இரவின் திரை விரிந்ததும் அவரது மனதில் நீரு பூத்துக் கிடந்த காமம் புகைந்து புகைந்து கங்கு ஒளிர்ந்து எரியத் தொடங்கி விடுகிறது. இரவு நேரமும் தனிமையும் வாய்க்கும் போதெல்லாம் நீலமாய் சிகப்பாய் ஜுவாலையிட்டு குதித்து ஆடுகிறது.
மனைவி இருந்தபோது கூட இப்படி உணர்வு அலைக்கழித்ததில்லை. உடல் கனத்து, சர்க்கரையும், இரத்தக் கொதிப்புமாய் ஆற்றாமையில் முனகித் திரிந்தவளைப் பார்த்து பரிதாபமே சுரந்தது. அவள் இறந்து இரண்டு வருடம் வரை கூட காமம் தலை தூக்கவில்லை. அவ்வப்போது அவளுடன் பகிர்ந்த இரவுகள் நினைவில் மேகமாய் நினைவுகளைத் தூறிச் சிலிர்க்கச் செய்யும். ஏக்க வெப்பத்தைக் கிளப்பும்.
ஆனால் இப்படி ஆளைப் புரட்டிப் போட்டதில்லை. மனைவி இருக்கும்போது வீட்டு வேலைகளில் உதவிய உறவுக்காரப் பெண்தான் இப்போதும் வீட்டு வேலைகளைச் செய்கிறாள். அப்போது வாழாவெட்டியான அவள் மீது அனுதாபம் மட்டுமே தோன்றியது. இப்போது அவளது வேலைகளில் செய்நேர்த்தியை ரசிக்க , உணவை ருசிக்கத் தொடங்கிய மனது, அவளையே ருசிக்கத் துடிக்கிறது . அவள் பாராத தருணத்தில் அவளது வனப்பை, பார்வை மேய அலைகிறது. விகற்பமில்லாமல் நடந்துகொள்ளும் அவள் பார்த்து விட்டால் என்ன நினைப்பாளோ என்று அச்சமும் நடுக்குகிறது.
‘அவளைத் தொட்டுட்டு விட்டுவிடவா போகிறேன் ? வாழாவெட்டியாக இருக்கும் அவளுக்கு நான் இருக்கும் வரை வாழ்வு கொடுக்கப் போகிறேன். ஏன் , என் ஆயுளுக்கும் பிறகும் கூட குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்துவிடலாமே…
ச்சே .. என்ன யோசனை? கல்யாண வயசில் ஒரு மகள் இருக்கிறாள், ஒரு மகன் இருக்கிறான். அவர்கள் நம்மை என்ன சொல்லுவார்கள்… அக்கம், பக்கம் சொந்தம், சுருத்துகள் நம்மைப் பார்த்து சிரிக்க மாட்டார்களா…?
ஒருக்கால், மகனும், மகளும் இங்கேயே வீட்டில் இருந்திருந்தால் இந்த சிந்தனையோ, ஆசையோ தோன்றி இருக்காதோ…. மகன் வெளிநாட்டில் வேலை பார்க்கிறான்; மகள் சென்னையில் விடுதியில் தங்கி வங்கியில் வேலை செய்கிறாள். பதினைந்து நாளைக்கு ஒருமுறை வந்து பார்த்து போவாள். அவளுக்கு நெட்டிலே மாப்பிளை பார்த்தாகி விட்டது. தை பிறந்ததும் பெண்ணும், மாப்பிளையும் ஒருமுறை பார்த்துப் பேசி, சம்மதம் தெரிவித்ததும் கொரோனா தளர்வாக இருக்கும் போதே ஒரே மாதத்தில் கல்யாணத்தை முடித்துவிடலாம்.
மகளுக்கு அம்மாவின் நகைகளோடு, கல்யாணத்திற்காக வாங்கிச் சேர்த்த நகைகளும் இருக்கின்றன. சேமிப்பை வைத்தே நல்லபடியாய் கல்யாணத்தையும் செய்திடலாம். அப்புறம், மகனுக்கும் அந்த ஜோரிலே ஒரு நல்ல குடும்பத்துப் பெண்ணாய் பார்த்து முடித்து விடலாம். இந்த ரெண்டு காரியங்களும் நிறைவேறிய பின், என் தனிமை வாழ்வை எப்படிக் கடத்துவது…?
ஒரு காய்ச்சல், தலைவலி, மூட்டுவலி, முடக்கும் வலின்னு வந்தா ஒரு சுடுதண்ணி வைத்துத் தரவோ, மருந்து மாத்திரை தரவோ ஒத்தாசைக்கு ஒரு ஆள் வேணாமா… ஏளனமா சிரிக்கும் ஊரார் இதையும் நினைச்சுப் பார்க்கணுமில்லையா…
நான் உடல்பசிக்கு மட்டுமா அவளைத் தொட ஆசைப்படுகிறேன். ஓய்ந்த காலத்தில் வாழ்க்கையைக் கடக்கத்தானே அவளது துணையைத் தேடறேன். இது தப்பா… தளர்ந்த காலத்தில் ஒரு ஊன்றுகோல் வேணுமில்லையா… அவளுக்கு நாப்பது,எனக்கு ஐம்பத்தாறு; இருவரும் பாதி வாழ்க்கை கடந்த நிலையில் ஒரு புரிதலிருக்கும் என்ற எண்ணம் தானே தவிர வேறென்ன … ‘
உரத்து சிரிப்பதுபோல் சத்தம்! படுக்கையிலிருந்து எழுந்துபோய் சன்னலைத் திறந்து பார்த்தார். சாரல் மழை முகத்தில் துப்பியது. நொடிப்பொழுதில் முகம், கழுத்து, நெஞ்சு எல்லாம் நீர்த்தாரை நீண்டு வழிந்து உடலை நடுக்கியது. மார்கழியில் பருவம் தப்பிய மழையின் தாக்குதல். சன்னலை இறுக்கி சாத்தினார். குளிர்காற்று மனதுக்குள் எரிந்த காமத்தை ஊதிப் பெருக்கியது.
‘ உடலெங்கும் பரவித் தகிக்கிறதே…. மின்னட்டாம் பூசி என்று நெஞ்சுக்கூட்டுக்குள் நெருப்புக் கங்கை வைக்க, அது வாடைக்காற்றில் கனன்று, கனன்று மரத்தையே எரிப்பதுபோல் அவள் மீதான சிறு ஈர்ப்பு தேகத்தையே எரிக்கிறதே… கரைக்குள் ஒடுங்கி ஓடும் நதியாய் இருக்கும் அவள் மீது என்பாய்ச்சல் கரை ஒழுங்கை உடைத்து விடுமோ… என்னையும் மூழ்கடித்து விடுமோ… ஊர் சிரிக்குமோ …
சரி, நான் செத்து மனைவி இருந்திருந்தால் அவளையும் இந்தக் காமம் சுட்டெரித்திருக்குமோ…இல்லை! அப்படி நடக்காது. அவள் தன் சூழலை உணர்ந்து மனதைத் திருப்பி சமையல் கட்டிலோ, பேரப் பிள்ளைகளைப் பேணுவதிலோ கவனத்தைச் செலுத்தி பிள்ளைகளுக்கு உதவுவாள். எனக்கு சமைக்கவோ, பிள்ளைகளைப் பேணவோ தெரியாமலே அம்மாவும், மனைவியும் என்னை உருவாக்கி விட்டார்களே…. என்னைப் பராமரிக்கக்கூட பெண் தயவைத் தேடவேண்டியதாகி விட்டதே… இனியாவது தனித்து நிற்கப் பழக வேண்டும் .’
புரண்டு புரண்டு படுத்தார். தேகமெல்லாம் உலர்ந்து தாகம் எடுத்தது. எழுந்து சூடுதங்கு குடுவையிலிருந்து இளஞ்சுடு நீரைப் பருகினார் . நாவுக்கும் தொண்டைக்கும் இதமாக இருந்தது. படுத்துக் கண்களை மூடினார். மனசு மூடவில்லையே.. பசியை, தாகத்தை தண்ணீர் அடக்கலாம். தாபத்தை அணைக்குமோ…
மனக்குதிரை கனைத்து சிலிர்த்தது. மனதிலிருந்து ஊற்றெடுக்கும் பிரவாகத்தை மடைமாற்ற அவருக்கு தேகமெல்லாம் உலர்ந்து தாகம் எடுத்தது. எழுந்து சூடுதங்கு குடுவையிலிருந்து இளஞ்சுடுநீரைப் பிடித்த பாடல்களை மனசுக்குள் பாடினார். அவையும் காதலைக் கடைந்து காமத் தீயையே மூட்டியது. எதாவது வாசிக்கலாம் என்றால் விழிகளைத் திறக்க இயலவில்லை. கண்களுக்குள் மணல் துகளைக் கொட்டியது போல் நெறுநெறுத்தது. தான் படித்த கதைகளை நினைவுகூர்ந்து புரண்டு கொண்டிருந்தார்.
அழைப்புமணி விட்டுவிட்டுக் கூவிக்கொண்டே இருந்தது. சிரமப்பட்டு இமைகளைத் திறந்தார்; சன்னல்கள் வழி விடியல் வெளிச்சம் முகத்தில் அறைந்தது. அவள் வேலைக்கு வந்து விட்டாளோ… ஆடைகளை சரிசெய்துகொண்டு கதவைத் திறக்க நகர்ந்தார்.
மேனி தெரியாத சுடிதார் அணிந்து அவள் நின்றிருந்தாள்.
*****
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
வித்தியாசமான கரு. அருமையான எழுத்து நடை. யோசிக்க வைக்கும் முடிவு. ஜனநேசனுக்கு வாழ்த்துகள்.
நன்றி அன்பரே.