நூல்: முழு மனிதன்
ஆசிரியர்: உஷாதீபன் 
வெளியீடு: சிறுவாணி வாசகர் மையம் 

உஷாதீபன் கடந்த இருபத்தைந்து ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக எழுதிவரும் எழுத்தாளர். அடிப்படையில் நல்ல வாசகர். வாசிப்பையும் எழுத்தையும் தம் வாழ்க்கையைப் பொருளுள்ளதாக தகவமைக்கும் விசைகளாக நினைப்பவர்.

உஷாதீபனின் கதையுலகத்தை ஒருவகையில் அன்றாடங்களின் சித்திரங்கள் என்று வகுத்துக்கொள்ள முடியும். ஒரு கடைவாசல், வாகன நெரிசலுள்ள ஒரு தெரு, ஒரு தோட்டம், வாடகை வீடு, ஒரு மரத்தடி என நாம் ஒவ்வொரு கணமும் கடந்துசெல்லும் இடங்களில் கண்டெடுக்கச் சாத்தியமுள்ள கருக்களையே பெரிதும் அவர் கலைமனம் கண்டடைகிறது. நம்பமுடியாதபடி மனிதர்கள் கொஞ்சம்கொஞ்சமாக மாறி வருவதைப்பற்றி அவருக்குள்ள வருத்தத்தை அவருடைய படைப்புகள் உணர்த்துகின்றன. வாழ்க்கைவிதிகளில் ஒன்றான தவிர்க்கமுடியாமை என்கிற அம்சத்தை அவர் மனம் ஒருசில தருணங்களில் ஏற்று அமைதியடைகிறது. இன்னும் சில தருணங்களில் ஒவ்வாமை கொண்டு புலம்பத் தொடங்குகிறது. பிரம்மநாயகம், ராமனாதன், சீனிவாசன், ராமமூர்த்தி, ராஜாராமன், பத்மனாபன், விஸ்வம், சுப்பிரமணி, விஸ்வேஸ்வரன், மாயவன், அனந்தராமன், வாசுகி, மயில்சாமி, ராமசாமி என பெயர்கொண்ட பலவிதமான மனிதர்களை உஷாதீபனின் சிறுகதைகளில் அறிமுகம் செய்துகொள்ள முடிகிறது. பல தோற்றங்களில் அவர்கள் சித்தரிக்கப்படுகிறார்கள். கண்ணைமூடிக்கொண்டு அவர்களுடைய உரையாடல்களை அல்லது அவர்களுடைய கருத்தோட்டங்களை அசைபோடும்போது இதை உணரமுடிகிறது.

”இதெல்லாம் போகாது” இத்தொகுப்பில் நல்ல கதைகளில் ஒன்று. நான் மிகவும் விரும்பிப் படித்தேன். வீடுகளில் பயன்படுத்தி ஓய்ந்துவிட்ட அல்லது இனிமேல் பயன்படுத்தமுடியாது என்கிற நிலைக்கு வந்துவிட்ட பழைய பொருட்களை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்துவிட்டுச் செல்லும் மயில்சாமியின் வருகையோடு தொடங்குகிறது சிறுகதை. கதைசொல்லிக்கு அவரோடு உரையாடுவதில் ஆர்வம் அதிகம். அவன் சொல்லும் ஊர்க்கதைகளை ரசித்துக் கேட்பவர். அவனைக் கண்டதும் அவன் சார்ந்த நினைவுகளையெல்லாம் தொகுத்து அசைபோட்டு மகிழ்கிறது அவர் மனம். தெருக்களிலெல்லாம் அலைந்து சேகரித்துச் செல்லும் பழைய பொருட்களையெல்லாம் அவன் எப்படி விற்றுப் பணமாக்குகிறான் என்கிற தகவல்களைக்கூட போகிறபோக்கில் தெரிந்துகொள்கிறார்.

உஷாதீபன்: "முழு மனிதன்" -சிறுகதைத் தொகுப்பு -கோவை, சிறுவாணி வாசகர் மையம்  வெளியீடு-டிசம்பர் 2019 வெளியீடு

எடுத்துக்கொண்டு செல்லும் எல்லாப் பொருட்களையும் ஒரு விலை சொல்லி விற்றுவிடும் மயில்சாமியால் பழைய புடவைகளை விற்கமுடியாமல் போய்விடுகிறது. அவை விற்பனை மதிப்பை இழந்து விடுகின்றன. சந்தையில் விற்பனை மதிப்பை இழந்து போய்விட்ட புடவைகளை அவனும் பழைய சாமான்கள் போடும் வீடுகளில் வாங்கிக்கொள்வதில்லை. இதெல்லாம் போகாது” என்று சொல்லி தள்ளிவைத்து விடுகிறான். பழைய செய்தித்தாள்கள் முதல் நசுங்கிய அலுமினியப்பாத்திரம் வரைக்கும் ஏதேனும் பணம் கொடுத்துப் பெற்றுச்செல்லும் மயில்சாமி புடவைகளை நிராகரிக்கிறான். கதைசொல்லியின் மனைவிக்கு இதையொட்டி வருத்தம் உண்டு. ஆனால் மயில்சாமியோ சொன்ன சொல்லில் உறுதியாக நிற்கிறான். கதைசொல்லிக்கு இதைப்பற்றியெல்லாம் பெரிதாக அக்கறையோ கவனமோ இல்லை. அவருக்கு அவனோடு ஊர்க்கதை பேசி மகிழவேண்டும். அதில்மட்டுமே அவருக்கு ஆர்வம். அவன் வழியாக இரண்டு பழங்கதைகளை அவர் தெரிந்துகொண்டால், அவரும் தன் பங்குக்கு இரு பழைய கதைகளைப் பேசி அவனை மகிழ்ச்சியுற வைக்கிறார். மொத்தக் கதையும் பழங்கதைகளின் பரிமாற்றமாக மாறிவிடுகிறது.

பழைமை மீது மானுடனுக்குள்ள தீராத மோகம் அபூர்வமானதொரு கரு. ’எங்கள் தாத்தாவுக்கு யானை இருந்தது’ பஷீரின் காவியப்படைப்புகளில் ஒன்று. அப்படி ஒரு படைப்பாக மாறும் சாத்தியப்பாடு மயில்சாமியின் கதையில் எங்கோ ஒரு புள்ளியில் உள்ளது…

இன்னொரு நல்ல கதை ‘முழுமனிதன்’. இது வயதில் முதிர்ந்த ஒரு வாசகரின் கதை. வாசிப்பின் வழியாகக் கிடைக்கும் மகிழ்ச்சியை முக்கியமானதாக நினைப்பவர் அவர். அவர் பெயர் விஸ்வம். வீடு முழுதும் புத்தகங்களாக வாங்கி அடுக்கிவைத்துக்கொண்டு படிக்கும் மனிதர் அவர். இடைவிடாத வாசிப்பின் வழியாக தனக்கென ஒரு ரசனைமுறையை வகுத்துக்கொண்டவர். தான் வாங்கிவைத்திருக்கும் புத்தகங்களை சில தாங்கிகளில் அடுக்கி, தேவைப்படும் புத்தகத்தைத் தேவைப்படும் நேரத்தில் எடுத்துப் படிக்கும் சூழலை உருவாக்கிக்கொள்ளவேண்டும் என்பது அவருடைய கனவு.

நகரில் குடியிருக்கும் அவருடைய மகன் அவருடைய விருப்பத்தை நிறைவேற்றும் வகையில் தன் அடுக்கத்தில் சில மாற்றங்கள் செய்து அவருக்கென ஒரு படிப்பறையை உருவாக்கித் தருகிறான். காலமெல்லாம் தான் விரும்பிய வாழ்க்கை கிடைத்ததையொட்டி தொடக்கத்தில் மகிழ்ச்சிடைகிறார் விஸ்வம். அவருடைய மனைவிக்கும் அங்கே தங்கியிருப்பதில் மகிழ்ச்சியே ஏற்படுகிறது. கிராமத்தில் தனித்து வாழ்ந்ததைவிட நகரவாழ்க்கை பலமடங்கு பிடித்திருக்கிறது அவருக்கு. எல்லாம் சில காலம்தான். பெரியவரின் மனத்தில் கிராமத்துவீட்டில் வைத்திருக்கும் புத்தகங்களை வகைபிரித்து வைத்துக்கொண்டு பிடித்த புத்தகத்தை பிடித்த நேரத்தில் எடுத்துப் படிக்கும் கனவு மெல்ல மெல்ல அவரை ஆக்கிரமிக்கத் தொடங்குகிறது. அவர் கனவை அவருடைய மனைவி ஆதரிப்பதில்லை. நடைமுறைச்சாத்தியமற்ற கனவில் மிதந்தபடியே விஸ்வம் அடுக்ககத்தின் அறைவாழ்க்கையின் மகிழ்ச்சியிலும் காலத்தைக் கழிக்கிறார்.இரு கனவுகளிடையே மாறிமாறி ஊடாடும் நிலைசார்ந்து இக்கரைக்கு அக்கரை பச்சையென அலைபாயும் மானுட மனத்தின் இயக்கத்தைச் சென்று தொடக்கூடிய சாத்தியப்பாடு உண்டு. உரையாடல்களை வகுப்பதிலேயே உஷாதீபனின் ஆழ்மனம் திட்டமிட்டு நகர்ந்துசெல்கிறது. இப்படியான பல சிறுகதைகள் இத்தொகுப்பில் அடங்கியுள்ளன. நடந்துமுடிந்த இறந்தகால அனுபவங்களை அசைபோடுவதாக, ஒரு சந்திப்பு தூண்டிவிடும் நினைவுகளாக, ஆற்றாமையோ வருத்தமோ தூண்டும் குமுறல்களாக, குற்ற உணர்ச்சியின் வடிகாலாக ஒவ்வொன்றும் ஒருவிதத்தில் அமைந்துள்ளன. அந்தக் கோணத்தில் அவை முக்கியத்துவம் கொள்கின்றன என்பது உண்மை. ஆர்வத்தைத் தூண்டி வாசிக்கவும் வைக்கின்றன. சிறுகதை என்னும் கலைவடிவம் அன்றாடத்தின் ஆச்சரியங்களையும் புதிர்களையும் பயன்படுத்திக்கொள்ளும்போதே, அவற்றையே துணையாகக் கொண்டு மானுடத்தின் ஆச்சரியத்தையும் மானுட வாழ்க்கையின் புதிரையும் நோக்கி விரிந்துசெல்லும் தன்மை கொண்டதாகும்.

முக்கியமான எடுத்துக்காட்டு புதுமைப்பித்தனின் ‘மகாமசானம்’. எந்த நகரத்திலும் நடப்பதற்குச் சாத்தியமான ஒரு சாதாரணக் காட்சியே இக்கதையின் களம். அதே சமயத்தில் மானுட வாழ்வில் நாம் ஒவ்வொருவரும் காணக்கூடிய அவலம், இரக்கம், கருணை, பித்தலாட்டம், துரோகம், மெத்தனம் அனைத்தையும் உணர்த்தும் ஆற்றல் கொண்டதாக புதுமைப்பித்தனின் கலை மாற்றிவிடுகிறது. கலை வாழ்வில் நாம் செல்லவேண்டிய பயணத்தின் தொலைவை அது ஒவ்வொருவருக்கும் உணர்த்திக்கொண்டே இருக்கிறது. எனக்குள் நான் பலமுறை சொல்லிக்கொள்ளும் வாக்கியம் இது. நண்பர் உஷாதீபனுக்காக இன்னொருமுறை சொல்கிறேன்.

உஷாதீபனுக்கு என் வாழ்த்துகள்.
———————————————

Image

உலக புத்தக தினத்தையொட்டி பாரதி புத்தகாலயம், புதிய கோணம், இளையோர் இலக்கியம் மற்றும் புக்ஸ் ஃபார் சில்ரன் வெளியிட்டுள்ள அனைத்து நூல்களுக்கு 25% சிறப்புக் கழிவு உண்டு. (23.04.2021 – 05.05.2021 வரை மட்டும்)Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *