சமீபத்தில் ஓய்வு பெற்ற காவல் அதிகாரி மற்றும் வழக்கறிஞர் திரு. பாலு (எ) பாலசுப்பிரமணியன் அவர்களைச் சந்திக்கச் சென்றிருந்த போது, ஒரு தற்செயலான சந்திப்பின் மூலம் அறிமுகமானார் திரு. உஸ்மான் அலி. மதுரை அமெரிக்கன் கல்லூரியின் முன்னாள் மாணவர், பி.எஸ்.என்.எல் (BSNL) நிறுவனத்தின் முன்னாள் அதிகாரி எனப் பன்முகத் திறமை கொண்ட அவர், தான் எழுதிய “தணியாத தாகம்” என்ற கவிதை நூலை எனக்கு அன்பளிப்பாக அளித்தார். பாரதியின் மீதும், பாரத நாட்டின் மீதும் தீராத பற்றுக்கொண்ட கவிஞர் அவர் என்பதை நூல் வாசிக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே உணர முடிந்தது.
வரலாற்றின் கவிதை வடிவம்
பொதுவாகக் கவிதை என்றாலே காதல், தத்துவம் அல்லது வாழ்வியலை மட்டுமே பேசுவதாக ஒரு பிம்பம் உண்டு. ஆனால், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வாழ்க்கை வரலாற்றை, அவர் பிறந்தது முதல் இறுதி மூச்சு வரை 12-க்கும் மேற்பட்ட அத்தியாயங்களில் நேர்த்தியான கவிதைகளாக வடித்திருப்பது ஒரு வித்தியாசமான மற்றும் பாராட்டுக்குரிய முயற்சி.
ஒரு வரலாற்று நூலுக்குரிய நம்பகத்தன்மையுடன், வ.உ.சி. தொடர்பான சுமார் 53 ஆய்வு நூல்களைப் பட்டியலிட்டு, அந்தத் தரவுகளின் சாரத்தைக் கவிதையாக்கியிருப்பது ஆசிரியரின் உழைப்பைக் காட்டுகிறது.
தொழிலாளர் உரிமை முழக்கம்
ஒரு தொழிற்சங்க நிர்வாகியாக, இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் ஈர்த்தது கோரல் மில் தொழிலாளர் போராட்டத்தைச் சித்தரிக்கும் வரிகள். தொழிலாளர்களைக் கரும்புச் சக்கையாய் அந்நியர் பிழிந்தபோது, வ.உ.சி. ஆவேசமாக முழங்கியதை ஆசிரியர் பின்வருமாறு பதிவு செய்கிறார்:
“வேலையை நிறுத்துங்கள்…
அந்நிய மோகம் தணிந்திட
வேறு வழியில்லை
ஆலைக் கதவினைப் பூட்டுங்கள்
நாம் யாரென்று
அவர்க்குக் காட்டுங்கள்!”
துணை ஆட்சியர் ஆஷ்-க்கும் வ.உ.சி.-க்கும் இடையிலான அந்த அனல் பறக்கும் உரையாடல், நம் கண்முன்னே ஒரு நாடகக் காட்சியைப் போல விரிகிறது. குறிப்பாக, எட்டு மணி நேர வேலை மற்றும் அந்நியர் சுரண்டலை எதிர்த்து வ.உ.சி. கர்ஜித்த வார்த்தைகள் வீராவேசமானவை.
கம்யூனிசம் வேரூன்றும் முன்பே…
இந்தியாவில் பொதுவுடைமைத் தத்துவமும், கம்யூனிஸ்ட் கட்சியும் காலூன்றுவதற்கு முன்பே, தொழிலாளர் உரிமைகளுக்காகத் தோள் கொடுத்த வ.உ.சி.யின் துணிவை ஆசிரியர் மிகச் சரியாக அடையாளம் கண்டுள்ளார்:
“பொதுவுடைமைத் தத்துவம்
பூத்திடும் முன்பாக,
தொழிலாளர் உரிமைக்காகத்
தோள் கொடுத்த துணிவுடைமை…”
நீதிமன்றக் காட்சியும் உயிலின் உருக்கமும்
திருநெல்வேலி நீதிமன்றத்தில் வ.உ.சி. மற்றும் சுப்பிரமணிய சிவா மீதான இராஜதுரோக வழக்கும், அதற்கு வழங்கப்பட்ட தண்டனையும் மிகச் சுருக்கமான, ஆனால் கனமான வரிகளில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
புத்தகத்தின் இறுதியில் வரும் வ.உ.சி.-யின் ‘உயில்’ பற்றிய கவிதை வாசிப்பவர் நெஞ்சை உலுக்கிவிடும்.
ஒட்டப்பிடாரத்தில் ஓர்
ஓட்டை மட்டுப்பா வீடு
கீழ்க்காட்டில் இரண்டு
சங்கிலி புஞ்சை நிலம்
அது தங்கைக்கு
மற்ற நில வகைகள் பெற்ற
கடனுக்காய் உந்தனுக்குச் சேரும்
இருநூறு ரூபாய் பெறுமானம்
உள்ள சட்டப் புத்தகங்கள்
பிாிமியம் கட்டாத இன்சூரன்ஸ்
மொத்த சொத்து இவ்வளவே
ரொக்கமாக ஏதும் இல்லை.
இதிலே ஐந்து மாத வாடகை
பாக்கி (ரூ 135)
ஜவுளிக் கடன், பலசரக்கு கடன்
என பலவகை
கடன்கள் உண்டு
(மொத்தம் ரூ 176)
மணம் முடிக்காத
பெண்மக்கள் இருவர்
நகைகள் கைவசம் மதிப்பு ரூ 500
இன்சூரன்ஸ் கிடைத்தால் அது
ரூ 1000 வரலாம்
மனநிலை பிறழ்ந்த தம்பிக்கு
சாப்பாடு, உடைகள்
மனைவி மக்களுக்கு
அன்ன, வஸ்திர செலவிற்கு ஏற்பாடு
செய்ய வேண்டும்
மைத்துனர்களுக்கு
சொத்தைப் பங்கிடும்
பொறுப்பும் உம்முடையது
இதையெல்லாம் நண்பா
எனக்காக, இறையருளால்
ஏற்றுச் செய்ய வேண்டுகிறேன்
என உடல்நலம் குன்றியபோது நண்பர் கந்தசாமி ரெட்டியார் வசம் ஒப்படைத்த உயிலின் சாரம் வறுமையின் நிறமதை வசமாய் உணர்த்துகிறது.
இன்றைய அரசியல் சூழலில் வேட்பாளர்களின் கோடிக்கணக்கான சொத்து மதிப்புகளைப் பார்த்துக்கொண்டிருக்கும் நமக்கு, ஒரு தேசியத் தலைவர் தன் இறுதி காலத்தில் விட்டுச் சென்ற ‘ஓட்டை வீடு’ மற்றும் ‘கடன் சுமைகள்’ பற்றிய வரிகள் ஏக்கத்தையும், அவர் மீது பெரும் மரியாதையையும் ஏற்படுத்துகின்றன. வறுமையின் நிறத்தை வசைபாடாமல், அதன் வலியைத் தத்ரூபமாகப் பதிவு செய்திருக்கிறார் கவிஞர்.
முடிவுரை
அரசியல் மற்றும் சுயசரிதை நூல்களை வாசிப்பதற்குத் தயங்குபவர்களுக்கும் கூட, திரு. உஸ்மான் அலியின் இந்த எளிய கவிதை நடை ஒரு புதிய ஆர்வத்தைத் தூண்டும் என்பதில் ஐயமில்லை. அறிமுகமான முதல் நாளிலேயே இத்தகையதொரு பொக்கிஷத்தை அளித்த திரு. உஸ்மான் அலி அவர்களுக்கு எனது வாழ்த்துக்களும் பாராட்டுகளும்.
📚 நூலின் விவரங்கள்:
| தலைப்பு | விவரம் |
| நூலின் பெயர்: | “தணியாத தாகம்” கவிதை தொகுப்பு |
| ஆசிரியர்: | உஸ்மான் அலி |
| வெளியீடு: | பவித்ரா பதிப்பகம் |
| விலை: | ₹.200 |
| அறிமுகம் எழுதியவர்: | ✍🏻 சம்பத் ஸ்ரீனிவாசன் |
புத்தகம் வாங்க: https://thamizhbooks.com/
******************************************************************************
Click to Join Telegram Group Link : https://t.me/+lyAFK8ZE0iczZjE1
Click to Join Facebook: https://www.facebook.com/Book Day – Bharathi Puthakalayam
இப்பதிவு குறித்த தங்கள் கருத்துக்களை அவசியம் கீழே உள்ள Comment Boxல் பதிவிட வேண்டுகிறோம்.
புக் டே இணையதளத்திற்கு தங்களதுநூல் அறிமுகம், கட்டுரைகள் (அறிவியல், பொருளாதாரம், இலக்கியம்), கவிதைகள், சிறுகதை என அனைத்து படைப்புகளையும், எங்களது bookday24@gmail.com மெயில் அனுப்பிட வேண்டுகிறோம்.

