கதைச்சுருக்கம் 57: எழுத்தாளர் உரப்புளி நா. ஜெயராமனின் *மாலதிகள் பள்ளிக்குப் போவார்கள்* சிறுகதை

Urapuli N. Jayaraman (உரப்புளி நா.ஜெயராமன்) Short Story Synopsis Written by Ramachandra Vaidyanath. Book Day, Bharathi Puthakalayamகதைச்சுருக்கம்: ராமச்சந்திர வைத்தியநாத்

கதைக் கருவிற்கு உள்ள முக்கியத்துவத்தை  அது பிரசுரம் கண்ட பத்திரிக்கையும் பெறுகிறது.

மாலதிகள் பள்ளிக்குப் போவார்கள்

உரப்புளி நா. ஜெயராமன்

“மாலதி பள்ளிக்கூடத்துக்கு வரலியா?” கூவி வாசலில் நின்ற அழைக்கிறார்கள் தோழிகள்.  வீட்டிற்குள் குமைந்து கிடக்கிறாள் மாலதி.

நான் பள்ளிக்கூடம் வரலை.  அப்பா அம்மா தடுக்குறாங்க என்று சொல்லக்கூட அவளால் முடியவில்லை.   ஆனால் கைகளிலும் கால்களிலும் ஒரு பரபரப்பு ஏற்படுவதை உணர்கிறாள்.  அதோ அந்தப் புத்தகத்தை எடுக்க வேண்டும் இதோ இந்தச் சட்டையையும் அந்தப் பாவடையையும் உடுத்த வேண்டும்.  தாவணி இனிமேல் அது இல்லாமல் போக முடியாதே என்றெல்லாம் அவள் பரபரத்தபோது புண்ணியானம் முடிந்தும் அப்புறப்படுத்தப்படாத உலக்கையில் இடறிக்கொள்கிறாள்.  

புண்ணியானம் முடிந்து உலக்கையைத் தள்ளிவைத்த அம்மா “இனிமேல் தலைவாசல் நிலைதான் எல்லை” என்றாள்.  இனிமேல் இந்தக் கால்கள் பள்ளிக்கூட எல்லையை மிதிக்காதா?  பாவாடையை அள்ளிச் செருகி ஆடியோடி விளையாட முடியாதா? என்றெல்லாம் எண்ணி விம்மினாள்.

“என்ன மாலதி, நேரம் ஆயிட்டிருக்கே?” என்று சாந்தி அவசரப்படுத்தியபோது அடுக்களையிலிருந்து கரண்டியும் கையுமாய் வந்த மரகதம் “எத்தனை தடவையடி உங்களுக்குச் சொல்றது? வயசுக்கு வந்த என் பொண்ணை நான் பள்ளிக்கூடத்துக்கு அனுப்பப் போறதில்லே.  நாளஞ்சு நாளா நீங்க வந்து கூப்பிடவும் இவ சாப்பிடாம அலைக்கழிக்கறதும் ஒரே ரோதனையாப் போச்சே எனக்கு” என்று கூப்பாடு போட்டாள்.

“என்னம்மா நீங்க சொல்றது? நாங்கள்லாம் வயசக்குவந்த பொண்ணுங்கதான்.  வயசு வந்த பொண்ணு பள்ளிக்கூடம் போனா பள்ளிக்கூடமென்ன பிடரியைப் பிடித்தா தள்ளப்போகிறது?  நல்ல வேளையா கடைசிப் பரீட்சை எழுதிட்டு வந்ததும் பெரியவளா ஆனேன்னு சாமியைக் கும்பிட்டா மாலதி.  உங்க பொண்ணு ஒன்பதாம் வகுப்பிலே நுழைஞ்சதும் டீச்சர் கேட்ட முதல் கேள்வி மாலதி எங்கே என்பதுதான்” என்று ஒரு மூச்சுப்பிடித்தாள் சாந்தி.சாந்தியின் அப்பா தொலைபேசித் துறையில் பணியாற்றி ஓய்வுபெற்றவர்.   மூன்று பெண்மக்களையும் ஆண் மக்களாய் எண்ணி வளர்த்தவர்.  முதலிரு பெண்கள் நன்றாகப் படித்துவிட்டு பணியாற்றுகையில் கடைசி மகள் சாந்தியையும் நன்கு படிக்கவைக்க சொந்த ஊர் வந்து தங்கியுள்ளார்.  படிப்பை நிறுத்தும் பெண்களின் வீட்டிற்கெல்லாம் சென்று அவர்கள் தொடர்ந்து படிக்க ஏற்பாடும் செய்தார்.  சாந்திக்கு தன் தந்தையின் நினைவுதான் வந்தது.  அப்பாவும் மாலதி அப்பாவின் பலசரக்கு கடையில் தொடர்ந்து சாமான்கள் வாங்கி வருவது அவளுக்குத் தெரிந்ததுதான். தெருவில் இறங்கிய சாந்தியைக் கண்ணீர் மறைக்கும்வரை பார்த்துக் கொண்டிருந்தாள் மாலதி.

அன்று சாயந்திரம் கடையை விட்டிறங்கி மீனாட்சி அம்மன் கோயிலில் நுழைந்த மாலதி அப்பா மாணிக்கத்தைக் கைப்பிடியாய் பிடித்து மண்டபத்திற்குள் நுழைந்தார் செல்லத்துரை.

“என்ன துரை?” என்றார் மாணிக்கம்,

“மாலதியைத் தொடர்ந்து படிக்க வைக்கலையாமுல்ல?” என்றார் செல்லத்துரை

“பொண்ணு வயசுக்கு வந்திருச்சு.  அம்மாக்காரியும் அனுப்பக்கூடாதுங்கிறா..”

“பார்த்தீரா, பெண்ணுக்குப் பெண்தான் எதிரி.  மகள் படிக்கறதுக்கு தாயே எதிர்ப்பு”

“கால நிலையை அனுசரிச்சு நானும் ஒத்துக்கிட்டேன் துரை”.

“காலநிலை அப்படியா இருக்கு மாணிக்கம்?  எல்லாத் துறையிலேயும் பெண்கள் ஆணுக்கு நிகரா நடக்கிற காலம் இது.  மூத்த பெண்ணையும் படிப்பை பாதிலே நிறுத்தி முக்கால் வாசிச் சொத்தை விக்கிரயம் செய்து கட்டிக் கொடுத்தீர். நான் அன்றைக்கே சொன்னேன் கட்டிக் கொடுக்க ஆகுற செலவை பெண்ணுக படிப்புக்குச் செலவழிச்சுப் பாருமய்யான்னு.”

“அப்பவும் எத்தனையோ பிரச்சனைகள் இருக்கு துரை.  பெண்ணுக்கு மேலேபடித்த மாப்பிள்ளை வாய்க்கணும்.  அந்த மாப்பிள்ளைக்கும் அதுக்குத் தக்க  நோட்டு எண்ணணும்”.

“நிச்சயமாய் அந்தப் பிரச்னை வராது, வேலைக்கு சேரும் எத்தனையோ பெண்களை பார்த்திருக்கிறேன்.  போகப் போக கற்ற கல்வியால் வந்த செருக்கு, கையில் கிடைக்கும் சம்பளத்தில் மாட்சி, தன் காலிலே நிற்கிறோம் என்ற துணிவு இவையனைத்தும் வர அவர்கள் முகத்திலே ஒரு பிரகாசம். ஒரு பெண்ணுக்கு இவை கிடைத்தாலே போதும்.  அதற்கடுத்துத்தான் வாழ்க்கை.  அதுவும் அவர்களுக்கு எளிதில் கைகூடுவதைப் பார்க்கிறேன்” என்றார் செல்லத்துரை.படிக்கிறேன்பா படிக்கிறேன் படிக்கவிடு என்ற காலைப்பிடித்து அழுத மூத்த பெண்ணை நினைத்து கண்ணீர் விட்டார் மாணிக்கம்.  

செல்லத்துரை சொல்வதுபோல் எல்லாவற்றையும் விற்றுக் கட்டிக் கொடுப்பதைவிட எதை விற்றாலும் தொடர்ந்து மாலதியைப் படிக்க வைத்துவிட வேண்டும் என்ற முடிவுக்கு வந்தார் மாணிக்கம்.  கூடவே மரகதம் மாலதிக்காக  வாங்கிவரச் சொல்லியிருந்த பல்லாங்குழியும் தாயக்கட்டைகளும் அவர் ஞாபகத்துக்கு வந்தன.  செல்லத்துரையிடம்  விடைபெற்றுப் புறப்பட்டார்.

மறுநாள் காலையில் “மாலதி” என்ற கோரஸ்.

“இதோ ரெடி” என்று மாலதி குரல் கொடுக்கிறாள்.

“என்னடி ரெடி? எதுக்குடி ரெடி?” என்று பதைபதைப்புடன் ஓடி வருகிறாள் மரகதம்.

“பள்ளிக்குத்தான் மரகதம்.  மாலதி படிக்கட்டும்.  எல்லாவற்றையும் விற்று மூத்த பெண்ணுக்கு ஒரு மருமகனைப் பிடித்தோம்.  சந்தோஷமா அது வாழுதா?  எல்லாவற்றையும் விற்க வேண்டி வந்தாலும் விற்று மாலதியைப் படிக்க வைப்போம்” என்று முன்னால் வந்து நின்றார் மாணிக்கம்.

மரகதம் அவர் சொல்வதைக் காதில் வாங்கிக் கொள்ளாதவளாக “என்ன சொல்றீங்க?  இவளுக்கு பொழுதுபோக தாயக்கட்டையும் பல்லாங்குழியும் கேட்டேனே?” என்றாள்.

“அதெல்லாம் இதோ” என்று மாணிக்கம் ஒரு புதிய பைலட் பேனாவையும் ஒரு புதிய ஜியாமெண்ட்ரி பாக்ஸையும் மாலதியிடம் நீட்டுகிறார்.  வாங்கிக் கொண்ட மாலதி “வர்றேம்மா வர்றேன்பா” என விரைகிறாள்.  மரகதம் அக்கினிப் பார்வையாய்ச் சாந்தியையும் தன் மகளையும் பார்க்கிறாள்.

@ஆயிரவைசியன். 1980

பின் குறிப்பு:

தமிழ்ச் சிறுகதையின் வேறுபட்ட  போக்குகளை வெளிப்படுத்தும்வகையில் பல்வேறு எழுத்தாளர்களின் சிறுகதைகள் சுருக்கப்பட்டு தரப்படுகிறது,  அந்தந்த எழுத்தாளர்களின் படைப்புலகில் பிரவேசிக்க இது வாசகர்களுக்கு  ஒரு நுழைவாயிலாக  அமையும் என்ற கருத்தின் பேரில் இச்சுருக்கம் வெளியிடப்படுகிறது.  இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.