நூல் : உரையாடும் வகுப்பறைகள்
ஆசிரியர் : சு.உமாமகேஸ்வரியின்
விலை : ரூ. ₹80
பக்கங்கள் : 88
வெளியீடு :
பாரதி புத்தகாலயம்
தொடர்புக்கு : 044 – 24332424 /24330024/
விற்பனை : 24332924
புத்தகம் வாங்க : www.thamizhbooks.com
[email protected]

ஒரு அரசுப்பள்ளி வகுப்பறைக்குள் நிகழும் ஆரோக்கியமான உரையாடலை மிகைப்படுத்தாமல் செறிவான முறையில் பதிவுசெய்யப்படிருக்கும் நூல்தான் இந்த ‘உரையாடும் வகுப்பறைகள்’

பரிட்சார்த்தமுறையில் ஏராளமான செயல்பாடுகளை வகுப்பறைக்குள் புகுத்தி அதில் ஓரளவு வெற்றியும் கண்டிருக்கிறார் இந்நூலின் ஆசிரியர் சு.உமாமகேஸ்வரி.

சுமார் 24 தலைப்புகளின்கீழ் எழுதப்பட்டுள்ள கட்டுரைகள் பதின்பருவப் பெண்குழந்தைகள் எதிர்கொண்ட அல்லது எதிர்கொண்டு வரும் ‘எதார்த்தங்களை’ அப்படியே பதிவுசெய்திருப்பது போற்றத்தக்கது.

திட்டமிடப்பட்ட வகுப்பறைதான் என்றபோதும், அவற்றைத் தாண்டி குழந்தைகளின் எதிர்பார்ப்பை, ஏக்கத்தை, உளவியல் சிக்கலை, பாதுகாப்பு உணர்வை, அவர்களுக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் திறமையை மையமாகக் கொண்டு எல்லாக் கட்டுரைகளும் நகர்ந்து செல்கிறது.

இதற்கு முன் இவர் எழுதிய ‘கல்விச் சிக்கல்கள் தீர்வை நோக்கி’ மற்றும் ‘இன்றைய சூழலில் கல்வி’ ஆகிய நூல்களில் காணப்பட்ட தொனியும் அறச்சீற்றமும் அப்படியே இருந்தபோதும், கொஞ்சம் மென்குரலில் அன்பைக்குழைத்துச் சொல்லவேண்டியதை நீட்டி முழக்காமல் கணக்கச்சிதமாககச் சொல்லியிருக்கிறார்.

எல்லா வகுப்பறையிலும் குழந்தைகள் குழந்தைகளாகவே இருக்கிறார்கள். மாறவேண்டியது ஆசிரியர்களும், பெற்றோர்களும், சமுதாயமும் என்பதைக் குழந்தைகள் வாயிலாகவே பேசி அதை மிக அழகாக ஆவணமும் படுத்தப்பட்டிருக்கிறது.

குழந்தைகளுக்குள் நீளும் உரையாடல்களில் ஒரு வீண் விவாதமோ, ஊடகவெளியில் வெளிப்படும் வறட்டுச் சண்டையின் பாதிப்போ இல்லாமல் எல்லோரும் ஏற்றுக்கொள்ளும் விதமாக அவர்களை நெறிப்படுத்துவதற்குச் சிறந்த மனிதமும், தேர்ந்த அனுபவம் வேண்டும். அவற்றை எல்லாக் கட்டுரைகளிலும் காணமுடிகிறது.

ச.மாடசாமி அவர்களின் அணிந்துரையும், சுந்திரபுத்தனின் வாழ்த்துரையும் நூலைப் பலப்படுத்தியிருக்கிறது. இந்நூல் பொதுவாக அரசுப்பள்ளி ஆசிரியர்கள் அனைவரின் கைகளிலும் தவழவேண்டிய ஒன்று.

பாடத்திட்டங்களுக்கு மட்டும் முக்கியத்துவம் தந்து உரையாடல்களைப் புறக்கணிக்காத வகுப்பறைகளைத் திட்டமிடுவது அவசியமாகிறது என்பதை உணர்ந்திருக்கிறார். இந்நூலின் ஆசிரியர்.

வாய்விட்டுப் படிக்கும் அவசியத்தை, வகுப்பறை அமைதி மயானத்திற்கு ஒப்பானது என்பதை, மாணவர்களின் புரிதலில் உள்ள குறைபாட்டை, வகுப்பறைச் சந்தேகங்களைத் தீர்க்காமல் பாடம் மட்டுமே கற்றுத்தரும் எந்திரங்களாக இல்லாமல் பாடவேளையை எப்படிக் கையாளுவது என்பதை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் அதற்கான அனைத்து தீர்வுகளும் இந்நூலில் சொல்லப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே எழுதப்பட்ட கரும்பலகையில் அதைச் சுத்தம் செய்யாமல் மேலும் மேலும் எழுதுவது எவ்வாறு குழப்பத்தை உண்டுபண்ணுமோ அதைப்போல குழந்தைகளின் சந்தேகங்களைத் தீர்க்காத சூழலில் பாடம் என்பதும் வீண் என்பதில் அழுத்தம் திருத்தமாக இருக்கிறார் ஆசிரியர்.

வகுப்பறைக்குள், வாசிப்பின் அவசியத்தை, உற்சாகத்தை, வாய்ப்புகளை, தாய்மொழிக்கல்வியின் அவசியத்தை, குழந்தைகளின் பாதுகாப்பிற்காக அரசு செயல்படுத்தும் போக்சோ மற்றும் குழந்தைகளின் உதவிமையத்தின் செயல்பாட்டை, அரசுப்பள்ளியில் பயில்வதால் பெறும் சிறப்பைப் பெருமையை, ஆதாயத்தைக் கட்டுரைகளினூடே தரத்தவறவில்லை.

”பாடத்திட்டம் மட்டுமே நமக்கு இலக்கு அல்ல. குழந்தைகளின் ஏக்கங்களை (கதைகளின் மூலமாகவும் ஓவியங்கள் மூலமாகவும்) விரல்களின் வழியே மனதை வெளிப்படுத்தும் அற்புதமான தருணங்களை வரவேற்க நாம் தயாராக இருக்க வேண்டும். நமது ஓய்வு நேரங்களை அவர்களது ஏக்கப்பர்வைக்கும் எதிர்பார்ப்புக்கும் ஒப்புக்கொடுக்கவேண்டும் என்ற புரிதலோடு இந்நூல் அனைவரின் மனதையும் அசைக்க வந்திருக்கிறது.

உண்மையில், இவருக்கு வாய்த்த பள்ளிக் குழந்தைகள் வரம்பெற்றவர்கள். இனியும் இவரிடம் பயிலக் காத்திருக்கும் குழந்தைகளும் வரங்கள் பெற்று வர வாழ்த்துவோம்.

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம். 



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *