‘ஹல்லா போல்’ என்ற சொல்லால் ஹஷ்மிக்கு என்றும் மரணமில்லை – கி. ரமேஷ்கரோனாவின் கடுமையான தாக்குதலில் நின்று போயிருந்த நேரடி நிகழ்ச்சிகள் மெதுவாக உயிர்த்தெழத் தொடங்கியிருக்கின்றன. நேற்று மாலை (19/2/21) தக்கர்பாபா அரங்கில் நடைபெற்ற நாடகவியலாளர் சுதன்வா தேஷ்பாண்டேவின் ‘ஹல்லா போல்’ என்ற புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பான ‘உரக்கப் பேசு’ வெளியீட்டு விழா (தமிழில்: அ.மங்கை) ஒரு மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கியது என்று சொன்னால் மிகையாகாது.

ஹல்லா போல் என்பது அடிக்கடி தொழிற்சங்க மேடைகளில் கேட்ட ஒரு கோஷம்தான். அந்தக் கோஷத்தைத் தொடர்ந்து உரக்க ஒலிக்கும்போது நமக்கு நம்மையறியாமலேயே ஒரு ஊக்கம் பிறக்கும், வேகமெடுக்கும். ஆனால் அந்தச் சொல்லுக்குப் பின்னால், அந்த கோஷத்துக்குப் பின்னால் ஒரு பெரிய வரலாறு இருக்கிறது என்பதைத்தான் இந்தப் புத்தகம் பேசுகிறது.

ஒரு செம்படை வீரனாக, ஒரு நாடகக்காரனாக வரலாற்றை உருவாக்கிய சஃப்தர் ஹஷ்மியின் கடைசி நாடகம் தான் ஹல்லா போல். ஆனால் அந்தச் சொல் என்றைக்கும் ஹஷ்மிக்கு மரணமில்லை என்பதை உரக்கச் சொல்லிக் கொண்டே இருக்கிறது. அதைத்தான் சுதன்வா இந்தப் புத்தகத்தில் பதிவு செய்துள்ளார்.
குறித்த நேரத்தில் நிகழ்வைத் தொடங்கிய பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகி பி.கே.ராஜன் அரங்கை மூத்த நாடகவியலாளர் தோழர்.பிரளயனிடம் ஒப்படைக்க, பிரளயனின் தலைமையுடன் நிகழ்வு தொடங்கியது. தமது அறிவார்ந்த வாதங்களால் தொலைக்காட்சிகளிலும், யுடியூப் சேனல்களிலும் மிளிரும் இளம் அரசியல் செயல்பாட்டாளர் தோழர்.சிந்தன் வரவேற்புரை நல்கி, அனைவரையும் வரவேற்றார்.

அடுத்தபடியாக நடைபெற்ற புத்தக வெளியீட்டில் முதல் பிரதியை தமிழ்த் திரப்படங்களில் தனது தனி முத்திரையைப் பதித்துக் கொண்டிருக்கும் ராஜூ முருகன் வெளியிட இளம் நாடகக்கலைஞர் மிருதுளா பெற்றுக் கொண்டார். தாம் அனைவரும் வளர்த்து வரும் நாடகக் கலையை இளம் கலைஞர்களிடம் ஒப்படைப்பதாகக் கூறி முத்தாய்ப்பு வைத்தார் பிரளயன்.

பிறகு கரோனாவினால் கிடைத்த நன்மையான நேரடி ஒளிபரப்பில் தோழர்.சுதன்வா நேரடியாக உரையாற்றினார். பாரதி அன்று சொன்னது இன்று மேலும் மேலும் மெய்ப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஹஷ்மியுடன் நேரடியாக நாடகக் களம் கண்டவர் சுதன்வா. இறுதிவரை அவருடன் பயணித்தவர். இந்தப் புத்தகத்தின் தலைப்பை ஏன் இவ்வாறு வைத்தேன் என்ற விளக்கத்துடன் தனது உரையை அவர் தொடங்கினார்:

மரணத்துடன் எல்லாம் முடிந்து விடும்தானே. அப்போது இதுவரை எழுதப்பட்ட வரலாறுகளெல்லாம் வாழ்வும் மரணமும் என்றுதானே பேசுகின்றன? அப்போது என்னவாகும், தலைவனின் மரணம்தான் கடைசியில் மனதில் நிலைக்கும், அவரது வாழ்க்கை மறையக் கூடிய சாத்தியம் உள்ளது. எனவே அந்த மாபெரும் கலைஞனின் மரணத்தில் தொடங்கி அவரது சிறந்த வாழ்வைப் பதிவு செய்தேன் என்று விளக்கினார்.

Image
மாலாஸ்ரீ

தான் புத்தகம் எழுதத் தொடங்கும் போதே அதை முகநூலில் பதிவிட, அதைப் பார்த்து உடனே தொடர்பு கொண்ட தோழர் மங்கை தமிழில் அதை மொழிபெயர்க்கத் தமக்கு அனுமதி வேண்டும் என்று கேட்டாராம். மிகவும் மகிழ்வுடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து கொண்டார் சுதன்வா. மேலும் நாடகக் கலையில் மிகவும் மூத்தவரான மங்கையிடம் அவரும் தமிழில் ஒரு கட்டுரையை எழுதி இந்தத் தமிழ் மொழிபெயர்ப்பில் இணைக்க வேண்டுமென்று கேட்டுக் கொண்டதாகவும், அதன்படி ஒரு கட்டுரையை அவர் இணைத்துள்ளதாகவும் கூறி நன்றி தெரிவித்துக் கொண்டார்.

அவரது உணர்ச்சி மிகுந்த உரைக்குப் பின்னர், தோழர் மாலாஸ்ரீ திரையில் தோன்றினார். ஹஷ்மியின் இணையரான மாலாஸ்ரீ நாடகத்தின் மீதான தனது அர்ப்பணிப்பை அங்கேயே வெளிப்படுத்தினார். அனைவருக்கும் நன்றி தெரிவித்த அவர், தான் ஒரு ஒத்திகைக்கு இடையில் வந்திருப்பதாகவும் உடனே அதற்குச் செல்ல வேண்டுமென்று கூறி விடை பெற்றுக் கொண்டார். தோழர். மாலாஸ்ரீ ஹஷ்மி கொல்லப்பட்ட இடத்திலேயே அடுத்த இரண்டாவது நாளே இடையில் நிறுத்தப்பட்ட நாடகத்தை அவர் மீண்டும் அரங்கேற்றியதில் எந்த அதிசயமும் இல்லை என்பதைப் புரிந்து கொள்ள முடிந்தது.

நேரடியாக சுதன்வாவின் உரையையும், மாலாஸ்ரீயின் உரையையும் பார்த்துக் கேட்பதற்கு வழி செய்த காம்ரேட் டாக்கீஸ் தோழர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
அடுத்ததாக இயக்குனர் ராஜூ முருகன் உரையாற்றினார். தமக்கு மனதிலேயே ஒரு ஆசிரியராக, வழிகாட்டியாக சேகுவேரா, ஹஷ்மி போன்றோர் இயங்குவதாக அவர் கூறினார். நாடகம் என்பது எப்படிப்பட்ட தாக்கங்களை மக்களிடம் உருவாக்க முடியும் என்பதற்கு ஒரு நிகழ்வை சுட்டிக் காட்டினார். சமீபத்தில் மத்திய சென்னையில் குடிசைமாற்று வாரிய வீடுகளை பயனாளர்களுக்கு ஒதுக்குமாறு கேட்டு நடைபெற்ற ஒரு கூட்டத்தில் ஒரு நாடகம் அரங்கேற்றப் பட்டது. அதில் ஒரு பாத்திரம் கூட்டத்தின் நடுவிலிருந்து தோன்றி நாடகம் நடத்தக் கூடாதென்று வாதிட, அதை எதிர்த்துக் கூட்டத்தினர் பொங்கி எழுந்ததையும் தோழர்.செல்வா கூறினார் என்பதைப் பகிர்ந்து கொண்டார். ஆனால் 100 பேர் முற்போக்கான சிந்தனைகளுடன் சினிமாவுக்கு வந்தால், அதில் 98% சமரசம் செய்து கொள்ள வேண்டிய நிலைக்குச் சென்று விடுவதாக வருத்தத்துடன் பதிவு செய்தார்.

தமது காம்ரேட் டாக்கீசின் ஒரு முக்கியமான கோஷமாக உரக்கப்பேசு, ‘ஹல்லா போல்’ இருப்பதாகவும், அது ஹஷ்மியின் தாக்கமே என்பதையும் அவர் பகிர்ந்து கொண்டார்.

Image
இயக்குனர் ராஜூ முருகன்

அடுத்ததாகப் பேசிய நாடகவியலாளரும், மொழிபெயர்ப்பாளருமான தோழர் மங்கை ஒரு நாடகக் கலைஞராகப் பட்ட சிரமங்களைப் பகிர்ந்தார். ஒரு பெண் எவ்வளவுதான் கனவுகளைக் கொண்டிருந்தாலும், அனைத்தையும் நிறைவேற்றிக் கொண்டு விட முடிவதில்லை. எனினும், பிரளயனின் சென்னைக் கலைக்குழுவில் அவர்களுடன் பல்வேறு ஊர்களுக்குப் பயணப்பட்டதையும், தமது குழந்தை பொன்னியை நாடக மேடைக்குப் பின்புறம் கொண்டு வந்து விடுமாறு கூட்டத்தினரிடம் வேண்டுகோள் விடுத்ததையும் நகைச்சுவையுடம் பகிர்ந்து கொண்டார்.

பின்னர் தலைமையுரை ஆற்றிய தோழர் பிரளயன் ஒரு கருத்தரங்கையே நடத்தினார் என்று சொல்லலாம். எவ்வளவு தகவல்கள்! தமது கலைக்குழு ஒருமுறை ஹஷ்மியை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தும் அவரது வேலைகளால் சந்திக்க முடியாமல் போனது என்று குறிப்பிட்டார். மேலும் ஹஷ்மியின் தியாகம்தான் வீதிநாடகக் கலைக்குப் புத்துயிர் ஊட்டியது என்று குறிப்பிட்டவர், அவர்கள் ஒரு ஹஷ்மியைக் கொன்றார்கள், இன்று ஓராயிரம் ஹஷ்மிக்கள் இந்தியாவையே குலுங்க வைத்து வருகிறார்கள் என்று உணர்ச்சியுடன் கூறினார். தமிழகத்திலும், பல்வேறு இடங்களிலும் நாடகக் கலையில் சென்னைக் கலைக்குழுவின் பயணங்களையும், ஓரு சமயத்தில் உரக்கப் பேசு நாடகத்தில் பாதியை சென்னைக்குழு தமிழிலும், சஹமத் கலைக்குழு அடுத்த பகுதியை இந்தியிலும் நடித்ததைக் கூறினார். இன்னும் ஏராளமான தகவல்கள். நன்றி தோழர்.பிரளயன். என்னால் சில விவரங்களையே பதிவிட முடிந்துள்ளது.

அடுத்தபடியாக தோழர் மங்கையின் மரப்பாச்சி குழுவினர் புத்தகத்திலிருந்து சில முக்கியமான கட்டங்களை ஒரு நாடகம் போல் படித்து நிகழ்த்தினர். அந்தத் தேர்வுகள் இந்தப் புத்தகத்தை நிச்சயமாக நாம் படித்து விட வேண்டுமென்ற உத்வேகத்தைத் தந்தன என்பதைக் கூற வேண்டும். சிறந்த முயற்சி. எனினும் ஒரு சாதாரணப் பார்வையாளனாக என்னுடைய சிறு கருத்தைப் பகிர்ந்து கொள்ள விழைகிறேன். இது தவறாக இருக்குமானால் நாடகவியலாளர்கள் என்னை மன்னித்து விடவும். இன்னும் சிறிது ஒத்திகை செய்து, யார் யார் எதை எதைப் படிப்பது என்பதை முன்கூட்டியே தட்டச்சு செய்து வைத்துக் கொண்டிருந்தால் இடைவெளிகள் இல்லாமல் தவிர்த்திருக்கலாம் என்று ஒரு பார்வையாளனாக எனக்குத் தோன்றியது.

இறுதியாக ப.கு.ராஜன் நன்றி கூற, நம்மை உரக்கப் பேச வைத்த ஹஷ்மியின் நினைவுகளுடன் உத்வேகத்துடன் கூட்டம் கலைந்தது. நினைவுகள் கலையாது.

கி.ரமேஷ்

நூல்: உரக்கப் பேசு (சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்) 
ஆசிரியர்: சுதன்வா தேஷ்பாண்டே | தமிழில்: அ. மங்கை
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை:₹340.00
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/urakka-pesu-by-a-mangai/