ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 6 - உதயசங்கர் | Understanding a Literary Work Tamil Article Series 6 By Udhayasankar | எது கலை? | www.bookday.in

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 6:- எது கலை? | உதயசங்கர்

ஒரு படைப்பை அறிந்து கொள்ளுதல் 6:-

எது கலை?

– உதயசங்கர்

மனிதனின் கண்டுபிடிப்புகளில் ஆகச்சிறந்த கண்டுபிடிப்பு கலை தான். மற்றெல்லா அறிவுத்துறைகளுக்கும் அளவுகோல்கள், வரையறைகள், இலக்குகள், பரிசோதனைகள், முடிவுகள் இருக்கின்றன. அந்த அலகுகளுக்குள் வராவிட்டால் அந்தக் கண்டுபிடிப்புகளை அறிவுத்துறை ஏற்றுக் கொள்வதில்லை. நிராகரித்து விடும். மீண்டும் மீண்டும் முயற்சித்து அந்த அலகுகளுக்குள் நிறுவிய பிறகே கண்டுபிடிப்புகளை  அங்கீகரிக்கிறது. ஆனால் கலைக்கு அப்படியான அளவுகோல்களேதும் இருக்கிறதா? இப்படி இப்படி இருந்தால் கலை என்று சொல்லத்தக்க அளவுகோல்கள், வரையறைகள், இலக்குகள், பரிசோதனைகள், முடிவுகள் இருக்கின்றனவா? ஒரு படைப்பை இப்படிப் பட்ட சோதனைகளுக்கு யார் உள்ளாக்குவது? யார் அது கலைப்படைப்பு தான் இல்லை கலைப்படைப்பில்லை என்று தீர்ப்பு சொல்வது? யார் அந்த ஐ.எஸ்.ஐ. முத்திரையை வைத்திருப்பவர்கள்? யார் அவர்களுக்கு ஐ.எஸ்.ஐ.முத்திரையைக் கொடுத்தார்கள்? முத்திரை பதிக்கும் அதிகாரத்தை யார் அவர்களுக்குக் கொடுத்தார்கள்? என்ற கேள்விகள் தோன்றுவது இயல்புதானே.

குழந்தைகள் நடக்கத் தொடங்குமுன்பாக ஆடுகிறார்கள், பேசத் தொடங்குமுன்பாகப் பாடுகிறார்கள், எழுதத் தொடங்குமுன்பாக வரைகிறார்கள் என்று உளவியலாளர் பிலிசியா ராத் கூறுகிறார். கலையே மனிதனின் ஆதாரமாக இருக்கிறது. மனிதனின் ஒவ்வொரு செயலிலும் கலை இருக்கிறது. மனிதனின் உள்ளடக்கத்தைத் தீர்மானிப்பதில் கலை மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. இன்னும் சொல்லப்போனால் மனிதனை மனிதனாக மாற்றுவதில் கலையின் பங்களிப்பு மகத்தானது. பிறந்ததிலிருந்தே மனிதனின் ஒவ்வொரு செயலிலும் கலையின் நுண்கூறுகள் இருப்பதைக் காணலாம். கலை மனிதனின் ஆன்மதேவைகளைப் நிறைவு செய்வது மட்டுமல்லாமல் , அவன் வாழும் சமூகத்தின் பண்பாட்டை, அறவிழுமியங்களை, கற்பனையாற்றலை, மனித மனதில் பதிவேற்றுகிறது.

மனித வாழ்க்கையே கலையுடன் தொடர்புடையது தான். அதுமட்டுமல்ல. ஒருவருக்குக் கலையாகத் தெரிவது இன்னொருவருக்குச் சாதாரணமாகத் தெரிகிறது. ஒருவருக்குச் சாதாரணமாகத் தெரிவது மற்றவருக்குக் கலையாகத் தெரிகிறது. அப்படியென்றால் கலை யாருடைய எந்த அளவுகோல்களுக்குள்ளும் அடங்காது என்பது தெளிவாகிறது. சரி. கலை என்று எதைச் சொல்லலாம்?

கலை தண்ணீரைப் போன்றது. யார் பயன்படுத்துகிறார்களோ? எதற்காகப் பயன்படுத்துகிறார்களோ? அதற்கேற்ப பயன்படுகிறது எனலாம். மார்ட்டின் ஹைடேக்கர் என்ற இருத்தலியல் தத்துவவாதி கலையைக் குறித்து எழுதும்போது அது இருத்தலின் உண்மையைச் சொல்லும் தனித்துவம் கொண்ட து என்று சொன்னார். ஆனால் அவரே தான் ஹிட்லரின் நாஜிக்கட்சியில் உறுப்பினரானாரென்பது மட்டுமல்ல யூதர்களுக்கெதிராக பரப்புரையும் செய்தார். அவர் காலத்தில் நாஜிக்கட்சியில் நோபல் பரிசு பெற்ற ஜெர்ஹாத் ஹேம்ப்ட்மன், இல்னா சைடல், ஆக்னஸ் மைஜைல், ஹன்ஸ் கரோஸ்ஸா, ஹன்ஸ் ஜோஸ்ட் போன்ற மிகச் சிறந்த கலைஞர்களும் எழுத்தாளர்களும் உறுப்பினர்களாக இருந்தார்கள். எனவே கலை அதைப் பயன்படுத்துபவரின் நோக்கத்துக்கேற்ப கொலைவாளாகவோ, இசைக்கருவியாகவோ, உழவு ஏராகவோ மாறுகிறது. அப்படியென்றால் கலைக்கென்று தனியான குணமில்லையா? என்ற கேள்வி வருகிறது.

கலை இந்த வாழ்க்கையைப் பளபளப்பாக அலங்காரப்படுத்திச் சொல்வதற்காக படைக்கப்படுகிறதா? யதார்த்தத்துக்குப் புறம்பான கற்பனையை உருவாக்கப் பயன்படுகிறதா? மனிதர்களை மனிதர்களுக்கே எதிரிகளாக்கப் படைப்படுகிறதா? கலை யார் கையில் வேண்டுமானாலும் எந்த நோக்கத்துக்காகவும் பயன்படுமென்றால் அது ஆபத்தானதல்லவா? அப்படியென்றால் கலை வெறும் தொழில்நுட்பம் மட்டும் தானா? கலையின் தொழில்நுட்பம் தெரிந்து கொண்டால் எதற்காக வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாமே. இதைத் தெளிவுபடுத்த நாம் கலையின் ஊற்றுக்கண்ணைத் தேடிப் போக வேண்டும்.

மனிதன் தன்னுணர்வுபூர்வமாகக் கலையைப் படைக்கத் தொடங்கும்போது உண்மையைத் தெரிந்து கொள்ளப் படைத்தான். உண்மையைத் தேடும் சிந்தனையின் பயணத்தில் கற்பனையின் ஆற்றலைப் பயன்படுத்தினான். அதனால் தான் கலை ஒரே நேரத்தில் இன்பமாகவும் உண்மையைக் கண்டறியும் ஒளிவிளக்காகவும், உலகைப் புரிந்து கொள்ளும் அறிவாகவும்,. உலகை மாற்றும் உணர்வாகவும் திகழ்கிறது.

இந்த உலகில் படைக்கப்படும் படைப்புகளனைத்தும் கலையல்ல. எந்தப் படைப்பு யதார்த்த உலகின் உண்மையைக் கலை அழகுடன் மனதை வசியம் செய்யும் விதமாகப் படைக்கப்படுகிறதோ அதுவே கலை. ஏனெனில் அந்தக் கலை மனிதகுலத்தின் மீது அக்கறை கொள்கிறது. அன்பு செலுத்துகிறது. அறிவூட்டுகிறது. மனசாட்சியாக இருக்கிறது. மனிதன் தன்னுடைய எதிர்காலத்தைக் கட்டமைக்க வழிகாட்டுகிறது.

உண்மையைத் தேடும் மனிதனின் நெடிய பயணத்தில் கலை அவனுடைய மனக்கண்ணாடியாகத் திகழ்கிறது.

எந்தப் படைப்பில் உண்மையைத் தேடும் முயற்சி இருக்கிறதோ அதுவே கலை.

📚 எழுதியவர்:

உதயசங்கர்

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *