அமெரிக்கத் தேர்தல் முடிவுகள்: அதிருப்தியின் விளைவா, மாற்றத்திற்கான விழைவா? அமெரிக்கத் தேர்தல் முறை எந்த அளவுக்கு அந்நாட்டு மக்களின் எண்ணத்தைப் பெருமளவுக்குப் பிரதிபலிக்கிறது?  தற்போதைய தேர்தல் முடிவுகளின் முக்கியத்துவம் என்ன? இது ஆட்சிக்கு எதிரான மனப்பான்மையா அல்லது மாற்றத்திற்கான வெளிப்பாடா? டிரம்ப் – ஜோ பைடன், குடியரசுக் கட்சி – ஜனநாயகக் கட்சி எவ்வாறு ஒப்பிட்டுப் பார்ப்பது? பைடன் அணுகுமுறைகள் எவ்வாறு இருக்கும்? ஜார்ஜ் ஃபிளாய்ட்  மகன் முன்பாக மண்டியிட்டு மன்னிப்புக் கேட்டிருக்கிறாரே? கமலா ஹாரிஸ் தொடர்பாக  தமிழகத்தில் கிளப்பப்பட்ட அலை குறித்து?  அமெரிக்கத் தேர்தல் உலகச் சந்தையிலும் உலக அரசியலிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்தியாவுக்கு எத்தகைய பலனைத் தரும்?  உலகெங்கும் ஜனநாயக, மதச்சார்பற்ற, மனிதஉரிமை இயக்கங்களுக்கு எப்படிப்பட்ட பொறுப்பு ஏற்பட்டிருக்கிறது?

இந்தக் கேள்விகளுடன் அணுகியபோது ஒரு பெருந்தயாரிப்போடு தகவல்களையும் தனது கருத்துகளையும் பகிர்ந்துகொண்டார் பத்திரிகையாளரும், ஊடகவிவாதங்களில் கூர்மையான வாதங்களை முன்வைப்பவருமான  ‘ஃபிரண்ட்லைன் ஆசிரியர் ஆர்.விஜயசங்கர்.

நேர்காணல்: அ.குமரேசன்

மக்களால் மக்களுக்காகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசு என்ற ஜனநாயக அமைப்பில் மக்களின் அரசியல் தீர்மானத்தை அறிவதில் தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. நாட்டின் அரசாங்கத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதில் மக்களே நேரடியாகப் பங்கேற்கிற பாப்புலர் வோட், இந்தியாவில் உள்ளது போல் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தேர்வு செய்வது என்று இரண்டு வகைகள் இருக்கின்றன. இந்தியத் தேர்தல் முறை உண்மையாகவே பெரும்பகுதி மக்களின் எண்ணங்களைப் பிரதிபலிக்கிறதா என்பது ஒருபுறமிருக்க, அமெரிக்கத் தேர்தல் முறை பலரும் நினைப்பது போல உண்மையில் மக்களின் எண்ணத்தைப் பிரதிபலிப்பதாக இல்லை.

அமெரிக்காவின் 52 மாநிலங்களில் மக்கள் நேரடியாக வாக்களிக்கிறார்கள் என்றாலும், அது இறுதியானதல்ல. ஒவ்வொரு மாநிலத்திலும் எலெக்டோரல் காலேஜ் எனப்படும் பிரதிநிதிகள் அமைப்பு இருக்கிறது. நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய அவர்களுடைய எண்ணிக்கை மாநிலத்திற்கு மாநிலம் மக்கள்தொகைக்கு ஏற்ப மாறுபடுகிறது. அவர்களிடையேயும் தேர்தல் நடத்தப்பட்டு, அதன் பெரும்பான்மையே இறுதி முடிவாக இருக்கிறது. ஆகவே, பல நேரங்களில் மக்களின் பெரும்பான்மை முடிவு ஒன்றாக இருக்க, இந்த எலெக்டோரல் காலேஜ் பிரதிநிதிகளின் முடிவு வேறாக இருந்திருக்கிறது, அது, மக்களின் விருப்பத்திற்கு மாறாக, அவர்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் பதவிக்கு வருவதற்கு வழிசெய்திருக்கிறது. அத்துடன், மக்களிடையேயான தேர்தலில், ஒரு மாநிலத்தில் 50.1 சதவீதம் வாக்குகளை ஒரு கட்சி பெறுகிறது என்றால் கூட அந்த மாநிலத்தின் எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் அத்தனையும் அந்தக் கட்சிக்கே போய்விடும்! உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்தில் வேறு வேறு கட்சிகளைச் சேர்ந்த 55 பிரதிநிதிகள் இருக்கிறார்கள் என்றால், அந்த 55 வாக்குகளும், அந்த 50.1 சதவீத வாக்குகளைப் பெறுகிற கட்சிக்குப் போய்விடும்! இரண்டே இரண்டு மாநிலங்களில் மட்டுமே எலெக்டோரல் காலேஜ் வாக்குகள் அப்படியே எடுத்துக்கொள்ளப்படும்.

ஆகவே, போட்டியிடுகிற கட்சிகளும் வேட்பாளர்களும், எந்த மாநிலங்களில் அதிகப் பிரதிநிதிகள் இருக்கிறார்களோ அந்த மாநிலங்களில்தான் அதிக வாக்குகளைப் பெற முயல்வார்கள். டிரம்ப் போன தேர்தலில் வெற்றி பெற்றது இந்த முறையில்தான். ஹிலாரி கிளின்டனை விட 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்ற அவர், இந்த ஏற்பாட்டினால் அதிபராக முடிந்தது. அதற்கு முன்பாகவும் இதேபோல் மக்கள் முடிவுக்கு மாறாக நடந்திருக்கிறது.  இதை எப்படி மக்களின் எண்ணத்தை முழுமையாகப் பிரதிபலிக்கிற முறையாகச் சொல்ல முடியும்?

மக்கள் பங்கேற்பு…

அமெரிக்கத் தேர்தலில் மக்கள் பெருமளவுக்குப் பங்கேற்பதாகவும் சொல்லிவிட முடியாது. இந்தத் தேர்தலில் கூட 66 சதவீதம் பேர்தான் வாக்குப் பதிவு செய்திருக்கிறார்கள். கடந்த 100 ஆண்டுகளில் இவ்வளவு பேர் வாக்களித்த தேர்தல் இதுதான் என்கிறார்கள். கொரோனா பிரச்சினையால் பலர் தபால் ஓட்டுதான் பதிவு செய்தார்கள், அதனால்தான் வழக்கமாக 55 சதவீத அளவுக்கு மட்டுமே பதிவாகிற வாக்குகள் இந்த முறை 66 சதவீதம் அளவுக்குப் போயிருக்கிறது. பைடனின் ஜனநாயகக் கட்சியினர் தபால் ஓட்டுகளைத் திரட்டுவதில் கவனம் செலுத்தினார்கள். 36 சதவீதம் பேர் வாக்களித்த தேர்தல்கள் முன்பு அங்கே நடந்திருக்கிறது. மக்கள் நல அரசு என்பதை ஒழித்துக்கட்டி, சுதந்திரச் சந்தை என்று தனியார் துறையை வளர்த்துவிடும் பொருளாதாரக் கொள்கையைக் கொண்டுவந்தவரான ரொனால்டு ரீகன் அதிபரானாரே, 1980ல் நடந்த அந்தத் தேர்தலில் மொத்தம் வாக்களித்த வாக்காளர்கள் வெறும் 28 சதவீதம்தான்.

வெளியே தெரியாத ஒரு விசயம், அங்கே பல பேருக்கு வாக்குரிமையே இல்லை! பல்வேறு சூழல்களில் வாக்குரிமை மறுக்கப்படுகிற மக்கள் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். 1776ல் சுதந்திர அமெரிக்கா உருவான பிறகு, 134 ஆண்டுகளுக்குப் பிறகுதான் பெண்களுக்கு வாக்குரிமை அளிக்கப்பட்டது. கறுப்பின மக்களுக்கு 1870ல்தான் வாக்குரிமை உறுதியானது. பல பூர்வகுடி மக்களுக்கு 1960களில்தான் வாக்குரிமை கிடைக்கிறது. இப்போதும் கூட, குறிப்பிட்ட சில பிரிவுகளில் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டோருக்கு வாக்குரிமை மறுக்கப்படுகிறது. வாக்குப் பதிவுக்கான வசதிகள் செய்யப்படாத வகையில் வாக்குரிமை மறுக்கப்படுகிறவர்கள் உண்டு.

எலெக்டோரல் காலேஜ் முறையை ஏன் ஏற்படுத்தினார்கள் என்றால், 1787ல் அரசமைப்பு சாசனம் கொண்டுவரப்பட்டபோது, இன்றைய தகவல் தொடர்பு ஏற்பாடுகள் இல்லாத காலக்கட்டத்தில், ஒரு புதிய, பெரிய நாடு என்பதால் குடிமக்கள் மட்டுமே நேரடியாகத் தேர்ந்தெடுக்கிற முறை சரியாக வராது, ஆகவே பிரதிநிதிகள் முடிவு செய்கிற முறையும் கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டது. சில சிறிய மாநிலங்களில், பொதுவான வாக்குப்பதிவோடு நம்முடைய பாப்புலர் வோட் இணைவதால் நம்முடைய குரல் ஒலிக்காமல் போய்விடும், ஆகவே இப்படியொரு பிரதிநிதி வாக்கு முறை தேவை என்று கருதியிருக்கிறார்கள். அடிமைகளாகக் கொண்டுவரப்பட்டு அமெரிக்கக் குடிமக்களாகிவிட்ட கறுப்பினத்தவர்களுக்குப் பிரதிநிதித்துவம் கிடைப்பதற்காகவும் எலெக்ட்டோரல் காலேஜ் முறை கொண்டுவரப்பட்டது.தேசிய ஆணையம் கிடையாது!

இன்னொரு முக்கியமான, பலருக்கும் தெரியாத விசயம், இங்குள்ள தேர்தல் ஆணையம் போல, அமெரிக்காவில் தேசிய அளவிலான ஒரு மையப்படுத்தப்பட்ட தேர்தல் எந்திரம் கிடையாது! அந்தந்த மாநில அமைப்புகள்தான் உண்டு, அந்த அமைப்புகள் முடிவுகளை அறிவிக்கிற அடிப்படையில்தான் தேசிய அளவிலான முடிவுகள் வரும். ஆகவே, தோற்றுப் போகிறவர்கள், குறிப்பிட்ட மாநிலத்தின் முடிவுகள் ஏற்க மறுப்பது, மறு எண்ணிக்கை கோருவது, வழக்குத் தொடுப்பது என்றெல்லாம் நடக்கும். தபால் வாக்குகளை எண்ணக்கூடாது என்று டிரம்ப் பிரச்சனை செய்ததைப் பார்த்தோமே…

மற்றொரு முக்கியமான பிரச்சினை, பல கட்சிகள் இருக்கின்றன, தேர்தலில் பங்கேற்கின்றன என்றாலும், நடைமுறையில் ஜனநாயகக் கட்சியும் குடியரசுக் கட்சியும் மட்டுமே அதிகாரத்திற்கு வர முடியும். இந்த இரண்டு கட்சி முறையில், தேர்தலின்போது, எந்தக் கட்சி வந்தால் குறைவான தீங்கு என்று பார்த்து முடிவு செய்ய வேண்டியவர்களாகவே அமெரிக்க மக்கள் இருக்கிறார்கள். இதன் காரணமாகவே நிறையப்பேர் ஒரு வெறுப்போடு தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள். இந்தியாவில் 65 சதவீதம் முதல் 72 சதவீதம் வரையில் கூட வாக்குப்பதிவு நடப்பதைப் பார்க்கிறோம். இங்கே வஞ்சிக்கப்படுகிறவர்கள்தான் திரும்பத்திரும்ப வாக்களிக்கிறார்கள், ஜனநாயகப் பங்களிப்பைச் செய்கிறார்கள். அமெரிக்காவில் வஞ்சிக்கப்படுகிறவர்கள் தேர்தலைப் புறக்கணிக்கிறார்கள்.

வசதிபடைத்தவர்களுக்கும் சலுகைகளை அனுபவிப்போருக்குமான தேர்தல் முறையாகவே இருக்கிறது என்று அமெரிக்க ஜனநாயகம் பற்றி ஆராய்ந்த பலரும் சொல்லியிருக்கிறார்கள். பெரும் வசதிக்காரர்களுக்கு வரிக்குறைப்பு அளிப்பது ரீகன் ஆட்சியில் ஆரம்பித்தது இப்போதும் தொடர்கிறது. சோசலிசவாதிகளோ, உழைக்கும் வர்க்கக் கட்சிகளோ தேர்தலில் பங்கேற்கும் சுதந்திரம் இருக்கிறது என்றாலும், அவர்களால் இந்த இரண்டு கட்சிகளை மீறி செல்வாக்குப் பெற முடிவதில்லை. அதன் பின்னணியில், 1960களில் அங்கே குடிமைச் சமூக ஏற்பாடுகள் இல்லாமல் ஆக்கப்பட்டது உள்ளிட்டவை இருப்பதை ஆய்வாளர்கள் தெரிவிக்கிறார்கள். ஐந்தில் மூன்று பகுதி மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதாக இந்த சிஸ்டம் இல்லை என்றும் ஒரு ஆய்வாளர் கூறுகிறார். மேலே இருக்கும் இரண்டு பகுதியினரின் விருப்பங்கள்தான் நிறைவேறுகின்றன. இரண்டு பகுதியினர் என்பதே கூட மிகையான கணிப்புதான் என்பது என் கருத்து. கல்வி, பொதுசுகாதாரம், சமூகப் பாதுகாப்பு ஆகியற்றுக்கான நிதி ஒதுக்கீடுகள் வெட்டப்பட்டது, சமூகப் பணிகளில் ஈடுபட்ட சர்ச் போன்ற அமைப்புகளுக்கான நிதியுதவி விலக்கப்பட்டது போன்ற நடவடிக்கைகளால் ஏற்றத்தாழ்வுகள் அங்கே மிக மோசமான அளவுக்குப் போயிருக்கின்றன.

கருத்துக்கணிப்பில் மக்கள் விருப்பம்

தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும் என்ற கருத்துக் கணிப்புதான் நமது நாட்டில் நடத்தப்படுகிறது. அமெரிக்காவில் எல்லாப் பிரச்சினைகளுக்கும் மக்களிடையே கருத்துக் கணிப்பு நடத்தப்படும். அப்படி நடத்தப்பட்ட ஒரு கணிப்பில், பாதிக்கும் மேற்பட்ட மக்கள் இந்த இரண்டு கட்சிகளையும் கலைத்துவிட வேண்டும் என்று கருத்துத் தெரிவித்திருக்கிறார்கள்.

பொதுவாக, ஜனநாயகக் கட்சியில் இடதுசாரி சார்புள்ளவர்கள் ஓரளவுக்கு இருக்கிறார்கள். அதாவது வலதுசாரிக்கு உள்ளேயே இருக்கக்கூடிய இடது சார்பாளர்கள். சோசலிசம் பேசுகிற பெர்னி சாண்டர்ஸ் போன்றவர்கள் இப்படி வந்தவர்கள்தான்.  1930களில், வசதிக்காரர்களை மட்டுமே பாதுகாத்து வந்த உலக முதலாளித்துவம் மிகப்பெரிய பொருளாதார வீழ்ச்சியைச் சந்தித்தபோது, தொழிலாளர்களுக்கும் பின்தங்கிய நிலையில் உள்ள மக்களுக்கும் பயனளிக்கிற சில நடவடிக்கைகள் தேவை என்ற முடிவுக்கு வருகிறார்கள். முதலாளித்துவத்துவ அமைப்புக்குள்ளேயே கீய்ன்ஸ் போன்ற பொருளாதார வல்லுநர்கள் வருகிறார்கள். எளிமையாகச் சொல்வதானால், குடியரசுக் கட்சியை விட ஜனநாயகக் கட்சி கொஞ்சம் தெளியவைத்து அடிக்கும் – அவ்வளவுதான்!

முதலாளித்துத்துக்கும் ஜனநாயகத்துக்குமே ஒத்துப்போக முடியாத பெருத்த முரண்பாடு இருக்கிறது. அதில் அரசியல் ஜனநாயகம் இருக்கிறது, ஆனால் பொருளாதார ஜனநாயகம் இல்லை. பொருளாதார ஜனநாயகம் இல்லாத அரசியல் ஜனநாயகம் எப்போதும் குறைபாடு உள்ளதாகத்தான் இருக்கும். இதை உணர்ந்த முதலாளியவாதிகளில் ஒரு பகுதியினர், இப்படியே போய்க்கொண்டிருக்க முடியாது, வேலை வாய்ப்புகளை உருவாக்குவது அவசியம் என்ற வலியுறுத்தத் தொடங்குகிறார்கள். அந்த வேகத்தில் வந்ததுதான் ஜனநாயகக் கட்சி. சமூக நலத்திட்டங்களுக்கான செலவினங்களை வெட்டிச் சுருக்குவது தொடங்கிய நிலையில், ஆண்டுக்கு 30,000 டாலருக்குக் குறைவாக வருவாய் உள்ளவர்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவளிக்கிறவர்களாகிறார்கள்.

வேறு வலுவான மாற்று சக்தி வளராத நிலையில் இந்த இரண்டு கட்சிகளும்தான் செல்வாக்கோடு இருக்க முடியும் என்ற நிலைமை அங்கே ஏற்பட்டுவிட்டது. அமெரிக்காவில் புரட்சியே நடந்துவிடும் என்று எதிர்பார்க்கக்கூடிய அளவுக்கு தொழிலாளி வர்க்க, ஜனநாயக,சமூக உரிமை இயக்கங்கள் வலுப்பெற்ற காட்சியும் அமெரிக்காவில் 1920களில் உருவானது. இப்படியான பின்னணியில்தான், கல்வி, சுகாதாரம், சமூகப் பாதுகாப்பு போன்றவற்றை மக்களுக்குக் கொடுத்தாக வேண்டும் என்ற அணுகுமுறை வகுக்கப்பட்டது.சொத்துக்குப் பாதுகாப்பு

சொத்து வைத்திருப்பவர்களின் உரிமையை அரசு பாதுகாக்க வேண்டும் என்பதுதான் அமெரிக்க அரசின் பொருளாதாரக் கொள்கையினுடைய சாராம்சம். மேலிருப்பவர்களின் சொத்துடைமையைப் பாதுகாப்பது என்கிற உள்நாட்டுக்கொள்கையிலிருந்துதான், மற்ற நாடுகளின் இதே போன்ற கொள்கையைப் பாதுகாப்பது என்கிற வெளியுறவுக் கொள்கையும் வருகிறது. அதற்கு ஆபத்து யாரிடமிருந்து வரும் என்றால், இந்த அடித்தட்டு மக்களைக் கொண்ட பெரும்பான்மையிடமிருந்துதான் வரும். ஆகவே அந்தப் பெரும்பான்மை வெற்றிபெற்றுவிடக்கூடாது, “பெரும்பான்மை மக்களின் கொடுங்கோன்மை” வந்துவிடக்கூடாது என்பதில் அமெரிக்க அரசு அமைப்பு கவனமாக இருக்கிறது. சமுதாயத்தில் அதிருப்தி மேலோங்கி இருக்கிறபோது, இடதுசாரி, ஜனநாயக சக்திகள் வலுவின்றி இருக்கிற நிலையில், வலதுசாரிகள், தீவிர வலதுசாரிகள்தான் அதிகாரத்தைக் கைப்பற்றுகிறார்கள் என்பதைப் பார்க்கிறோம். இந்தியாவிலும், உலகம் முழுவதும் இப்படிப்பட்ட நிலைமைதான். சென்ற முறை டிரம்ப் அப்படித்தான் மிக அதிகமான வாக்குகளைப் பெற்று பதவிக்கு வர முடிந்தது. மக்களிடையே செல்வாக்குப் பெற்ற வலதுசாரித் தலைவர்கள்தான் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதற்கு ஹிட்லர் ஒரு எடுத்துக்காட்டு.

டிரம்ப் வெற்றிபெற்றதில், நான் அமெரிக்காவைப் பாதுகாப்பேன் என்று பேசியதன் மூலம் ஏற்படுத்திய மனநிலையும் பங்களித்திருக்கிறது. வலதுசாரிகள் எப்போதுமே இந்த வழியைப் பயன்படுத்தக்கூடியவர்கள்தான். எப்போதுமே வலதுசாரிகள் தங்களின் வெற்றிக்காக சில எதிரிகளைச் சித்தரித்து முன்னால் நிறுத்துவார்கள். அமெரிக்காவைப் பாதுகாப்பது என்பதில் அவர் சீனாவை ஒரு எதிரியாகக் காட்டினார். இனச் சிறுபான்மையினராகிய கறுப்பின மக்களையும் எதிரியாகக் கருதியவர்தான் அவர்.

2017ல் கொண்டுவந்த ஒரு சட்டத்தின் படி, வரி செலுத்துவோருக்கு மேலும் பல சலுகைகளை அளித்தார். இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் வேலையிழப்பு உள்ளிட்ட பாதிப்புகளுக்கு உள்ளான அடித்தட்டு மக்களிடம், வெளியேயிருந்து ஆட்கள் வருவதுதான் உங்களுடைய வேலைவாய்ப்பு சுருங்கியதற்குக் காரணம் என்றார். குடியேறி வருகிறவர்களை இப்படி எதிரியாகக் காட்டிய அவர், குறிப்பாக முஸ்லிம்களை அவ்வாறு சித்தரித்தார். ஏற்கெனவே கட்டப்பட்டிருக்கிற இஸ்லாமோபியா அச்சத்தைப் பெரிதாக்கினார். அமெரிக்காவே குடியேறிகளின் நாடுதான். ஆனால் டிரம்ப் இப்படிக் குடியேறி வருகிறவர்களுக்கு எதிரான உணர்வுகளைக் கிளறிவிட்டார். பெண்களுக்கு எதிராகவும பேசியவர் அவர். குடியரசுக் கட்சியே கருக்கலைப்பு போன்ற பெண்களின் உரிமைகளுக்கு எதிரான கட்சிதான். கருத்துகளையும்

பிளவுவாதத்திற்கு எதிராக

இதிலே, மக்களுக்குச் சொன்னபடி நடந்துகொள்வதில் ஜனநாயகக் கட்சி கூடுதலாக அக்கறை காட்டுகிறது. அந்த எதிர்பார்ப்புடனும் அமெரிக்க மக்கள் வாக்களித்திருக்கிறார்கள். பெர்னீ சாண்டர்ஸ் முன்வைத்தது போன்ற முற்போக்கான திட்டங்களை முன்வைத்தவர் அல்ல ஜோ பைடன். ஆனாலும் வேலையை உறுதிப்படுத்துவது, சுகாதாரப் பாதுகாப்பு போன்ற வாக்குறுதிகளை அளித்திருக்கிறார். பொருளாதாரக் கொள்கை ஒருபுறமிருக்க டிரம்ப் அளவுக்கு பிளவுவாத அரசியல் செய்தவர்கள், வேறு யாரும் கிடையாது எனலாம். அந்தப் பிரிவினைக்கும், அதிகரித்து வருகிற சமத்துவமின்மைக்கும் எதிரான ஓட்டாக வந்ததுதான் அவரைத் தோற்கடித்து பைடனை வெற்றிபெறச் செய்திருக்கிற இந்தத் தேர்தல் முடிவு.

இது ஆட்சிக்கு எதிரான மனநிலையிலிருந்து வந்த ஓட்டு அல்ல, ஒரு மாற்றத்திற்கான ஓட்டுதான் என்றே சொல்லலாம். சென்ற தேர்தலில் 30 லட்சம் வாக்குகள் குறைவாகப் பெற்றும் எலெக்டோரல் காலேஜ் ஓட்டுகளால் ஆட்சிக்கு வரமுடிந்தது, அதை எதிர்த்து பெரிய போராட்டங்கள் நடந்தன. அது போல இந்த முறையும் வந்துவிடக்கூடாது என்று அமெரிக்க மக்கள் தீர்மானகரமாக முடிவெடுத்துச் செயல்பட்டிருக்கிறார்கள். மக்களின் முடிவை ஒருங்குதிரட்ட “போய் வாக்களியுங்கள்” என்ற முழக்கத்தையே ஜனநாயகக் கட்சி எழுப்பியது, தபால் ஓட்டுகளை உறுதிப்படுத்தியது. மாற்றத்திற்கான ஓட்டு என்பதோடு நம்பிக்கைக்கான ஓட்டும் கூட. ஆனாலும் இது அந்நாட்டு மக்களுக்கு முழுமையான தீர்வாகிவிடும் என்று சொல்வதற்கில்லை.

ஆனாலும் பைடன் அணுகுமுறைகளில் மாறுபாடுகள் இருக்கும். டிரம்ப் கொள்கைகளுக்கு எதிராகப் பேசியதற்கு விசுவாசமாகச் செயல்பட்டாக வேண்டிய கட்டாயமும் இருக்கிறது. உதாரணமாக, ஜார்ஜ் ஃபிளாய்ட் கொல்லப்பட்டதை எதிர்த்து “கறுப்பர் உயிர்கள் முக்கியம்” என்ற இயக்கம் நடந்தபோது, மத்திய படையை அனுப்பினார் டிரம்ப். அதை பைடன் கண்டித்ததோடு, ஃபிளாய்ட் மகன் உட்பட கறுப்பின மக்களிடம் மன்னிப்புக் கோரியுள்ளார். கறுப்பின மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவார் என்ற நம்பிக்கை ஏற்பட்டிருக்கிறது. ஜனநாயக் கட்சியிலேயே இருக்கிற இடதுசாரிகளில் எட்டு பேர் தேர்தலில் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதுவும் அந்த நம்பிக்கையை வலுப்படுத்தியிருக்கிறது. அமெரிக்கத் தேர்தலைக் கண்காணித்து வந்தவர்கள், அமைதி, நீதி, ஆரோக்கியமான பூமி என்ற மக்களின் விருப்பமே ஒரு தீயாகப் பற்றியிருக்கிறது என்கிறார்கள். அந்தத் தீ பைடனை, அவருடைய எல்லாக் கொள்கைகளிலும் கட்டுப்படுத்தும் என்கிறார்கள்.கமலா ஹாரிஸ் யாரெனில்

இதனோடு இணைத்துதான் கமலா ஹாரிஸ் வெற்றியையும் பார்க்க வேண்டும். அவர் அங்கே முன்னிலைக்கு வந்த உடனேயே, அவருடைய பூர்வீகம் தெரிந்ததும் இங்கே அவர் நம்ம ஆள் என்ற கோணத்தில் வரவேற்கவும் கொண்டாடவும் ஆரம்பித்தார்கள். ஆனால் அவர் தன்னை ஆப்பிரிக்க அமெரிக்கராகத்தான் முன்னிறுத்திக்கொண்டாரே தவிர, பிராமணராக அல்ல. அதுவும் மேலே வந்தபோதுதான் தனது உறவினர்களை விளித்துப் பேசினார், அதிலே கொண்டாடுவதற்கு ஒன்றுமில்லை. பைடன், கமலா இருவருமே போர் மோகம் கொண்டவர்கள்தான். பொதுவாக அமெரிக்க இந்தியர்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவானவர்கள்தான். அந்த ஆதரவு இவருக்கும் கிடைத்திருக்கிறது. இங்கே ஒரு பகுதியினர் அவரைக் கொண்டாடியபோது, சங் அமைப்பினர், அவர் காஷ்மீர் பிரச்சினையில் இந்திய அரசின் நடவடிக்கைக்கு எதிரானவர், அமெரிக்க அதில் தலையிட வேண்டும் என்று கூறியவர், ஆகவே கொண்டாடாதீர்கள் என்று வேண்டுகோள் விடுத்ததையும் நினைவில் கொள்ள வேண்டும். கமலாவுக்கு வாக்களிக்காதீர்கள் என்று கூட அமெரிக்க இந்தியர்களிடையே இவர்கள் தரப்பிலிருந்து பிரச்சாரம் நடந்தது.

மொத்தத்தில் அமெரிக்கத் தேர்தல் முடிவுகள் உலகச் சந்தையிலும் அரசியலிலும் எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி இயல்பாக எழுகிறது. உலகமயமாக்கலைத் தீவிரமாகச் செயல்படுத்தியதன் விளைவு எங்கே கொண்டுவந்துவிட்டிருக்கிறது என்றால், சீனாவின் பொருளாதாரத்தில் அடி விழுந்தால் அமெரிக்காவின் பொருளாதாரத்திலும் அடி விழும். ஆனால், மக்கள் நலனை அடிப்படையாகக் கொண்டு சீன அரசு ‘பெல்ட் அன் ரோடு’ என்பது உள்ளிட்ட மூன்று வகையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட திட்டங்கள் எதுவும் அமெரிக்காவில் இல்லை. அந்த பெல்ட் அன் ரோடு திட்டத்தில், அமெரிக்காவின் கூட்டாளிகள் உட்படப் பல நாடுகள், தங்களுக்குப் பலனிருப்பதால், இணைந்துகொண்டுவிட்டன. இந்த மூன்று திட்டங்களையுமே கடுமையாகத் தாக்கியவர் டிரம்ப். அவர் அப்படித் தாக்கியதைக் கூட்டாளி  நாடுகள் பிரச்சினையாகவே பார்த்தன.

ஆகவே பைடன் நேரடியான மோதல் போக்கைக் கைவிடுவார் என்றுதான் எதிர்பார்க்கப்படுகிறது. அதேநேரத்தில் சீனாவைத் தாக்க வேண்டும், சுற்றிவளைத்துக்கொள்ள வேண்டும் என்ற கொள்கையை ஆரம்பித்தவர் ஜனநாயகக் கட்சியின் ஒபாமா என்பதையும் மறந்துவிடக்கூடாது. அந்தக் கொள்கையில் இந்தியா, ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா போன்ற சில நாடுகள் இணைந்துகொண்டன. இந்தியா அதில் கொஞ்சம் ஆழமாகவே நுழைந்தது, ஆனால் வணிக அடிப்படையில் ஆஸ்திரேலியா, ஜப்பான், தென்கொரியா போன்ற நாடுகள், தங்களுடைய பொருளாதாரத்திற்குப் பாதிப்பு ஏற்படும் என்பதால் டிரம்ப் கொள்கை குறித்துக் கோபமாகவே இருக்கின்றன. ஆகவே பைடன் பிராக்டிகலாக, நிதானமான அணுகுமுறையைக் கடைப்பிடிப்பார் என்று எதிர்பார்க்கிறார்கள். இப்படியான சந்தை நிலவரம் சார்ந்துதான் அரசியல்ரீதியான முடிவுகளும் எடுக்கப்படும்.

வட அட்லாண்டிக் உடன்பாட்டு அமைப்பு (நேட்டோ) தேவையில்லை என்று அதைக் காலி பண்ண நினைத்தார் டிரம்ப். பைடன் அதைத் தக்கவைக்க முயல்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலக சுகாதார நிறுவனத்தைவிட்டு வெளியே வந்தார் டிரம்ப். பைடன் மறுபடியும் அதிலே இணைந்து நிதி ஒதுக்கீடுகளைத் தொடர்வார் என்று கணிக்கப்படுகிறது. அதேபோல யுனெஸ்கோ, ஐ.நா. மனித உரிமைகள் ஆணையம் ஆகியவற்றில் டிரம்ப்பின் எதிர்மறையான கொள்கைகளிலிருந்து பைடன் விலகிவருவார் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. டிரம்ப் காலத்தில் நண்பர்களுடன் அதிகமாகச் சேர்ந்திருப்பதற்கு மாறாக, எதிரிகளை அதிகமாகத் தாக்கிவிட்டோம் என்ற உணர்வு அமெரிக்காவில் இருக்கிறது. ஏகாதிபத்தியம்தான் என்றாலும், போர் தொடர்பான அணுகுமுறைகள் அப்படியேதான் இருக்கும் என்றாலும், இவற்றை மாற்றும் வகையில் பைடன் தனது வழிமுறைகளை அமைத்துக்கொள்வார் என்று நினைக்கிறேன்.

ஒபாமா காலத்திலிருந்தே இந்தியாவை அமெரிக்காவின் பக்கம் இழுப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்து வந்திருக்கின்றன. இந்திய அரசும் அமெரிக்காவின் பக்கம் நெருங்கிவந்திருக்கிறது. இந்திய-சீன எல்லைப் பதற்றத்திற்கு இதுவும் ஒரு காரணம் என்று உலக அரசியல் பார்வையாளர்கள் சொல்கிறார்கள். தகவல் தொழில்நுட்பம் உள்படத் தொழில் சார்ந்து அமெரிக்காவில் குடியேறியிருப்பவர்களில், ஒன்றரை லட்சம் டாலருக்கு மேல் ஆண்டுவருவாய் உள்ள உயர்திறன் வாய்ந்த இந்தியர்கள் மட்டும் இருக்கலாம் என்பது டிரம்ப் கொள்கை. பல இந்திய இளைஞர்கள் அவருக்கு எதிராக வாக்களித்ததற்கு, அதற்குக் குறைவான ஊதியம் பெறுகிறவர்கள் திரும்பிவர வேண்டியிருக்கும் என்பது முக்கியமான காரணம்.  பைடன் இதைக் கைவிடுவார் என்ற எதிர்பார்ப்பு இந்தியர்களிடையே இருக்கிறது. விசா எடுத்து அங்கே சென்ற பலர் விசாக்காலம் முடிந்தபிறகு அங்கேயே இருக்கிறார்கள். அவர்களையெல்லாம் கட்டாயமாக வெளியேற்றிவிடுவது என்றிருந்தார் டிரம்ப். அவர்கள் விசயத்தில் பைடன் எப்படி நடந்துகொள்வார் என்பதை இனிமேல்தான் பார்க்க வேண்டும். காஷ்மீர் நடவடிக்கை, சிஏஏ பிரச்சினை ஆகியவற்றைக் கடுமையாகத் தாக்கிப் பேசியிருக்கிறார்கள் ஜோ பைடனும் கமலா ஹாரிஸ்சும். இனி எத்தகைய நிலைப்பாடு எடுப்பார்கள் என்று பார்கக வேண்டும்.உலக இயக்கங்களின் பொறுப்பு

உலகம் முழுவதும் இப்படிப்பட்ட பிரச்சினைகளைக் கையில் எடுத்துக்கொண்டிருக்கிற அரசியல் இயக்கங்களுக்கும், மனித உரிமை அமைப்புகளுக்கும் இந்தத் தேர்தல் முடிவால் ஒரு ஆறுதல் கிடைக்கக்கூடும். அதேவேளையில், அமெரிக்காவின் அரசியல், சமூக நிலைகளையும், வரலாற்றையும் கவனத்தில் கொண்டு தங்களின் தொடர் செயல்பாடுகளைத் திட்டமிட வேண்டியிருக்கும். எல்லா வட்டாரங்களிலுமே பொருளாதாரத்தில் உயர் தட்டில் இருக்கிறவர்களின் நலன்கள் அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படும்.

மேற்கு ஆசியாவைப் பொறுத்தவரையில் அமெர்க்காவுக்கு இஸ்ரேல், சவுதி அரேபியா ஆகியவை முக்கியம். ஆகவே அந்த நாடுகளைப் பொறுத்தவரையில் பெரிய கொள்கை மாற்றம் இருக்காது. அமெரிக்காவில்  இஸ்ரேல் ஆதரவு யூத ஜியோனிச லாபி வலுவாக இருக்கிறது. எந்த அரசு வந்தாலும் இந்த லாபியை அனுசரித்துக்கொண்டே போவார்கள். கியூபா, வெனிசுலா விசயங்களில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதும் முக்கியம். கியூபாவுக்கு எதிரான பல தடைகளை ஒபாமா விலக்கினார், இருநாட்டு அரசுறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுத்தார். டிரம்ப் அதையெல்லாம் தலைகீழாக மாற்றினார். அதற்கு ஒரு காரணம், கியூபா புரட்சியின்போது அங்கிருந்து ஓடிவந்தவர்கள் ஃபுளோரிடா மாநிலத்தில் கணிசமாக இருக்கிறார்கள். லேட்டினோஸ் எனப்படுகிற அவர்கள் இப்போதும் கியூபாவுக்குத் திரும்பிச்சென்று தொல்லையளிக்க விரும்புகிறார்கள. கியூபாவை டிரம்ப் அதிகமாகத் தாக்கியதற்கு முக்கியமான காரணம் ஃபுளோரிடா ஓட்டுகளுக்காகத்தான். இந்தப் போக்கை பைடன் தொடர மாட்டார், வெனிசுலா ஆட்சி மாற்றத்திற்கு முயல மாட்டார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஈரான் நாட்டைப் பொறுத்தவரையில், ஒபாமா ஆட்சியில் பைடன் துணை அதிபராக இருந்தபோதுதான் உடன்பாடு ஏற்பட்டது. அதை டிரம்ப் தூக்கிப்போட முயன்றார். பைடன் மறுபடியும் உடன்பாட்டைச் செயல்படுத்துவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படியெல்லாம் எதிர்பார்க்கப்படுகிறது என்றுதான் உடனடியாகச் சொல்ல முடிகிறதே தவிர, இப்படித்தான் செயல்படுவார் என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட முடியாது. அடிப்படையாக, அமெரிக்காவின் மேட்டுக்குடியினர், நடுத்தர வர்க்கத்தினர், இந்தியா உள்பட மற்ற பல நாடுகளின் மேட்டுக்குடியினர், நடுத்தர வர்க்கத்தினர் ஆகியோரின் நலன்களைப் பாதுகாக்கும் வகையிலேயே பைடனின் செயல்முறைகளும் உலக நாடுகளின் செயல்முறைகளும் இருக்கும் என்று உறுதியாகக் கூறலாம். இதற்குள்ளேதான் உலகத்தின் பொதுவான நலன்கள், எளிய மக்களின் உரிமைகளுக்கான குரல்களும் ஒலித்துக்கொண்டே இருக்கும்.

நன்றி: செம்மலர், டிசம்பர் 2020