கலப்பு கற்றல் குறித்த பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பு – இந்திய பல்கலைக்கழக ஆசிரியர்கள் கடும் கண்டனம் | தமிழில்: தா.சந்திரகுருஇணையவழி மற்றும் நேரடி வகுப்புகளின் கலவையாக இருக்கின்ற கலப்பு கற்றல் முறையை பல்கலைக்கழகங்களில் செயல்படுத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்துக் குறிப்பு நாடு முழுவதும் உள்ள ஆசிரியர்கள் அமைப்புகளிடமிருந்து பலத்த கண்டனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

நரேந்திர மோடி அரசாங்கத்தின் பிற கொள்கை முடிவுகளுடன் இப்போது பரிந்துரைக்கப்படுகின்ற இந்த கற்றல் மாதிரியைச் செயல்படுத்துவது என்பது கல்வித்துறையில் உயர்கல்விக்கென்று இதுவரையிலும் இருந்து வருகின்ற முன்னுதாரணத்தை முற்றிலுமாக மறுவரையறை செய்து கல்வி என்பது சந்தை சக்திகளின் தயவில் இருக்க வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்துவதாக்கி விடும் என்று பல்கலைக்கழக ஆசிரியர்கள் அச்சப்படுகின்றனர்.

இத்தகைய முடிவு இறுதியாக பொது நிதி அளிக்கப்பட்டு வருகின்ற கல்வியை அகற்றி சமூகத்தின் விளிம்புநிலை பிரிவினருக்கு கூடுதலான பாதகத்தை ஏற்படுத்தப் போகின்ற கொடூரமான யதார்த்தமே அவர்களின் அச்சத்திற்கான காரணமாக இருக்கிறது.

2021 மே 20 அன்று பல்கலைக்கழக மானியக் குழு வெளியிட்ட கருத்து குறிப்பு தொழில்நுட்பமற்ற எந்தவொரு கல்வித் திட்டத்தையும் எண்பது சதவீதம் வரை இணையவழியில் வழங்கிட பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி அளிக்கலாம் என்று முன்மொழிவதன் மூலம் கலப்பு கற்பித்தல் முறையை ஊக்குவிக்கிறது. நிபுணர் குழு தயாரித்துள்ள அந்தக் கருத்து குறிப்பு மீது ஜூன் 6 அல்லது அதற்கு முன்னர் தங்கள் கருத்துக்களைச் சமர்ப்பிக்குமாறு பல்கலைக்கழக மானியக் குழு தொடர்புடையவர்களைக் கேட்டுக் கொண்டது.

ஒவ்வொரு பாடத்திட்டத்திலும் நாற்பது சதவீதம் வரை இணையவழியில் கற்பிக்க உயர்கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்படும் என்றும், மீதமுள்ள பாடத்தை நேரடி வகுப்புகளில் கற்பிக்கலாம் என்றும் பல்கலைக்கழக மானியக் குழு கூறியுள்ளது.

 ‘ஆர்வமுள்ள இளம் மனங்களுக்கான தீவிர கற்றலுக்கான ஆய்வு வலைகள்’ எனப்படுகின்ற ஸ்வயம் தளத்தின் மூலம் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் ஒரு பாடத்திட்டத்தில் ஒரு செமஸ்டரில் நாற்பது சதவீதம் வரை இணையவழியில் வழங்க தற்போதுள்ள அமைப்பில் அனுமதி வழங்கப்பட்டிருக்கின்றது. இந்த அளவானது 2017இல் அனுமதிக்கப்பட்ட இருபது சதவீதம் என்ற அளவைத் தாண்டி கடந்த ஆண்டே அனுமதிக்கப்பட்டிருந்தது.இப்போது புதிய திட்டத்தின் கீழ் ஸ்வயம் படிப்புகளைத் தவிர கூடுதலாக நாற்பது சதவீதம் இணையவழிக் கல்வி பரிந்துரைக்கப்படுகிறது. இணையவழி வழிமுறைகள் மூலம் நிகழ்நேர மெய்நிகர் வகுப்புகள், தேர்வுகளை நடத்துவதை இந்தப் புதிய திட்டம் பல்கலைக்கழகங்களுக்குச் சாத்தியமாக்கிக் கொடுக்கிறது.  இவையிரண்டுமே இதற்கு முன்னர் அனுமதிக்கப்பட்டிருக்கவில்லை.

ஜூன் 6 நாளிட்ட செய்திக்குறிப்பில் அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான அய்ஃபக்டோ இந்தக் கருத்து குறிப்பைத் திரும்பப் பெற வேண்டும் என்று பல்கலைக்கழக மானியக் குழுவிடம் வலியுறுத்தியுள்ளது. பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த நடவடிக்கை பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களின் தன்னாட்சியை அச்சுறுத்துவதாக அந்த அமைப்பு குற்றம் சாட்டியிருந்தது.

அய்ஃபக்டோவின் அறிக்கையில் பல்கலைக்கழக மானியக் குழுவின் கருத்து குறிப்பு செயல்படுத்தப்பட்டால் உயர்கல்வியில் ஒட்டுமொத்தமாக ஆசிரியர்களின் பங்கை தேவையற்றதாக அது மாற்றி விடும்; ஒட்டுமொத்த கல்வி முறையும் சந்தை சக்திகளின் தயவில் இருக்க வேண்டியதாகி விடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த முடிவு பொது நிதியளிக்கப்பட்டு வரும் பல்கலைக்கழகங்களை இறுதியில் முழுமையாக அகற்றி விடும்; சமூகத்தில் விளிம்புநிலையில் உள்ள பிரிவினருக்கு கூடுதல் பாதகத்தை ஏற்படுத்தும் என்றும் அந்த ஆசிரியர்கள் சங்க கூட்டமைப்பு கூறியுள்ளது.

அதேபோன்று இப்போது முன்மொழியப்பட்டுள்ள கலப்பு முறை குறித்து தில்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (டூட்டா) வெளியிட்டுள்ள பின்னூட்டக் கருத்தில், இந்த புதிய முறையைச் செயல்படுத்துவது என்பது 2021ஆம் ஆண்டு ஸ்வயம் விதிமுறைகள் மற்றும் அகாடமிக் பேங்க் ஆப் கிரெடிட்ஸ் (ஏபிசி) மாதிரியுடன் இணைந்து உயர்கல்விக்கென்று இருந்து வருகின்ற முன்னுதாரணத்தை முழுமையாக மறுவரையறை செய்வதாகவும், ஆசிரியர்களின் பங்கை அது குறைத்து விடும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘அர்த்தமுள்ள உள்கூறு, வேலைவாய்ப்பு ஆகியவற்றின் அடிப்படையில் அவை வழங்கப் போகின்ற பட்டங்களின் தரம் குறித்து எந்தப் பொறுப்பையும் இந்த கொள்கை ஆவணங்கள் ஏற்கவில்லை’ என்று டூட்டா தெரிவித்துள்ள  கருத்தில் கூறப்பட்டுள்ளது. அதில் மேலும் கலப்பு கற்றல் முறைக்கு ஆதரவாக பல்கலைக்கழக மானியக் குழு முன்வைத்த வாதம் கடந்த ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களும், ஆசிரியர்களும் பொதுத்தளங்களில் பகிர்ந்து கொண்ட நடைமுறை யதார்த்தங்கள், அனுபவங்களைப் புறக்கணிக்கவே செய்திருக்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக மானியக் குழுவின் இந்த முயற்சி மக்கள் விரோதமானது என்று கூறி கேரளாவில் உள்ள ஆசிரியர்களின் அமைப்புகளும் எதிர்ப்புகலைப் பதிவு செய்தன. ‘கலப்பு கற்றல் கற்பவர்களிடையே உள்ள டிஜிட்டல் இடைவெளிகளை மேலும் அதிகரிக்கும் என்றே நாங்கள் அஞ்சுகிறோம். இது வளாகங்களில் நேருக்கு நேர் கற்பித்தல் முறை மூலமாகக் கிடைத்திருக்கும் பலன்களைச் சீர்குலைக்கும் முயற்சியாகும்’ என்று கேரள அரசு கல்லூரி ஆசிரியர்கள் சங்கத்தின் தலைவரான என்.மனோஜ் கூறியுள்ளார்.

C:\Users\Chandraguru\Pictures\Blended teaching\News Click\jadavpur-university-fb.jpg

இதற்கிடையில் டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதற்குத் தேவையான உள்கட்டமைப்பை அரசாங்கம் உருவாக்கித் தர வேண்டும் என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தின் இரண்டு ஆசிரியர் சங்கங்கள் பல்கலைக்கழக மானியக் குழுவிடம் கூறியுள்ளன. ‘இந்தியாவில் உள்ள அறுபது சதவீதக் கல்லூரிகள், நாற்பது சதவீத பல்கலைக்கழகங்களின் இருப்பிடம் கிராமப்புறங்களிலேயே அமைந்துள்ளது. இணைய இணைப்பு வசதி என்பது அந்த இடங்களில் மிகப் பெரிய பிரச்சனையாக உள்ளது. மேலும் பாலினம், சாதி, மதம், பிராந்தியம், வருமானம் கடந்து டிஜிட்டல் இடைவெளி மாணவர்களிடையே தெளிவாகக் காணப்படுகிறது…’ என்று ஜாதவ்பூர் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் (ஜூட்டா) தெரிவித்துள்ளது.

அனைத்து வங்க பல்கலைக்கழக ஆசிரியர் சங்கமும் (அபுட்டா) தன்னுடைய அதிருப்தியைப் பதிவு செய்துள்ளது. ‘புதிய தேசிய கல்விக் கொள்கையின் வரைவறிக்கைக்கு எதிராக எங்கள் எதிர்ப்புகளை நாங்கள் பதிவு செய்திருந்தோம், ஆனால் பல்கலைக்கழக மானியக் குழு அதைப் புறக்கணித்தது. இந்த கலப்பு கற்பித்தல் பொது நிதி வழங்கப்படுகின்ற பல்கலைக்கழக அமைப்பை அழித்து விடும். அது தனிப்பட்ட முறையில் இயங்கி வருகின்ற கார்ப்பரேட் துறைக்கே உதவும் என்று நாங்கள் கருதுகிறோம்’ என்று அபுட்டா – ஜாதவ்பூர் பல்கலைக்கழக கிளையின் ஒருங்கிணைப்பாளர் கௌதம் மைட்டி கூறியதாக டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிகை தெரிவித்துள்ளது.

C:\Users\Chandraguru\Pictures\Blended teaching\News Click\R_Bindu11.jpg

ஆசிரியர்கள் சங்கங்கள் மட்டுமல்லாது, கேரள உயர்கல்வித்துறை அமைச்சர் ஆர்.பிந்துவும் பல்கலைக்கழக மானியக் குழுவின் நடவடிக்கை குறித்து விமர்சனக் கருத்துக்களை கடந்த மாத தொடக்கத்தில் பகிர்ந்து கொண்டுள்ளார். ‘மாணவர்களுடன் நான் ஆசிரியராக பாடத்திட்டத்திற்கு அப்பாற்பட்டு பரந்த அளவிலே உரையாடியிருக்கிறேன். இணையவழி வகுப்புகளில் ஆசிரியர்கள் பெரும்பாலும் பாடத்திட்டத்துடன் மட்டுமே இணைந்திருக்க வேண்டியிருப்பதால்  இதுபோன்ற விவாதங்களுக்கான இடம் அதில் முற்றிலுமாக இருப்பதில்லை. மாணவர்களின் வருகையைப் பதிவு செய்ய முடிகின்ற போதிலும், அவர்களின் எதிர்வினை பற்றி அளவிடுவதில் சிக்கல் உள்ளது’ என்று அமைச்சர் பிந்து கூறியதாக தி ஹிந்து பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

https://www.newsclick.in/UGC-note-blended-learning-draws-flak-university-teachers

நன்றி: நியூஸ்க்ளிக் 2021 ஜூன் 07

தமிழில்:தா.சந்திரகுரு