நகரத்தின் பிரதான சாலையில் இருந்த அந்தத் தியேட்டர் வாசலில் இளைஞர்கள் கூட்டம் அலைமோதியது. காரணம் பிரபல நடிகர் ஒருவரின் படம் அன்றுதான் ரிலீஸ் ஆகியிருந்தது.
கட்டுக்கடங்காத இளைஞர்க் கூட்டத்தைக் கட்டுப்படுத்தி எவ்வித விபத்துமின்றிப் போக்குவரத்தை சரி செய்து கொண்டிருந்தார் ஏட்டு மூர்த்தி. உடன் என்.எஸ்.எஸ். ஆர்வலர் போல விஜயும் அப்பணியில் ஈடுபட்டிருந்தான்.
“நூறு இளைஞர்களைக் கொடுங்கள். நாட்டையே முன்னேற்றிக் காட்டுகிறேன். என்று நாட்டை முன்னேற்ற நூறு இளைஞர்களைத் தான் கேட்டார் விவேகானந்தர்.
இளைய சமுதாயத்தின் பேராற்றலை எண்ணியே 2020 இல் இந்தியா வல்லரசாகும் என்றார் ஏ.பி.ஜே அப்துல் கலாம்.
அப்படிப்பட்ட இளைஞர் கூட்டம் ஆக்கபூர்வமாகச் செயல்பட வேண்டிய இளைஞர் சக்தி தியேட்டர் வாசலிலும், தேவையற்றப் பழக்கங்களிலும், ஏதேதோ போதைகளிலும், வேண்டாத வலைதளங்களிலும் வீணாகிப் போகிறதே” என்று வருந்தினார் மூர்த்தி.
“கவலைப்படாதீர்கள் அண்ணா! நல்ல மாற்றம் வரும் என்று நம்புவோம்!” என்று அவரைத் தேற்றினான் விஜய்.
“எங்கேயப்பா! வறுமையும் வயிற்றுப்பாடுமே பலபேருடையத் திறமையைப் பாழடித்துவிடுகிறது. போதாக்குறைக்கு பல இளைஞர்கள் பணம் படைத்தவர்களின் கைக்கூலிகளாகித் தொடங்குவதற்கு முன்னரேத் தம் வாழ்க்கையைத் தொலைத்து விடுகின்றனர்…” வேதனைப் பெருமூச்செறிந்தார் ஏட்டு மூர்த்தி.
ஆளரவமற்ற அந்த ஏரிக்கரை சாலையில் அடிக்கடி வழிப்பறி நடப்பதாகப் புகார்கள் வந்த வண்ணம் இருந்தன. பொருட்களை பறிகொடுத்தவர்கள் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருந்தது.
காவல்துறைக்கேச் சவால் விடும்படித் துல்லியமாகச் செயல்பட்டு நீண்ட நாட்களாகத் தப்பித்துக் கொண்டிருந்த வழிப்பறிக்காரர்கள் அப்போதுதான் பிடிபட்டிருந்தனர்.
ஆளரவமற்றச் சாலை வழியாகத் தனித்து வருபவரை மறித்து கத்திமுனையில் மிரட்டிப் பணமோ, நகையோ, பொருளோ, கைபேசியோ, இரு சக்கர வாகனமோ எனக் கிடைத்ததைப் பறித்துச் சென்றிருக்கின்றனர்.
பிடிபட்டிருந்த மூவரும் மாணவர்கள் என்பதுதான் கூடுதல் செய்தி.
மூவரில், ஒன்பதாம் வகுப்புப் படித்துக்கொண்டிருக்கும் விஜய்க்கு தந்தை இல்லை. மறுமணம் செய்து கொண்டத் தாயின் குடும்பத்திற்கு எவ்வாறாயினும் பணம் கொடுத்தால் தான் உண்ண உணவும் இருக்க இடமும் அவ்வீட்டில் கிடைக்கும் நிலை அவனுக்கு!.
பதினொன்றாம் வகுப்புப் படிக்கும் விநாயகத்தின் அம்மாவோ மனநிலை பாதிக்கப்பட்டவர். மூட்டைத் தூக்கும் தொழிலாளியான அவனது அப்பா வீட்டில் இருக்கும் நாட்களைவிட மது மயக்கத்தில் வீதியில் விழுந்து கிடந்திருக்கும் நாட்கள்தான் அதிகம்!.
பாட்டியின் அரவணைப்பில் இருக்கும் கல்லூரி மாணவன் ராகவனுக்குத் தாயும் இல்லை!. தந்தையும் இல்லை!.
குடும்பத்தினரின் அன்போ, அரவணைப்போ, அக்கறையோ, இன்றி மூன்று பேருமேக் கிட்டத்தட்டத் தனித்து விடப்பட்டவர்கள்.
ஆண்ட்ராய்டு போனுடனும், விதவிதமான இருசக்கர வாகனத்துடனும் உலாவந்துச் சிற்சில சிற்றின்பக் கேளிக்கைகளில் ஈடுபடும் சகமாணவர்கள் சிலரால் ஈர்க்கப்பட்டுத் தாங்களும் அவற்றை அனுபவிக்க ஆசைக்கொண்டு இத்தகையப் பாதகச் செயல்களில் ஈடுபட்டிருக்கிறார்கள்.
“வழக்குத் தொடுத்தால் ‘வழிப்பறிக் கொள்ளைக்காரர்கள்’ என்ற முத்திரைக் குத்தப்பட்டு விடுவார்கள். பின்பு அதுவே அவர்களது பயத்தையும் வெட்கத்தையும் புறந்தள்ளி, துணிகரச் செயலில் ஈடுபட அவர்களுக்குத் தூண்டுகோலாக அமைந்துவிடும். அவர்களது எதிர்காலமும் பாழாகிப் போய்விடும். ஆதலால் அவர்களைச் சற்று (கனிவோடும் நேயத்தோடும்) வேறு விதமாய் அணுகலாம் ஐயா!.” என்று ஆய்வாளரிடம் வேண்டிக் கேட்டுக்கொண்டார் முத்து.
ஆய்வாளரும் மூர்த்தியின் பாற்பட்ட நல்ல எண்ணத்தில் அம்மூவரையும் மூர்த்தியிடமே ஒப்படைத்தார்.
மூவரிடமும் நம்பிக்கையோடு அணுகினார் மூர்த்தி. அவர்களைத் தன் அருகிலேயே வைத்துக்கொண்டார். நல்லுள்ளம் கொண்ட சிலரின் உதவியோடு இவர்களால் நஷ்டப்பட்டோருக்கு இவர்களாலேயே நல்லது செய்ய வைத்தார். சின்னச்சின்ன தரமான நற்பணிகளைச் செய்யத் தூண்டினார். வாய்ப்புக் கிடைத்த போதெல்லாம் உழைப்பால் சிறப்புப்பெற்ற நல்லோர்கள் பலரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துக் கூறவும் தவறவில்லை அவர்.
ஆரம்பத்தில் சற்றே முரண்டுப் பிடித்த விநாயகம் கூட வெகுவிரைவில் மனம் மாறி அவர் வழிக்கு வந்தான்.
ஒருநாள் மூர்த்தி, விஜய், ராகவன், விநாயகம் மூவரிடத்திலும் தன் மதிப்பெண் பட்டியலையும், மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் தன் இடத்தையும் சுட்டிக்காட்டி, தான் மருத்துவம் படிக்க முடியாமல் போனதற்கான அப்போதையத் தன் குடும்பச்சூழலை அவர்களுக்கு எடுத்துரைத்தபோது மூவரும் சற்றேக் கலங்கித்தான் போனார்கள்.
சிறந்த பண்பாளர் மட்டுமல்ல மூர்த்தி, நல்ல படிப்பாளியும் கூட!. பன்னிரெண்டாம் வகுப்பில் உயரிய மதிப்பெண் பெற்று மருத்துவத் தரவரிசைப் பட்டியலில் முதன்மை மாணவர்களில் ஒருவராக வந்தவர்தான்!.
ஆனால் இவர் படிக்கச்சென்றால் கல்லூரி செலவுக்கு…? நோயினால் பீடிக்கப்பட்ட அம்மாவின் மருத்துவச் செலவிற்கு…? இரு சகோதரிகளைக் காப்பாற்றிக் கரை சேர்க்க…?
அவரைப் பொறுத்தவரை பன்னிரண்டாம் வகுப்புவரை வந்ததேப் பெரிய விஷயம்!. அதனால் உடனடியாக வேலைக்குச் செல்ல வேண்டியக் கட்டாயத்தில் அப்போதுக் கிடைத்த கான்ஸ்டபிள் வேலையில் தன்னைப் பொருத்திக்கொண்டார்
“எந்த நிலையிலும் தனக்கு எதிர்மறைச் சிந்தனை இருந்ததில்லை என்றும், மிகுந்த ஏற்றத்தாழ்வுகளுக்கு இடையில் மிதிபடும்போதும்… அநீதிகளுக்கு ஆட்படும்போதும்… சில நேரங்களில் என்மனசும் வலிக்கத்தான் செய்யுமென்றும். அப்போதெல்லாம் திருமூலரின்,
‘தானே தனக்குப் பகைவனும் நண்பனும்
தானே தனக்கு மறுமையும் இம்மையும்
தானே தான்செய்த வினைப்பயன் துய்ப்பானும்
தானே தனக்குத் தலைவனும் ஆமே!’
என்ற இந்தத் திருமந்திரப் பாடலைப் நினைத்து என்னை நான் சமாதானப் படுத்திக்கொள்வேன்” என்றும் எடுத்துரைத்தார்.
“பாரதம் ஈன்ற பொக்கிஷங்களாம் விவேகானந்தரையும் பாரதியையும் படியுங்கள்!” என்றார். “அவர்கள் இருவரையும் உணருங்கள்!” என்றார். “அவர்களை ஆழ்ந்து உணர உணர நமக்குள் ஒரு பேராற்றலும் கம்பீரமும் பிறக்கும்” என்றார்.
“அனைத்து உயிர்களையும் தம் உயிர்போல் நேசித்த இருவருமே இப்புவியில் முப்பத்து ஒண்பது ஆண்டுகளே வாழ்ந்தனர். இருவருமே வறுமையில் சிக்குண்டு வாழ்ந்தனர். அடுத்த வேளை உணவுக்கு வழியில்லையே என்று வருந்தியதில்லை. கையில் பைசா இல்லையே என்றுக் கவலைப் பட்டதில்லை. மாறாக அவர்களது மனோதிடத்தால் மானிட இனத்தின் ஏற்றத்தாழ்வுக் களையத் தனக்குள் அக்னிவளர்த்தனர். பாரதிக்குள் இருந்த அக்னி கவிதைப் பிழம்புகளாக வெடித்து…!
பின்னாளில் அவரதுக் கனவுகள் ஒவ்வொன்றாய் பலித்து…!! விவேகானந்தருக்குள் இருந்த அக்னி மானுடம் பெருக்கி…! ஆன்மீக வேறுபாடுகளைக் களையும் அற்புத அருமருந்தாகி…!! உலகத்திற்கே பயன் தரவில்லையா?
வறுமை இவர்களை என்ன செய்துவிட்டது? நூறு ஆண்டுகளைக் கடந்தும் நமக்குள் உலா வருகிறார்களே! எப்படி?.
இவர்கள் இருவரும் நமக்குள் உலவத் தொடங்கிய பின்பு சிற்றின்பச் சிந்தனைகளும், மனிதநேயமற்றச் செயல்களும் நம்மை நெருங்குமா என்ன?.
அவர்கள் அளவுக்கு நம்மால் தேசம் கடந்தும், காலம் கடந்தும் நிலைத்து நிற்க முடியாமல் போகலாம். ஆனால் நமது ஊருக்கு, நம்மைச் சுற்றி இருப்போருக்கு, நம்மைச் சார்ந்தோருக்கு நம்மால் ஏதேனும் நல்லது செய்ய முடிந்தால் அதுதானே நாம் இந்தப் பிறவி எடுத்ததன் பயன்!…”
கருணையும் அன்பும் பொங்க உற்ற தோழனாய்ப் பல நாட்கள் ஒன்றாக உண்டு உறங்கி மனதிற்குள் நல்ல எண்ணங்களை விதைத்த மூர்த்தியின் அன்பின் வலிமை, அவர்களை மெல்ல மெல்ல ஆக்கிரமிப்புச் செய்திருக்கவேண்டும்! புத்தம்புது மலர்போல் புதுப்பொலிவு பெற்றார்கள் மூவரும்!. மூர்த்தியை ஞானகுருவாகக் ஏற்றுக்கொண்டு சத்தியம் செய்ததைப் போல் நெஞ்சு நிமிர்த்தினார்கள்!.
ராகவன் நேரம் கிடைக்கும் போதெல்லாம் அருகில் உள்ளப் பள்ளிகளில் தானாக முன்வந்து மாணவர்களுக்கு நன்னெறிக் கதைகளைப் போதிக்கத் துவங்கினான்.
விநாயகம் வார இறுதி நாட்களில் மூர்த்தியிடம் ஆஜராகி அந்த வார நிகழ்வுகளைப் பகிர்ந்து கொள்வதோடு பண்பையும் படிப்பையும் மெருகேற்றிக் கொள்கிறான்.
விஜய்க்கோ மூர்த்தியே அனைத்துமானவர் ஆனார்.
நன்றிகளுடன்,
ப. சிவகாமி,
புதுச்சேரி.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.
மூர்த்தியைப் போன்ற சிலரால் தான் இந்த பூமி இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது. வாழ்த்துக்கள்.
வருங்காலத்தில் காவல்துறையினர் கைதிகளை மூர்த்தியின் அணுகுமுறையிலேயே அணுகுவதற்கு வாய்ப்பிருக்கிறது. அவ்வாறு நடைமுறைப்படுத்தினால் நாடு வளம் பெறும்.