ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உப்புவேலி” –  பெ.விஜயகுமார்

ஆயிரம் புத்தகங்கள், ஆயிரம் எழுத்தாளர்கள்: நூலறிமுகம் – “உப்புவேலி” – பெ.விஜயகுமார்

 

 

 

உலகின் மிகப் பெரிய உயிர்வேலி பற்றி ஆங்கிலேய வரலாற்று ஆய்வாளர் ராய் மாக்ஸம் எழுதிய வரலாற்று ஆவணம் ஆப்பிரிக்க, ஆசிய நாடுகளை அடிமைப்படுத்திய ஆங்கிலேயர்கள் அந்நாடுகளில் இழைத்த கொடுமைகள் எண்ணில் அடங்காதவை. அவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தை நிலைநாட்டிட எந்தவொரு எல்லைக்கும் சென்றனர். காலனிய நாடுகளின் இயற்கை வளங்களைக் கொள்ளையடித்து தங்கள் நாட்டிற்கு வளம் சேர்த்துக் கொண்டனர். ஆங்கிலேயர்களின் பேராசைகளை நிறைவேற்றும் பொருட்டு காலனி நாட்டு மக்கள் சொல்லொண்ணாத் துயரடைந்தனர். படிப்பறிவில்லாத அம்மக்களின் உழைப்பைச் சுரண்டி ஆங்கிலேயர்கள் கொழுத்தனர். கடும் பஞ்ச காலங்களிலும் கொடுமையான வரிகள் விதித்து வாட்டி வதைத்த அவர்களுடைய வரி விதிப்பில் இருந்து வாழ்வின் அடிப்படைத் தேவையான உப்பு எனும் மிகச் சாதாரணமான பொருளாலும் தப்ப முடியவில்லை. வரி விதிப்புக்கு உள்ளானதைக் காட்டிலும் உப்பு மீதான வரியை வசூலிக்க அவர்கள் கையாண்ட ஈவு இரக்கமற்ற வழிமுறைகள் கொடுமையாக இருந்தன. அதன் காரணமாக மிகச் சாதாரண உப்பு கடத்தலுக்குள்ளாகும் அரிய பொருளானது. அந்தக் கடத்தலைத் தடுப்பதற்கே உப்புவேலி எனப்படும் உயிர்வேலி உருவாக்கப்பட்டது.

இந்தியக் கிழக்குக் கரைப் பகுதியான ஒடிசாவிலிருந்து வடமேற்கு நோக்கி இன்றைய பாகிஸ்தான் எல்லைப் பகுதிவரை நீண்டு வளைந்து சென்றுள்ளது உப்புவேலி. இந்திய உபகண்டத்தின் வடக்குப் பகுதியை தெற்கிலிருந்து பிரித்த இந்த சுங்கச்சுவரை உருவாருக்கவும், அதனைக் காவல் காக்கவும், மீறியவர்களைத் தண்டிக்கவும் மிகப் பெரிய அளவிலே மனிதவளம் பயன்படுத்தப்பட்டது. அந்த உயிர்வேலியை உயரமாக, அடர்த்தியாக மரங்கள், புதர்களை வளர்த்து உருவாக்கினார்கள். வேலியின் உருவாக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை ஏராளம். அவ்வாறான புதர்வேலி இருந்தது இந்திய வரலாற்று ஆய்வாளர்களின் பார்வையில் படாமல்போனது வரலாற்றுப் புதிர்களில் ஒன்றாகவே உள்ளது. காலச் சக்கரத்தின் சுழற்சியில் காணாமல்போன அந்தச் சுங்கச்சுவரை நீண்ட நெடிய தேடுதலுக்குப் பின்னர் கண்டடைந்த ஆங்கிலேய வரலாற்றாசிரியரும், ஆய்வாளருமான ராய் மாக்ஸம் தன்னுடைய சாகசத்தை, சாதனையை உப்புவேலி எனும் இச்சிறுநூல் வழி சொல்லிச் செல்கிறார்.

இங்கிலாந்தில் ஈவ்ஷாம் நகரில் 1939ஆம் ஆண்டு மிகச் சிறந்த வரலாற்றாசிரியரான ராய் மாக்ஸம் பிறந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தின் செனட் ஹவுஸ் நூலகத்தின் மூத்த பாதுகாவலராகப் பொறுப்பு வகித்து 2005ஆம் ஆண்டு அவர் பணியிலிருந்து ஓய்வு பெற்றார். The Great Hedges of India (உப்புவேலி), The East India Company Wife, A Brief History of Tea, The Theft of India, The Freelander போன்ற வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். லண்டனின் பழைய புத்தகக் கடை ஒன்றில் மேஜர் ஜெனரல் ஸ்லீமன் எழுதிய ’ஒரு இந்திய அதிகாரியின் புலம்பல்களும், ஞாபகங்களும்’ (Rambles and Recollections of an Indian Official) என்ற புத்தகத்தை ராய் மாக்ஸம் தற்செயலாக வாங்குகிறார். புத்தகத்தில் இடம் பெற்றிருந்த “இந்திய தேசத்தின் குறுக்காக நீண்ட சுங்கச்சுவர் எழுப்பப்பட்டிருந்தது. 1867இல் அது சிந்துநதியிலிருந்து ஒடிசாவின் மகாநதிவரை 2,300 மைல்கள் நீண்டிருந்தது. 12,000 பேர் அதன் காவல் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். யாரும் ஊடுருவ முடியாத முள் மரங்களால் ஆனது இந்தப் புதர்வேலி” என்ற குறிப்பு அவரைத் திகைப்படையச் செய்தது. பெரும் அதிர்ச்சிக்குள்ளான ராய் மாக்ஸம் இந்திய வரலாற்று புத்தகங்கள் அனைத்தையும் புரட்டிப் பார்க்கிறார். இந்திய வரலாற்றை விரிவாக எழுதிய ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் வரலாற்று நூல்களில்கூட உப்புவேலி பற்றிய குறிப்பு எதுவும் காணப்படாதது அவரை வியப்படைய வைத்தது. அந்த வியத்தகு புதர்வேலியை நேரில் கண்டு ஆவணப்படுத்துவது என்று முடிவெடுக்கிறார். அவரது அந்த தேடுதலில் கண்டெடுத்த முத்தே இந்த அரிய ‘உப்புவேலி’ நூலாகும்.

ராய்மாக்ஸம்
காற்றுக்கும், நீருக்கும் அடுத்து மனித வாழ்வின் அடிப்படைத் தேவையாக உப்பே இருக்கிறது. ஏழைகளுக்கான உணவின் ஒரே சுவையூட்டி உப்பு மட்டுமே. உப்பின்றி கால்நடைகளாலும் உயிர்வாழ முடியாது. ’உப்பில்லாப் பண்டம் குப்பையிலே’ என்பது வெறும் பழமொழி மட்டுமல்ல –உப்பின் தேவையை உணர்த்துகின்ற அருஞ்சொற்களாகும். போதியஅளவு உப்பு எடுத்துக்கொள்ளாதபோது அது பல நோய்களுக்கு இட்டுச் செல்கிறது. இருப்பினும் உப்பின் மீது அசுரத்தனமாக வரியை விதித்து ஏழை எளிய மக்களின் வாழ்வை ஆங்கிலேய அரசு சூறையாடியது. ஆணவமும், அதிகார வெறியும் ஏற்படுத்திய வன்மமாகவே உப்பு வரி இருந்தது.
1857ஆம் ஆண்டு நிகழ்ந்த சிப்பாய் கலகத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக இந்தியர்கள் கிளர்ந்தெழுந்தனர். அந்தக் கலகம் நிலவுடமைச் சமூகங்களின் பராம்பரிய உரிமைகள் ஆங்கிலேயர்களால் பறிக்கப்பட்டதற்கு எதிராக வழிநடத்தப்பட்டது. உப்பு வரிக்குப் பதிலாக நிலத்தின் மீது, செல்வங்கள் மீது வரி விதிக்கப்பட்டிருந்தால் நிலைமை மோசமாயிருந்திருக்கும். உப்பின் மீது போடப்பட்ட அந்த வரி அச்சுறுத்தப்பட்டவர்களாக, வலிமையற்றவர்களாக, நசுக்கப்பட்டிருந்த ஏழை எளிய மக்களையே அதிகம் பாதித்தது. பணக்கார இந்தியர்களுக்கு அது அவ்வளவு பெரிய விஷயமாக இருக்கவில்லை.

நியாயமாக ஆங்கிலேய அரசு உப்பின்மீதல்லாமல் சர்க்கரையின் மீதே வரி விதித்திருக்கவேண்டும். சர்க்கரையும், உப்பும் ஒட்டுமொத்தத்தில் ஒரே அளவிலேயே உட்கொள்ளப்படுகின்றன. ஆனால் உப்பிற்கான குறைந்தபட்சத் தேவை எல்லோருக்குமே இருப்பதால், அது மக்கள் அனைவருக்குமான அத்தியாவசியமான தேவையாக உள்ளது.. உப்பு அதிகம் சேர்த்துக்கொள்வது உடலுக்குத் தீங்கானது என்பதால் ஏழைகள், பணக்காரர்கள் அனைவருமே சீரான அளவு உப்பையே உட்கொள்கின்றனர். சர்க்கரை அதற்கு மாறாக பணக்காரர்களின் உபரி வருமானத்தில் வாங்கப்படுகிறது. ஏழைகளைக் காட்டிலும் பணக்காரர்கள் அதிக அளவு சர்க்கரையைப் பயன்படுத்துகின்றனர். எனவே ஆங்கிலேய அரசு உப்புக்குப் பதிலாக சர்க்கரையின் மீது வரியை விதித்திருந்தால் அது பணக்காரர்களை மட்டுமே அதிகம் பாதித்திருக்கும். உப்பு வரியின் சுமையிலிருந்து ஏழைகள் தப்பிப் பிழைத்திருப்பார்கள். சர்க்கரை மீதான வரி ஏழைகள் பலரின் உயிர்களைக் காத்து நின்றிருக்கும். உப்பின் மீதான வரி உச்சபட்ச மனிதத்தன்மையற்ற வரி என்பதில் சந்தேகமே இல்லை.

மகாத்மா காந்தி ஆங்கிலேய எதிர்ப்பிற்கான அடையாளமாக உப்பு வரியையே தேர்ந்தெடுத்துக் கொண்டார். தன் இயல்பிலேயே அநீதியான, அரசால் நியாயப்படுத்த முடியாத செயலாகவே உப்பு வரி இருப்பதாக காந்தி கருதினார். “உப்பின் மீது சட்டத்துக்குப் புறம்பான அரசின் முற்றதிகாரத்தைக் களைந்திட விரும்புகிறேன். உப்பு வரியை ஒழிப்பதே என்னுடைய குறிக்கோளாகும். என்னைப் பொருத்தவரையில் அதுவே ஒட்டுமொத்த விடுதலைக்கான ஒரே வழியாகவும் இருக்கிறது” என்று கூறி உப்பு வரிக்கு எதிரான போராட்டத்தில் காந்தி உறுதியுடன் இருந்தார்.
ராய் மாக்ஸிடம் உப்புவேலி பற்றிய உண்மையைக் கண்டறிய வேண்டும் என்ற ஆவல் எழுந்த நிலையில் இங்கிலாந்து நூலகங்களில் அதற்கான வரைபடங்களைத் தேடி எடுத்துக்கொண்டு அவர் இந்தியாவிற்குப் புறப்பட்டார். இந்தியத் தலைநகர் டில்லியில் இருந்த நண்பர்கள் அவருக்கு உதவினர். முதல் பயணத்தில் அவரால் வெற்றியடைய முடியவில்லை. லண்டனுக்குத் திரும்பச் சென்று மீண்டும் துல்லியமான வரைபடங்களுடன் இந்தியாவிற்கு வந்து சேர்ந்தார். வடஇந்திய நகரங்களான ஜான்சி, இட்டவா, கான்பூர், லக்னோ, ஆக்ரா என்று அவர் சுற்றியலைந்தார். சுங்கவேலி அமைப்பதற்காகப் பயன்பட்ட மரங்களின் ’வாழ்நாள் காலம்’ கடந்து பல ஆண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் புதர்வேலி பெரும்பாலும் அழிந்து போயிருந்தது. அந்தப் புதர்வேலியை அழித்து அந்த இடத்திலேயே புதியசாலைகள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்திய தேசிய காங்கிரஸ் உருவாகக் காரணமாக இருந்த ஆங்கிலேய அதிகாரி ஆலன் ஆக்டேவியன் ஹியூம் சுங்கவேலிகளைப் பராமரித்த துறையின் அதிகாரியாகச் சில காலம் செயல்பட்டவர் என்ற தகவலும் ஆய்வில் தெரிய வருகிறது. உப்பு எங்கெல்லாம், எவ்வாறெல்லாம் தயாரிக்கப்படுகிறது என்ற குறிப்புகளையும், மனித உடலின் ஆரோக்கியத்திற்கு எந்த வகையில் உப்பு தேவைப்படுகிறது என்பதையும் ராய் மாக்ஸம் தன்னுடைய நூலில் குறிப்பிடுகிறார். இந்தியாவில் அன்று நிலவிய கடும் பஞ்சங்கள் பற்றியும், புரையோடிப் போயிருந்த ஊழல்கள் பற்றிய குறிப்புகளும் நூலில் இடம் பெற்றுள்ளன.

1867-77 காலகட்டத்தில் மட்டுமே உப்புவேலி நடைமுறையில் இருந்துள்ளது. அதற்குப் பிறகு உப்புவேலி அழிக்கப்பட்டுவிட்டதே மக்கள் அது குறித்து அறியாமல் போனதற்கான காரணமாகும். சற்று பராமரிக்கப்பட்டிருந்தால் உப்புவேலி ஆங்கிலேயர் ஆட்சியின் கொடுங்கோன்மைக்கு மற்றுமொரு சாட்சியமாக நிலைத்திருந்திருக்கும். வரலாற்று அடையாளமாக, சுற்றுலாத்தலமாகத் திகழ்ந்திருக்கலாம்.

ஆங்கிலேயக் கிழக்கிந்திய கம்பெனி உருவாக்கிய 2,300 மைல்கள் நீளமுள்ள புதர்வேலி மனித வரலாற்றிலேயே மிகப்பெரிய கட்டுமானங்களில் ஒன்றாக, உலகிலேயே மிகப்பெரிய உயிர்வேலியாக இமயமலையிலிருந்து ஒடிசாவரைக்கும் நீண்டு இந்தியாவை இரண்டாகப் பிரித்தது. பிரிட்டனிலிருந்து கிளம்பிவந்து இந்தியாவின் நிலங்களிலும், ஆறுகளிலும் அலைந்துதிரிந்து ஒரு தேசமே மறந்துவிட்ட சுங்கவேலியில் எஞ்சியிருந்த சிறு பகுதியைக் கண்டடைந்து ஆவணப்படுத்திய ராய் மாக்ஸம் சிறந்த வரலாற்று ஆய்வாளர் என்பதில் ஐயமில்லை.
பிரபல இந்தி எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் ‘உப்பு வரி வசூல் ஆய்வாளர்’ எனும் சிறுகதையில் உப்புவேலி பற்றிய அரிய குறிப்புகளைக் கொடுத்துள்ளார். ‘The Great Hedge of India’ என்று ராய் மாக்ஸம் ஆங்கிலத்தில் எழுதிய நூலை அழகு தமிழில் சிறில் அலெக்ஸ் மொழிபெயர்த்துள்ளார். நூலினை வெளியிட்ட ’தன்னறம் நூல்வெளி’யும் பாராட்டுதலுக்குரியது.

நூல் : உப்புவேலி
உலகின் மிகப்பெரிய உயிர்வேலியின் வரலாற்று ஆவணம்
ஆசிரியர் : ராய் மாக்ஸம
தமிழில்: சிறில் அலெக்ஸ
வெளியீடு: தன்னறம் நூல்வெளி

 

May be a doodle of text that says "BOOK DAY ஆயிரம் புத்தகம் ஆயிரம் எழுத்தாளர் யிரம் நூலறிமுகம் 2024 சென்னை புத்தகக் காட்சி முன்னிட்டு bookday.in புதிய திட்டம் "யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்' என்பதற்கேற்ப படித்ததைப் பகிர்வோம்! பசியாறுவோம்! 2022-23 ல் தாங்கள் வாசித்ததில் கவர்ந்த ஒரு புத்தகம் குறித்து நூலறிமுகம் எழுதுங்கள். ஏற்கனவே எதிலும் வெளிவராத புதிய அறிமுகம் மட்டுமே www.bookday. www. ல் பிரசுரமாகும்) பிரசுரமானால் ₹500 மதிப்புள்ள கூப்பன் அன்பளிப்பாக புத்தகம் வாங்க அனுப்பி வைக்கப்படும். ஆயிரம் புத்தகம் ஆயிரம் அறிமுகம்.. உங்கள் ஒத்துழைப்பால் மட்டுமே சாத்தியமாகும். எழுத்துகள் மூலம் இதயம் தொடும் இந்தத் திட்டம் உங்கள் பங்கேற்புடன்.. உடன் செயல்படுங்கள், உங்கள் நூல் அறிமுகத்திற்காகக் காத்திருக்கிறது புக்டே. மின்னஞ்சல் bookday24@gmail.com. பாரதி புத்தகால்யம்"

 

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது  புத்தக  விமர்சனம்,  கட்டுரைகள்  (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *