நகரமயமும் போக்குவரத்தும் (Urbanism and Transport) - மு இராமனாதன் | https://bookday.in/

நகரமயமும் போக்குவரத்தும் (Urbanism and Transport)

நகரமயமும் போக்குவரத்தும் (Urbanism and Transport)

இந்தப் பூவுலகில் 55% மக்கள் நகரங்களில் வாழ்கிறார்கள். நகரங்களில்தான் வேலையும் வாய்ப்பும் இருக்கிறது. அது நாள்தோறும் பெருகி வருகிறது. ஆகவே 2050இல் மூன்றில் இருவர் நகரங்களில் வாழ்வார்கள் என்கிறது ஒரு மதிப்பீடு. எனில், இந்த நகரங்கள் பெருந்தொகையான மக்கள் வாழத் தகுதியானவையாக உள்ளனவா? மொத்த கரியமில வாயுவில் 75% நகரங்களால்தான் வெளியேற்றப்படுகின்றன.

இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது சுமார் 25% வாயு, எந்நேரமும் நகரங்களை ஊடறுத்து விரையும் போக்குவரத்துச் சாதனங்கள் வெளியேற்றுபவை. இதில் கணிசமான பங்கு, அதாவது 57% தனியார் பயன்படுத்தும் வாகனங்களிலிருந்து (கார், மோட்டார் பைக்) வெளியாவதாகச் சொல்கிறது ஒரு பன்னாட்டு அறிக்கை (FTA, 2007). இது உலக அளவிலான சராசரி. இந்தியாவில் இந்த வீதம் இன்னும் அதிகம்.

இது உலகமயத்தின் காலம். இதன் முதன்மையான கூறுகளில் ஒன்று நகரமயம். இந்தியா இவ்விரண்டு மயத்திற்கும் விலக்காக அமையவில்லை. நாடு விடுதலை அடைந்தபோது 14% மக்கள்தாம் நகரங்களில் வாழ்ந்தார்கள். 2011 மக்கள் தொகை கணக்கீட்டில் அந்த வீதம் 31%ஆக உயர்ந்திருக்கிறது (தமிழகம் 48.4%). நமது நாட்டின் மொத்த உற்பத்தியில் நகரவாசிகள் 75% பங்களிக்கிறார்கள்.

இவர்கள்தான் இந்தியாவிற்கு உற்பத்தித் துறையிலும் சேவைத் துறையிலும் பொருளீட்டித் தருகிறார்கள். ஆனால் இவர்கள் வாழும் நகரங்களின் காற்று, மாசால் நிரம்பியிருக்கிறது. உலகில் மாசடைந்த காற்றை சுவாசிக்கும் முதல் 30 நகரங்களின் பட்டியலில் 21 நகரங்கள் இந்தியாவில் இருக்கின்றன.

இந்த விவரம் நமக்குப் பெருமை சேர்க்கப் போவதில்லை. வேறு எந்த நாட்டைக் காட்டிலும் போக்குவரத்துச் சாதனங்கள் உண்டாக்கும் மாசு நம் நகரங்களின் காற்றில் அதிகமாக இருக்கிறது. நாம் பயணிக்கிற விதத்தில் இந்த மாசையும் காலநிலை மாற்றத்தையும் கட்டுப்படுத்த முடியும்.

இதைப் பிரதானமாக மூன்று வழிகளில் செய்யலாம்: பொதுப் போக்குவரத்தை அதிகரிப்பது, சைக்கிள் பயணத்தை ஊக்குவிப்பது, எரிபொருளுக்கு மாற்றாக மின்சாரத்தைப் பயன்படுத்துவது.

ரயில்

முதலாவதாக பொதுப் போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். ரயிலில் தொடங்கலாம். 1947இல் பிரிட்டிஷார் விட்டுச் சென்ற ரயில் தடங்களின் நீளம் 54,693கிமீ. இதில் அகல ரயில் பாதிக்கும் குறைவாகத்தான் இருந்தது (25,170கிமீ). விடுதலைக்குப் பிறகு மீட்டர் கேஜ் தடங்கள் பலவும் அகல ரயில் தடங்களாக மாற்றப்பட்டன.

எனினும் 2023ஆம் ஆண்டுக் கணக்கின்படி நாட்டின் மொத்த ரயில் தடங்களின் நீளம் 68,426கிமீ. கடந்த 75 ஆண்டுகளில் தடங்களின் நீளம் கால் பங்குதான் கூடியிருக்கிறது.

ஓர் ஒப்பீட்டுக்காக சீன ரயில் தடங்களின் வளர்ச்சியைப் பார்க்கலாம். 1945இல் சீன ரயில் தடங்களின் நீளம் 27,000கிமீ. இந்திய அளவில் பாதி. இப்போது 78,000கிமீக்கும் மேல்.

நீளம் மட்டுமல்லை, இந்திய ரயில்களின் வேகமும் மட்டு. இந்திய விரைவு ரயில்களின் சராசரி வேகம் மணிக்கு 50.6 கிமீ, சரக்கு ரயில்களின் வேகம் மணிக்கு 23.6 கிமீ (சி.ஏ.ஜி அறிக்கை, 2020). சீனாவில் அதிக நிறுத்தங்களில் நிற்கும் K-Fast எனப்படும் விரைவு ரயில்களின் வேகம் மணிக்கு 120கிமீ என்பதோடு இதை ஒப்பிட்டுக்கொள்ளலாம்.

சரக்குப் பரிமாற்றத்திற்கு உலகின் பல நாடுகளும் சரக்கு ரயில்களையே அதிகமும் நாடுகின்றன. அதுவே சுற்றுச் சூழலுக்கு உகந்தது. எனில் இந்தியாவில் 61% சரக்குகள் சாலை வழியாகவும், 27% சரக்குகள் மட்டுமே ரயில் வழியாகவும் கொண்டு செல்லப்படுகின்றன.

இந்திய ரயில்வே நாட்டின் பெரிய துறைகளுள் ஒன்று. சமீப காலம் வரை அதன் வரவு செலவு அறிக்கை நாடாளுமன்றத்தில் தனியாகத்தான் தாக்கல் செய்யப்பட்டது. இத்தனை ஆண்டுகளில் தடங்களின் நீளம் பல மடங்கு அதிகரித்திருக்க வேண்டும்.

ரயில்களின் எண்ணிக்கையும் வேகமும் கூடியிருக்க வேண்டும். சரக்குப் பரிமாற்றம் அதிகமும் ரயில்களின் வழியாக நடந்திருக்க வேண்டும். அப்படி எதுவும் நடக்கவில்லை. அடுத்த காலத்தில் நடப்பதற்கான அறிகுறியும் தென்படவில்லை.

ஆனால் ரயில் போக்குவரத்தைப் பன்மடங்கு அதிகரித்தாக வேண்டிய கால கட்டத்தில் இருக்கிறோம்.

மெட்ரோ ரயில்

இந்த இடத்தில் மெட்ரோ ரயிலைப் பற்றியும் பேச வேண்டும். வளர்ந்த நாடுகள் பலவும் பொதுப் போக்குவரத்தின் பிரதானக் கண்ணியாக மெட்ரோவையே நம்பியிருக்கின்றன. இதற்குக் காரணம் இருக்கிறது. சாலைப் போக்குவரத்தோடு ஒப்பிடுகிறபோது மெட்ரோ ரயிலில் பயண நேரம் பாதிக்கும் குறைவு.

மெட்ரோ ரயில்கள் குறிப்பிட்ட காலத்தில் வரும். துரிதமாகச் செல்லும். சாலைப் போக்குவரத்தோடு ஒப்பிடுகையில் மெட்ரோ ரயிலுக்கு ஐந்தில் ஒரு பங்கு எரிபொருளும் மின்சக்தியும் போதுமானவை என்கின்றன ஆய்வுகள். மெட்ரோவால் காற்றில் உண்டாகும் மாசு குறைவு. ஒலியால் உண்டாகும் மாசும் குறைவு.

அதனால் மெட்ரோ ரயில் சுற்றுச் சூழலுக்கு நல்லது. மேலும் மெட்ரோ ரயில் தூய்மையானது, பாதுகாப்பானது. மெட்ரோ ரயிலால் சாலையில் வாகன நெரிசலும் குறையும்.

உலகின் பல நகரங்களில் மெட்ரோ ரயில் பல ஆண்டு காலமாக ஓடி வருகிற போதும் இந்தியாவில் இது கடந்த 20 ஆண்டுகளாகத்தான் வேகம் பிடித்திருக்கிறது. டில்லி, மும்பை, கொல்கத்தா, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத் ஆகிய முதல் நிலை நகரங்கள் தவிர ஆகமதாபாத், போபால், ஜெய்பூர், லக்னோ, நாக்பூர், கொச்சி முதலான இரண்டாம் நிலை நகரங்களிலும் மெட்ரோ ஓடுகிறது.

இப்போதைய மெட்ரோ தடங்களின் நீளம் 750கிமீ. கட்டுமானத்தில் இருப்பவை 500கிமீ. ஒப்புதல் பெற்று பணி தொடங்கக் காத்திருப்பவை 500கிமீ. வரைபட மேசையில் இருப்பவை 1000கிமீ. இந்த விவரங்கள் ஊக்கமளிப்பவைதான்.

ஆனால் டில்லி மெட்ரோ தவிர அநேகமாக எல்லா மெட்ரோக்களும் நட்டத்தில்தான் இயங்குகின்றன.

காரணம் பெரும் பொருட் செலவில் கட்டப்படும் மெட்ரோ திட்டங்களுக்கு மாநில அரசுகள் சர்வதேச நிதியங்களிலிருந்து கடன் பெறுகின்றன. அவற்றைத் திருப்பிச் செலுத்துகிற சுமையால் பயணக் கட்டணங்களை அதிகமாக விதிக்கின்றன.

தவிர, ஒன்றிய அரசு வழங்கும் நிதியின் வீதமும் குறைந்து வருகிறது. சென்னை மெட்ரோவின் இரண்டாம் கட்டத்திற்கு நாளதுவரை ஒன்றிய அரசு எந்த நிதியும் வழங்கவில்லை. ஒன்றிய அரசிடம்தான் செல்வம் குவிந்திருக்கிறது.

அது கணிசமாக நிதி வழங்கினால்தான் மாநில அரசுகளால் கட்டணத்தைக் குறைக்க முடியும். மெட்ரோவின் பயன்பாடு மிகும். கட்டுமானமும் அதிகரிக்கும்.

சாலை

அடுத்து, தனியார் வாகனங்களுக்குப் பதிலாகப் பேருந்துப் பயன்பாட்டை அதிகரிக்க வேண்டும். அதற்கு நல்ல சாலைகள் வேண்டும். இப்போதையக் கணக்கின்படி இந்தியாவின் நகரங்களும் கிராமங்களும் 33.4லட்சம் கிமீ நீளமுள்ள சாலைகளால் இணைக்கப்பட்டிருக்கின்றன.

இவை எல்லாம் தார்ச்சாலைகள் அல்ல. எனினும் நாட்டின் 87% மக்கள் தங்கள் பயணங்களுக்கு இந்தச் சாலைகளைத்தான் பயன்படுத்துகிறார்கள். 1947இல் வெறும் 21,378கிமீ ஆக இருந்த தேசிய நெடுஞ்சாலைகள் இப்போது 1.4 லட்சம் கிமீ ஆக வளர்ந்திருக்கின்றன.

நாட்டின் மொத்தச் சாலைகளின் நீளத்தில் இது 4%தான். ஆனால் சாலைப் போக்குவரத்தின் 40% பயணங்கள் இந்தத் சாலைகளின் மீதுதான் நடக்கின்றன.

அதே வேளையில் நகரச் சாலைகளும் கிராமச் சாலைகளும் இந்த தேசிய நெடுஞ்சாலைகளின் தரத்தில் இல்லை.

அவை போதுமானதாகவும் இல்லை. இவற்றை மேம்படுத்தியாக வேண்டும். அது பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும்.

சைக்கிள்

சைக்கிளின் பயன்பாடு சொல்லவும் பெரிது. நெதர்லாந்தில் 27% பயணங்களுக்கு மக்கள் சைக்கிளைத்தான் பயன்படுத்துகிறார்கள். டென்மார்க்கில் இது 18%, ஜெர்மெனியில் 10%.

ஒரு காலத்தில் இங்கும் சைக்கிள்கள் பரவலாக ஓடின. நடுவயதைத் தாண்டிய பலரது நினைவுச் சேகரங்களில் வாடகை சைக்கிள்களும் குரங்கு பெடல்களும் எண்ணற்ற முழங்கால் சிராய்ப்புகளும் இருக்கும். அறுபதுகளில் சைக்கிள் ஓர் ஆடம்பரப் பொருள். செல்வந்தர் வீடுகளில்தான் இருக்கும். எண்பதுகளில் அதுவே அத்தியாவசியப் பொருளானது.

இந்நாளில் கார்களும் மோட்டார் பைக்குகளும் நீக்கமற நிறைந்திருக்கும் நகரச் சாலைகளில் அந்நாளில் சைக்கிள்கள்தாம் ஆதிக்கம் செலுத்தின. தொண்ணுறுகளின் மத்தியில் உலகமயம் வேகம் எடுத்தது.

அதுவரை முன்பணம் செலுத்தி காத்திருந்து வாங்க வேண்டியிருந்த கார்களும் பைக்குகளும் உடனடியாகக் கிடைத்தன. நடுத்தர வர்க்கத்தினருக்கு வங்கிகள் கடன் வழங்கின. அவர்கள் வாங்கிய வாகனங்களே அடகுப் பொருளாகியது. அதை வாங்கியவரே வைத்துக்கொள்ளலாம், பயன்படுத்தலாம், அசலையும் அதற்கு இணையாக வளரும் வட்டியையும் கிரமமாகச் செலுத்த வேண்டும். இப்படியாகச் சாலைகளை நிறைத்தன தனியார் வாகனங்கள்.

இதுவரை நாம் வாசித்தது இந்தியாவின் கதைதான். எனில், இது சீனாவின் கதையுங்கூட. இந்தியாவின் கதை இன்றளவும் அப்படியே தொடர்கிறது. சீனாவின் கதை இடையில் மாறிவிட்டது. 2008இல் பெய்ஜிங்கில் நடந்த ஒலிம்பிக் போட்டிகள் கண் திறப்பாக அமைந்தன. அப்போது காற்று மாசைக் குறைக்க நகரிலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் தொழிற்சாலைகள் மூடப்பட்டன.

தனியார் வாகனங்களின் ஓட்டம் பெரிதும் மட்டுப்படுத்தப்பட்டது. முன் அனுமதியின்றி வாகனங்களைச் சாலையில் இறக்கிவிட முடியாது. ஒலிம்பிக் போட்டியாளர்கள் நல்ல காற்றை சுவாசிக்க சீன அரசு இப்படியாக மெனக்கெட வேண்டியிருந்தது.

இந்த அனுபவத்திற்குப் பிறகு சீன அரசு சைக்கிள்களின் பக்கம் தன் கவனத்தைத் திருப்பியது. இன்று பெய்ஜிங் நகரெங்கும் பசுமை, மஞ்சள், நீல நிற சைக்கிள்களைப் பார்க்கலாம். இவை மூன்று நிறுவனங்களுக்குச் சொந்தமானவை. நகரின் பிரதான சந்திகளில் இவை நிறுத்தப்பட்டிருக்கும்.

செல்பேசியில் பதிவிறக்கிக்கொண்ட செயலிகளின் க்யூ.ஆர் குறிகளின் வழியாக இந்த சைக்கிள்களின் பூட்டைத் திறக்க முடியும். போக வேண்டிய அலுவலகத்திற்கோ மெட்ரோ ரயில் நிலையத்திற்கோ அருகாமையில் உள்ள நிறுத்தத்தில் சைக்கிளை விட்டுவிடலாம். அதே செயலியின் வழியாக வாடகையைச் செலுத்தலாம். மாதாந்திர சலுகைக் கட்டணங்களும் உண்டு.

பெய்ஜிங்கில் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து பியுஜியான், ஹைனான் முதலான நகர வீதிகளிலும் பசுமை, மஞ்சள், நீல நிற சைக்கிள்கள் ஓடுகின்றன. இந்த நவீன வாடகை சைக்கிளின் கதை-வசனம் சீனாவில் எழுதப்படவில்லை.

பல மேலை நாடுகளில் இந்த முறை புழக்கத்தில் இருக்கிறது. தங்கள் மண்ணிற்கு ஏற்றாற்போல் அதன் கதை-வசனத்தைச் சீனர்கள் மாற்றிக்கொண்டார்கள்.

இந்தக் கதை நன்றாகத்தான் இருக்கிறது. இதற்கு யாரிடத்திலும் காப்புரிமை இல்லை. ஆனால் நாம் இந்தக் கதையை எடுத்தாள முடியாது. மேற்கிலும் சீனாவிலும் சைக்கிள்கள் போகப் பாதைகள் தனியானவை, சமிக்ஞை விளக்குகளும் தனியானவை.

விரைவு வாகனங்களும் சைக்கிள்களும் ஒரே சாலையில் பயணிக்க முடியாது. முதற் கட்டமாக நாம் சைக்கிள்களுக்குத் தனிப்பாதை உருவாக்க வேண்டும். தில்லி போன்ற அகன்ற சாலைகள் உள்ள நகரங்களில் இதை உடனடியாகச் செய்யலாம். மும்பை, சென்னை போன்ற அகலங் குறைந்த சாலைகளில் இதைப் படிப்படியாகச் செய்ய வேண்டும்.

சாலைகளை விரிவாக்கலாம். பிரதான சாலைகளுக்கு இணையான தெருக்களில் உள்ள சாலை முழுவதையும் சைக்கிள்களுக்கு ஒதுக்கலாம். பொறியியல் ரீதியான திட்டங்களை வகுக்க முடியும். நடைமுறைப்படுத்த மக்களுக்கும் அரசுக்கும் மனம் வேண்டும்.

மின்சார வாகனம்

மூன்றாவதாக மின்சார வாகனங்கள், மின்சாரக் கார்களின் எரிபொருள் செலவு 70% குறைவானவை, பராமரிப்புச் செலவு 40% குறைவானவை. முக்கியமாக அவை வெளியேற்றும் பசுங்குடில் வாயுக்கள் 57% குறைவானவை. இதன் மின்சாரம் சூரிய ஒளியில் தயாரிக்கப்படுமானால் சூழலியல் கேடு மேலும் குறையும்.

நகரமயம் என்பதைத் தவிர்க்க முடியாது. போலவே நகரங்களில் போக்கும் வரவும் தவிர்க்க முடியாது. ஆனால் பொறுப்புள்ள சமூகம் இந்தப் போக்குவரத்தால் சுற்றுச் சூழலுக்கு உண்டாக்கும் நாசத்தைச் சகித்துக்கொண்டிருக்காது.

நாம் பொதுப் போக்குவரத்தைப் பரவலாக்க வேண்டும், சைக்கிள்களையும் மின்சார வாகனங்களையும் பயன்கொள்ள வேண்டும். அரசு இந்தத் திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். அரசியல் தெளிவும் பொதுநல அக்கறையும் உள்ள சமூகங்களில் இவை சாத்தியமாகும்.

கட்டுரையாளர்:

நகரமயமும் போக்குவரத்தும் (Urbanism and Transport) - மு இராமனாதன் | https://bookday.in/

மு இராமனாதன் (பி.1959)
கல்வி, மொழி, சமூகம், உலக அரசியல், பொறியியல், கலை-இலக்கியம் முதலான பொருள்களில் எழுதி வருகிறார். இதுவரை ஐந்து நூல்கள் வெளியாகியுள்ளன: ‘கிழக்கும் மேற்கும்’, பன்னாட்டு அரசியல் கட்டுரைகள் (காலச்சுவடு, 2022); ‘வீடும் வாசலும் ரயிலும் மழையும்’, பொறியியல் கட்டுரைகள்(பாரதி புத்தகாலயம், 2023);  ‘இது முத்துலிங்கத்தின் நேரம்’, அ. முத்துலிங்கத்தின் படைப்புகள் பற்றிய கட்டுரைகள் (காலச்சுவடு, 2023); ‘ஆர்வெல்லின் ஆறு விதிகள்’, கல்வி, மொழி சார்ந்த கட்டுரைகள் (பாரதி புத்தகாலயம், 2023); ‘தமிழணங்கு என்ன நிறம்?’, சமூகம், அரசியல் சார்ந்த கட்டுரைகள் (பாரதி புத்தகாலயம், 2023)
ஹாங்காங் இலக்கிய வட்டம் நடத்திய 25 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய ‘இலக்கிய வெள்ளி’ (2008);  பர்மாவிலிருந்து புலம் பெயர்ந்த செ.முஹம்மது யூனுஸின் அனுபவத் தொகுப்பான ‘எனது பர்மா குறிப்புகள்’  (காலச்சுவடு, 2009);  அ.முத்துலிங்கத்தின் கிளாசிக் சிறுகதைகளின் தொகுப்பான ‘புவியீர்ப்புக் கட்டணம்’ (காலச்சுவடு, 2022) ஆகிய நூல்களின் தொகுப்பாசிரியர்.
இராமனாதன் ஹாங்காங்கின் பதிவு பெற்ற பொறியாளராகவும் பிரிட்டனின் சார்டர்ட் பொறியாளராகவும் பட்டம் பெற்றவர். இந்தியா, ஹாங்காங், சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா முதலான நாடுகளில் பல்வேறு உள்கட்டமைப்புத் திட்டங்களில் பணியாற்றியிருக்கிறார். இவரது பொறியியல் கட்டுரைகள் பன்னாட்டு ஆய்விதழ்களில் வெளியாகியுள்ளன.
மின்னஞ்சல்: [email protected]



இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல்பொருளாதாரம்இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

 



Show 2 Comments

2 Comments

  1. அன்புள்ள அய்யா,

    நீங்கள் எழுதியுள்ளது முழுக்க முழுக்க உண்மை.

    இது தொடர்பாக எனது எண்ணங்கள் சில உங்கள் பார்வைக்கு:
    சென்னை உள்ளிட்ட அனைத்து பெரு நகரங்களையும்
    அனைத்து தரப்பு மக்களுக்கான வாழ்விடமாக மாற்றுவது எப்படி?

    தற்போது பெரு நகரங்களில் வசதி, அதிகாரம் , பணம் படைத்தோர் வாழ்தல் இனிது.

    நடுத்தர வர்க்க மக்கள் அல்லல் படுதல் கொஞ்ச நஞ்சம் அல்ல.

    ஏழை எளிய மக்களுக்கு இடமே இல்லை.

    அவர்கள் காலம் காலமாக

    வசித்துக் கொண்டிருந்த,

    வசித்துக் கொண்டு இருக்கின்ற பகுதிகள்,
    போக்குவரத்து மற்றும் உள் கட்டமைப்பு வசதிகள் தேவை காரணமாக அரசு கையகப் படுத்த,

    அவர்கள் பெரு நகரங்களின் விளிம்புகள் பக்கம் தூக்கி வீசப் படுகின்றனர்.

    இப்படி நடப்பது

    சென்னையில்

    மட்டும் அல்ல.

    மும்பை,

    கல்கத்தா,

    தில்லி,

    பெங்களூரு,

    அனைத்து பெரு நகரங்களிலும், ( பிற நகரங்களிலும் கூட ) இந்த கொடுமை தொடர்ந்து நடந்து வருகிறது.

    பெரு நகரங்களில் கட்டமைப்பு வசதிகளுக்காக

    அதிக முதலீடு செய்வது,

    வெகு சிலரைத் தவிர மற்ற அனைத்து மக்களுக்கும் ,

    அன்றாட வாழ்க்கையை பெரும் சுமையாகவே மாற்றுகிறது.

    மாறாக,
    நாம் என்ன செய்ய முடியும்,

    எங்கே தொடங்க வேண்டும் ?

    முதலில்,

    நம் பெரு நகரங்களில் கிடைக்கும்
    வேலை வாய்ப்பு களை பரவலாக்க வேண்டும்.

    நகரங்களை நரஹமாக்கும் மக்கள் தொகை அடர்த்தி குறைக்கப் பட வேண்டும்.

    வசதி குறைந்த, ஏழை எளிய மக்கள் நகரங்களை விட்டு வெளியேற வேண்டும் என்ற எண்ணம் மாறி, வசதி படைத்தோர், நிரந்தர வருமானம் உடையோர், அரசு அதிகாரம் உடையோர், மாற்று இடங்களில் குடியேற வேண்டும் என்ற எண்ணம் ஏற்பட வேண்டும்.

    எப்படி?

    இது நடைமுறை சாத்தியமா ?

    ஒரு செய்தி;

    உச்சநீதிமன்ற கிளையை சென்னையில் அமைக்க வேண்டும்!

    இந்த செய்தியை நாம் அனைவரும் படித்து இருப்போம்.

    தென் இந்திய மாநிலங்களுக்கு பொதுவாகத் தான் இந்த வேண்டுகோள் விடுக்கப் படுகிறது.

    அவ்வகையில்,

    இந்த கிளை நீதிமன்றம் தென்னகத்தின் மையப் பகுதியில் அமைவது நன்று.

    ஏற்கெனவே பெங்களூரு மிக அதிக மக்கள் தொகை நெருக்கடியில் சிக்கித் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில்,

    அடுத்த பொருத்தமான இடம் திருப்பதி.

    கிட்டத்தட்ட அனைத்து தென் மாநிலங்களுக்கும் ஓரளவு சம தூரத்தில் அமைந்துள்ளது.

    அருமையான சாலை, ரயில், விமான போக்குவரத்து வசதிகள் உள்ளன.

    *********

    அது மட்டும் அல்ல.

    மதுரையில்,

    தற்போது சென்னை உயர் நீதிமன்ற கிளை உள்ளது.

    மேலும் இரண்டு உயர் நீதி மன்ற கிளைகள்,

    தமிழ் நாட்டின் கிழக்கு ( தஞ்சாவூர் ), மற்றும் மேற்கு ( சேலம் )

    பகுதியில் அமைக்கப் பட்டால் ,

    பொது
    மக்களுக்கு

    நீதித் துறையின்
    சேவை கிட்ட

    அதிக வாய்ப்பு உண்டு.

    சென்னையில் 30 நீதிபதிகள்,

    சேலம், தஞ்சாவூர், மதுரை தலா 15 நீதிபதிகள் சேவை செய்தால் ,

    மிக வசதியாக இருக்கும்.

    சென்னையில் கூட்டம் குறையும்.

    மற்ற ஊர்களில் நீதித்துறை சார்ந்த சேவைகள், ஊடக வளர்ச்சி வாய்ப்புகள் உள்ளன மேம்படும்.

    சென்னை உயர் நீதிமன்றத்தை மட்டும் அல்ல,

    நாட்டில் உள்ள அனைத்து பெரு நகர நீதி மன்ற மன்றங்களையும் இவ்வாறு பகுக்க வேண்டும்.

    கேரளா உயர்நீதி மன்றம் கொச்சியில் செயல் படுகிறது. அதற்கான கிளைகள் திருவனந்தபுரம், கோழிக்கோடு,பாலக்காடு செயல்பட்டால் உசிதம்.

    கர்நாடகா உயர்நீதி மன்றம் பெங்களூருவில் பிரதான அமர்வுகளையும் , வட மேற்கு கர்நாடகாவில் பெல்காம், வடகிழக்கு கர்நாடகாவில் குல்பர்கா என இரண்டு கிளைகளை கொண்டு இயங்குகிறது. மேலும் இரண்டு கிளைகள் மைசூர் பகுதியிலும், கர்நாடக கடற்கரை மாவட்டங்களுக்கு உடுப்பி பகுதியிலும அமைக்கப் பட்டால் நன்று.

    பம்பாய் உயர் நீதிமன்ற கிளைகள் கிளைகள் ஏற்கெனவே நாக்பூர், அவுரங்காபாத், கோவா ஆகிய இடங்களில் செயல் பட்டு வருகின்றன. நவி மும்பை, பூனா, கோலாப்பூர், நாசிக் என மேலும் கிளை அமர்வுகள் அமைக்க வேண்டும்.

    நம் நாட்டிலேயே அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரப் பிரதேச மாநிலத்தில் அலஹாபாத் உயர்நீதி மன்றத்தில் 160 நீதிபதிகள் சேவை செய்து வருகின்றனர். ஒரே ஒரு உயர்நீதி மன்ற கிளைதான் உள்ளது. ( மாநிலத் தலைநகர் லக்னோ வில் ). கான்பூர், காசி, நொய்டா, கோரக்பூர் என பல இடங்களில் உயர்நீதி மன்ற கிளைகள் அமைக்க முடியும்.

    இதே போல் அனைத்து பெரிய உயர் நீதிமன்ற பிரதான அமர்வுகள் , கிளை அமர்வுகள் கொண்டவையாக மாற்றிட வேண்டும்.

    மத்திய, மாநில, அரசு அலுவலகங்கள் , மாநிலத் தலைநகர் களில் அமைந்துள்ள பெரும் தனியார் அலுவலகங்கள்,

    இவற்றை ,

    சுமார் 10 மாவட்டங்களுக்கு ஒரு வட்டார அலுவலகம் என

    பிரித்து பரவலாக அமைத்திட வேண்டும்.

    அத்துடன், இரண்டாம் நிலை, மூன்றாம் நிலை நகரங்களில
    உள்ள

    விமான நிலையங்கள்,

    துறைமுகங்கள் ,

    ரயில் நிலையங்கள்,

    பேருந்து முனையங்கள,

    மொத்த விற்பனை அங்காடிகள்

    இன்ன பிறவும்

    விரிவாக்கம் செய்ய முன்னெடுப்பு எடுக்க வேண்டும்.

    இதனுடைய நன்மைகளை அனுபவிக்கும் மக்கள் நிச்சயம் வரவேற்பார்கள.

    இன்னும் ஒரு உதாரணம் :

    சென்னைக்கு 2வது விமான நிலையத்துக்கு திட்டம்

    பரந்தூர் பகுதியில்,

    சென்னைக் கான 2வது விமான நிலையத்துக்கு ஆதரவும், எதிர்ப்பும் நாம் அனைவரும் அறிந்ததே.

    ஒரு ஜனநாயக நாட்டில் இது முற்றிலும் இயல்பானதே.

    காய்தல், உவத்தல் இன்றி இந்த திட்டத்தின் சாதக பாதகங்களை ஆராய்வோம்.

    தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையம் நெருக்கடியின் விளிம்பில் உள்ளது .

    ஆகவே சென்னைக்கு அருகில் இன்னும் ஒரு புதிய பெரிய விமான நிலையம் அமைப்பது காலத்தின் கட்டாயம் – இது ஆதரவுக் குரல்.

    பரந் தூரில் புதிய விமான நிலையம் அமைப்பது எங்கள் வாழ்வினை நிர்மூலம் ஆக்கும் – இது எதிர்ப்புக் குரல்.

    சென்னையை சுற்றி ஏற்கெனவே இரண்டு விமான நிலையங்கள் உள்ளன : திருப்பதி, பாண்டிச்சேரி.

    மூன்றாவது , வேலூரில் கிட்டத் தட்ட தயார்.

    இந்த மூன்று விமான நிலையங்களும் சென்னைக்கு மாற்றாக அமைய முடியும். இங்கே நாம் குறைவான முதலீட்டில்,
    விமான நிலையங்களை ,விரிவாக்க , மேம்படுத்த முடியும்.

    விமானப் போக்குவரத்து தொடர்பாக நாம் கவனிக்க வேண்டிய விஷயங்கள் இந்த மூன்று விமான நிலையங்கள் மட்டும் அல்ல.

    சேலம், கோவை, திருச்சி, மதுரை, தூத்துக்குடி ஆகிய அனைத்து விமான நிலையங்களையும் நாம் விரிவாக்கம் செய்ய வேண்டும்.

    ஏன் ?

    வெளி மாநிலங்களுக்கு,

    வெளி நாடுகளுக்கு,

    சென்னைக்கு வராமலேயே,

    அவரவர் ஊர்களுக்கு அருகில் இருந்தே மக்கள் விமானப் பயணம் செய்ய வேண்டும்.

    அப்போது சென்னைக்கு தேவையில்லாமல் மக்கள் வர வேண்டியது இல்லை.

    இது போக்குவரத்துக்கு மட்டும் அல்ல

    முக்கியமாக அனைத்து பகுதிகளும் வளம் பெறும்.

    சென்னையில் மக்கள் தொகை அடர்த்தி குறையும்.

    ஆனால் இதை நாம் தனித்து, விமானப் போக்குவரத்து கண்ணோட்டத்தில் மட்டும் பார்க்கக் கூடாது.

    சுற்றுச் சூழல் பாதுகாப்பு

    மற்றும்

    நாட்டின் அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கிய
    சீரான, சமமான வளர்ச்சிக்கான வாய்ப்பாக கருத வேண்டும்.
    .

    மாவட்டங்களை நிர்வாக வசதிக்காக , பிரிக்கும் போது பெரும்பாலும் வரவேற் கிறோம் .

    ஆனால் மாநிலங்களை பிரிக்க சிந்தனை செய்வதை ஏன் சதி என்கிறோம் ?

    ஏன் என்றால், அதிகார வீச்சு ,

    ஆட்சிப் பரப்பு,

    நிதி ஆதாரங்கள்
    ஆளுவோர்க்கு குறையும்.

    ஆனால், சிறு கட்சிகளுக்கு,

    இது வரை ஆட்சிக்கு வராத,

    மாநிலத்தின் ஒரு பகுதியில் மட்டுமே செல்வாக்கு உடைய கட்சிகள் ,

    இந்த மாநில பகுப்புக்கு ஆதரவு தெரிவிககும்.

    ஆகவே இந்த மாநில பகுப்பு செய்வது ஒரு மாநிலத்துக்கு மட்டுமே என்று செயல் பட்டால் எதிர்ப்பு, ஆதரவு இரண்டும் நிச்சயம் இருக்கும்.

    எடுத்துக் காட்டாக,

    பல ஆண்டுகாலம்

    தெலுங்கானா மாநிலம் தேவை என்று ஒருங்கிணைந்த
    ஆந்திர பிரதேச மாநிலத்தின் , ஹைதராபாத் பகுதி சார்ந்த அரசியல் வாதிகள் மற்றும்
    குறிப்பிடத்தக்க அளவு பொது மக்களும் தொடர்ந்து விருப்பம் தெரிவித்து ,

    பல போராட்டங்கள் நடத்தியும்,

    தெலுங்கானா, ஆந்திரா என்று பிரிக்கும் போது மிகப் பெரிய அளவில் எதிர்ப்பு, ஆதரவு என

    போராட்டங்கள் நடந்தது நாம் அறிந்ததே.

    ஆனால்,

    உத்ராகண்ட்,

    ஜார்கண்ட,

    சட்டிஸ்கர்

    ஆகிய மூன்று மாநிலங்கள் பிரிக்கும் போது, பெரிய அளவில் ஆதரவும்,
    எதிர்ப்பு குறைவாகவும் இருந்ததும் நிதர்சனம்.

    ஆகவே,

    ஒரே சமயத்தில்,
    நமது நாட்டில் உள்ள எல்லா பெரிய மாநிலங்களையும் பிரிப்பது என்று செயல்பட்டால் நல்லது…

    தற்போது உள்ள பெரிய மாநிலங்களை உத்தேசமாக எத்தனை சிறு மாநிலங்களாக பகுக்க முடியும் என்பதற்கு ஒரு பட்டியல் கீழே.

    உத்தர பிரதேசம். – 8…

    ( பூர்வான்ச்சல்…….

    மத்திய பிரதேசம் – 7

    (

    மஹாராஷ்டிரா – 6

    (. கொங்கண்,

    விதர்பா,

    மரத்வாடா ,

    தற்போதைய ஆந்திரா – 2

    தெலுங்கானா – 2

    மேற்கு வங்காளம் – 5

    குஜராத் – 4

    ( சௌராஷ்டிரா,

    ராஜஸ்தான் – 4.

    அஸ்ஸாம் – 4.

    கர்நாடகா – 4

    ( குடகு நாடு,

    துளு நாடு ….

    தமிழ்நாடு – 4

    (

    பாண்டிய நாடு,

    கொங்கு நாடு,

    சோழ நாடு )

    கேரளா – 3

    பீஹார் – 3

    அஸ்ஸாம் -3

    ஒரிசா – 3

    என பிரிப்பது பற்றி ஆலோசனைகள் நடத்த முடியும்.

    ஆனால் மாநிலங்கள் பிரிப்பு செய்வதற்கு முன் உயர்நீதி மன்ற கிளைகள் ஆங்காங்கே அமைக்க வேண்டும்.

    *******

    நம் ஊரே ,

    வீதிகளே,

    பொது இடங்களே குப்பை மயமாக இருக்கின்றதே என்ற கவலை,

    அக்கறை,

    வருத்தம் நம் அனைவருக்கும் உண்டு.

    குப்பை முழுக்க முழுக்க நம் பொறுப்பற்ற தன்மையின் அடையாளம்.

    அது மட்டுமல்ல, நாம் நம்மை திருத்திக் கொள்ளா விட்டால்,
    கரோனா பெருந் தொற்று போல , இன்னும் பல பெருந்தொற்றுகள் நம்மை துன்புறுத்த காத்துக் கொண்டு உள்ளன என்பது உறுதி.

    இயற்கை வளங்களை சூறையாடுதல்,
    சுற்றுச் சூழல் பாதிப்பு, காற்று, தண்ணீர் மாசுபடுத்தல்,
    பொறுப்பற்ற முறையில் தொழிற்சாலைக் கழிவுகளை வெளியேற்றும் போக்கு, வீட்டுக் கழிவு மேலாண்மை கடைப்பிடிக்காமல் அலட்சியப் படுத்தல்,
    வனங்கள் வளம் குன்றும் வேகம்,
    வன விலங்குகள், செடிகொடிகள் தொடந்து அழிப்பு என நாமே நமக்கு கொள்ளி வைத்து கொண்டு இருக்கிறோம்.

    சரி, இதற்கெல்லாம் நாம் என்ன செய்ய முடியும் ?

    தனி மனிதராக, குடும்பமாக, சமூகமாக, ஊராக, மாநிலமாக , நாடாக நாம் செய்ய நிறைய உள்ளன.

    சரியான திட்டம் இடுதலால்,
    மக்களை செயல் ஊக்கத்துக்கு கொண்டு வர முடியும்.

    தற்போது நம் நாட்டில் உடனடியாக செய்யக் கூடிய திட்டங்கள்.

    குப்பை என்பது வீண் போவது இல்லை,

    குப்பைகளை தரம் பிரித்து,
    வகை ப் படுத்தி,

    சேர்த்து,

    சேமித்து,

    மறு சுழற்சி செய்தால்.

    உதாரணம் ,,;

    பிளாஸ்டிக்.

    கால்நடைத் தீவனம்..

    இயற்கை உரம்.

    எரி பொருள்.

    தலை முடி.

    காகிதப் பொருட்கள்.

    அலுமினிய foils.

    கயிறுகள்.

    இது குப்பையை பிரித்து பயன் படுத்திய நாடுதான்.

    தலை முடியை தனியாக எடுத்து வைத்தவர்கள் தான் நாம்.

    காய்கறி கழிவுகள், வாழைப் பழ தோல், இவற்றையெல்லாம், பொறுப்பாக மாடு, ஆடுகளுக்கு உணவாக அளித்தவர்கள் தாம் நாம்.

    சின்னச் சின்ன பிளாஸ்டிக் கவர் களை ஒரே ஒரு பெரிய பையில் போட்டு விட்டு, அதை தூய்மை காவலரிடம் கொடுத்தல் கோடி புண்ணியம்.

    இந்த விழிப்புணர்வு, பொறுப்புணர்வு நம் மக்களுக்கு வந்தால், நம் வீட்டு மக்கும் குப்பை , இயற்கை உரமாகும்.

    மக்காத குப்பை மறுசுழற்சி ஆகும்

    நம் வீட்டுக் கழிவு எப்படி, எந்த அளவுக்கு,
    மறு சுழற்சி முறையில் பயன் படுத்தப் படுகிறது,.

    மறு சுழற்சி செய்யப் படாமல் நேரடியாக ஆற்றில், குளத்தில்,

    குப்பைக்கு செல்கிறது என்பதை அறிய வேண்டும்.

    இதனை நேர்மையான முறையில்,
    நம் மன சாட்சிக்கு உண்மையாக,
    நாம் சுயமதிப்பீடு செய்தால் மட்டுமே
    முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உண்டு.

    இது போலத்தான்.

    ஆறுகள் மாசு அடைவதற்கு நாம் அனைவரும் ஒவ்வொரு விதத்தில்,
    ஒவ்வொரு அளவில்
    காரணம் என்பதை புரிந்து ஏற்றுக் கொள்ள வேண்டும்.

    நாம் அனைவரும் நம்மால் முடிந்த மாசு குறைப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எண்ணி, செயல்பட்டால் தான் ஆறுகள் மாசு குறைப்பு நடவடிக்கை வெற்றி பெறும்.

    அரசாங்கம், அதிகாரிகள், தொழிற்சாலைகளுக்கு அதிக அளவில் பொறுப்பு, கடமை இருக்கிறது.

    அதே சமயம், பொது மக்களும் நிறைய செய்ய வேண்டி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டு, செயல் படவும் வேண்டும்.

    ஆனால் ஒரே நாளில் வெற்றி கிடைக்காது.

    மிக மிக மெதுவாகத் தான் முன்னேற்றம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    l
    மரங்களை நடுவது நன்று.

    மரங்களை வெட்டாமல் தடுக்க மாற்று ஏற்பாடுகளை செய்ய முயற்சி எடுப்பது அதனினும் நன்று.

    கொட்டான்குச்சிகள் collection ஒரு எளிய ஆரம்பம்.

    விறகுக்கு பதிலாக , சூரிய ஒளி வெப்பம்
    Boilerகளில் பயன்படுத்தப் பட்டால், காசு மாற்று குறையும்.
    மரங்களும் காக்கப் படும்.

    தொழில் வளர்ச்சி ஏற்படும்.

  2. Ramasamy Ramaswamy

    Very Good evaluation of reducing carbon footprint.Govt need to act

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *