது. ஒரே மாதிரியான அனுபவங்கள் பாதிக்குமென்றோ, பாதிக்க வேண்டுமென்றோ கருதமுடியாது. ஏனெனில் எழுத்தாளரென்ற சமூக ஜீவியின் சூழல், வர்க்கம், கூருணர்வு, வாழ்நிலை, அப்போதைய மனநிலை இப்படிப் பல்வேறு வகையான நுண்கூறுகளே அதைத் தீர்மானிக்கிறது.

பாதித்த அனுபவப்பொறிகள் ஆழமாக மனதில் கருக்கொள்கின்றன. கருக் கொண்ட அனுபவப்பொறியின் வளர்ச்சியின் வேகமும், ஆழமும் ஒவ்வொரு எழுத்தாளருக்கும் வேறுபடும். படைப்பாளிக்குப்  படைப்பாற்றலில் உள்ள தீவிர வேட்கை, வாசிப்பு அநுபவம், அவனுடைய அழகியல் கோட்பாடு, இவற்றைப் பொறுத்தே அமையும். மனதில் உத்தேசமான வடிவம் பெற்ற அந்தக் கருப்பொருள் அதன் வெளிப்பாட்டுக்குத் தேவையான உத்வேகம் புறவயமாகவோ, அகவயமாகவோ, கிடைக்கும் போது எந்த நிலையிலும், எந்த நேரத்திலும் நிகழலாம். அப்படி மனதில் முழுமையாக உருக்கொள்ளும் முன்போ, எழுதுவதற்கான உத்வேகம் கிடைக்காமல் இயந்திரகதியாகவோ படைப்பை எழுத முயற்சித்தால் அது அரைகுறைப் பிரசவமாகவோ, பிரசவமாகாமலோ போய்விடும் ஆபத்தும் நிகழும். முழுமையான உத்வேகமே காகிதத்திலோ, கணிணியிலோ பதிவு செய்யும் செயலுக்கு உந்தித் தள்ளுகிறது. இந்தப் புறவயமான வெளிப்பாட்டுக்கு முன்னரே மனசுக்குள் பலமுறை வீரியமிக்க மொழியலகுகளை மாற்றி, மாற்றிப் போட்டு எழுதிப் பார்த்தபிறகே காகிதத்தில் எழுதும் துணிவு பிறக்கிறதென்பதை மறந்து விடக் கூடாது.

கலைஞன் சுய அநுபங்களிருந்தோ, கேள்விப்பட்ட விஷயங்களிலிருந்தோ, அறிவனுபவங்களிலிருந்தோ, புராணிக, சரித்திர, தொல்கதை வாசிப்பனுபவங்களிலிருந்தோ, நாட்டார் கதைகளிலிருந்தோ, தத்துவார்த்த அனுபவங்களிலிருந்தோ, தன் படைப்புக்கான உத்வேகத்தைப் பெறலாம். ஆசியாவின் மிகச் சிறந்த சிறுகதை எழுத்தாளர்.சாதத் ஹசன் மண்ட்டோ அவருடைய பல கதைகளுக்கான உத்வேகத்தைக் கேள்வியனுபங்களிலிருந்தும், பத்திரிகைச் செய்திகளிலுருந்தும் பெற்றிருக்கிறார். ஆனால் அந்த உத்வேகம், படைப்பின் சிறு பொறியை ஊதி வளர்த்துப் பற்றியெரியச் செய்யும்வரை எழுத்தாளர் காத்திருக்கவேண்டும்.

ஒரு முட்டையை அடைகாக்கும் கோழியின் பொறுமையும் அர்ப்பணிப்பும் ஒரு எழுத்தாளருக்கு அவசியம். அப்போது உயிர்த்துடிப்பும் அழகும் மிளிரும் படைப்பாக வெளிவரும். அவசரப்பட்டோ, வேறு காரணங்களுக்காகவோ படைப்பை வெளிப்படுத்தினால் போலியான படைப்பாகவோ அல்லது படைப்பல்லாத படைப்பாகவோ இருக்கும். அந்தப் படைப்பு தரும் அனுபவத்திலிருந்தே முழுமையான படைப்பாக வெளிவந்திருக்கிறதா? அல்லது அரைகுறையாக வெளிவந்திருக்கிறதா என்பதை எந்த எளிய வாசகனாலும் கண்டுபிடித்து விட முடியும். இதற்கு ஒரளவு வாசிப்பனுபவமும், நுண்ணுணர்வும் இருந்தாலே போதுமானது.

அதனால் எழுத்தாளர் எச்சரிக்கையுடனும் கவனத்துடனும் தங்களுடைய படைப்பின் மீதான மரியாதையுடனும் படைப்பை உருவாக்க வேண்டும். படைப்பின் விதைக்கலம் நாம் வாழும் வாழ்க்கை தான். சமூகமே படைப்புக்கான உத்வேகத்தைத் தருகிறது. ஆனால் படைப்பை உருவாக்குகிற சமூகப்பொறுப்பு தனிமனிதரான எழுத்தாளரிடம் இருக்கிறது. ருஷ்யாவில் நிகழ்ந்து கொண்டிருந்த கொந்தளிப்பானச் சூழ்நிலையே கார்க்கியின் தாய் நாவல் வெளிவர ஏதுவாக இருந்தது. அந்த நாவல் அப்படியே கொந்தளிப்பான சூழ்நிலையைத் த தரூபமாகப் பிரதிபலித்ததாலேயே அதற்கு பௌதீக சக்தி கிடைத்தது. எனவே தான் படைப்பாளி தன் காலத்தை உற்று நோக்குபவனாக இருக்க வேண்டும். அத்துடன் சமூக இயக்கவியலைத் தெரிந்து கொண்டவராக இருக்க வேண்டும். சமூகத்தின் பல்வேறு தத்துவ நோக்குகள் நிலவினாலும் தான் யார் பக்கம் நிற்கிறோம். யாருக்காக எழுதுகிறோம். யாராக இருந்து எழுதுகிறோம். இந்தக் கேள்விகளை ஒவ்வொரு படைப்பிலும் கேட்டுக் கொள்ள வேண்டும். எழுத்தாளரே அறியாமல் பிற்போக்குத்தனமான கருத்தியலுக்கு ஆதரவாகவோ, ஆதிக்க சக்திகளுக்கு ஆதரவாகவோ, ஆளும் வர்க்கத்துக்கு ஆதரவாகவோ, தன்னுடைய படைப்பை எழுதிவிடும் ஆபத்து உண்டு என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

எல்லாவெளிப்பாடும் அடிப்படையில் கருத்துப்பகிர்தல் அல்லது உணர்வுப்பகிர்தல் தான். கருத்தையோ உணர்வையோ பரப்புரை செய்வது தான். ஆனால் அந்த வெளிப்பாட்டுமுறையின் அடிப்படைத் தர்க்கநியதிகள் ஒவ்வொரு வடிவத்துக்கும் மாறுபடும். அதுவே அந்த வெளிப்பாட்டை செய்தி எனவும், பேச்சு எனவும், கவிதை எனவும், கதை எனவும், இன்ன பிற கலைவடிவங்கள் எனவும் வகை பிரிக்கிறது. அப்படியென்றால் கலைப்படைப்பில் கலைவிதிகள் தொழிற்பட்டிருத்தல் வேண்டும்.

அப்போது தான் அது கலைப்படைப்பாக உணரப்படும். படைப்பு எளிமையானதாக இருக்க வேண்டும். ஆனால் இது அனைத்துப் படைப்புகளுக்குமான அடிப்படை விதியாகக் கொள்ள முடியாது. ஏனெனில் எழுத்தாளர் இரண்டு தண்டவாளங்களில் தன்னுடைய கலைரயிலைத் தடம் புரளாமல் ஓட்ட வேண்டியவராக இருக்கிறார். பரவலான வாசகர்களின் வாசிப்பு எனும் ஒரு தண்டவாளமும், தன்னுடைய கலையின் புதிய முயற்சிகளும் பாய்ச்சல்களையும் கொண்ட இன்னொரு தண்டவாளமும் தான் அவை. இந்த த் தண்டவாளங்களின் மீது தன்னுடையத் தனித்துவமான கலைவிதிகளைக் கொண்ட ரயில்பெட்டிகளை இணைத்து கலைக்கோட்பாடென்னும் ரயில் இஞ்சினாக இருக்க வேண்டியவராகிறார் எழுத்தாளர்.

மொழியின் மீதும், தன் கலைச்சிந்தனைகளின் மீதும் ஆளுமையும் தெளிவும் சித்திக்கும்போது படைப்பில் எளிமை உருவாகும். கலையில் எளிமை என்பது ஒரு கலைச்சிந்தனைப்பள்ளி தானென்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். எளிமையாக எழுதப்படுவதெல்லாம் கலைப் படைப்பாகி விடாது என்ற எச்சரிக்கையுணர்வும் தேவைப்படுகிறது.

ஒரு படைப்பு படைக்கப்படும்போது தன்னுணர்வுப்பூர்வமானது. அறிவும் உணர்வும் ஊடாடி நெசவு செய்கிற காரியமாக படைப்பு திகழ்கிறது. அனுபவப்பொறி பற்றித் தீயாய் எரியும்வரை வேண்டுமானால் தன்னுணர்வும், தன்னுணர்வுமற்ற நிலையில் படைப்பு தன் உருவத்தையும் உள்ளடக்கத்தையும் உருவாக்கிக் கொண்டிருக்கலாம். ஆனால் அதுவுமே முன்னனுபவங்களின், வாசிப்பனுபபவங்களின் சாரம் ஊறிக் கிடக்கும் ஊற்றின் கண் தான். மற்றபடி, கலையென்பதே ஒரு அநுபூதிநிலை, தெய்வீக உணர்வு, ஞானவெளிச்சம் என்பதெல்லாம் மூட நம்பிக்கைகளே.

எல்லா அறிவுத்துறைகளையும் போலவே படைப்பிலக்கிய அறிவுத்துறையிலும் படைப்பின் நுட்பங்கள் குறித்தான ஆய்வும், அடிப்படை அலகுகள் குறித்த உரையாடலும் அவசியம். அப்போது தான்  ஒரு படைப்பாளி படைப்பின் சூட்சுமங்களை விளங்கிக் கொள்ளமுடியும்.

📚 எழுதியவர்:

உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *