Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  – நிஷித் சௌத்ரி



உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்காக ஆறு லட்சம் கோடி ரூபாய் திரட்டப்படும் என்று கூறி மோடி தலைமையிலான பாரதிய ஜனதா கட்சி அரசு சமீபத்தில் நான்கு வருட தேசிய பணமாக்கல் திட்டத்தை (NMP) அறிவித்துள்ளது. உண்மையில் நாட்டில் செயல்பட்டு வருகின்ற பெரும் உள்கட்டமைப்பு சொத்துக்களை தனியார் பெருநிறுவனங்கள், வெளிநாட்டு பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட பெரிய வணிக நிறுவனங்களிடம் ஒப்படைப்பதையே இந்த தேசிய பணமாக்கல் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம் மக்களின் பணத்தில் கட்டியெழுப்பப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்தி பெரும் பணத்தைச் சுருட்டிக் கொள்ள பாரதிய ஜனதா அரசாங்கத்தின் பெருநிறுவனக் கூட்டாளிகள் அனுமதிக்கப்படுவார்கள்.

நம் நாட்டில் தேசிய சொத்துக்களை தனியார்மயமாக்குகின்ற செயல்முறை 1991ஆம் ஆண்டில் காங்கிரஸ் அரசால் அதிகாரப்பூர்வமாகக் கொண்டு வரப்பட்ட புதிய தாராளவாதக் கொள்கை மூலம் தொடங்கி வைக்கப்பட்டது. அந்தக் கொள்கைகளை மாறுபட்ட அளவு தீவிரத்துடன் அடுத்தடுத்து மத்தியில் ஆட்சிக்கு வந்த அரசுகள் பின்பற்றி வந்திருக்கின்றன. பல வழிகளில் அந்தக் கொள்கை தொடர்ந்து வந்துள்ளது. சமீபத்தில் அறிவிக்கப்பட்டுள்ள இந்த தேசிய பணமாக்கல் திட்டம் தேசிய சொத்துக்களை தனியார் நிறுவனங்கள், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு நிறுவனங்கள் கொள்ளையடிப்பதை ஊக்குவிக்கும் நோக்கம் கொண்டதாக மட்டுமே உள்ளது. எந்த விலை கொடுத்தாவது, எந்த வகையிலாவது தனியார்மயமாக்கலை மேற்கொள்வது என்பது மோடி ஆட்சியின் கீழ் இருக்கின்ற பாஜக அரசாங்கத்தின் ஒட்டுமொத்த அடையாளமாகவே மாறியிருக்கிறது.

தொழிலாளர் வர்க்கத்தின் நிலையான, தொடர்ச்சியான ஒன்றுபட்ட தலையீடுகள் மற்றும் பிற காரணிகளும்  சேர்ந்து பல துறைகளில் தனியார்மயமாக்கலுக்கான தடைகளை உருவாக்குவதில் முக்கியமான பங்கை வகித்து தனியார்மயமாக்கல்  நடைமுறையின் வேகத்தைத் தணித்தன. அவ்வாறான அரசியல் பொருளாதார சூழ்நிலையில் தேசிய, உலக அளவில் உள்ள தனியார் தொழில் முனைவோர் எதிர்பார்க்கப்பட்ட அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை. கடந்த முப்பது ஆண்டுகளாக அரசு சொத்துகளின் விற்பனை ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் என்ற அளவிலேயே இருந்துள்ளது. அதனுடன் ஒப்பிடுகையில் மோடி ஆட்சியின் கடந்த ஏழு ஆண்டுகளில் மட்டும் 3.96 லட்சம் கோடிக்கு அரசு சொத்துகள் விற்கப்பட்டுள்ள போதிலும் பொதுத்துறை நிறுவனங்களை ஒட்டுமொத்தமாக தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைக்கும் அவர்களுடைய நோக்கம் முழுமையாக நிறைவேறிடவில்லை.

குறைவான அதிகாரம் கொண்ட இளைய பங்காளியாக

தன்னுடைய லட்சியமான தனியார்மயமாக்கல் இலக்குகளை அடைய முடியாத மோடி அரசு அரசுக்குச் சொந்தமான பெரிய உள்கட்டமைப்பு சொத்துக்களை நடைமுறையில் இலவசமாகவே தனியார் நிறுவனங்கள் பணம் சம்பாதிப்பதற்காக அவர்களிடம் ஒப்படைக்க முயல்கிறது. பொதுச் சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாயிலிருந்து சிறு பகுதியை தனக்கென்று பகிர்ந்து கொள்கின்ற அரசு குறைவான அதிகாரம் கொண்ட இளைய பங்காளியாக மட்டுமே இருக்கப் போகிறது. இவ்வாறாக தேசிய பணமாக்கல் திட்டம் என்றழைக்கப்படுகின்ற அந்த திட்டத்தின் வடிவமைப்பு மோசமாக அமைந்துள்ளது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

தேசிய பணமாக்கல் திட்டம் குறித்த ஆவணத்தில் இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் கீழ் உள்ள சாலை தொடர்பான சொத்துகளில் 22 சதவிகிதம், 400 ரயில் நிலையங்கள், 1,400 கிமீ நீள ரயில் பாதை, 741 கிமீ நீள கொங்கன் ரயில்வே, 90 பயணிகள் ரயில்கள், 15 ரயில் நிலையங்கள், 265 ரயில்வேக்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகள், தேர்ந்தெடுக்கப்பட்ட ரயில்வே காலனிகள், நான்கு மலை ரயில்வேக்கள், 25 முக்கிய விமான நிலையங்கள், 28,608 சர்க்யூட் (ckt) கிமீ மின்பரிமாற்றச் சொத்துகள், 160 நிலக்கரி சுரங்கச் சொத்துகள், 14,197 தொலைத்தொடர்பு கோபுரங்கள், 2.86 லட்சம் கிமீ கண்ணாடி இழைகள், என்டிபிசி  மற்றும் என்எச்பிசியின் மின்னுற்பத்தி சொத்துக்கள், ஐஓசிஎல், ஹெச்பிசிஎல், கெயில் நிறுவனங்களின் பெட்ரோலியம் மற்றும் பெட்ரோலியத் தயாரிப்புகளின் குழாய்கள், ஒன்பது முக்கிய துறைமுகங்கள் சார்ந்த 31 திட்டங்கள், எஃப்.சி.ஐ மற்றும் மத்திய கிடங்கு கழகத்தின் 39 சதவிகித சேமிப்புத் திறன், ஜவகர்லால் நேரு ஸ்டேடியம், இந்திய விளையாட்டு ஆணையத்தின் மற்ற மூன்று சொத்துக்கள் என்று அரசு சொத்துகள் பணமாக்கப்படுவதற்காக காத்திருப்பதாகக் குறிப்பிடப்படுள்ளது.

அரசாங்கமோ இந்தச் சொத்துகள் அனைத்தும் முழுமையாகச் செயல்படாத நிலையில் காப்பாற்றி வைக்கப்பட்டுள்ள (பிரவுன்ஃபீல்ட்) உள்கட்டமைப்பு சொத்துக்கள் என்பதாகக் கூறி வருகிறது. ‘அபாயகரமானவை’ என்று இந்தச் சொத்துக்களை உறுதிப்படுத்துவதன் மூலம் தனியாருக்கு உறுதியளிப்பது மட்டுமல்லாது, மூலதனச் செலவிற்கான தேவை குறித்த அவர்களுடைய கவலையையும் அரசாங்கம் தணிக்கிறது. அரசின் இந்த நடவடிக்கை உள்கட்டமைப்புகளை மேலும் மேம்படுத்தும் வகையில் தனியார் முதலீட்டை ஊக்குவிக்கும் என்று மக்களை நம்ப வைக்க அரசாங்கம் தவறாக முயல்கிறது.

அரசாங்கத்தின் இந்தக் கூற்று மக்களை ஏமாற்றி முட்டாளாக்கும் முற்றிலும் தவறான கூற்றாகும். சொத்துகளின் மீது முறையான உரிமை எதுவும் இல்லாமலேயே அவற்றை மேலும் விரிவுபடுத்துவதுவதற்கான முதலீட்டை தனியார் நிறுவனங்கள் ஏன் செய்ய வேண்டும்? மாறாக அந்த தனியார் நிறுவனங்கள் உள்கட்டமைப்பு வசதிகளின் பயனர் கட்டணத்தை தங்கள் விருப்பப்படி அதிகரிக்கவே போகின்றன. அவை புதுமையான முறையில் வணிகமயமாக்கி முப்பது முதல் ஐம்பதாண்டு காலப் பரிர்த்தனைக் காலத்தில் நுகர்வோரை கொள்ளையடித்து அந்த சொத்துக்களில் இருந்து அதிக அளவிலே பணம் சம்பாதித்துக் கொள்ளப் போகின்றன. உள்கட்டமைப்பை அதிகரித்து,  விரிவுபடுத்தும் வகையில் அந்த நிறுவனங்கள் முதலீடு செய்யப் போவதான மாயையை உருவாக்கிட அரசாங்கம் விரும்புகிறது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

பணமாக்குதலுக்காக அடையாளம் காணப்பட்டுள்ள சொத்துக்கள் நலிவடைந்து வருபவையாக, முழுமையாகப் பணமாக்கப்படாதவையாக அல்லது குறைவாகப் பயன்படுத்தப்படுவதாக இருப்பதாக அரசாங்கம் வாதிடுகிறது. மீண்டும் அது ஒரு தவறான, ஏமாற்றும் அறிக்கையாகவே உள்ளது! நெடுஞ்சாலைகள், மின் பரிமாற்றத்திற்கான கம்பிகள், எண்ணெய் மற்றும் எரிவாயு குழாய்கள், ரயில்வே நெட்வொர்க்குகள், ரயில் நிலையங்கள், துறைமுகங்கள், தொலைத்தொடர்புக் கோபுரங்கள் போன்ற அனைத்து உள்கட்டமைப்பு சொத்துகளும் பல ஆண்டுகளாக தங்களுக்கான பயனர்களைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வந்திருக்கின்றன. இந்த உள்கட்டமைப்புகளின் செயல்பாடு மற்றும் பயன்பாட்டு நிலைகள் ஒட்டுமொத்த பொருளாதார நிலையைப் பொறுத்ததாகவே இருக்கின்றன. நாட்டில் உள்ள உள்நாட்டு மின்னுற்பத்தித் திறன் மற்றும் மின்னுற்பத்தி நடவடிக்கைகளின் பயன்பாட்டைப் பொறுத்ததாகவே பவர் கிரிட் நெட்வொர்க்கின் பயன்பாடு உள்ளது. எனவே உள்நாட்டு உற்பத்தித் துறையில் ஏற்படுகின்ற தொடர்ச்சியான சரிவின் விளைவாக மின்சாரம் குறைவாகப் பயன்படுத்தப்படுவதற்கு பவர் கிரிட் கார்ப்பரேஷன் மீது யாராவது குற்றம் சுமத்த முடியுமா?

இலவசமாக ஒப்படைக்கும் நேர்மையற்ற வழி 

இந்த அறிவிப்பு முழுமையான விற்பனை நடவடிக்கையாக இல்லை என்றும் அரசாங்கம் பொய் கூறுகிறது; முன்பணம், வருவாய்ப் பங்கு, சொத்துக்களில் முதலீட்டிற்கான அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு ஈடாக குறிப்பிட்ட பரிவர்த்தனை காலத்திற்கு மட்டுமே தனியாருக்கு வருவாய் உரிமைகளை மாற்றித் தரப் போவதாக அரசு கூறுகிறது. ஆனால் உண்மையில் தேசிய உள்கட்டமைப்பு மிகக் குறைவாக மதிப்பிடப்பட்டு பெருநிறுவனங்களிடம் நீண்ட காலத்திற்கு ஒப்படைக்கப்படப் போகிறது. இவ்வாறு இலவசமாக தேசிய உள்கட்டமைப்பு சொத்துக்களை தனியார் நிறுவனங்களிடம் ஒப்படைப்பது நேர்மையற்ற வழியாகும்.

மத்திய பொதுத்துறை நிறுவனங்களும், அவற்றின் உள்கட்டமைப்புச் சொத்துகளும் தன்னம்பிக்கை பொருளாதாரம், பெருமளவிலான வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் நிச்சயமாக முக்கிய பங்கு வகித்து வந்திருக்கின்றன – இன்னும் வகித்துக் கொண்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாது தனியார் துறை தொழில்கள் மற்றும் சேவைகளின் கணிசமான வளர்ச்சிக்கும், விரிவாக்கத்திற்கும் அவை பங்களித்துள்ளன. தற்போது மேற்கொள்ளப்படப் போகின்ற இந்த முயற்சி எதிர்காலத்தில் நாட்டிற்கும், மக்களுக்கும் எந்த வகையில் உதவப் போகிறது என்பது குறித்து  எந்தவொரு விளக்கமும் இதுவரையிலும் தரப்படவில்லை. அறிவிக்கப்பட்டுள்ள திட்டத்தின் மூலம் வேலை இழப்பே ஏற்படப் போகிறது. வேலையின்மை பிரச்சனை ஏற்கனவே மோசமாக இருந்து வரும் நிலையில், தனியார் துறை வேலைகளில் சமூகத்தில் உள்ள எஸ்சி/எஸ்டி சமூகங்களுக்கு இட ஒதுக்கீடு இருக்காது என்பதால் ஏற்படப் போகின்ற வேலைவாய்ப்பு இழப்பு இன்னும் மோசமாகவே இருக்கும். தொழிலாளர்கள், மக்கள் மற்றும் ஒட்டுமொத்த பொருளாதார நிலைமைகள் மோசமடையவே போகின்றன; இந்த நடவடிக்கையின் மூலம் அரசாங்கத்தின் பெருநிறுவனக் கூட்டாளிகள் மட்டுமே பயனடையப் போகிறார்கள்.

மேலும் ஒரு விஷயத்தை நாம் மனதில் கொள்ள வேண்டியுள்ளது. பணமாக்குதலுக்கு இலக்காகியுள்ள ஆறு லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உள்கட்டமைப்பு சொத்துகள் என்பதற்கு அரசாங்கக் கஜானாவில் அந்த அளவிலான தொகை முன்பணமாகச் செலுத்தப்படும் என்பதாக அர்த்தமில்லை.

சொத்துக்களின் மூலதனத்திற்கான செலவை இன்றைய விலையில் கணக்கிட்டு, கைவரப் போகின்ற பணத்தின் இலக்குடன் ஒப்பிட்டுப் பார்த்தால் ஏற்கனவே குறிப்பிட்டுள்ளவாறு அரசு சொத்துக்கள் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்டுள்ளதை எளிதில் நிறுவிட முடியும்.

எடுத்துக்காட்டாக 26,700கிமீ தூரமுள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 22 சதவிகிதம் பணமாக்கப்பட உள்ளது. அந்த சொத்தில் இருந்து கிடைக்கப் போகின்ற 1.6 லட்சம் கோடி ரூபாயை முன்கூட்டிய விலையாக அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் இவ்வளவு பெரிய உள்கட்டமைப்பிற்கான மூலதனச் செலவு எந்த அளவிற்கு இருந்திருக்கும்? 2019ஆம் ஆண்டில் சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகத்தின் மூலதனச் செலவை இன்றைக்கு எடுத்துக்கொண்டால், 26,700கிமீ நான்கு வழிச்சாலை தேசிய நெடுஞ்சாலைகளின் கட்டுமானச் செலவு குறைந்தது எட்டு லட்சம் கோடி ரூபாய் என்ற அளவில் இருக்கும்.

எட்டு லட்சம் கோடி மதிப்புள்ள அந்த சொத்துக்கள், இப்போது அதிகபட்சமாக 1.6 லட்சம் கோடி ரூபாய் என்று முன்கூட்டிய கட்டணமாக அரசாங்கம் தேர்வு செய்யும் தொழில்முனைவோருக்கு வழங்கப்படப் போகிறது. மேலும் தனியார் நிறுவனம் – அரசாங்கத்திற்கிடையே உள்ள தொடர்பின் காரணமாக பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு இந்த தொகை மேலும் குறைக்கப்படுவதற்கான அனைத்து சாத்தியக்கூறுகளும் உள்ளன. இதுதவிர அந்த தனியார் நிறுவனங்கள் விருப்பப்பட்ட எண்ணிக்கையில் சாலைகளில் சுங்கச்சாவடிகளை அமைத்துக் கொள்ளலாம். மேலும் சுங்கச்சாவடிக் கட்டணமாக எந்தவொரு தொகையையும் வசூலித்துக் கொள்ளும் அதிகாரமும் அவற்றிற்கு அளிக்கப்படும். எந்தவொரு முதலீடும் இல்லாமலேயே வருவாய் பகிர்வு ஒப்பந்தம் மூலமாக சம்பந்தப்பட்ட பெருநிறுவனங்கள் சேகரித்துக் கொள்ளும் வருவாயில் 70-80 சதவிகிதத்தை தொடர்ந்து பெற்றுக் கொள்ளும் வாய்ப்பு உள்ளது. பெருநிறுவனங்களிடம்  இவ்வாறு ஒருபுறம் மக்களின் பணத்தில் கட்டப்பட்ட தேசிய உள்கட்டமைப்பு வழங்கப்படுகிற வேளையில், மறுபுறம் அந்தப் பெருநிறுவனங்களால் பயனர் கட்டணங்கள், சுங்கச் சாவடிக் கட்டணங்கள் போன்றவை அதிகரிக்கப்படுவதன் மூலம் பொதுமக்களின் பணம் கொள்ளையடிக்கப்படும் வாய்ப்பு உருவாக்கித் தரப்படுகின்றது.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

அதேபோல இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்காக தற்போது அமைக்கப்பட்டுள்ள எரிவாயு குழாயில் ஐம்பது சதவிகித அளவிற்கு அதாவது 8,154 கி.மீ. அளவிலான குழாயை அதிகபட்சமாக 24,642 கோடி ரூபாய்க்கு தனியாரிடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 2018 ஆகஸ்ட் மாதத்தில், இயற்கை எரிவாயுவைக் கடத்தும் பயன்பாட்டைச் செயல்படுத்துவதற்கான மூலதனச் செலவு கிமீ ஒன்றிற்கு சுமார் ஐந்து கோடி ரூபாய் என்ற அளவில் இருந்தது. அந்த அளவைக் கொண்டு பார்க்கும் போது. மொத்தம் 8,154 கிமீ குழாய்களுக்கான மூலதனச் செலவு நாற்பதாயிரம் கோடி ரூபாய் என்ற அளவிற்கு வருகிறது. இயற்கை எரிவாயுவை கொண்டு செல்வதற்கான கட்டணம் இப்போது பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு ஒழுங்குமுறை வாரியத்தால் தீர்மானிக்கப்படுவதாக உள்ளது. பெருநிறுவனங்களிடமே சேவைக் கட்டணத்தைத் தீர்மானிக்கும் அதிகாரம் இருக்கும் என்று அரசாங்கம் தெளிவுபடுத்தியுள்ளதால் நாளடைவில் அந்த அதிகாரமும் ஒழிக்கப்பட்டு விடும்.  ஆக சொத்து கைமாறிய பிறகு இந்தக் கட்டணங்கள் மிகவும் அதிகமாக உயர்த்தப்படுகின்ற சாத்தியம் தெளிவாக இருக்கின்றது. அதன் காரணமாக குழாய் இயற்கை எரிவாயுவின் விலைகள் நிச்சய அதிகரிக்கும். இயற்கை எரிவாயுவை மூலப்பொருளாக அல்லது எரிபொருளாகப் பயன்படுத்துகின்ற தொழிற்சாலைகளில் உருவாகும் பொருட்களின் விலையும் அதன் விளைவாக அதிகரிக்கும் என்பதால் மீண்டும் பாதிக்கப்படப் போவது மிகவும் சாதாரண எளிய மக்கள்தான்.

அற்ப பணம் அரசுக்கு, அதிக பணம் தனியாருக்கு

மற்ற பிற உள்கட்டமைப்பு சொத்துகளின் விஷயத்திலும் இதேபோன்றே நிகழப் போகிறது. பல ஆண்டுகளாக மக்களின் பணத்தில் கட்டப்பட்டிருக்கும் அரசு சொத்துக்கள் குறைத்து மதிப்பிடப்படுவதால் கஜானாவிற்கு மிகவும் அற்பமான தொகையே கிடைக்கப் போகிறது. தங்கள் பணத்திலிருந்து கட்டப்பட்ட சொத்துக்களைப் பயன்படுத்துவதற்கு இனிமேல் பயனர் கட்டணம் வசூலிக்கப்படும் என்பதால் மக்கள் அதிக அளவு பணத்தை தனியார் நிறுவனங்களுக்குச்  செலுத்த வேண்டியிருக்கும்.

சுதந்திரம் பெற்ற இந்த எழுபதாண்டுகளில் கட்டப்பட்டிருக்கும் மிகப்பெரிய பொதுத்துறை நெட்வொர்க்கால் நிறுவப்பட்டுள்ள தேசிய பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு விரோதமாக இந்த தீவிர வலதுசாரி பாஜக ஆட்சி உள்ளது. பொதுத்துறை நிறுவனங்களை நேரடியாக பெருநிறுவனங்களுக்கு விற்பனை செய்கின்ற தனியார்மயமாக்கும் திட்டத்தில் தொழிலாளர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்களின் மூலம் எழுந்த உறுதியான எதிர்ப்பு உட்பட பல்வேறு காரணங்களால் எதிர்பார்த்த வெற்றியை அடைய முடியாத மோடி அரசாங்கம் அரசாங்க கஜானாவுக்கு வருவாயில் சொற்ப பங்கைப் பெற்றுக் கொண்டு மிகப்பெரிய உள்கட்டமைப்பு சொத்துக்களை கிட்டத்தட்ட இலவசமாக தனியார் பெருநிறுவனங்களிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளது. இப்போதுள்ள மிகப்பெரிய உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் ஒரு பைசா கூட முதலீடு செய்திராத பெருநிறுவனக் கொள்ளையர்கள் இந்த திட்டத்தின் மூலம் பொது உள்கட்டமைப்பைப் பெற்றுக் கொண்டு வருவாயின் மிகப்பெரும் பகுதியை சுருட்டிக் கொள்ள அனுமதிக்கப்படுவார்கள்.

Union Government's National Monetization Plan to take public assets into corporate coffers - Nishith Choudhary. Article Translate in Tamil ஒன்றிய அரசின் தேசிய பணமாக்கல் திட்டம் பொதுச்சொத்துகளை பெருநிறுவன கஜானாவிற்குள் கொண்டு செல்லப் போகின்றது  - நிஷித் சௌத்ரி

ஆளும் கட்சி 2017-18ஆம் ஆண்டில் பெற்றுக் கொண்ட மொத்த நிறுவன நன்கொடைகளில் 92 சதவிகிதத்தை தன்வசம் கைப்பற்றிக் கொண்டதற்கு காரணம் இல்லாமல் இருக்கவில்லை. பெருநிறுவனங்கள் மற்ற தேசியக் கட்சிகளை விட 2017-18ஆம் ஆண்டில் பன்னிரண்டு மடங்கு அதிக தொகையை ஆளும் பாஜகவுக்கு நன்கொடையாக அளித்திருந்தன. 2014 முதல் 2018 வரையில் வழங்கப்பட்ட மொத்த நிதியைக் கணக்கில் எடுத்துக் கொண்டால், ஒரு நாளைக்கு பத்து கோடி ரூபாய்க்கு மேல் ஆளும்கட்சி நன்கொடை பெறுவது தெரிய வருகிறது. இதுவரையிலும் அரசியல் நிதியுதவி அளித்தவர்களின் பட்டியல் வெளியிடப்படவில்லை என்றாலும், அவ்வாறு நன்கொடையாக நிதியளித்துள்ளவர்கள் மத்திய பொதுத்துறை நிறுவனங்களின் முதலீட்டின் பலனைப் பெற்ற அதே பெருநிறுவன/வணிகங்கள் என்பதும், அவர்களுக்காகவே இப்போது நாட்டின் மிகப்பெரிய உள்கட்டமைப்புச் சொத்துகளின் கதவு கொள்ளையடிக்கவும் சூறையாடவும் திறந்து வைக்கப்பட்டுள்ளது என்பதும் நன்கு தெளிவாகிறது.

https://peoplesdemocracy.in/2021/0912_pd/national-monetisation-pipeline-pipeline-drain-public-wealth-corporate-coffers

நன்றி: பீப்பிள்ஸ் டெமாக்ரசி, 2021 செப்டம்பர் 12 
தமிழில்: தா.சந்திரகுரு

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *