உலக புத்தக தினம்: மனநலம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் ஒரு நூலை முன்வைத்து – வீர.வியட்நாம்நூல்: “உன்னால் முடியாது தம்பி”
ஆசிரியர்: மனநல மருத்துவர் டாக்டர் பி.ஆனந்தன்
விலை: ரூ. 120
வெளியீடு: நிலா படைப்புலகம் 

இந்த ஆண்டு ஜனவரி மாதம் நாட்டை உலுக்கிய செய்தி ஒன்று வாசித்தேன். ஆந்திரப் பிரதேச மாநிலம் மதனபள்ளியில் பெற்றோர்களே தங்கள் மகள்கள் இருவரையும் ஈட்டியால் குத்திக் கொலைசெய்துவிட்டு, அவர்கள் திரும்ப வருவார்கள் என்று நம்பிக்கை தெரிவித்திருந்தார்கள். இவர்கள் படிக்காத பாமரர்கள் அல்ல. தந்தை கல்லூரிப் பேராசிரியர். தாயாரும் பல்கலைக்கழகத்தில் முதலிடம் பெற்றவர். இருபதுகளில் வாழ்ந்துகொண்டிருந்த தங்கள் மகள்களை ஏதோ தீய சக்தி பீடித்திருந்ததால், அவர்கள் மீண்டும் உயிர் பெறுவார்கள் என்ற நம்பிக்கையில் நரபலி கொடுத்ததாகவும் தாங்கள் சிவனின் அவதாரம் என்றும் அவர்கள் கூறிக்கொண்டனர். மூடநம்பிக்கை என்னும் நச்சு பாமரர்களை மட்டுமல்ல, நன்கு படித்தவர்களையும் பாதித்துள்ளது, எந்த அளவிற்கு விஷமமானது என்று பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது இந்த செய்தி. நன்கு கல்வி கற்ற பெற்றோரினால் எவ்வாறு தங்கள் மகள்களையே கொல்ல முடிந்தது? மூட நம்பிக்கை மட்டுமே இதற்குக் காரணமா?

எனக்கு மிகவும் நெருக்கமான குடும்பத்தில் ஒரு சகோதரி எந்தக் காரணமும் இல்லாமலே தற்கொலை செய்துகொண்டார். அவர்கள் பெற்றோரினால் காரணம் தெரியாத அந்த மரணத்திற்கு விடை கண்டுபிடிக்கவே முடியவில்லை. இவர்கள் வளர்ப்பு சரியில்லை, ஏதாவது காதல் தோல்வியாக இருக்கும், வேலை கிடைத்திருக்காது, அல்லது கௌரவ கொலையாகக் கூட இருக்கலாம் என்று அக்கம்பக்கத்தினர் இறந்துபோன சகோதரியின் வயதிற்கேற்ப விதவிதமான விளக்கங்களை ஏற்படுத்திக் காற்றில் கசிய விட்டார்கள்.

எனது சிற்றன்னை ஒருவர் வெளிநாட்டில் வசிக்கிறார். அவர் இந்தியா வரும்போதெல்லாம் எந்தெந்த மருத்துவரை பரிசீலிக்க வேண்டும் என்று ஒரு பெரிய பட்டியல் போட்டு வருவார். உச்சி முதல் பாதம் வரை பல்வேறு நோய்கள் பட்டியலிடப்பட்டிருக்கும். முடிகொட்டுதல், பல் வலி, காதில் கொய்யென்று சத்தம் வருதல், தூசி ஒவ்வாமை, எதைச் சாப்பிட்டாலும் ஒத்துக் கொள்ளாதது, தூக்கமின்மை என்று இந்தப் பட்டியல் நீண்டுகொண்டேயிருக்கும். பல்வேறு மருத்துவர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு அத்தனை பரிசோதனைகளையும் எடுத்து நல்ல செலவு செய்ய வைத்துவிடுவார்கள். கொஞ்சம் நல்ல மனிதர்களாக உள்ள மருத்துவர்கள் உங்களுக்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிடுவார்கள். என் சிற்றன்னையின் பார்வையில் அவர்கள் திறமையற்ற மருத்துவர்கள். சிலர் தேவையில்லாத அறுவை சிகிச்சைகளை பரிந்துரைத்து நல்ல மருத்துவமனையில் (அதிகமாக பணம் வாங்கும் மருத்துவமனை) சிகிச்சை அளிப்பார்கள். அவர்களும் நல்ல மருத்துவர்கள் என்று பெயர் எடுத்துக்கொள்வார்கள். இருப்பினும் நோய் மட்டும் தீராது.

சில நடிகைகள் அழகாக இருக்கும் முகத்தை அறுவை சிகிச்சை செய்து கெடுத்துக்கொண்ட செய்தி குறித்தும் பார்த்துக்கொண்டிருக்கிறோம். நன்கு கல்வி கற்று நல்ல பணியில் இருக்கும் பலர் நாற்பது வயதானாலும் திருமணம் செய்து கொள்ளாமல், நல்ல வேலையை விட்டுவிட்டு, கார்ப்பரேட் குருஜீக்களின் பிடியிலோ மதுவுக்கு அடிமையாகியோ போய் குடும்பத்தாரை துயரத்தில் ஆழ்த்தி விடுகின்றனர். இன்றைக்கு திருமண விவாகரத்துக்கள் பெருகி வருகின்றன. தனி மனித நேசம் குறைந்து வருகிறது. இதற்கெல்லாம் காரணம் பெண்கள் கல்வியறிவு பெற்றதுதான், நீ இல்லாட்டி போடா… என்னால சொந்தகால்ல நிக்கமுடியும் என்கிற நிலை வந்ததால் இப்போதெல்லாம் விவாகரத்து கேஸ்கள் அதிகமாகிவிட்டன என்று சில விஷமிகள் கதையளந்து கொண்டுள்ளனர்.

No description available.

மேற்குறிப்பிட்ட அத்தனை நிகழ்வுகளிலும் மனநல சிக்கல்கள், குறைகள் ஏற்பட்டுள்ளன, அவற்றிற்கு சிகிச்சை அளிக்கவேண்டும் என்று சொன்னால் நம்ப முடிகிறதா? இப்படி அங்கிங்கெனாதபடி நம்மைச்சுற்றி நிகழும் பல்வேறு நிகழ்வுகளுக்கான மனநல பதிலை எளிய தமிழில் அறிவியல் பூர்வமாக, கதை வடிவிலான எடுத்துக்காட்டுகளுடன் விளக்கியுள்ளார் டாக்டர் ஆனந்தன், சென்னையில் மனநலப்பணியாற்றி வரும் மருத்துவர். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் என்றால் சட்டையைக் கிழித்துக்கொண்டு தெருவில் சுற்றி அலைபவர்கள் மட்டுமல்ல, மக்கள்தொகையில் மூன்றில் ஒருவருக்கு மனநலம் பாதிக்கப்பட்டுள்ளது என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

முதலாவதாக அறிமுகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நூல், “உன்னால் முடியாது தம்பி! ” ஷிவ் கேராவின் You can win புத்தகம் எத்தனை இலட்சம் பிரதிகள் விற்பனையாகியுள்ளன என்று நம்மில் பலருக்குத் தெரிந்திருக்கும். நீங்கள் நினைத்தால் வெல்லலாம், Power of posititve thinking, Importance of Subconscious mind, How to make friends, How to be Rich? என்பது போன்ற புத்தகங்கள் புதுதில்லியில் தெருக்கள் தோறும் நூற்றுக்கணக்காக விற்கப்படுகின்றன. இப்படிப்பட்ட புத்தகங்களைப் படிப்பவர்கள் பெரும் அறிவாளிகள் என்று பெற்றோரே பூரித்துப்போவர். எம்.எஸ் உதயமூர்த்தி, அப்துல் ரஹீம் போன்றோரின் சுயமுன்னேற்ற நூல்களும் இதே வகையறாதான். இந்த நூலின் முதல் அத்தியாயமான உன்னால் முடியாது தம்பி, என்ற அத்தியாயத்திலேயே மனநல பாதிப்புள்ளவர்கள் கீழ்க்கண்ட ஏதேனும் ஒன்றில் அதிக ஈடுபாட்டுடன் இருப்பார்கள் என்று மருத்துவர் குறிப்பிடுகிறார்.

1. ஆல்கஹால் மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமைத்தனம்

2. யோகா/தியானம் என ஏதேனும் ஓர் ஆன்மீக அமைப்புடன் தீவிர ஈடுபாடு. (வீட்டில் உள்ளவர்கள் கஷ்டப்படும் அளவுக்கு).

3. ஜோதிடம், ஜாதகம், பில்லி சூனியம், மந்திரம், மாந்த்ரீகம், வாஸ்து, நியூமராலஜி, ராசிக்கல் அணிதல் மூலம் அன்றாட மற்றும் தொழில் பிரச்சனைகளுக்கு தீர்வு காண முற்படுதல்

4. எப்போதும் சுயமுன்னேற்ற நூல்களை படித்துக்கொண்டும், Personality Development Course, Alpha Mind power, முன்ஜென்ம ஆராய்ச்சி என்றெல்லாம் நேரத்தையும், பணத்தையும் செலவழித்துக் கொண்டிருப்பார்கள்.

5. நாட்பட்ட உடல் உபாதைகளுக்கு என வாரந்தோறும் ஏதேனும் ஒரு மருத்துவரை பார்த்துக்கொண்டும், ஏதேனும் ஓர் உடல் பரிசோதனையை செய்துகொண்டும், ஊடகங்களில் விளம்பரம் செய்யும் போலி மாற்று மருத்துவர்களிடம் போய் லேகியம் போன்ற ஏதேனும் ஒன்றை வாங்கி தின்று கொண்டிருப்பார்கள்.

இதில் என்னவொரு சோகம் என்றால் மேலே குறிப்பிட்டிருக்கும் வகையறா மனிதர்கள் அனைவரும் தங்களைப் பற்றி உள்ளுக்குள் ஓர் உயர்வான எண்ணங்களுடன் வாழ்ந்துகொண்டிருப்பவர்கள். தங்களை எல்லாம் தெரிந்தவர்கள் என்றும், அறிவு ஜீவிகள் என்றும், தான் நினைப்பதே சரி, தான் செல்லும் பாதையே சரி என்ற எண்ணத்தில் வாழ்ந்து கொண்டிருப்பார்கள். வாய்தவறி வீட்டில் உள்ளவர்கள் மனநல மருத்துவர், கவுன்சிலிங் என்ற பேச்சை எடுத்தால் தெரியும், ‘இது எவ்வளவு கழண்ட கேஸ்’ என்று இந்த நூலைத் தொடங்குகிறார் டாக்டர் ஆனந்தன்.

No description available.

இந்த அளவீடுகளை வைத்துப் பார்த்தால் டாஸ்மாக் செல்லும் குடிமகன்கள், நித்தியானந்தா, ஈஷா யோகா என்று செல்லும் ஆன்மீகவாதிகள், காலையிலிருந்து மாலைவரை ஜோதிட தகவல்களை டிவியிலும் பத்திரிகையிலும் வாசிப்பவர்கள், அப்பா காசில் உட்கார்ந்து சாப்பிடுபவர்கள், எந்த வேலைக்கு போனாலும் மூன்று மாதத்துக்கு மேல் நிலைக்காதவர்கள், இந்தக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிட்ட கேஸ்கள் என எல்லோருக்குமே மனநல சிகிச்சை அவசியம்தானோ என்று தோன்றுகிறது. இவர்கள் மன‘நல மருத்துவர்களிடம் செல்வதற்கு சமூக ரீதியான மனத்தடை உள்ளதால், இந்த சிக்கல்களை ஜோதிடர்கள், யோகா நிறுவனங்கள், பயன்படுத்திக்கொண்டு எவ்வாறெல்லாம் சம்பாதிக்கின்றன, எத்தனை சிக்கல்களை நாட்டிற்கு அளிக்கின்றன என்று நாம் தினம் தினம் கண்டு கொண்டுதான் இருக்கின்றன. போலிகளை நம்பி ஏமாறாதீர்கள் என்று மனநல ஆர்வலர்களும் சொல்லும் நிலைதான் இன்று உள்ளது.

மனம் என்றால் என்ன, மனநல சிக்கல்களை சரிசெய்ய மருந்து உட்கொள்வது அவசியம், மனநலம் சூழ்நிலைகளால் மட்டும் பாதிக்கப்படுகிறதா, இதற்கு சிகிச்சை உண்டா, சிகிச்சை எடுத்துக்கொண்டவர்களின் வாழ்க்கை தரம் எவ்வாறு உயர்கிறது, சிகிச்சைக்கு உடன்படாதவர்கள் எவ்வாறு வாழ்க்கையில் சிக்கல்களுக்கு உள்ளாகிறார்கள், அவர்களால் குடும்பம் எவ்வாறு பாதிக்கப்படுகிறது, என்றெல்லாம் தெளிவாக விளக்கியுள்ளார் மருத்துவர்.

மனம் என்பது மூளையின் வேலை. மூளை ஹார்டுவேர் என்று எடுத்துக்கொண்டால் மனம் அதிலுள்ள சாஃப்ட்வேர். மூளையிலுள்ள கோடிக்கணக்கான நரம்பு செல்கள் அந்த நரம்பு செல்களுக்கு இடையே நியூரோ டிரான்ஸ்மிட்டர்ஸ் என்றழைக்கப்படும் உயிர்வேதிப்பொருட்களின் உதவியில் நடைபெறும் பரிமாற்றங்கள்தான் மனம். Glutamate, Gaba, Serotonin, Dopamine. Acetyl Choline . Nitric Oxide என பல நுண்ணிய உயர்வேதிப்பொருட்களாகிய நியூரோ டிரான்ஸ்மிட்டர்களின் இயக்கம்தான் மனம் என்று தெள்ளத்தெளிவாக போட்டு உடைத்துள்ளார் மருத்துவர்.

“என் மனதைக் கொள்ளையடித்தவளே” என்றெல்லாம் இந்த புத்தகத்தை படித்தால் பாட முடியாது. மனம் என்பது மூளையின் நியூரோ டிரான்ஸ்மிட்டர்தான். அதையெல்லாம் கொள்ளையடிக்க முடியாது என்றுதான் சிந்திக்க தோன்றுகிறது. மூளையின் மூலக்கூறுகளே மனம், அவையே ஒரு மனிதனின் எண்ணங்கள், உணர்ச்சிகள், நடத்தை,சுபாவம் இவற்றை தீர்மானிக்கின்றன. இந்த மூலக்கூறுகளை தீர்மானிப்பது மரபணுக்கள் (Genes)

எல்லாம் தலையெழுத்து, விதி, கர்மா என்றெல்லாம் மன நல பாதிப்புகளை புறக்கணிக்கக் கூடாது. அது மரபணுக்களின் தாக்கம் என்கிறார். எல்லாமே ஜீன்படிதான் நடக்கும் என்றால், அதற்காக விட்டுவிட முடியுமா? என்ன செய்யலாம்? கவுன்சிலிங், யோகா, மெடிடேஷன் எனத் திரியாமல் மனநல மருத்துவரை ஆலோசனை செய்து, நோய்நாடி நோய்முதல் நாடி சரியான மாத்திரைகளைத் தொடர்ந்து எடுத்துக்கொண்டால் தவிர வேறு வழியில்லை. மாத்திரைகளால் ஜீனை சரிசெய்ய முடியுமா? இதுவரை இல்லை. அடுத்த கட்டமாகிய மூளையின் மூலக்கூறுகளை சரி செய்யும். இதனால் எண்ணம், உணர்ச்சிகள், நடத்தை போன்றவை இயல்பாக சமூகத்தோடு, குடும்பத்தோடு, சக மனிதர்களோடு ஒத்துவாழ உதவும். இரண்டு மிளகு அளவு மாத்திரைகளால் வாழ்க்கைத் தரத்தில் மலையளவு மாற்றத்தை கொண்டுவர முடியும் என்று தன் அனுபவத்திலிருந்து நம்பிக்கை அளிக்கிறார் மருத்துவர் ஆனந்தன்.கடனும் மனமும் , நாட்பட்ட தீராத எந்த பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத உடல உபாதைகள், டிப்ரஷன், குடிநோய், குடிநோயாளிகளின் குடும்பத்தினர், பிறவிக்குணம், சுயமுன்னேற்றம், பதற்றம், சந்தேகம், சுபாவம், பாவம், சந்தேக நோய், டாக்டர் எக்ஸ் – என்று பல்வேறு சிக்கல்களை ஒவ்வொரு அத்தியாயத்திலும் எளிதாக விளக்கியுள்ளார் மருத்துவர்.

“கடனும் மனமும்” என்ற அத்தியாயத்தில் சுபாவக்கோளாறு உடைய மனிதர்கள் பற்றிக் கூறுகிறார். எந்த விதமான மனநோய்க்கான அறிகுறியும் இல்லாமல் சிலரின் பிரத்யேக குணங்களால் அந்த மனிதரும் அவரை சார்ந்த குடும்பத்தினரும் அனுபவிக்கும் சொல்லொணா துன்பங்களை ஆராய்ந்துள்ளார். அன்றாடம் கடன் வாங்குவதே, வட்டி கட்டுவதே வாழ்க்கை நடைமுறையாகிப் போன மனிதர்கள், யாரிடமும் வேலை செய்ய மறுக்கும் மனிதர்கள், எதார்த்தத்திற்கு ஒவ்வாமல் கடன் வாங்கி பிசினஸ் செய்து குடும்பத்தினரை கடனில் மூழ்கடிப்பது போன்ற சுபாவக்கோளாறு குறித்து விளக்கியுள்ளார் மருத்துவர். Anakastic Personality Disorder, Obsessive Compulsive Personality Disorder, இதனால் common sense இல்லாமல் வாழும் மனிதர்களை பற்றி அறிமுகப்படுத்தியுள்ளார்.

“நாட்பட்ட தீராத எந்தப் பரிசோதனையிலும் கண்டுபிடிக்க முடியாத உடல் உபாதைகள் ” என்ற பகுதியில் somatisation disorder குறித்து விளக்கியுள்ளார். “எதைத் தின்னால் பித்தம் தெளியும்” என்ற மனநிலையில் யார் என்ன சிகிச்சை சொன்னாலும் முயற்சி செய்து பார்த்துவிட்டு பல லட்சங்களை கடன் வாங்கி, சொத்தை விற்று செலவு செய்துவிட்டு கடைசியில் வேறு வழியில்லாமல் மனநல மருத்துவரிடம் வருபவர்கள் குறித்து அறிமுகப்படுத்தியுள்ளார்.

“டிப்ரஷன்” என்ற வார்த்தை நமக்கு மிகவும் பரிச்சயமானதாகவே உள்ளது. தூக்கமின்மை, அன்றாட நடவடிக்கைகள் எதிலுமே லயிப்பு, ஈடுபாடு, சந்தோஷம் இல்லாத மனநிலை எந்தவொரு சரியான காரணமும் இல்லாமல் கூட இனம்புரியாக பயம், எப்படியெல்லாம இருந்தால் நல்லது என தெரிந்தும் எதையுமே செயல்படுத்த முடியாமல் இயந்திரத்தனமாக நகரும் அன்றாட வாழ்க்கை, எப்போதும் உடலில் ஓர் அசதி, குற்ற உணர்ச்சிகள், தனக்கு யாருமே உதவிக்கு இல்லை, தன்னால் யாருக்கும் பலனில்லை, எதிர்காலத்தின் மீது நம்பிக்கையில்லை என எண்ண ஓட்டங்கள் இப்படியாக வெளிப்படும். ஆனால் டிப்ரஷன் நோயாளிகளில் 10 சதவீத பேருக்கு மட்டுமே இந்த அறிகுறிகள் தென்படுகின்றன. 3 மாத குழந்தையிலிருந்து முதுமை வரை பாதிக்கும் நோய் டிப்ரஷன். நன்றாக படித்த குழந்தை திடீரென்று படிக்காமல் போவதிலிருந்து நல்ல மார்க் வாங்கிய குழந்தை தற்கொலை செய்துகொள்வது வரை டிப்ரஷன் அளிக்கும் துயரங்கள் கொஞ்ச நஞ்சமல்ல. கிராமப்புற மற்றும் படிக்காத இளைஞர்கள் மத்தியில் டிப்ரஷன் நோய் எந்த வேலைக்கும் போகாமல் கோஷ்டி சேர்ந்துகொண்டு அடிதடியில் ஈடுபடுவது, எதைப்பற்றியும் யோசிக்காமல் ரவுடிகள், மத அமைப்புகள், தீவிரவாத அமைப்புகளால் மூளைச்சலவை செய்யப்பட்டு தீக்குளிக்கவும், தற்கொலைப் படையாக மாறவும் தூண்டப்படுபவர்கள் மனச்சோர்வு நோயாளிகளே. மனச்சோர்வை mild, moderate and severe என்று மூன்று நிலைகளாகப் பிரிக்கலாம். துவக்கத்திலேயே மாத்திரைகளை தினமும் தவறாமல் எடுத்துக்கொண்டால் பெரிய பாதிப்புகளில் இருந்த தப்பிக்கலாம்.

குடிநோயாளிகள் குற்றவாளிகள் அல்ல, நோயாளிகள் என்று புரிய வைப்பது, Cluster A, B, C வகை மனிதர்களைப் பற்றிய அறிமுகம், நல்லவன்னு சொல்லிட்டான் என்பதற்காக எவ்வளவு சுமையையும் தாங்குபவர்களாக இருக்கும் Anakastic Personality people, Mob behavior, Anti social behavior குறித்த புரிதல்கள், சுயமுன்னேற்றம் குறித்து இலக்கில்லாமல் கனவுகாண்பது, பதற்றம், சந்தேகம், சுபாவம், பாவம் ஆகிய குணங்களால் ஏற்படும் கோளாறுகள், அவை வாழ்க்கையில் ஏற்படுத்தும் வடுக்கள். மனப்பிறழ்வு நோய் ஆகியவை குறித்து தெளிவாக விளக்கியுள்ளார் நூலாசிரியர். மனநல சிகிச்சை குறித்த சந்தேகங்கள், மாத்திரைகள் மேல் இருக்கும் தவறான அபிப்பிராயம் ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.

’ இதனை வாசித்து நம்மைச் சுற்றி இருப்பவர்களின் உளவியல் சிக்கல்களைப் புரிந்துகொண்டு சரியான நேரத்தில் உரிய சிகிச்சை அளிப்போம். மனநல மருத்துவர்களிடம் சிகிச்சைக்கு செல்பவர்கள் எல்லாம் பைத்தியம் அல்ல என்று புரிந்துகொள்வோம். மனநல மருத்துவம் ஒருவருக்கு மன அமைதியை கொடுத்து குடும்ப ரீதியாக, தொழில் ரீதியாக, சமூக ரீதியாக வாழ்க்கைத் தரத்தை உயர்த்திக் கொள்ள உதவி செய்கின்றன. மனநல மருத்துவம் குறித்த தவறான புரிதல்களை விட்டொழிப்போம். தனிமனித நலனிற்கும் சமூக நலனிற்கும் மன நலம் எவ்வாறு முக்கியம், தவறுகளை எவ்வாறு சிகிச்சை மூலம் சரிசெய்துகொள்வது என்று அறிவியல் முறையில் விளக்கம் அளித்த மருத்துவர்க்கு நன்றி. ஒரே வரியில் சொல்வதென்றால், இந்த நூல் simple and sublime ஆக உள்ளது. அதாவது ஆழமான கருத்துக்களை எளிமையாக விளக்கியுள்ளது. தீவிரமான நோய்களை எளிய சிகிச்சைகள் மூலம் குணப்படுத்தலாம் என்பதை நடுநிலையுடன் விளக்கியுள்ளது. மருத்துவர் ஆனந்தன் இத்தகைய மேலும் பல நூல்களை எழுத வேண்டும், மனநலம் குறித்த விழிப்புணர்வை அதிகரிக்க வேண்டும். இத்தகைய நூல்கள் பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட வேண்டும்.

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)