நூல்: உரக்கப்பேசு | சப்தர் ஹஷ்மியின் மரணமும் வாழ்வும்
ஆசிரியர்: சுதன்வா தேஷ்பாண்டே – தமிழில் அ.மங்கை
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: ரூ. 300
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/product/urakka-pesu-by-a-mangai/
வீதி நாடகம் என்றால் அனைவரின் நினைவும் உடனே சப்தர் ஹஷ்மியிடம் தான் செல்லும். தனது வாழ்வையே தியாகம் செய்து வீதி நாடகத்துக்கு ஒரு அடையாளத்தை உருவாக்கியவர் சப்தர். 1989ஆம் வருடம் ஜனவரி 1ஆம் தேதி காசியாபாத்தில் தொழிலாளர்களிடையே தனது “ஹல்லா போல் – உரக்கப்பேசு” என்ற வீதிநாடகத்தை அரங்கேற்றிக் கொண்டிருந்தபோது காங்கிரஸ் கட்சி குண்டர்களால் குரூரமாக அடித்துக் கொல்லப்பட்டார் சப்தர். தன்னை முன்னே நிறுத்திக் கொண்டு தன் உயிரைத் தியாகம் செய்து தனது ஜனம் குழுவினர் அனைவரின் உயிரையும் காப்பாற்றினார். அவரது வாழ்வையும், மரணத்தையும் – மன்னிக்கவும் – அவரது மரணத்தையும், வாழ்வையும் அவருடன் ஜனம் குழுவில் பயணித்து இன்னமும் இயங்கி வரும் சுதன்வா தேஷ்பாண்டே “ஹல்லா போல்” என்ற தலைப்பில் புத்தகமாக்க, அதை தமிழ் எழுத்தாளரும், நாடகவியலாளரும், சமூக செயல்பாட்டாளருமான அ.மங்கை அதே உணர்வுடன் தமிழாக்கம் செய்துள்ளார்.
புத்தகம் சப்தரின் கொடூரக் கொலையுடன் தொடங்குகிறது. அவர்களது ஜனம் குழு எப்படித் தாக்கப்பட்டது, அவர்கள் எப்படியெல்லாம் தப்பிக்க நேர்ந்தது, எப்படி சப்தர் தன்னை முன்னிறுத்திக் கொண்டு, ஒரு உண்மையான தலைவனாகத் தனது குழுவினரைக் காப்பாற்றினார், அதேபோல் தமக்காக வீதிநாடகம் போட்ட கலைஞர்களை எப்படித் தொழிலாளர்கள் மறைத்துக் காப்பாற்றினர் என்ற விவரங்களையெல்லாம் விதிர்விதிர்க்கச் சொல்கிறார் சுதன்வா. மறுநாள் சப்தர் மரணிக்க, தனது துயரத்தை ஒருபுறம் ஒதுக்கி அவர் விட்டுச் சென்ற பணியை முன்னெடுக்கிறார் அவரது இணையரும், தோழருமான மாலா. நாமும் துயரத்துடன் சப்தரின் இறுதி ஊர்வலத்தில் பயணிக்கிறோம். அவரது பயணம் முடியவில்லை, இனித் தொடரும் என்ற செய்தியுடன் அவரது வாழ்வைப் படிப்பதற்கு நுழைகிறோம். சப்தர் இறந்த 48 மணி நேரத்துக்குள் அவர் கொலை செய்யப்பட்ட அதே இடத்தில் பாதியில் நிறுத்தப்பட்ட நாடகத்தை மாலாவின் தலைமையில் நடத்தி வரலாற்றில் தனிப்பெரும் நிகழ்வைப் பதித்தது ஜனம் குழு.
ஒரு எளிய ஏழைக் குடும்பத்தில் பிறந்த சப்தர் படிப்படியாக முன்னேறியவர். அவரது தந்தை அப்பூஜி ஒரு கம்யூனிஸ்ட். அவரது தாயார் அம்மாஜி கலை உணர்வைத் தமது குழந்தைகளுக்குள் விதைத்தார். சிறு வயதில் அலிகாரில் இருந்த குடும்பம் பின்னர் தில்லிக்குக் குடிபெயர்ந்ததும் சப்தரின் புத்தக உலகம் விரிவடைந்தது. புத்திசாலியான சப்தர் இரட்டை உயர்வுகள் பெற்று ஒரு கட்டத்தில் தனது அண்ணனின் வகுப்புக்கே வந்து விட்டார். சகோதரர் சொகைல் இந்திய மாணவர் சங்கத்தில் செயல்வீரர். சிறிது நக்சலிசம் பால் திரும்பிய சப்தரும் அண்ணனின் தலையீட்டுக்குப் பிறகு உண்மையை உணர்ந்து இந்திய மாணவர் சங்கத்தில் இணைந்தார். 70களில் தில்லிப் பல்கலைக்கழகத்தில் இணைந்து படித்தார். 1971இல் ஷியாமல் முகர்ஜி என்ற தோழர் இஃப்டா நாடக இயக்கத்தை மீட்டெடுத்த போது சப்தர் அதில் சேர்ந்தார். அதில் மூத்த கலைஞர் அபர்ணாவின் மகள் மாலா. ஆனால் சிபிஐ சார்பு கொண்ட இஃப்டா கலைஞர்களால் சிபிஎம் இளைஞர்களுடன் ஒத்துப் போக முடியாததால் அவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்ற ஜனம் 1973 ஏப்ரலில் உருவாகிறது. தீப்பந்தம் இப்டாவிடமிருந்து ஜனம் கைக்கு மாறியது.
சிறிது சிறிதாகத் தம்மை உயர்த்திக் கொண்டது ஜனம் கலைக்குழு. தொழிலாளர்களிடையே நடைபெற்ற மெஷின் நாடக அரங்கேற்றத்தை உணர்ச்சிபூர்வமாக விவரிக்கிறது ஒரு பத்தி. முதலில் எந்த உதவியும் செய்ய முன்வராத கூட்டத் தலைவர்கள். பின்னர் கூட்டம் முடிந்தவுடன் நாடகத்தை அரங்கேற்றிக் கொள்ளுமாறு அரைமனதுடன் அனுமதித்தாலும் எந்த அறிவிப்பும் செய்ய மறுத்தனர். கலைந்து கொண்டிருந்த தொழிலாளர்களைத் தம் பக்கம் ஈர்த்து நாடகத்தை நடத்த தொழிலாளர்களும், தலைவர்களும் ஸ்தம்பித்துப் போயினர். தாம் அனுமதிக்க மறுத்த நாடகக் கலைஞர்களைத் தலையில் தூக்கிக் கொண்டாடினர்.
வீதிநாடக வடிவத்தை எப்படி மக்களுக்கும், தொழிலாளர்களுக்கும் நெருக்கமாகக் கொண்டு செல்வது, அவர்களது கோரிக்கைகளை அவர்கள் உணருமாறு எப்படி எடுத்துரைப்பது என்ற பல்வேறு விவரங்களைப் புத்தகம் விவாதிக்கிறது. இந்தப் புத்தகத்தைப் படித்ததும், 1991இல் நான் பணிபுரியும் ஏ.ஜி. அலுவலகத்தில் எங்கள் சங்கத்தின் சார்பாக அக்னி கலைக்குழுவில் சேர்ந்து செயல்பட்டதும், எங்கள் மூத்த தோழர்கள் எஸ்.மோகன், சுப்பராயன் ஆகியோர் தலைமையில், பிரளயன், தாஸ் உள்ளிட்ட நாடகக் கலைஞர்களின் வழிகாட்டலில் இப்போது இந்தியாவை நாசமாக்கிக் கொண்டிருக்கும் புதிய நவீன தாராளமயக் கொள்கைக்கெதிராக நாங்கள் நாடகம் போட்டது நினைவுக்கு வந்தது.
சப்தர் ஒரு நாடகக் கலைஞர் மட்டுமல்ல, கவிஞராகவும் இருந்துள்ளார். அவர் எழுதிய பல்வேறு பாடல்கள் தடம் பதித்தவை. நாடகங்களுக்கு மட்டுமல்ல, மாலாவின் தூண்டுதலால் குழந்தைகளுக்கான பல பாடல்களையும் எழுதியுள்ளார் சப்தர்.
சப்தர் தொலைக்காட்சித் தொடரைக் கூட எழுதியுள்ளார். எனினும் மதநல்லிணக்கத்துக்கான அந்தத் தொடர் அரங்கேறவில்லை. அறிவொளி இயக்கத்துக்கும் அவரது பங்கைச் செலுத்தியுள்ளார் சப்தர். அவர் எழுதிய பாடலான “எழுதப் படிக்கக் கற்றுக்கொள்” அறிவொளி இயக்கத்தின் கீதமாகவே மாறியது.
1987இல் ஜனம் குழு பின்னடைவைச் சந்தித்த போது அதில் இணைந்தவர் சுதன்வா. அவரைத் தூண்டி விட்டுக் குழுவில் நாடகக் கலைஞராக உருவாக்கியவர் சப்தர். தான் திக்கு வாயுடன் இருந்தாலும், அதைத் தாண்டி சப்தர் தன்னை எப்படி உருவாக்கினார் என்பதை வியப்புடன் கூறுகிறார் சுதன்வா. சப்தரே கொடுக்க மறுத்த ஒரு கான்ஸ்டபிள் பாத்திரத்தைப் பின்னர் அடம் பிடித்து நடித்து முத்திரை பதித்ததையும் பதிவு செய்கிறார். சப்தரின் மனதுக்கு நெருக்கமானவராக இருந்திருக்கிறார் சுதன்வா. நமது மனதிலும் பசை போட்டு ஒட்டிக் கொள்கிறார்.
ஜனம் குழுவின் முன்னேற்றத்தில் பெரும் பங்களித்த ஹபீப் தன்வீர் மற்றும் ஏராளமான கலைஞர்கள், எழுத்தாளர்கள் குறித்து விடாமல் விவரித்துக் கொண்டே செல்கிறார் சுதன்வா. அவரது நினைவாற்றல் மிகவும் வியப்புக்குரியது.
1980களில் தில்லியில் தொழிலாளர்களின் நிலை பற்றியும், அவர்களிடையில் ஜனம் குழுவின் பணிகள் குறித்தும் விரிவாகப் பேசுகிறார் சுதன்வா. அதில் பக்கம் 250 முதல் சில பக்கங்களுக்கு சிஐடியுவின் தில்லி தலைவர்கள் ஆதித்ய நிகாம், பிருந்தா காரத், சூரஜ்பான் பரத்வாஜ், ஜோகேந்திர ஷர்மா போன்றோர் ஒரு தொழிலாளர் பயிற்சிப் பட்டரையே நடத்தியுள்ளனர். அனைத்துத் தொழிலாளர்களும், தலைவர்களும் நிச்சயமாகப் படித்து மனதில் நிறுத்த வேண்டிய பக்கங்கள் இவை.
ஒரு கட்டத்தில் வங்க சினிமாவுக்கும் பங்களித்துள்ளார் சப்தர். தனது இடைவிடாத முயற்சியால் பெருமளவு அறியாமல் போயிரிந்த ரித்விக் கட்டக்கை உயர்த்திப் பிடித்து அவரது மேன்மையை அறியச் செய்துள்ளார். (ரித்விக் கட்டக் ப\ற்றிய ஒரு புத்தகத்தையும் பாரதி புத்தகாலயம் முன்பு வெளியிட்டுள்ளது.)
இப்போது தில்லியை முற்றுகையிட்டிருக்கும் விவசாயிகள் வேலைநிறுத்தத்தை சக்காஜாம் என்று குறிப்பிட்டது நினைவிருக்கும். அதே பெயரில் ஒரு சிறந்த நாடகத்தை சப்தரின் ஜனம் குழு அரங்கேற்றியுள்ளது. ஹல்லா போல் என்ற கோஷம் தொழிலாளர்களின் நாவில் இன்றும் உரக்க ஒலிக்கிறது. சப்தர் தொழிலாளர் இயக்கத்தில் அவரது முத்திரையை நீங்காமல் பதித்துச் சென்றுள்ளார்.
இன்றும் அவரது நாடக இயக்கமான ஜனம் குழுவைத் தலைமையேற்று வழிநடத்தும் மாலாவுக்கும், சப்தருக்குமான காதல் வாழ்வும் இடையிலேயே விவரிக்கப்படுகிறது. அவரது அர்ப்பணிப்பு போற்றி வணங்கப்பட வேண்டியது.
ஆக, உரக்கப் பேசு புத்தகம் ஒரு நாடகக் கலைஞர் பற்றியது மட்டுமல்ல, அதில் ஏராளமான வரலாறும், செய்திகளும், படிப்பினைகளும் மற்றும் பல விஷயங்களும் அடங்கியது. கையில் எடுத்தால் வழுக்கிச் செல்லும் அளவுக்கு சுதன்வா எளிமையாக எழுத, அதே எளிமையுடனும், சுவையுடனும் மங்கை மொழியாக்கம் செய்துள்ளார்.
இந்தப் புத்தகத்தைத் தவற விடாமல் நான் படித்தது குறித்து என்றும் மகிழ்வேன். நீங்களும்.
கி.ரமேஷ்.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

