ஆவணமா, டாக்குமென்ட்டா, தஸ்தாவேஜா? - கலப்புச் சொற்கள் பற்றி ஒரு புது விவாதம் - அ.குமரேசன் | உருது சமஸ்கிருதம் – மூத்த மொழி - www.bookday.in

ஆவணமா, டாக்குமென்ட்டா, தஸ்தாவேஜா? – கலப்புச் சொற்கள் பற்றி ஒரு புது விவாதம் – அ.குமரேசன்

ஆவணமா, டாக்குமென்ட்டா, தஸ்தாவேஜா? – கலப்புச் சொற்கள் பற்றி ஒரு புது விவாதம்

– அ.குமரேசன்

ஒரு மொழியை பிறமொழிச் சொற்களின் கலப்பில்லாமல் பாதுகாப்பதா? அல்லது, வாழ்க்கை நிலைமைகளுக்கேற்ற வரவுகளோடு பராமரிப்பதா? மொழியின் தூய்மை, அதன் பன்மை தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன. எந்த மொழியையும் தாழ்வாகக் கருதாமல் இது பற்றிய உரையாடல்கள் முன்னுக்கு வருவது நலமானதுதான். இப்போது தமிழ் – சமஸ்கிருதம் – உருது தொடர்பாக வந்துள்ள ஒரு கருத்தாடல் கவனம் பெறுகிறது.

முன்னணித் திரைப்பட எழுத்தாளர், கவிஞர் என்பதால் மட்டுமல்லாமல் முற்போக்குச் சிந்தனையாளர் என்ற வகையிலும் புகழ்பெற்றிருப்பவர் ஜாவேத் அக்தர் இதை முன்வைத்திருக்கிறார். ஜெய்ப்பூர் இலக்கிய விழா ஜனவரி 16 அன்று கொண்டாடப்பட்டது. ‘டீம்வொர்க் ஆர்ட்ஸ்’ (அணிச்செயல் கலைகள்) என்ற அமைப்பால் இந்த விழா 2006 ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டின் விழாவின் ஒரு பகுதியாக நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வில் அவர் பங்கேற்றார். அப்போது அவையினரில் ஒருவர் இந்தக் கேள்வியை எழுப்பினார்: “உருது, சமஸ்கிருதம் – எது மூத்த மொழி?”

உருதுவைத் தாய்மொழியாகக் கொண்ட படைப்பாளி, அதைத்தான் மூத்த மொழியாகக் கூறுவார் என்று பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜாவேத் இவ்வாறு கூறினார்:

“இந்த இரண்டு மொழிகளையும் பழமை அடிப்படையில் ஒப்பிடுவது முறையல்ல. ஒருவேளை லத்தீன், கிரேக்க மொழிகளுக்கு இடையே இத்தகைய ஒப்பீட்டைச் செய்வது பொருத்தமாக இருக்கும். உலகின் இரண்டாவது பழமையான ‘வாழும் மொழி’ சமஸ்கிருதம்.  ஆனால் உருது தோன்றி ஆயிரம் ஆண்டுகள் கூட இன்னும் நிறைவடையவில்லை. சமஸ்கிருதத்தின் தங்கைதான் உருது.”

மூத்த மொழி எதுவெனில்…

இதைச் சொன்னதோடு அவர் நிறுத்தியிருந்தால், ஒரு செய்தியாக மட்டும் கடந்திருக்கும்,  நமக்கான கட்டுரையாகியிருக்காது. இரண்டாவது பழமையான வாழும் மொழி சமஸ்கிருதம் என்ற கருத்தைக் கூறியவர், மேற்கொண்டு பேசுகையில், அப்படியானால் அதற்கும் மூத்த பழமையான மொழி எது என்றும் குறிப்பிட்டார். “உலகின் மிகப்பழமையான வாழும் மொழி தமிழ், அதற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இருப்பது சமஸ்கிருதம்.”

சிலர் திடீர்த் திடீரென்று தமிழ், திருக்குறள் என்று பேசுவதைக் கேட்கிறோம். நாட்டின் சட்டங்களுக்கு இந்தியில் பெயர் சூட்டப்படுவதைப் பார்க்கிறோம். கல்விக் கொள்கையில் கலாச்சாரத்தின் பெயரால் சமஸ்கிருதத்திற்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதில் திகைக்கிறோம். ஆனால், இப்படி என்னதான் முயன்றாலும் தமிழின் தொன்மையை மறைக்க முடியவில்லையே என்ற குமைச்சலோடு இருக்கக்கூடியவர்களுக்கு ஜாவேதின் இந்தப் பேச்சு ஒரு செரிமானக் கோளாறை ஏற்படுத்தியிருக்கும்.

மொழிக்கு மதம் உண்டா?

ஆவணமா, டாக்குமென்ட்டா, தஸ்தாவேஜா? - கலப்புச் சொற்கள் பற்றி ஒரு புது விவாதம் - அ.குமரேசன் | உருது சமஸ்கிருதம் – மூத்த மொழி - www.bookday.in

மொழியின் தொன்மையல்லாமல் வேறு சில கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்களும் கவனிக்கத் தக்கவை. மொழியும் மதமும் பற்றிய ஒரு கேள்விக்கு அவர், “மொழி என்பது ஒரு வட்டாரத்தைச் சார்ந்ததோ, குறிப்பிட்ட எந்தவொரு மதத்தைச் சார்ந்ததோ அல்ல. உருது முஸ்லிம்களின் மொழி என்று கருதுவதும் தவறு. மதச்சார்பின்மைக் கோட்பாடு யாரோ கற்றுக்கொடுக்கும் பாடம் அல்ல, அது ஒரு வாழ்க்கை முறை,” என்று விளக்கமளித்தார். மதங்கள் கூறும் வழிமுறைகளே வாழ்க்கைமுறைகள் என்பதாகப் போதிக்கப்படும் சூழலில் “மதச்சார்பின்மை” இந்த நாட்டின் அரசமைப்பு சாசனச் சொல் மட்டுமல்ல, அதுவே ஒரு வாழ்க்கை முறைதான் என்று கூறுவதில் ஒரு துணிவு ஒளிர்கிறது. அதில் இந்தியப் பண்பாடு மிளிர்கிறது.

ராஜஸ்தான் மாநில அரசு அலுவல் நடைமுறைகளில் உருது, பாரசீகச் சொற்களைத் தவிர்க்க ஆணையிட்டிருக்கிறது. சென்ற ஆண்டு, காவல்துறையில் இந்த இரு மொழிகளின் சொற்களைத் தவிர்க்கவும் இந்திச் சொற்களைப் பயன்படுத்தவும் பணித்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பின்னணியில்  ஜாவேத் அக்தர் கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன.

ஆங்கிலத்தின் வளர்ச்சியைக் குறிப்பிட்ட அவர், “மொழிகள் விரிவடைவதன் மூலமாகத்தான் வாழ்ந்து வருகின்றன, சுருங்குவதன் மூலமாக அல்ல. ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழக அகராதியில் ஆண்டுதோறும் புதிய சொற்கள் சேர்க்கப்படுகின்றன. இந்தியாவின் ‘ஜுகாத்‘ உள்ளிட்ட சொற்கள் அந்த அகராதியில் சேர்க்கப்பட்டுள்ளன. இங்கோ மொழியிலிருந்து சொற்களை நீக்க முயல்கிறோம். இந்த வழியில் மொழிகள் வளர இயலாது,” என்றார்.

ஜுகாத் என்ற பஞ்சாபி – இந்திச் சொல்லுக்கு நேரத்திற்கேற்ற சரியான முடிவு (சமயோசிதம்) என்று பொருள். தமிழின் கட்டுமரம் (கேட்டமரான்), மாங்காய் (மேங்கோ), கறி, அப்பா, அண்ணா, அய்யோ என்பன உள்ளிட்டவையும் ஆக்ஸ்போர்டு அகராதியில் இணைந்து ஆங்கிலச் சொற்களாகியிருப்பதை இங்கே பகிர்ந்துகொள்ளலாம்.

தமிழ் முயற்சிகள்

பல்வேறு சிந்தனைகள் எழுகின்றன. இங்கே தமிழகத்திலும், தூய தமிழில் பேசவும் எழுதவும் முயற்சிகள் பல ஆண்டுகளாக நடக்கின்றன. சமஸ்கிருதக் கலப்பாலும், ஆங்கிலத் திணிப்பாலும் தமிழின் தனித்துவம் காணாமல் போய்விடுமோ என்ற அச்சத்துடனும், அவ்வாறு காணாமல் போக விடலாகாது என்ற லட்சியத்துடனும் அந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. இப்போதும் இதில் ஒரு கொள்கைப் பிடிபபோடு பலரும் ஈடுபடுகிறார்கள்.

பிற மொழிகளைச் சிறுமைப்படுத்தி சமஸ்கிருதத்தின் மேலாண்மையையும் இந்தியின் ஆளுமையையும் நிறுவும் முயற்சிகளும் அதிகார வலிமையைப் பயன்படுத்திக்கொண்டு நடக்கின்றன. ஆனால் அப்படிப்பட்ட திணிப்புகளுக்குக் கலாச்சாரப் பாதுகாப்பு என்று பெயர் சூட்டுகிறவர்கள், தமிழின் தொன்மையையும் இனிமையையும் பாதுகாக்கும் முனைப்புகளுக்கு மொழி வெறி என்று முத்திரை குத்துகிறார்கள்.

இப்படிப்பட்ட ஆதிக்கப் போக்கின் காரணமாகவே, சமஸ்கிருதம் என்ற ஒரு மூத்த மொழியின் வளமையையும் அதன் இலக்கியச் செழுமையையும் கற்றறிய வேண்டுமென்ற மொழி  வேலிகள் கடந்த விருப்பத்தை விரட்டியடிக்கிறார்கள்.  அதை அவர்களுக்கு யார் உணர்த்துவது?

உருது எங்கிருந்து வந்தது?

ஆவணமா, டாக்குமென்ட்டா, தஸ்தாவேஜா? - கலப்புச் சொற்கள் பற்றி ஒரு புது விவாதம் - அ.குமரேசன் | உருது சமஸ்கிருதம் – மூத்த மொழி - www.bookday.in

ஜாவேத் தொடங்கிவைத்துள்ள விவாதத்திற்கு வருவோம். அவருடைய பேச்சின் சாராம்சம், தூய்மைவாதத்தின் பெயரால் எந்தவொரு மொழியின் மீதும் விதிக்கப்படும் கட்டுப்பாடுகள், அந்த மொழியின் இயல்பான புழக்கத்தையும் வளர்ச்சியையும் முடக்கிவிடக்கூடும். அந்த ஆபத்தையே அவர் சுட்டிக்காட்டுவதாக எடுத்துக்கொள்ளலாம். நடைமுறையில் உள்ள உருது, பாரசீகச் சொற்களை விலக்குவதற்கு ராஜஸ்தான் மாநில அரசு பிறப்பித்துள்ள ஆணை, மொழித்தூய்மையைப் பாதுகாப்பதற்காகத்தானா? அல்லது, அந்த இரண்டு மொழிகளையும் ஒரு மதத்தோடு அடையாளப்படுத்தி ஒதுக்குகிற மதவாத அரசியலும் கலந்திருக்கிறதா?

அது பற்றிய கவலையோடும்தான் ஜாவேத் அக்தர், மொழிகள் மதம் சார்ந்தவை அல்ல என்ற கருத்தை ஓர் அரணாக நிறுத்துகிறார். வரும் நாட்கள் இந்த வினாக்களுக்கு விடையளிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

உருது பற்றிய மற்றொரு செய்தியையும் அவர் கூறினார். பலரும் நினைப்பது போல அது வெளிநாடுகளிலிருந்து வந்ததல்ல, இந்தியாவிலேயே உருவான மொழி என்றார். “அரேபியாவிலோ இராக்கிலோ ஈரானிலோ ஜோர்டானிலோ உருது பேசப்படுகிறதா? இல்லை. இது நமது மொழி. இதனை ஒரு மதத்தின் மொழியாகச் சித்தரிக்கும் முயற்சி ஒரு வரலாற்றுத் திரிபுதான்,” என்று அவர் கூறினார். இந்தியும் உருதுவும் உடன்பிறப்புகள் என்றார். இதுவும் மொழி ஆய்வு ஆர்வலர்களுக்கு ஒரு களத்தைத் திறந்துவிடுகிறது எனலாம்.

சமஸ்கிருதம் பேசும் மக்கள்

தமிழ் மண்ணிலும் ஆலயங்களுக்குள் சமஸ்கிருத வழிபாட்டுச் சொற்களும் மந்திர உச்சரிப்புகளும் புகுத்தப்பட்டதற்கு வரலாற்று சாட்சியங்கள் உண்டு. அதன் பின்னணியில் இருந்த, நம்பிக்கைகளுக்கும் பக்திக்கும் அப்பாற்பட்ட ஆதிக்க நோக்கங்களுக்கு, பேரரசர்கள் ஏன் இணங்கிப் போனார்கள், தங்களுடைய அதிகாரத்தையும் பயன்படுத்தி எப்படி வழியமைத்தார்கள்?  சொல்லப்போனால் சொல் நயமும் இலக்கிய வளமும் கொண்ட சமஸ்கிருதத்தை, இப்படி ஆலயங்களுக்குள்ளேயும் புரோகிதங்களிலும் புகுத்தி வைத்ததால்தான், அது மதம் சார்ந்த மொழி என்ற எண்ணம் ஏற்படுத்தப்பட்டது. அதனால்தான், பரவலான புழக்கப் பரப்பு சுருங்கியது. ஷெல்டன் போலக், ஏ.எல். பாஷம் உள்ளிட்ட சமகிருத ஆய்வாளர்கள் இதனைச் சுட்டிக்காட்டியிருப்பதை இணையத் தரவுககள் தெரிவிக்கின்றன..

இந்தியாவில், 2011ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்புத் தரவுகளின்படி, சமஸ்கிருதத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள், அதனைத் தங்களின் அன்றாட வாழ்வில் பயன்படுத்துகிறவர்கள் 25, 821 பேர். (2021இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும், கொரோனா தாண்டவத்தால் அது தள்ளிப்போனது, இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திலிருந்து அது நடைபெற இருக்கிறது. அந்தக் கணக்கெடுப்பு அறிக்கை வெளியிடப்படுகிறபோது தற்போது இந்த மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்று தெரியவரும்.)

கர்நாடக மாநிலத்தின் மாத்தூரு, ஹோசாஹள்ளி, மத்திய பிரதேசத்தின் ஜிரி, பகுவார், ராஜஸ்தானின் கனோடா ஆகிய கிராமங்களின் மக்கள் சமய, சாதி வேறுபாடின்றி சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்று செய்தித் தளங்கள் தெரிவிக்கின்றன. உத்தர்கண்ட் மாநில அரசு, அங்குள்ள 13 மாவட்டங்களிலும் ஒவ்வொரு கிராமத்தைத் தேர்வு செய்து, ‘ஆதர்ஷ் சமஸ்கிருத கிராமம்’ என்று அறிவித்து மொழி மேம்பாட்டுக்கு சிறப்பு கவனம் செலுத்துகிறது. எண்ணிக்கை எவ்வளனானாலும், ஒரு பகுதி மக்கள் புழங்குகிறார்கள் என்கிறபோது எதுவும் செத்த மொழியாகிவிடாது. அதை வளர்ப்பதற்கான முயற்சிகளையும் குறை கூறுவதற்கில்லை.

ஆனால், நாடு முழுவதற்குமான தேசிய கல்விக்கொள்கையில், அனைத்து மொழிகளுக்கும் சம மரியாதையை உறுதிப்படுத்துவதற்கு மாறாக, சமஸ்கிருதத்திற்குச் சிறப்பு ஏற்பாடுகள், கல்விக் கூடங்களில் பயிற்சித் திட்டங்கள், நிதி ஒதுக்கீடுகள் என்று கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருக்கிறது. இதில் ஜனநாயகம், இந்தியாவின் சிறப்பியல்பான பன்முகப் பண்பாடு இரண்டுமே அவமதிக்கப்படவில்லையா?

ஆட்சி மாற்றத்தோடு சொல்லாட்சி மாற்றமும்

தமிழ்நாட்டில், குறிப்பாக 1967இல் மாநில ஆட்சியில் மாற்றம் ஏற்பட்ட பிறகு மேற்கொள்ளப்பட்ட, அலுவல் நடைமுறைகளில் தமிழ்ச்சொற்களைப் புழக்கத்திற்குக் கொண்டு வரும் முயற்சிகள் நல்ல பலனளித்துள்ளன. அக்ராசனர் என்று குறிப்பிடப்பட்டவர் தலைவர் என்று அழைக்கப்படுவதையும், அபேட்சகராகத் தேர்தலில் நிற்பவர் வேட்பாளரானதையும், தஸ்தாவேஜ் என்றிருந்தது ஆவணமாகியதையும், ஒன்றை ரத்து செய்தது விலக்கப்படுவதாகியதையும் பானைச் சோற்றுக்கான சில பருக்கைப் பதமாகச் சொல்லலாம்.

நீதிமன்றம் ஜாமீன் அனுமதி அளிப்பதை பிணை அனுமதி என்றும், வாபஸ் பெறப்படுவதை திரும்பப் பெறுதல் என்றும், தாலுக்காவை வட்டம் என்றும், கஜானாவைக் கருவூலம் என்றும், பிரதி அல்லது நகல் எடுப்பதை படியெடுப்பது என்றும், உத்தரவிடுவதை ஆணையிடுவது என்றும் அலுவல் நடைமுறைகளில் குறிப்பிடப்படுகின்றன. நடைமுறையில் இந்தச் சொற்கள் இன்னமும் வலம் வந்துகொண்டுதான் இருக்கின்றன என்பதை, மக்களின் பேச்சுகளில் மட்டுமல்லாமல் பத்திரிகைச் செய்திகளிலும் காணலாம். எந்தச் சொற்களின் புழக்கம் நிலைக்கும் என்பதை மக்களின் அன்றாடப் பழக்கம் தீரமானிக்கும்.

தமிழின் இன்னொரு சிறப்பான மரபு –  வாழ்க்கையோடு கலக்கிற பிற மொழிச்சொற்களைத் திசைச் சொற்களாக ஏற்றுக்கொள்வது. போர்த்துக் கீசியத்திடமிருந்து வந்த சன்னல், அலமாரி, ஆங்கிலத்திலிருந்து வந்து சற்றே உரு மாறிய பேனா, பாரசீகத்திலிருந்து வந்த மேஜை,  உருதுவிலிருந்து வந்த வக்கீல் என்று நிறையவே இருக்கின்றன.  ஜ, ஸ, ஷ ஆகிய உச்சரிப்புகளுக்கான எழுத்துகளையே கூட தமிழ் அரவணைத்துக்கொண்டதல்லவா? மேஜையை மேசையென்று எழுதும் அக்கறையும் வளர்ந்திருக்கிறது. அதே வேளையில், ரோசாவின் நறுமணம் மாறப்போவதில்லை என்றாலும் ரோஜாவாகத் தலையிலும் சட்டை மார்பிலும் சூடிக்கொள்ளத்தானே செய்கிறோம்?

இந்த ஜ, ஸ, ஷ எழுத்துகளைப் பற்றிப் பேசுகிறபோது, ஜாவேத் அக்தரின் கலந்துரையாடல் செய்தியில், ஒரு சொல்லாகவும் ஒலிக்கிற ஓர் எழுத்து பற்றி அவர் கூறிய தகவலும் இருப்பதைக் குறிப்பிட்டாக வேண்டும். “ஷா என்பது ஒரு பாரசீகச் சொல், அதை நீக்கிவிட முடியுமா?” –யாரையும் குறிப்பாக அடையாளப்படுத்தாமல் அவர் இப்படிக் கூறியபோது  அரங்கம் அதிர்ந்து சிரித்துக் கரவொலியோடு அங்கீகரித்தது. இதற்கு விளக்கம் வேண்டுமா என்ன?

அனுபவித்தால் அந்தப் பரவசம்!

தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் புழக்கத்திற்கு வந்துவிட்ட தமிழ்ச் சொற்கள் பற்றிப் பார்த்தோம். அதே வேளையில், மொழி அக்கறை கொண்ட குறிப்பிட்ட தலைமுறைகளோடு அது நிற்கிறதோ என்ற கேள்வியும் எழுகிறது. இன்றைய தலைமுறையினரிடையே ஆவணம் டாக்குமென்ட்டாகத்தானே இருக்கிறது? கடவுச் சொல் பாஸ்வேர்டாகத்தானே பயன்படுத்தப்படுகிறது? யாரையாவது செல்லமாகவோ கோபமாகவோ “செருப்பால அடிப்பேன்” என்று திட்டுகிறவர்கள், காலில் ஷூ அல்லது செப்பல்தானே அணிகிறார்கள்? இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில்  வீடியோ, ஆடியோ, ரீல்ஸ், மீம்ஸ், டீசர் என்றெல்லாம் நிறைய சொற்கள் சுற்றிவருகின்றன.

வயதும் வாழ்க்கையும் இதில் மாற்றங்களைக் கொண்டுவரக்கூடும்,  அல்லது இப்படியே தொடரக்கூடும். உலகமே ஓர் ஊரகமாக இணைகிறது. இனம், பண்பாடு, தொழில், கல்வி, பொருளாதாரம், அரசியல் என சமுதாய வாழ்வின் அனைத்துத் தளங்களிலும் கலப்பு நிகழ்கிறது. அந்தக் கலப்பு இயல்பான ஏற்பாக இருக்க வேண்டுமேயன்றி, வலுக்கட்டாய அடக்குமுறையாக ஏற்றப்படக் கூடாது. மொழியிலும் அப்படித்தான். அதே வேளையில்,  வேர்ச் சொற்களை நாடி கிளைச் சொற்களைப் பற்றிக்கொள்வது மொழி வெறியல்ல, அது ஒரு சுகமான அனுபவம். இயன்ற வரையில் இயல்பான தமிழ்ச்சொற்களையும், அவரவர் மொழியின் சொற்களையும் பேச்சில், எழுத்தில் கையாண்டு பார்த்தால் அந்தப் பரவசத்தை உணர முடியும்.

ஜாவேத் அக்தர் போன்றோரின் கருத்துகள் குறித்த ஆரோக்கியமான விவாதங்கள் அந்த அனுபவத்திற்கு இட்டுச்செல்லும். வரலாறு அதை வரவேற்கும்.

எழுதியவர்:  

அ.குமரேசன்

******************************************************************************

நூல் அறிமுகம் செய்வோம் ரூ.10000 பரிசு வெல்வோம்! போட்டி

2025 வெளியான புத்தகத்தை வாசிக்க அவகாசம் கேட்ட வாசகர்களின் வேண்டுகொளுக்கு இணங்க இப்போட்டியானது மார்ச் 31 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. வரும் உலகப் புத்தக தினத்தன்று (ஏப்ரல் 23, 2026) சென்னையில் நடைபெறும் விழாவில் பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும். தாங்கள் எழுதும் நூல் அறிமுக கட்டுரையை bookday24@gmail.com மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கவும். இதில் பங்கேற்க விரும்பும் தோழர்கள் அனைவரும் தங்கள் விருப்பத்தை https://forms.gle/XJodwyZc42PRv93Y8 இந்த கூகுள் பார்ம்-ல் நிரப்பி தெரிவித்தால் நன்றாக இருக்கும்.

கூகுள் பார்ம்: https://forms.gle/XJodwyZc42PRv93Y8

தோழமையுடன்
புக் டே இணையதளம்
பாரதி புத்தகாலயம்
9444567935

******************************************************************************

Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1

Click to Join WhatsApp Channel Link : https://whatsapp.com/channel/0029VanQNeO4NVioUBbXer3q

இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

Leave a Comment

Comments

No comments yet. Why don’t you start the discussion?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *