உரைகல்லில் நடனமிடம் சொற்கள் - நூல் அறிமுகம் - செ.தமிழ் ராஜ் - Uraikalil Nadanamidum Sorkkal book review by pon vickram - https://bookday.in/

உரைகல்லில் நடனமிடம் சொற்கள் – நூல் அறிமுகம்

உரைகல்லில் நடனமிடம் சொற்கள் – நூல் அறிமுகம்

 

நூலின் தகவல்கள் : 

நூல் : உரைகல்லில் நடனமிடம் சொற்கள்

ஆசிரியர் : செ.தமிழ் ராஜ்

வெளியீடு : மானுட சிந்தனை பதிப்பகம்

விலை :  ரூ 130

தொடர்புக்கு  : 99658 02089

 

ஒரு மனிதன் எந்நேரமும் எழுத்துக்களைப் பற்றியும் எழுத்தாளர்களைப் பற்றியுமே சிந்தித்துக் கொண்டே இருக்கிறார். வாசிப்பை நேசிக்கிறார், புத்தகங்களோடு தன் வாழ்க்கையை பகிர்ந்து கொள்கிறார். தான் வாசித்து நேசித்த எழுத்தாளர்களையும் அவர்களின் எழுத்துக்களையும் நமக்கு உரைகல்லில் நடனமிடும் சொற்கள் மூலம் அறிமுகப்படுத்துகிறார் கவிஞர் செ. தமிழ்ராஜ் அவர்கள்.

யான் பெற்ற இன்பம் இவ்வையகம் பெருக என்பதைப் போல 36 நூல்களை எடுத்து கசக்கி சாறு பிழிந்து கொடுக்கிறார்.

நூல் பல கற்கிறார், கற்றதை ரசிக்கிறார், ரசித்ததை பிறரோடு பகிர்ந்து கொள்ள நினைக்கிறார். வாசித்ததில் தன் மனதை கவர்ந்ததென முப்பத்தாறு நூல்களைத் தேர்ந்தெடுத்து ஆய்வுக்கு உட்படுத்தி வரி வரியாக வாசித்து, வாசித்த நூல்களின் விவரங்களை விவரிக்கிறார். ஒரே வகையான நூல்களை மட்டும் எடுத்துக் கொள்ளாமல் சிறுகதைகள், நாவல், கவிதைகள், கட்டுரைகள் என பலதரப்பட்ட நூல்களை எடுத்து ஆராய்ந்திருக்கிறார். இது போன்ற ஆய்வுக் கட்டுரைகள் தமிழுக்கு புதிதல்ல ஆனாலும், கவிஞர் தமிழ் ராஜ் அவர்களை பாராட்டவும் கொண்டாடவும் தான் வேண்டும் காரணம், எப்பக்கமும் சாயாத தராசு முள்ளாய் இருக்கிறார். சார்பு கருத்தென்பதில்லாமல் நடுநிலையோடு ஆராய்ந்திருக்கிறார். கவிஞர் செ.தமிழ் ராஜ் நான்கு புத்தகங்களுக்கும் மேல் வெளியிட்டுள்ள கவிஞராகவும் இருப்பதால், இந்த ஆய்வுக் கட்டுரையே, சில இடங்களில் சுருக்கமாகவும் அழகாகவும் கவிதை போலும் வடித்திருக்கிறார்.

செ.தமிழ்ராஜ் அவர்களின் உரைகல்லில் நடனமிடும் சொற்களை வாசிக்கையில் 36 நூல்களும் எந்த வகையைச் சார்ந்தது அதன் சுவை என்ன என்பது தெளிவாகிறது. வாசித்த ருசி, அந்த நூல் எங்கே என்று தேடி வாங்கத் தூண்டுகிறது, ஏதாவது ஒரு புத்தகக் கண்காட்சியில் இந்த 36 நூல்களில் ஒரு நூலைக் கண்டுவிட்டால் கைகள் தானாகப் போய் அந்நூலை எடுத்துக் கொள்ளும். ஒப்பற்ற அழகான ஆய்வு நூலாக மனதில் நடனமிடுகிறது செ.தமிழ் ராஜ் அவர்களின் சொற்கள்.

புதிதாக வாசிப்பு உலகத்துக்குள் வருகின்ற இளைஞர்கள், தோழர்களுக்கு இந்நூல் ஒரு வழிகாட்டியாக இருக்கும்.

இந்த உரைகளில் என்ன உறைந்திருக்கிறது என்பதை நானும் கொஞ்சம் உரசி பார்க்க விரும்புகிறேன்.

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கத்தின் மேனாள் தலைவர் ச.தமிழ்ச்செல்வன் அவர்களின் வாழ்த்துரையோடு துவங்குகிறது.

யாத்வஷேம் எனும் நாவல் இது மொழிபெயர்ப்பு நாவல். இந்நாவலைப் பற்றி தமிழ் ராஜ்,

நாவலெனும் வடிவத்தில் மனிதம் தொடர்பான கேள்விகளை உரையாடல்களை நமக்குள் எழுப்பிச் செல்கின்றது. என்கிறார்
புனைவில் வரலாற்றையும் சேர்த்துப் பிசைந்து கொடுத்திருப்பதாகவும் சொல்கிறார்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நர வேட்டையிலிருந்து தப்பிய யூத குடும்பம் ஒன்று சிதறித் தெறித்து ஓடுகின்றது. தகப்பனும் மகளும் இந்தியாவை தஞ்சம் அடைய தாய் தம்பி தங்கை அக்கா பற்றிய தகவல்கள் ஏதுமில்லை. பாதிக்கப்பட்ட 10 வயது சிறுமியின் பார்வையிலிருந்து கதை விரிவதாகச் சொல்லியிருக்கிறார்….

தொ. பரமசிவன் எழுதிய ‘அறியப்படாத தமிழகம்’ இது கட்டுரை
இந்நூலைப் பற்றி தமிழ் ராஜ் சொல்லும்போது,

அறியப்படாத தமிழகம் புத்தகத்தின் வாயிலாக தமிழர்கள் அறிந்து கொள்ளத் தேவையான தமிழர்களின் தொன்மத்தை கலாச்சாரத்தை பண்பாட்டை சமூக விழுமிய அடையாளங்களை காட்சி படுத்தியிருக்கிறார் தொ.ப. சடங்கு சம்பிரதாயம் என அருங்காட்சியகத்தில் அடுக்கி வைக்கப்பட்ட கண்டுபிடிப்புகளாய் நமது பண்பாட்டு எச்சங்களை சொற்களால் பெட்டகமிட்டு பாதுகாத்து இருக்கிறார்….

“ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை “

இந் நூலாசிரியர் ஆர். பாலகிருஷ்ணன் இந்திய ஆட்சிப் பணி அலுவலர் (ஓய்வு) ஒடிசா மாநில கூடுதல் தலைமைச் செயலாளராகவும் வளர்ச்சி ஆணையராகவும் பணியாற்றியவர்.

புத்தகம் மிகக் கனமானது தமிழர்கள் ஒவ்வொருவரும் வாசிக்க வேண்டிய புத்தகம். தமிழ் ராஜ் இந் நூலைப் பற்றி விரிவாக எழுதியிருக்கிறார்,

முப்பது ஆண்டு கால உழைப்பில் ஒவ்வொரு ஆய்வும் உண்மையின் தீச்சுடராய் ஒளிர்கிறது. பழந்தொன்மையான வார்த்தைகளை எடுத்துக் கொண்டு உலகெங்கும் சொற்களின் வேர்களை மிக மிகத் தெளிவாக பதிவு செய்திருக்கிறார்…

கண்ணகி அணிந்த கால் சிலம்பு சோழ நாட்டில் துவங்கி பாண்டிய நாட்டில் நீதி கேட்டு சேர நாட்டில் தெய்வமாகியதோடு நின்ற விடவில்லை கேரளம் குஜராத் பாகிஸ்தான் இலங்கை என நீள்கிறது சிலம்பின் ஆற்றொனா துன்பக் குரல். சிலம்பின் ஓசையோடு பின் தொடர்ந்து பயணிக்கிறார் ஆய்வாளர்…

கவிஞர் பாண்டிச்செல்வியின், நெருப்புச் சொற்கள்’

தோழர் தமிழ் ராஜ் அவர்களின் விசாலப் பார்வையில் நெருப்புச் சொற்கள்,

தோழர் பாண்டிச்செல்வி அவர்கள் ஒரு காட்டுச் செடி போன்றவர் தன்னியல்பான தனது படைப்பாற்றல் மூலமாக செயற்கை பூச்சுகளற்ற போராட்டக் களமான வாழ்வியலிருந்து தவிப்பும் தகிப்பான சொற்களைத் தேடியதில் அவரது காடெங்கும் நெருப்புச் சொற்களே விளைந்துள்ளது. கோபக்கார கவிதாயினியிடமிருந்து பூத்த கவிதைகள் யாவும் சமுகத்தின் புன்னகையை ஏந்தியிருக்கின்றன.

தொலைதூர பேருந்துப் பயணங்களில் சிறுநீர் உபாதை என்பது ஆண்களுக்கே மிகவும் அவஸ்தையானது இதில் பெண்களின் நிலை பெரும்பாடானது. மூத்திரம் வழியும் நிலையில் கூட வக்கிர ஆண்களின் பார்வையை தோலுரித்து காட்டுகிறது.

அவளும் நின்றவாறே
தன் ஆடையை ஈரமாக்கினாள்
ஈரங்கெட்டவர்களின் பார்வையை விட
மூத்திர வாடையே மேலானது

பெண் விடுதலைக்கு பாடிய பாரதியைக் கூட விட்டு வைக்கவில்லை நெருப்புச் சொற்கள்,

அண்டை வீட்டின் அரிசிக்கு நின்றதில்லை
செல்லம்மாக்களே குருவிக்கும் சோறிட
பக்கத்து வீட்டின் கதவை தட்டுகிறார்கள்….

பாடலாசிரியர் ஏகாதசியின் சைக்கிள்

காலச்சக்கரத்தை பின்னிருந்து சுழற்றி அதன் வழியாக தான் வாழ்ந்த கிராமத்தின் வெள்ளந்தி மனிதர்களை கதாபாத்திரங்களாக புழுதி படர்ந்த செங்காவி மண்ணில் உலவ விட்டு நவீன மனிதர்களுக்கு காட்சிப்படுத்தியுள்ளார் கவிஞரும் இயக்குனருமான ஏகாதசி. நாவலின் தலைப்பையே சைக்கிள் என்று வைத்துள்ளார் அது கதையில் கடைசி வரை ஒரு உயிருள்ள கதாபாத்திரமாய் நம்மோடு உருண்டு வருகிறது …
கால வெள்ளம் அடித்துக் கொண்டு போன சைக்கிள் ஓடிய தடங்களை நமக்கு சித்திரமாய் வரைந்து காட்டுகிறார் தமிழ் ராஜ்.

ஒரு காலத்தில் சைக்கிள் என்பதுதான் ஒரு மனிதனின் அதிகபட்ச ஆடம்பரம். சைக்கிளை புது மனைவியோடு ஒப்பிடலாம் அவ்வளவு அழகு படுத்துவார்கள். டைனமோவிற்கு கூட மஞ்சள் வெல்வெட் துணி சுத்துவார்கள். ரிம் கம்பிகளில் பிளாஸ்டிக் முத்துக்களை கோர்ப்பார்கள். இரண்டு ஹாண்ட் பார்களிலும் பெண்கள் தலைக்கு மட்டும் குஞ்சம் போல் கட்டி தொங்கவிடுவார்கள். சின்னச் சின்ன பாகங்களுக்கு கூட பிளாஸ்டிக் மூடி கொண்டு அலங்கரித்து இருப்பார்கள். ஊருக்குள் இரண்டு சக்கர தேரொன்று உருண்டு ஓடுவது போல் இருக்கும். அதெல்லாம் ஒரு கனாக்காலம் ஆகிவிட்டது.

சைக்கிள் என்ற தலைப்பைக் கண்டதுமே நாவலில் கூட இல்லாத சைக்கிளின் காலத்தை சித்திரமாக தனது சொற்களின் மூலம் நமக்கு காட்சி படித்தியிருக்கிறார் தோழர் தமிழ் ராஜ்.

கவிஞர் பா மகாலட்சுமியின் ‘கூழாங்கற்கள் உருண்டகாலம்’

ஒரு கூழாங்கல் பளபளப்பாய் மாறுவதற்கு எவ்வளவு காலம் உருள வேண்டியது இருக்கும், அத்தனை கால உழைப்பை உதிர்த்தே அழகிய கவிதைகளை வார்த்திருக்கிறார் பா.மகாலட்சுமி….என்று கவிதைக்கு கவிதை வடிக்கிறார் தமிழ் ராஜ்.

அனுபவங்களில் இருந்தே கவிதைக்கான கருப்பொருளை எடுக்கிறார். அனுபவங்களை கவிதையாக்குவதில் பலம் பலகீனம் இரண்டுமே உள்ளது. பலம் என்றால் வாழ்வியலை கவிதை ஆக்கி பொது சமூகத்திற்கான செய்திகளை சொல்லிச் செல்வது. பலகீனம் என்றால் நமது நாட்குறிப்பேட்டை பலரறிய வாசிக்கத் தருவது. இதில் எது சரி என்பதை கவிஞர் தான் தீர்மானிக்க வேண்டும்.

இப்படி பலம் எது பலகீனம் எது என்பதையும் எடுத்துக்காட்டத் தவறவில்லை.

எழுத்தாளர் எஸ் ராமகிருஷ்ணனின் ‘மறைக்கப்பட்ட இந்தியா’

எங்கள் ஊர் கிளை நூலகத்தில் ஒரு புதையலை கண்டெடுத்தது போல் இந்நூலை தேடி கண்டெடுத்தேன். எவரின் கை படாமலும் விரலின் நுனி கூட தொடாமலும் ஒரு புத்தம் புதிய பெட்டகம் போல் அடுக்குகளின் வரிசையில் நின்ற நிலை, புத்தனைப் போல் இருந்தது.

இந்த புத்தகத்தை கண்டெடுத்ததைக் கூட ஒரு கவிதை போல, ஒரு புதையலை தேடி எடுத்ததைப் போல அழகாகவும் ஒரு மகிழ்வோடும் சொல்கிறார்.

குராயூர் எரியீட்டி அவர்கள் எழுதிய ‘இல்லறத்தில் இவர்கள்’ (காரல் மார்க்சும் ஜென்னியும்)

உலகின் விடியலுக்காக அறிவுத் தளத்தில் உழைத்தவரின் வாழ்வு எவ்வளவு இருள் சூழ்ந்தது என்பதையும், அதில் கைவிளக்கேற்றி காரல் மார்க்ஸ் வாழ்வில் ஒளி வீசிய தோழர் ஜென்னியின் தியாகத்தையும் படம் பிடித்துக் காட்டுகிறார்.

செல்வச் சீமாட்டியாக வளமிக்க தொரு வாழ்வு வாழும் பெரும் தனவந்தர் குடும்பத்தில் பிறந்திருந்தாலும், உலகை மாற்றி அமைக்கும் பெரும் கனவோடு 2000 வருட மனித சரித்திரத்தின் சுரண்டல் வர்க்க பிழையை சீர்திருத்தும் சூத்திரத்தை கண்டடைவதில் ஊன் உறக்கம் இழந்து மானுட சமுத்திரத்திற்கான மனிதநேயத் தத்துவத்தை கண்டடைந்தவர்க்கு உறுதுணையாக இருந்து காலமெல்லாம் அவரோடு துயர் மிகும் உயர் துன்பத்தை சகித்துக் கொண்டு பயணித்த ஜென்னியின் தியாகம் மகத்தானவை.

காரல் மார்க்ஸ் ஜென்னி இருவரின் இல்லற வாழ்வில் அன்பு மட்டுமே மூலதனமாக இருந்தது. வாழ்வின் அடிப்படைத் தேவைகளுக்கு வறுமை அவர்களை தின்று கொண்டிருந்தது. நூலை வாசிக்கும் யாருக்கும் தன்னை அறியாமல் கண்ணீர் சொரிந்து கொண்டிருக்கும்.

தோழர் எரியீட்டி 6 தலைப்புகளில் எழுதியிருக்கிறார். விரிவாக வாசித்துச் செல்வோர்க்கு இதோர் சிற்றேடு, பிறப்பு, கல்வி, திருமணம், குழந்தைகள், வாசிப்பு, இறப்பு என பிரித்து எழுதி இருக்கிறார்.

இப்படியாக வாசக நெஞ்சில் பல நூல்கள் பதியம் போடப்படுகிறது. சில நூல்களின் விமர்சனங்கள் மூல நூலில், இதைவிட என்ன இருந்து விடப் போகிறது. என்று தோன்றும் அளவுக்கு சிறந்த விமர்சன கட்டுரைகளாக இருக்கிறது. இது போன்ற கட்டுரைகள் வாசகர்களுக்கு மட்டுமல்ல எழுத்தாளர்களுக்கும் உற்சாகத்தை தருபவை.
சிறந்ததொரு விமர்சனத்துறையாக உரைகளில் நடனம் விடும் சொற்களை படைத்தளித்த கவிஞர் தமிழ் ராஜ் அவர்களுக்கு பாராட்டும் வாழ்த்துக்களும்.

 

நூல் அறிமுகம் எழுதியவர்: 

பொன் விக்ரம்



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *