இங்கேதான் அவள் இடுப்பு இருந்தது;
இங்கே இதயம்;அங்கே குதிகால்.
எரிந்து சாம்பலாய்ப் போன குவியலில்
எவ்வளவு சிறுத்து விட்டாள்?
இன்றல்ல என்றுமே அவள்
குறுகித்தான் இருந்தாள்.
என நினைவின் அடுக்குகளில்
அவள் மஞ்சள்வண்ண தூசியில்
முழுகியிருந்தாள்.
அதன் மொழி அறிந்திருந்தாள்.
அவள் என் பாட்டி.
சீதையைப் போல் அவளும்
பிறவிப் பிணைப்புகள்
தீண்டாதவள்;தீயில் எரியாதவள்
என்று பலரும் பாராட்டினர்.
அவளின் ஞானம்
உறைந்துபோன துன்பம்.
சீதையைப் போல அவளும்
உருக்கின் உறுதியில்
உயிர் பிழைத்திருந்தாள்.
மேன்மக்களைப் போல அவளும்
அமைதியாய் அமரரானாள்
என்று அவர்கள் வியந்தனர்.
படுக்கையறை கழுவி சுத்தம் செய்யும்
துன்பத்தை அத்தைக்கு கொடுக்காமல்
பய்ய நடந்து கூடத்திலிருந்த
சாய்வு நாற்காலியில் சமாதியானாள்.
பிள்ளையாரின் வயிறுபோல
வட்டமாயிருந்த பானையில்
அவளின் எலும்புகளையும் சாம்பலையும்
சேர்த்தெடுத்து சிவந்த துணிகொண்டு மூடி
கவனமாய் கட்டினார் புரோகிதர்.
ஒரு கருவறையிலிருந்து மற்றொரு கருவறைக்கு
அவள் குடி புகுந்தாள்.
தொப்புள்கொடி நினைவுகளோடு
அவள் வாழ்வை திரும்பிப் பார்க்கிறேன்.
சிதிலமான அறை,கரகரக்கும் கருவிகள்
பசுஞ்சாணத்தின் நாற்றம்,
செம்மண் புழுதி படிந்த கறுத்த முகத்துடன்
அங்குமிங்கும் அலையும் பணியாட்கள்
சமயங்களில் அவர்களூடே அவள் வேலை.
மங்கிய மெழுகுவர்த்தி வெளிச்சத்தில்
இருண்ட முன்னறையில் புதிதாய் பழகிய
கைம்பெண்ணின் வெள்ளை ஆடையில்
வளையல் இல்லாமல், பொட்டு இல்லாமல்
தாலி இல்லாமல், எதுவுமே இல்லாமல்.
முடிந்த எல்லா வண்ணங்களையும்
அவள் இதயத்திலிருந்தும் அவர்கள் கரைத்தனர்.
அத்தருணத்தில்
பெண்ணின் வெளிச்சங்களை விழுங்கக்கூடிய
கருந்துளையாகிப் போன ஒரு தேசத்த்தின் மீது
வெறுப்பை உணரமுடிந்தது.
கோடைகால வெப்பத்தில்
கோரைப் பாய்களில் படுத்திருந்தோம்.
மரத்தில் பூக்கும் சாமந்திப்பூ போல
அவளது இதழ்களில் கதைகள் பிறந்தன.
அவள் குழல்
பரவிக் கிடந்த வெண் சுழல் அல்லது
சாரைப் பாம்பு போல்
தளர்வாய் தொங்கும் ஒற்றைப் பின்னல்.
ஏக்க நெடி தவழ்ந்த அவளது குரல்
பக்தி மேலாடை சுற்றி வரும்
ஒரு அபலையின் அணைப்பிற்கான விழைவு.
எனக்கு நினைவிருக்கிறது
ஒரு திரைப்படம் ஒரு புராணக் கதை
இவைகளினூடே
கசியும் அவளது ஏக்கம்.
என்னுடைய தாயாரோ
கடும் சினம் கொண்ட இயக்கி.
அவளின் ஒவ்வொரு அணுக்களும்
நினைவின் பசைமறைப்பில்
திணறிக்கொண்டிருந்தன.
யாரையும் மன்னிக்க அவள் தயாரில்லை.
தன்னுடைய திருமணத்தை, கணவனை,
அவளது தலைவிதியை, இந்தியாவை
கருத்த உரலில் குத்தும் நெல்போல
ஒருவரையொருவர் தாக்கிக்கொள்ளும் பெண்களை
அவள் வெறுத்தாள்.
என் பாட்டி தன்னுடைய துணி மூட்டையுடனோ
மலிவான டிரங்க் பெட்டி அல்லது பையுடனும்
சிந்தாத கண்ணீருடனும் ஆட்டோவில் ஏறிப் போவாள்.
இதுவே எப்பொழுதும் நடக்கும் இறுதிக் காட்சி.
அம்மாவையும் குடும்ப சடங்குகளையும்
நினைத்து வெட்கப்படும்
குழந்தைகள் நாங்கள்.
ஆனால் நான் நினைத்துக் கூட பார்க்கவில்லை.
என் இதயம் எரிதழலாய்
இந்தக் கதையை முன்னெடுத்து செல்ல
பக்குவப்பட்டுக் கொண்டிருப்பதை.
பெண்ணின் உயிரணுக்களை
உறிஞ்சிக் குடிக்கும்
இந்த வெஞ்சினத்தை நானும்
ஒருநாள் உணர்வேன்.
பொழியும் மழையவித்து
மண்ணுக்கும் விண்ணுக்கும்
ஜோதியாய் எரிவேன்.
பாம்புகள் நெளியும் மகுடம் தாங்கிய
இயக்கியாய் மாறி மனிதர்களை
கல்லாய் மாற்றுவேன்.
அவள்
சட்டத்தில் இழுத்துக் கட்டப்பட்ட
மெல்லிய ஜவ்வாய்
மறைபொருள் நிரம்பிய
மாசகற்றும் சாலையாய்
திரும்பத் திரும்ப பேசிய
மரங்களின் கதைகளில் தஞ்சமாய்.
மரங்களின் மொழி என்ன?
கனிகளின் சிவப்பு
யாருக்கு அழைப்பு விடுக்கிறது?
எங்களின் சோகக் கதைகளுக்கு
வானம் துக்கம் அனுஷ்டிக்குமா?
பாறையாய் கெட்டித்துப் போன
அவள் வாழ்க்கை.
வருடங்களின் தேய்ப்பில்
காய்த்துப்போன அவள் கரங்கள்.
மாமஞ்சள் வண்ண சேலை ஒன்றை
அவள் நினைவாய் எடுத்துக் கொண்டேன்.
அன்பும் அதன் சுருக்கங்களுடன்
பயன்பட்டுக்கொண்டும் பயன்படுத்திக்கொண்டும்
என்பதாய் அதன் குரல்.
உஷா அகேல்லா மூன்று கவிதைத் தொகுதிகள், சிறு பிருசுரங்கள், ஒரு இசைநாடகம் ஆகியவை எழுதியுள்ளார். ஹார்ப்பர் காலின்ஸ் வெளியிட்ட இந்தியக் கவிஞர்களின் ஆங்கிலக் கவிதை தொகுப்பில் அவரது படைப்புகள் இடம் பெற்றுள்ளன. சுலோவிகியா, நிகரகுவா, மாசிடோனியா, கொலம்பியா, சுலோவினியா,இந்தியா மற்றும் பல நாடுகளின் கவிதை விழாவிற்கு அவர் அழைக்கப்பட்டுள்ளார். அமெரிக்காவில் நடைபெறும் தெற்கு ஆசிய புலம் பெயர்ந்தோர் கவிதை விழாவின் நிறுவனர். முகாமில் வாழும் பெண்கள், முதியோர், மருத்துவமனை ஆகியவற்றில் வாழும் ஆதரவற்றோர்கள் மத்தியில் கவிதைகளை கொண்டு செல்லும்’கவிதை ஊர்வலம்’ எனும் அமைப்பின் நிறுவனர். பல விருதுகள் பெற்றுள்ளார். ஆஸ்டின் நகரம் ஜனவரி 7ஆம் தேதியை ‘கவிதை ஊர்வல தினம்’ ஆக அறிவித்துள்ளது.
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களது புத்தக விமர்சனம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது [email protected] மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.