அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின்(US auto workers)வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங்(Samsung workers in India) தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் - https://bookday.in/

அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்

தொடர் 2: நூறாண்டு தொழிற் சங்க உரிமை 
அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின் வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங் தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும்!!!!
எஸ். கண்ணன்

அமெரிக்காவிற்கு தமிழ்நாட்டு முதலமைச்சர், மு.க. ஸ்டாலின், பயணம் மேற்கொண்டு, தொழில் முதலீடுகளை ஈர்த்து திரும்பி உள்ளார். அவர் அமெரிக்காவில் இருக்கும் போதே சாம்சங் இந்தியா தொழிலாளர்கள் சுமார் 1500 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை துவக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. 6 வாரங்களாக வேலைநிறுத்தம் நீடிக்கிறது. ஒன்றிய பாஜக கட்சியினரும், மாநில திமுக ஐ.டி துறையினரும், சில ஊடக புலிகளும் சி.ஐ.டியு விற்கு எதிராக, அவதூறு பிரச்சாரம் செய்து வருகின்றனர். சி.ஐ.டி.யு சாம்சங் தொழிலாளர்களை தவறாக வழி நடத்துவதாகவும், ஆலைகளை மூட காரணமாக இருந்ததாகவும், அவதூறு  செய்கின்றனர். கடந்த ஆண்டு அமெரிக்காவில் நடந்த வேலை நிறுத்தம் உள்ளிட்ட விவரங்கள், முதலாளித்துவ ஆதரவு பிரச்சாரகர்களை எதிர் கொள்ள உதவும் என்ற வகையில், சில உண்மைகளை கவனிக்க வேண்டியுள்ளது.

அமெரிக்காவின் மிச்சிகன் மாநிலத்தில் உள்ள டெட்ராய்ட் நகரில் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெலாண்டிஸ் ஆகிய நிறுவனங்களைச் சார்ந்த ஒன்னரை லட்சம் தொழிலாளர்கள், 2023ம் ஆண்டு செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 30 வரை வேலைநிறுத்தம் செய்தனர். 85 சதமான தொழிலாளர்கள் முழுமையாக பங்கேற்று தங்கள் கோரிக்கைகளை வென்றெடுத்தனர். பிக் த்ரீ (BIG THREE) என்று மேலே குறிப்பிடப்பட்ட மூன்று நிறுவனங்களும் அழைக்கப்படுகின்றன.  யுனைடெட் ஆட்டோ ஒர்க்கர்ஸ் (UAW) என்ற கூட்டமைப்பு இந்த போராட்டத்தை வழி நடத்தியது. மூன்று பெரிய நிறுவனங்களிலும் ஒரு சேர இது போன்ற வேலைநிறுத்தம் நடந்தது இல்லை என்கின்றனர். 2008 பொருளாதார பெருமந்தத்தில் இருந்து தொழிலாளர்களுக்கு வேலை இழப்பு, ஆட்குறைப்பு, கதவடைப்பு போன்றவை அடிக்கடி நடந்து வருகிறது. ஆனாலும் மேற்குறிப்பிட்ட மூன்று நிறுவனங்களுக்கான லாபம் 250 பில்லியன் டாலர் (20,50,000 கோடி ரூபாய்) ஆக கடந்த ஆண்டில் மட்டும் உயர்ந்துள்ளது. ஆனால் தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு 4 சதம் மட்டுமே அறிவிக்கப் பட்டது. இதுவே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்திற்கு பிரதான காரணம். 

அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின்(US auto workers)வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங்(Samsung workers in India) தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் - https://bookday.in/

தொழிற் சங்க உரிமை கோரிக்கைகள் மற்றும் எதிர் வாதங்கள்? 

கடந்த 15 ஆண்டுகளாக, தொழிலாளர்களுக்கான ஊதியம் என்பது, அன்றாட வாழ்க்கைத் தேவைக்காக சிறு உயர்வுகள் வழங்கி சரிக்கட்டப்படுவது நிறுத்தப் பட வேண்டும். உண்மை ஊதியம் உயர வேண்டும். கடந்த கால பென்சன் திட்டம் அமலாக வேண்டும். வேலை நேரம் குறைக்கப் பட வேண்டும் ஆகியவை முக்கிய கோரிக்கைகள் ஆகும். இந்த கோரிக்கைகள் உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்கு பொருந்த கூடியது தான். 

டொயோட்டா, நிசான் உள்ளிட்ட நிறுவனங்கள், இந்தியா போன்ற அல்லது ஆசிய நாடுகளில் இருந்து, உழைப்பு சக்தியை மலிவான விலையில் பெறுவதால், அமெரிக்கா உள்ளிட்ட வளர்ந்த நாடுகளில் தொழிலாளர்களின் கூலியை கட்டுப்படுத்த முடிகிறது, என ஃபோர்டு, ஜெனரல் மோட்டார் மற்றும் ஸ்டெலாண்டிஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளர்கள் வாதிட்டனர். 

ஃபோர்டு நிறுவனம் அமெரிக்காவில் தொழிலாளருக்கான கூலியாக ஒரு மணி நேரத்தில் 69 டாலர் (5658 ரூபாய்), இதே போல் ஜெனரல் மோட்டார் மற்றும் ஸ்டெலாண்டிஸ் நிறுவனங்களும் வழங்குவதாக கூறுகின்றன. இந்த வாதத்தை  வேலை நிறுத்த போராட்டத்தை ஒருங்கிணைத்த, UAW சங்க நிர்வாகிகள் ஏற்கவில்லை. சங்க ஒருங்கிணைப்பாளர் ஷான் ஃபைன்,,” ஸ்டெலாண்டிஸ் நிறுவனம் 12.1 பில்லியன் டாலர் (99,220 கோடி ரூபாய்) லாபத்தை 2023ம் ஆண்டின் முதல் பாதியில் அடைந்துள்ளது. மூன்று நிறுவனங்களும் இணைந்து, 2023ன் பாதியில், 23 பில்லியன் டாலர் (1,88,000 கோடி ரூபாய்) லாபம் பெற்று இருப்பதாகவும் கூறுகின்றனர். ஸ்டெலாண்டிஸ் தனது சி.இ.ஒ விற்கு ஊதியமாக 25 மில்லியன் டாலர் (20.5 கோடி ரூபாய்) வழங்கப்படுகிறது. ஃபோர்டு நிறுவன சி.இ.ஓ 21 மில்லியன் டாலர் (17.22 கோடி ரூபாய்) ஜெனரல் மோட்டார் சி.இ.ஓ 29 மில்லியன் டாலர் (23.78 கோடி ரூபாய்) என ஊதியம் பெறுகின்றனர். இது கடந்த ஆண்டுகளுடன் ஒப்பிட்டால் 40 சதம் உயர்வு ஆகும்” என கூறுகிறார். மேற்குறிப்பிட்ட ”பிக் திரீ” என்ற நிறுவனங்களின் லாபம் 92 சதம் எகிறும், போது தொழிலாளர்களுக்கான ஊதிய உயர்வு, விலைவாசியை ஈடு செய்யும் வகையிலேயே உள்ளது, என்பது பெரும் துயரம் நிறைந்தது. என்கிறார். 

இந்த வேலைநிறுத்தம் என்ற யுத்தம், பெரும் பணக்காரர்களுக்கு எதிராக தொழிலாளி வர்க்கம் என்பதாகும். உடமை வர்க்கத்திற்கும், ஏழை வர்க்கத்திற்குமானதாகும். நூறு நூறு கோடி கொண்ட வர்க்கத்திற்கும், எதுவும் அற்ற வர்க்கத்திற்குமானதாகும், என பெர்னி சாண்டர்ஸ் கூறினார். இந்த கண்ணோட்டத்தில் தொழிற்சங்கமும், தொழிலாளர்களும், சமூக இயக்கங்களும் அண்மைக் காலத்தில் விவாதிப்பதில்லை. 

அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின்(US auto workers)வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங்(Samsung workers in India) தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் - https://bookday.in/

அமெரிக்காவில் கட்சிகள் இப்போராட்டத்தில் என்ன செய்தன?

அதிபர் பைடேன் போராட்ட களத்திற்கு சென்று வேலை நிறுத்தம் செய்யும் தொழிலாளர்களிடம் பேசி உள்ளார். கடந்த 26 செப்டம்பர் அன்று பைடேன் பேசும் போது, நாட்டை வால்ஸ்ட்ரீட் கட்டி அமைக்கவில்லை, நடுத்தர வர்க்கத்தினரே நாட்டினை கட்டமைக்கின்றனர். தொழிற்சங்கம் நடுத்தர வர்க்கத்தை உருவாக்குகிறது. ஆட்டோ நிறுவனங்களின் தொழிலாளர்களுக்கு 40 சதமான ஊதிய உயர்வு என்பது மிக அவசியமானது, என்பது உள்ளிட்ட கருத்துக்களை முன் வைத்துள்ளனர். அமெரிக்காவில், தொழிற்சங்க வரலாறு குறித்து பேசிக் கொள்வோர், அமெரிக்க வரலாற்றில், நடப்பில் உள்ள அதிபர் வேலை நிறுத்தம் நடக்கும் காலத்தில், தொழிலாளர்களை வேலைநிறுத்த களத்தில் சந்தித்தது,  வரலாற்றில் முதல் முறை எனக் கூறுகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு முன்னதாக, மீண்டும் குடியரசு கட்சியின் அதிபர் வேட்பாளராக களம் கண்டு பிரச்சாரம் செய்து வரும் டிரம்ப், போராட்டம் நடைபெறும் மிச்சிகன் மாநிலத்தில், தொழிற்சங்கத்தில் உறுப்பினரல்லாத அல்லாத ஆட்டோ தொழிலாளர்களிடம், கிளிண்டன் நகரில் இது குறித்து பேசியுள்ளார். கடந்த 2016ம் ஆண்டு, டிரம்ப் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட போது, மிச்சிகன் மாநிலத்தில் தொழிலாளர்களின் வாக்குகளில் கணிசமாக தனக்கு சாதகமாக மாற்றி கொண்டார். அது டிரம்பின் வெற்றிக்கு பெரிதும் உதவியது. அது அமெரிக்க ஊடகங்களில் அதியசயதக்க செய்தியாக வெளியானது. ஏனென்றால்,    எப்போதும் அமெரிக்க வரலாற்றில், ஆட்டோ தொழிலாளர்களின் வாக்குகள், ஜனநாயக கட்சிக்கு சாதகமாகவே இருக்கும். ஆனால் 2016ம் ஆண்டு டிரம்ப் அதில் பிளவை ஏற்படுத்தி, வெற்றி பெற்று இருந்தார். 

நீண்ட நெடுங்காலமாக ஆட்டோ தொழிலாளர்களின் ஊதியத்தில் உயர்வின்மை என்பதும், பல்வேறு பிரச்சனைகள் தீர்க்கபடாமைக்கு காரணம் டிரம்ப் பின்பற்றும் கொள்கை என, யுஏடபுள்யு தலைவர் குறிப்பிட்டுள்ளார். எனவே டிரம்ப் அழைத்தாலும் அவரை சந்திக்க போவதில்லை எனவும் கூறினார். மேலும் 2016 தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆன பின், ஜெனரல் மோட்டார் தொழிலாளர்கள் 2019ல் வேலை நிறுத்தம் செய்தனர். 2 மாத காலம் நடந்த வேலை நிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர தொழிலாளர் கோரிக்கைகளின் நியாயத்தை பேசிட, டிரம்ப் ஒரு போதும் முன் வரவில்லை. மேற்படி நிகழ்வுகளில் இருந்து, ஆளும் ஜனநாயக கட்சியை விடவும், எதிர் கட்சியாக உள்ள குடியரசு கட்சியின் பிரதிநிதி மிக அதிகமாக முதலாளித்துவ சுரண்டலை பின்பற்ற கூடியவர்களாக உள்ளனர் என்ற உண்மை வெளிப்படுகிறது. ஆளும் கட்சியின் அதிபர் நேரடியாக களத்தில் தொழிலாளர்களை சந்தித்து ஆதரவு அளித்து, ஒரு வாரம் கடந்த நிலையிலும், தொழிலாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப் படவில்லை. அதன்பின் பலநாள்கள் கழித்தே வேலைநிறுத்தம் வெற்றி பெற்றது. இவையெல்லாம் முதலாளித்துவ கொள்கையின் வெளிபாடு என்பதை அறிந்து கொள்ள முடியும்.

இருந்த போதிலும், 46 நாள்கள் வேலைநிறுத்தம், முடிவுக்கு வரும் போது, பிக் திரி என்ற மூன்று நிறுவனங்களும் ஒன்றன் பின் ஒன்றாக தொழிற்சங்கத்துடன் ஊதிய உயர்வு ஒப்பந்தம் மேற்கொண்ட அனுபவம் சாதாரன நிகழ்வல்ல. 

தமிழக முதல்வரின் கட்டுரை மற்றும் அணுகுமுறை:

மேற்படி வேலைநிறுத்தம் முடிவுக்கு வந்த ஓராண்டு முடியும் தருவாயில், தமிழக முதல்வர் அமெரிக்கா சென்று வந்துள்ளார். தமிழக முதல்வர், மு.க. ஸ்டாலின் தனது அமெரிக்க பயணம் குறித்து, ஆங்கில இந்து நாளேட்டில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அவருடைய பயணம் குறித்தும், முதலீடுகளை ஈர்ப்பது குறித்தும் விவரித்து இருந்தார். ஜனநாயக விழுமியங்களை முதலாளித்துவ நாடுகள் பின்பற்றும் விதம் குறித்தும், சீனா போன்ற கம்யூனிச சித்தாந்தம் குறித்த நாடுகளின் கொள்கை குறித்தும் கூட கட்டுரையில், விவாதித்து இருந்தார். சீனாவின் முதலீட்டில் ஜனநாயகம் இல்லை என்பது குறிப்பிடப் பட்டு இருந்தது.

அமெரிக்க ஆட்டோ தொழிலாளர்களின்(US auto workers)வேலை நிறுத்தமும், இந்தியாவில் சாம்சங்(Samsung workers in India) தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் - https://bookday.in/

தற்போது சாம்சங் இந்தியா தொழிலாளர் சங்கத்தின் வேலை நிறுத்தம் 37 நாள்களை கடந்துள்ள நிலையில், முதல்வரின் கட்டுரை, சாம்சங் தொழிலாளர்கள் மீது கடந்த அக்டோபர் 9ம் தேதி முதல் நடத்தப்படும், காவல் துறை அத்துமீறல்களுடன் முரண்படுகிறது. அமெரிக்காவின் ஜனநாயகத்தை வானளாவ புகழ்ந்த முதல்வர், அங்கு 46 நாள்கள் வேலைநிறுத்தம் செய்து தொழிலாளர்கள் பெற்ற வெற்றியை காணத் தயாரில்லை. சாம்சங் நிறுவனத்தை விடவும் செல்வாக்கிலும், சொத்து மதிப்பிலும் வலுவான நிறுவனங்கள் ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் ஸ்டெலாண்டிஸ் என்பதை முதல்வர் மறுக்க முடியாது. எழுதிய பேனாவின் மை உலர்வதற்குள் ஜனநாயகம் குறித்த முரண்பட்ட அணுகுமுறையை உருவாக்கியது, மூலதனம் ஆகும். ஏன் இந்த முரண்பாடு தொடர்ந்து விவாதிப்போம்.

நூறாண்டு தொழிற் சங்க உரிமை
கட்டுரையாளர் :
தீக்கதிர் - 20 கோடிக்கும் 51 ஆயிரத்திற்குமான வித்தியாசம் பாஜகவிற்கு தெரியாதா? - எஸ். கண்ணன்

 

எஸ். கண்ணன்
மாநில துணைப்பொதுச் செயலாளர் சி.ஐ.டி.யு

முந்தைய தொடரை வாசிக்க: நூறு ஆண்டுகளாக தொழிற்சங்க உரிமை? – எஸ். கண்ணன்


இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.

புக் டே இணையதளத்திற்கு தங்களது நூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள்சிறுகதை என அனைத்து  படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.



Show 1 Comment

1 Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *