ஒருவன் மாட்டுத் தோல்
உரிக்கிறான்
மற்ற நேரங்களில்
அந்த சூரிக்கத்தி
மொண்ணையாகத்தான்
இருக்கிறது
ஒருவன் பறையடிக்கிறான்.
இசை துள்ளலாக வருகிறது
பாடையில் கிடப்பவன்
துள்ளி எழுந்து
ஒருக்களித்துப்படுத்துக்கொண்டு
இசை கேட்கிறான்
மற்ற நேரங்களில்
பறையடிக்கும் குச்சி
சும்மாதான் கிடக்கிறது
ஒருவன் மலம் அள்ளுகிறான்
சேரியில் வசிக்கிறான்
அவன் தூர நடந்துவரும் போதே
உங்களுக்கு துர்நாற்றம்
வீசுகிறது
மற்ற நேரங்களில்
அவனுடைய கடப்பாறை
மண்வெட்டி சட்டிகள்
சும்மாவே இருக்கின்றன
நீங்கள் ஒரு புனிதமான
தொழில் செய்வதாகச் சொல்கிறீர்கள்

ஒரு ஆலயத்தில்
அலுவலகத்தில்
அரசியலில்
வேலை நேரம் முடிந்ததும்
நீங்கள் சும்மா இருக்கிறீர்கள்
ஆனால் சும்மாவே
இருப்பதில்லை
உங்கள் உபகரணங்கள்
அவை
உங்களுக்காக உழைத்துக்
கொண்டே இருக்கின்றன
சாமிகள்
பைல்கள்
சுங்கச்சாவடிகள்
ஜிஎஸ்டிகள் இத்யாதி
இத்யாதி இப்படி
உழைப்பவனின்
கருப்பொருட்களெல்லாம்
உறங்கும் போது
நீங்கள் மட்டும்
ஏன் விழித்துக் கொண்டிருக்கிறீர்கள்
என்று கேட்டால்
அவர்கள் உறங்கும் வரை தானே
நாங்கள் விழித்துக் கொண்டிருக்க உத்தரவு என்கின்றன
புரிந்த மாதிரியும் இல்லை
புரியாத மாதிரியும் இல்லை
என்றேன்
என்ன செய்வது
அழுக்கு என்றால்
சுரண்டி விடலாம்
தோல் என்றால்
உரித்து விட முடியுமா
என்றன
– தங்கேஸ்
ReplyForward |