உப்பு வேலி – உலகின் மிகப்பெரிய உயிர்வேலியை கண்டடைவதற்கான ஒரு வரலாற்று ஆய்வாளரின் தேடல்…!

உப்பு வேலி புத்தகம் புதிய பதிப்பில் வெளிவந்திருக்கிறது. ஒரு ஆண்டுக்கு முன்பு என்னுடைய அண்ணனிடமிருந்து திருடிக் கொண்டு வந்த உப்பு வேலி இப்போதும் என்னுடன் தான் இருக்கிறது. பதிப்பில் இல்லாததால் அதைத் திருப்பித் தராமல் வைத்திருக்கிறேன்.

இந்தப் புத்தகம் குறித்து எழுதியதை இங்கே பகிர்கிறேன்.

‘உப்பு வேலி’ புத்தகம் வெளிவந்து மூன்று ஆண்டுகள் கடந்திருக்கின்றன. அப்போதே வாசித்திருக்க நினைத்து கடந்த வாரம் தான் தொடங்கினேன். இன்று படித்து முடித்ததும் ஏற்பட்டிருக்கிற மனநிலையை எப்படி வரையறை செய்வதெனத் தெரியவில்லை.

பட்சியின் வானம்: இந்தியாவின் உப்பு ...

ராய் மாக்ஸம் என்கிற இலண்டனைச் சேர்ந்த ஒருவர் வருடத்துக்கு ஒருமாத காலம் கிடைக்கக்கூடிய தனது விடுமுறைகளைத் தொடர்ந்து இந்தியாவில் செலவு செய்கிறார். முற்றிலும் தேடல் நிமித்தமாக.

ஒரு புதர் வேலியைத் தேடியே ராய் மாக்ஸம் இந்தியா வந்திருந்தார். அப்படியானதொரு வேலி இருந்ததை சில ஆவணங்களிலும் அபூர்வமாய் சில வரைபடங்களில் மட்டுமே பார்த்துத்தெரிந்து கொண்டு நேரில் அதன் மிச்சங்களைக் கண்டுகொண்டேயாக வேண்டும் என்கிற பேரார்வத்தில் வரும் ராய் மாக்ஸமின் பயணக் கட்டுரையே இந்த நூல்.

உப்பு வேலி - இந்தியாவில் அறியப்படாத ...

இந்த புதர் வேலியை அவர் உயிர் வேலி என்கிறார். 1869ஆம் ஆண்டு சிந்துவில் இருந்து மகாநதி வரைக்கும் 2300 மைல்கள் ஒரு சுங்க எல்லை உருவாக்கப்பட்டிருக்கிறது. இந்த எல்லைக்கு காவலாக 12000 பேர் பணியில் அமர்த்தப்பட்டிருந்தனர். இவர்களின் பணி என்பது உப்பு கடத்தப்படுவதை தடுப்பதும், உப்புக்கான வரி விதிப்பதும் தான்.
உயிர்வேலிக்கான தேடலின் பின்னணியாக உப்பு என்பது இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றிய வரலாற்றை விவரிக்கிறார்.

நிலவரி, சொத்து வரி என்பதெல்லாம் எல்லோராலும் செலுத்திவிட முடியாது. அனைவரும் தரக்கூடிய வரி என்பது எல்லோரும் பயன்படுத்தும் ஒரு பொருளின்மீதே இருக்க வேண்டும், அந்தப் பொருளும் அதிஅவசியமானதாய் இருக்க வேண்டும் என்கிற நோக்கத்தில் ஆங்கிலேய அரசு இந்தியர்கள் மீது பாரமாய் சுமத்திய உப்பு வரி குறித்த முழுமையான ஆவணம் இது.
காந்தி எதற்காக உப்பு சத்தியாகிரகத்தை சட்ட மறுப்பு ஆயுதமாக்கினார் என்பதற்கான வரலாறு இத்தனை வலுவுடையதாய் இருந்திற்குமென இதனைப் படிப்பதற்கு முன்பு நான் நினைத்திருக்கவில்லை.

உப்புக்காக சீனப் பெருஞ்சுவர் போல் ஒரு வேலி இந்திய நாட்டின் குறுக்கே போடப்பட்டிருப்பது ஒரு முட்டாள்தனமான யோசனை என்கிற எண்ணத்திலேயே ஆய்வினைத் தொடங்கும் ராய் மாக்ஸம் போகப் போக இந்தியர்களை சுரண்டுவதற்காக இடப்பட்ட மனசாட்சியற்ற வேலி அது என்று புரிந்து கொள்ளும்போது மனம் உடைந்ததாகச் சொல்கிறார்.
உப்பு குறித்த மருத்துவ, பூகோள, வரலாற்று பதிவாகவும் இந்த நூலை எடுத்துக் கொள்ளலாம்.

தமிழ் களஞ்சியம்: கிறிஸ்துவ ...

இந்தப் புத்தகத்தை படிக்கும் எவருக்கும் இரண்டு விஷயங்கள் தோன்றும். இந்திய வரலாற்று ஆய்வாளர்கள் ஏன் இப்படியொன்று இருந்ததைப் பற்றிய கவலை கொள்ளவில்லை என்கிற ஆதங்கமும், தனிஒருவராக அலைகழிந்த ராய் மாக்ஸம் என்கிற ஆங்கிலேயர் மீதான வாஞ்சையும்.

ஆங்கில மூலம் : The Great Hedge Of India (Roy Moxham)
தமிழில் : சிறில் அலெக்ஸ்

தற்போது தன்னறம் நூல்வெளி ,குக்கூ காட்டுப்பள்ளி வெளியீடாக வந்திருக்கிறது.

தவற விடக்கூடாத புத்தகம்,

– தீபா ஜானகிராமன் முகநூல் பக்கம்.